“நாயக்கரைப் பற்றி அய்ரோப்பாவில் உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால் அவரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன். நாயக்கரிடத்தில் உள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதில் படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமகுணம் தான்.

இன்னும் நாயக்கரைப்ப ற்றிச் சொல்ல வேண்டுமானால் அதிக நேரம் பிடிக்கும் என நினைக்கிறேன். சுருக்கமாக, நாயக்கர் அவர்கள் தமிழ்நாட்டில் எல்லாத் தலைவர்களைவிட பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்.’’    (நாகப்பட்டினத்தில் வ.உ.சி உரை - குடிஅரசு 10-6-1928)

இந்திய அளவில் சாதி மதம் சமயம் சார்ந்த நெறிப்படுத்தல்களும் மரபார்ந்த நம்பிக்கைகள் சடங்குகள் அடிப்படையிலான வாழ்முறையும் மையப்படுத்தப்பட்டிருந்த அறிவு முதிர்ச்சியற்ற இருண்மையானதொரு காலத்தில் தெளிந்த சிந்தனைகளால் தேசத்திற்கு ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சியவர் பெரியார்.

veeramani book on periyarபகுத்தறிவுக்கொப்பாத மத நம்பிக்கைகள், புராணப் புரட்டு இதிகாசக் கதைகளையும் வருணாசிரம சாதிப் பகுப்புமுறைகளால் ஏற்பட்ட  சாதியக் கொடுமைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை போன்ற சீர்கேடுகளையும் எதிர்த்துத் துணிச்சலாகவும் கடுமையாகவும் குரலெழுப்பிய பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளை ‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்’ என்ற நூலாக கழக இயக்க வெளியீடு வெளியிட்டுள்ளது.  நூலாசிரியர் கி.வீரமணி.

சிறுபிராயந்தொட்டு தன்னுடைய கூர்த்த அறிவுச்செயல்பாடுகளால் பெரியார் எப்படியெல்லாம் தனித்துவமிக்க தத்துவார்த்தச் சிந்தனையாளராக பரிணமித்தார் என்பதனை வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிய அவரது எழுத்துகளிலிருந்தும் இன்னபிற சம்பவங் களிலிருந்தும் பிறரால் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளிலிருந்தும் ஏராளமான அரிய தகவல்களைத் தொகுத்தளிக்கிறது இந்நூல்.

நூலாசிரியர் கி.வீரமணி தனது முன்னுரையில் “பெரியாரைப் பற்றி ‘மூட்டை தூக்கும்போது பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர வெட்கத்தினால் ஒருபோதும் சங்கடப்பட்டதில்லை’ என்று பட்டாங்காய் அவர் எழுதிய எழுத்துகளின் தத்துவப்பாடம் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு பெரிய வெளிச்சம் - இல்லையா’ என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்ச்சமூகத்தின் வெளிச்ச விடியலுக்கான தனது நெடிய போராட்டப் பயணத்தில் அவர் கடைத்தேற்றிய காரியங்களால் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வெளிச்சத்தைக் கொணர முற்பட்ட அவரது வாழ்க்கைச் சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகளை விரிவாக எடுத்துரைக்கும் இந்நூல் அவரது தந்தையார் குடும்ப வரலாற்றிலிருந்து தொடங்குகிறது.

சிறுபிள்ளையில் குறும்பனாகவும் வம்பனாகவும் இருந்த ராமன் என்ற சிறுவன் பெரியாரெனும் பெரும் புரட்சிக்காரராக தன்னை வளப்படுத்திக்கொண்ட செழுமையான வரலாற்றை இந்நூல் ஆவணப்படுத்துகிறது. தலைமைத் துவத்துக்கான பண்புநலன்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெரியாரின் ஆகச்சிறந்த குணஇயல்புகள் மேன்மையும் எளிமையும் மிகுந்ததாக இருந்ததனை இந்நூலில் இடம்பெற்றுள்ள பல சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த நிகழ்வு, அதுபோன்ற இன்னபிற வரலாற்றுச் சிறப்புமிக்க சில அரசியல் நிகழ்வுகள் அனைவரும் அறிந்தவை என்பதால் இந்நூலில் இடம் பெறவில்லை போலும்.

மாறாக ஒவ்வொரு அரசியல் நிகழ்விலும் பெரியாரின் எவ்விதமான குணாம்சங்கள் தனித்துவமாய் மிளிர்ந்தன என்பதனையே மையப்படுத்துகிறது இந்நூல். பெரியார் வரும் பாதையில் அவருக்கெதிராக செருப்புத்தோரணம் கட்டி அவமானப்படுத்த முற்படுகிறபோதும், இரவில் அவருக்கு ஒவ்வாத உணவை தோழரொருவர் உவந்தளிக்கும்போது இன்முகத்துடன் அதனை உண்கிறபோதும், தர்மசாலா என்ற குப்பைக்கூடாரத்தில் கொசுக்கடியிலும் நிம்மதியாகப் படுத்துறங்குகிறபோதும், அவரது எளிமைப் பண்பும் தோழமை உணர்வும் கொள்கை உறுதியும் எதிர்ப்புகளுக்கு அஞ்சாத மனோதிடமும் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கான வெளிச்சங்கள் என்பதை உரைக்கிறது இந்நூல்.

தனது குடும்பத்தைப் பற்றி பெரியார் எழுதிய குறிப்புகளிலுள்ள தகவல்கள்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்து கூலிவேலை செய்து கொண்டிருந்த வெங்கட்ட நாயக்கர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த சின்னத்தாயம்மாளை மணம் முடித்தபின்பு மூன்று குழந்தைகள் பிறந்த பின்னால் தரித்திர வாழ்விலிருந்து மெல்ல விடுபட்டு மளிகைக் கடை வைத்து முன்னேறி, மளிகைக்கடை வெங்கட்ட நாயக்கரானார். இந்நிலையில் மூன்று குழந்தைகளும் இறந்து போக அம்மையார் ஸ்தல யாத்திரைகளும் தவங்களும் செய்து மண்சோறு, சந்நியாசிகளின் எச்சிலைச் சாப்பிட்டு வரம் பெற்று ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், ஈ.வெ.ராமசாமியையும் ஈன்றெடுத்தார்.

அம்மையாருக்குள்ள பிள்ளை ஆசையால் மூத்த பிள்ளை ஒன்றே தனக்குப் போதும் எனக்கருதி தனது இளையபிள்ளை ராமனை தனது புருசனின் சிறிய தகப்பனார் மனைவி ஆகிய ஒரு விதவையிடம் இனாமாகக் கொடுத்து வளர்த்துக் கொள்ளச் சொல்லி விட்டார்கள்.

மண்டி வியாபாரம் நன்றாக செழித்து மண்டி வெங்கட்ட நாயக்கரான பிறகு அவருக்கு நாமம் பட்டை பட்டையாய்த் திகழ்ந்தது. மூத்தபிள்ளை கிருஷ்ணசாமியும் பாகவதராக ஆகிவிட்டார். ஆனால் 9 வயதில் விதவை வளர்த்த பிள்ளையாய் ஊர்சுற்றியாய் ‘லோலனாய்’ திரிந்ததால் படிப்பும் சரிவர இல்லாததோடு அடிதடி சண்டையென்று இருந்ததால் மண்டிக்கு வேலைக்கு அனுப்பினார்கள்.

பெரியார் சிறுவயதிலிருந்தே சாதி மத சடங்காசாரங்களைக் கருத்தில் கொள்ளாது அதனை மறுத்தே பழகிவந்தார் என்பதை அவர் பள்ளியில் பயிலும்போது நடந்த சம்பவங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

பள்ளியில் படிக்கச் சென்றபோது பள்ளிக்கு அருகிலுள்ள ‘புழங்கக்கூடாத ஜாதி’யினரிடம் தண்ணீர் வாங்கி அருந்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் பெரியார் அக்குடும்பத்தினரிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பதோடு தின்பண்டங்கள் வாங்கித் தின்னவும் செய்தார். இதையறிந்த அம்மையார் ‘குலாச்சாரம் கெட்டு விட்டது’ என்று சொல்லி பள்ளியிலிருந்து வந்தவுடன் உடுப்பைக் கழற்றி விட்டு வேறு உடைகளை அணிய வேண்டும் என்றும், அதற்குமுன் ‘அம்மாவைத் தொட்டுவிடக்கூடாது’ என்றும் கண்டிக்கப்பட்டார்.

பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக்கான மூலவித்து அவரது குடும்பத்திலிருந்தே உதித்தெழுந்ததைப் பற்றி பெரியார் எழுதியவை கவனிக்கத் தக்கது.

“அம்மையாருக்கு தெய்வபக்தி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பணத்தை அள்ளி இறைக்க ஆரம்பித்துவிட்டார்கள். கண்டவிடமெல்லாம் கோவில் சத்திரம் சாவடி கட்ட ஆரம்பித்தார்கள். வீட்டில் வாரம் ஒரு காலட்சேபம், இராமாயண, பாரத வாசகம்.

எங்கெங்கோ திரியும் சன்னியாசிகளுக்கும் பாகவதர்களுக்கும் சதாசர்வகாலமும் உலையில் நீர்கொதித்த வண்ணமாய் இருக்கும் தண்டச்சோறு சத்திரம்போல் வீட்டை நடத்தி வந்தார்கள்.

இளையமகன் ராமனிடம் எவ்வளவு அன்பு காட்டினாலும் அம்மையார் ராமன் தொட்ட செம்பு, டம்ளர் ஆகியவற்றைக் கழுவியே வைப்பார்கள். ராமனை சமையல் வீட்டுக்குள் விடமாட்டார்கள். அப்பொழுதே அவன் ‘ஜாதி கெட்ட’ பயலாக விளங்கினான்.’ (குடிஅரசு - 2-8-1936)

பெரியார் மதம் சம்பந்தப்பட்ட கதைகளையோ புராணங்களையோ தானாகப் படித்தறிந்து கொள்ளவில்லை என்றாலும் சதாகாலமும் அவரது வீட்டில் நடந்தேறிய கதாகாலட்சேபங்களைக் கேட்டுக்கேட்டு அதிலிருந்து பகுத்தறிவுக்கு உட்பட்ட சில கேள்விகளைக் கேட்டு பண்டிதர்களை திணற வைத்தார் என்பதிலிருந்தே அவரது பட்டறிவு புலப்படும்.

மேலும் தன் வீட்டுச் சூழ்நிலையிலிருந்தே பெரியார் தனது பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு உரமேற்றிக் கொண்டார் என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும்.

இற்றைக்கு 115 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ‘ஜாதி பேதம் நீக்கல், சமபந்தி உணவு, கலப்பு ஜாதி மணம் என்ற கொள்கை அடிப்படையில் தன் மண்டியில் பணிபுரிந்த ஒருவருக்கு வேற்று சாதிப் பெண்ணுடன் செய்து வைத்த திருமணத்தை பாட்டுக் கச்சேரி, பல்லக்கு ஊர்வலம், சமபந்தி விருந்து என கடைகளில் பலரிடமும் வசூல் செய்து அமோகமாக நடத்திக் காட்டினார். ஊரிலுள்ள பலரும் இவ்விருந்தில் கலந்துகொண்டனர்.

ஈரோடு நகர சபைத் தலைவராக அவர் பெருமைப் புகழோடு விளங்குகையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி அகன்ற சாலைகளைப் போட்டபோது அவருக்கு வேண்டிய வியாபாரிகள் எதிர்த்துக் கேட்டபோது, ‘நான் இரண்டாவதுமுறை போட்டியிடப் போவதில்லை. சீர்திருத்தக் கருத்துகளில் நான் மாற்றிக் கொள்ளவோ பின்வாங்கவோ போவதில்லை’ என்று சிரித்துக் கொண்டே பதிலுரைத்தார்.

அதுபோலவே ஈரோடு நகராட்சி சாலையில் திரியும் ஆடுமாடுகளைப் பிடித்து பவுண்டில் அடைத்த போது தனது வீட்டு ஆடுகளையும் சேர்த்தே அடைத்ததோடு அதற்கான அபராதத் தொகையையும் மனைவியிடம் கொடுத்தனுப்பினார்.

மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தன் தோட்டத்திலிருந்து ‘கள்’ இறக்கப்படுவதைத் தடுப்பதற்காக 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார்.

இந்நிகழ்வுகளிலிருந்து பெரியாரின் அசைக்கவியலா மனோதிடமும் கொள்கைப் பற்றுறுதியும் விளங்கும். பெரும் தியாக மனப்பான்மையோடு தன் செல்வம், பதவிகள், புகழ் எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் மக்கள் நலனுக்காக வீதிக்கு வந்து போராடிய போராளி பெரியாரின் தியாகத்திற்கு ஈடில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக திரு.வி.க. மற்றும் உ.வே.சா ஆகியோரின் கருத்துகள் அமைந்துள்ளன.

“தந்தை பெரியார் அவர்கள் 1919ல் ஈரோட்டில் தாம் வகித்துவந்த நகரசபைத் தலைவர் பதவியையும் பல்வேறு கவுரவப் பதவிகளையும் துறந்து காங்கிரசில் சேர்ந்தார். அவர் துறந்த பதவிகள் 29 என்றால் எவரே இவ்வாறு செய்யவல்லவர்?

ஆண்டு ஒன்றுக்கு அந்தக் காலத்திலேயே சுமார் 20 ஆயிரம் ரூபாய் வருவாய் வரக்கூடியதான சீரும் சிறப்புடனும் நடைபெற்று வந்த வியாபாரத்தினை விட்டொழித்தார்.’ (திரு.வி.க., நவசக்தி 24-5-1924)

அழுக்கேறிய கதராடைகளுடன் அடையாளந் தெரியாதபடி பெரியார் மூட்டை சுமந்து வந்ததைக் கண்டு உ.வே.சா மனம் பதறிக் கூறுகிறார்.

‘செல்வச்சீமானாக பெரும் வணிகராக பொது மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற நகரசபைத் தலைவராக வாழ்வாங்கு வாழ்ந்த தாங்கள் இன்று வணிகத்திலும் செல்வத்திலும் வீழ்ச்சி அடைந்து இப்படி மூட்டை சுமந்து ஊர்சுற்றி விற்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டீர்களே’ என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.

தன் பதவி அந்தஸ்து செல்வம் அனைத்தையும் ஒரு பொருட்டாகக் கருதாது பொதுவாழ்வுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதோடு நில்லாமல் தனது குடும்பத்துப் பெண்களையும் ஈடுபடச் செய்தார் என்பதிலிருந்தும் அவரது கொள்கை உறுதிப்பாட்டையும் தியாக உணர்வையும் விளங்கிக் கொள்ளவியலும்.

ஈரோட்டில் 1921ல் கள்ளுக்கடை மறியல் நடைபெற்றபோது பெரியாரும் அவரோடு சுமார் 100 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கடுத்து நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் பல பெண்மணிகளுடன் மறியலுக்குப் புறப்பட்டனர்.

இதையடுத்து தமிழகமெங்கும் போராட்டம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்தியாவெங்கும் எதிரொலிக்கவும் செய்தது.

இந்நிலையில் காங்கிரசுக் கட்சிக்கும் அரசாங்கத்துக்குமான ஒப்பந்தப் பேச்சுக்கான ஒரு மாநாடு நடத்த வேண்டியிருந்த நிலையில் சிலர் தற்காலிகமாக மறியலை ஒத்திப்போடலாம் என்று காந்திஜியைக் கேட்டுக்கொண்டபோது “மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டும்‘ என்று காந்திஜி சொன்ன பதில் 19-1-1922 நாளைய ‘இந்து' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பெரியார் ‘உண்மை விளக்கம் அச்சகம்” என்ற அச்சகம் அமைத்து ‘குடிஅரசு” வாரப்பத்திரிகையைத் தொடங்கினார். “இந்தப் பத்திரிகைக்கு போதிய ஆதரவில்லாமல் நட்டப்படுவதால் இதனை நிறுத்தி விடலாமா” எனக் கேட்ட அச்சக மேலாளருக்கு பெரியார் இப்படி பதில் சொல்கிறார்.

“எவர் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் எவர் படித்தாலும் படிக்காவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. நான் ஒருவனே எழுதி நானே அச்சுக்கோர்த்து அடித்து நானே திண்ணையில் உட்கார்ந்தாவது உரக்கப் படித்து மகிழ்வேன். ஊராருக்கு அது போய்ச் சேரும்.”

பெரியார் தனது அரசியல் செயல்பாடுகளில் தணியாத ஊக்கமும் தெளிவும் கொண்டமைக்கு இது மற்றொரு சான்றாக விளங்குகிறது. பின்னாட்களில் கைவல்ய சாமியார், மா.சிங்காரவேலர், பாரதிதாசன், ப.ஜீவானந்தம், அண்ணா, கருணாநிதி, புலவர் குழந்தை என எண்ணற்ற அறிஞர்களின் படைப்பாற்றல் களமாக ‘குடியரசு” பத்திரிகை திகழ்ந்ததென்பது நாடறிந்த வரலாறு.

பெரியார் பங்கேற்ற விழாக்களிலேயே ஒரேயொரு விழாவில் மட்டும் அவர் உரையாற்றாமல் திரும்பியமை நடந்தேறியது. அப்போதைய காங்கிரஸ் அரசின் பண்பின்மைக்குச் சான்றான நிகழ்வும்கூட.

பெரியார் தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியதனடிப்படையில் 24-8-1965ல் திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லுரி துவக்க விழாவில் முதலமைச்சர் பக்தவத்சலம் கலந்துகொண்டார்.

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பெரியாரும் அழைக்கப்பட்டிருந்தார். முதலமைச்சர் பேசி முடித்ததுடன் விழா முடிவடைந்து விட்டது. நன்கொடையாளர் என்ற முறையிலும் பெரியார் பேசவோ வாழ்த்துக் கூறவோ வாய்ப்பளிக்கப்படவில்லை. உடனிருந்தவர்கள் உள்ளங்குமுறினாலும் பெரியார் இதனை பொருட்படுத்தாது அமைதியாக இருந்து விட்டார்.

அதேபோல 1962 பொதுத்தேர்தலில் பெரியார் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஈரோடு சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளரான ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்துப்பேச உடல்நிலை சரியில்லாத நிலையில் ஈரோடு வந்திருந்தார்.

அப்போது ஏ.எஸ்.கிருஷ்ணமுர்த்தி பெரியாரிடம் “எனக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது அய்யா, நீங்கள் பிரச்சாரம் செய்தால் எதிர்மறையாகிவிடுமென்று சிலர் அச்சுறுத்துகிறார்கள், அதனால் அதனை ரத்து செய்தால் நல்லது’ என்று கேட்டுக்கொள்கிறார்.

அப்போது பெரியார் “பரவாயில்லை அப்படியே செய்துவிடுகிறேன். எனக்கு ஒருநாள் பிரச்சாரம் வீணாகப் போய்விட்டதே என்ற கவலைதான். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனது கவலையும் ஆசையும். அது நான் பேசாமல் கிடைக்கும் என்றால் அதுதான் சிறந்த முடிவு” என்று பெருந்தன்மையோடு பதிலுரைத்து இந்த ஒருநாள் பயனற்று வீணாய்ப் போனதே என வருந்தி அன்றைய தினம் ஓய்வெடுத்துக் கொண்டார்.

பெரியாரைப் பற்றிய ஏராளமான அரசியல் நிகழ்வுகள் பயணங்கள் வாயிலாக பெரியாரின் அரும் பெரும் குணாம்சங்களை தமிழ்கூறு நல்லுலகம் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு மிகுந்த சிரத்தையோடு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் சுட்டப்பட்டுள்ள, சுதந்திரப் போராட்டத்தில் மாபெரும் தியாகியாக விளங்கிய வ.உ.சி.யின் பெரியாரைப் பற்றிய உணர்ச்சிமயமான பாராட்டுரை எத்தனை மெய்ம்மையானது என்பதை இந்நூலைப் படிப்பதன் வாயிலாக  உணர்ந்து கொள்ளவியலும்.

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

கி.வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு பெரியார் திடல், 84/1(50), .வெ.கி.சம்பத் சாலை,

வேப்பேரி, சென்னை - 600 007

ரூ.150/-

Pin It