காங்கிரசின் பெயராலும், திரு. காந்தியின் பெயராலும், அஹிம்சையின் பெயராலும், சத்தியாக்கிரகத்தின் பெயராலும் நமது நாட்டில் இப்பொழுது நிகழ்ந்து வரும் காரியங்களைப் பார்த்தால் நியாய புத்தியுடைய எவரும் அவைகளைக் கண்டிக்காமலிருக்க முடியாது. ‘அஹிம்சையின்’ பெயரால் ஆரம்பித்து நடத்தப்படும் சட்டமறுப்பு இயக்கத்தினால் உண்டாகும் ஹிம்சைகள் எண்ணற்றவை.

periyar 636நாட்டில் வியாபார மந்தமும் பொருளாதார நெருக்கடியும் ஏற்றுமதி இறக்குமதிக் குறைவுகளும் ஏற்பட்டுச் செல்வ நிலை பாழ்பட்டுக் கிடக்கிறது. ஏழைமக்கள் பட்டினியினாலும் நோயினாலும் கிடந்து மடிகின்றனர். கற்றவர்கள் பலர் வேலையற்ற திண்டாட்டத்தினால் படும் தொல்லைகள் சொல்லித் தொலையாதவை.

அரசாங்கமோ இத்துன்பங்களை நிவர்த்தி செய்ய முன் வராம லிருப்பதற்குத் தங்களுக்கு சட்ட மறுப்புக்காரர்கள் கொடுத்து வரும் தொல் லையே காரணம் என்று சொல்லி விடக் கூடிய நிலைமையில் இருக்கின்றனர்.

ஆகவே பொதுஜனங்களின் கஷ்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு போகின்ற தென்பதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. “அரசாங்கத்திற்கு உண்டாகும் கஷ்டம் ஜனங்களைப் பாதிக்காமல் போகாது” என்ற அரசியல் தத்துவத்தை அறிந்தவர்கள் சட்டமறுப்பு இயக்கமும் பொது ஜனங்களின் கஷ்டத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும் என்பதை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும்

தற்போது சட்ட மறுப்பு இயக்கம் அரசாங்கத்தாருக்குத் துன்பங் கொடுத்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் நேரே பொது ஜனங் களுக்கும் துன்பம் உண்டாக்கக் கூடிய நிலைக்குத் திரும்பி விட்டதைக் கண்டும் பொது ஜனங்கள் அதை அடக்க முன் வராமலிருப்பதா என்பதுதான் நமது கேள்வி.

உதாரணமாகச் சில தினங்களாக நடை பெற்று வரும் “தபால் பெட்டி களில் தீ யிடுதல்” என்ற நிகழ்ச்சியைப் பாருங்கள். இந்த முயற்சி இப்பொழுது அனேகமாக இந்தியாவில் உள்ள எல்லா முக்கிய பட்டணங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மதியற்ற காரியத்தால் உண்டாகும் கஷ்டமும் நஷ்டமும் யாருக்கு என்று ஆலோசித்துப் பாருங்கள்.

இதனால் அரசாங்கத்திற்கு ஒருவித நஷ்டமுமில்லை கஷ்டமு மில்லை. அரசாங்கத்தாரிடம் விலை கொடுத்து வாங்கிய ஸ்டாம்புகள் ஒட்டப் பட்ட தபால்களே பெட்டிகளில் போடப்படுகின்றன. அவைகள் பற்றியெரிந்து விடுவதனால் நஷ்டம் அரசாங்கத்தாருக்கா? பொது ஜனங்களுக்கா? என்று ஆராய்ந்து பார்க்கும் மூளையற்றவர்கள் தானா சுயேச்சை சுயராஜியம் பெற்று ஆளக் கூடியவர்கள்?

இன்னும் தபால் ஆபீசுகளில் மறியல் செய்யவும் ஆரம்பித்து இருக்கின்றனர். சில இடங்களில் ரயிலை மறியல் செய்தார்களாம். ஆஹா! இவையெல்லாம் எவ்வளவு புத்திசாலித்தனமான காரியங்கள்!

இது மாத்திரமல்ல தனி மனிதர்களின் உயிருக்கும் காலிகள் ஆபத்தை உண்டாக்கி வருகின்றார்கள். கொலை வெறிபிடித்த சில வாலிபர்களால், இது வரையிலும் உத்தியோகஸ்தர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு உதாரணம் சில தினங்களுக்கு முன் மிதுனபுரி ஜில்லா மாஜிஸ்திரேட் திரு. ஆர். டக்ளஸ் என்பவரை சுட்டுக் கொன்ற அநியாயமும் ஒன்றாகும். தங்கள் கடமைகளை நிறைவேற்றுகின்ற உத்தியோகஸ்தர்களை இவ்வாறு மூர்க்கத்தனமாகச் சுட்டுக் கொல்வதனால் சுயராஜியம் கிடைத்து விடுமா என்று தான் கேட்கின்றோம்.

இங்ஙனம் உத்தியோகஸ்தர்களைக் கொலை புரிந்து வரும் கூட்டத் திற்கும், காங்கிரஸ் சட்ட மறுப்புக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லப் பட்டாலும் அரசாங்கத்தின் மேலும் வெள்ளைக்கார அதிகாரிகளின் மேலும் துவேஷத்தை உண்டாக்கி வரும் அஹிம்சா தருமம் என்று சொல்லப்படுகின்ற சட்டமறுப்புப் பிரசாரமே காரணமென்பதை யார் மறுக்க முடியும்?

இத்தகைய கொலைச் செயல்களையெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் கண்டிக்கின்றார்கள் என்றாலும் கொலை செய்யத்தூண்டும், துவேஷத்தை யுண்டாக்கும் சட்ட மறுப்புப் பிரசாரத்தை நிறுத்தவோ ஒழிக்கவோ யாரும் முன்வராமலிருப்பது நமது நாட்டிற்கு இன்னும் கெடுதியை உண்டாக்கும் விஷயமேயாகும்.

இன்னும் பல இடங்களில், சட்ட மறுப்புக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்யச் சொல்லும் போது, வேலை நிறுத்தம் செய்யாதவர்களையும், கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கின்றவர்களையும் பலாத்காரத்தினால் துன்புறுத்துகிறார்கள் என்ற செய்திகளும் கிடைக்கின்றன. இவைகளை யெல்லாம் பார்க்கும் போது தற்போது அஹிம்சையின் பேரால் சட்ட மறுப்பு செய்து வரும் ‘புத்திசாலிகள்’ காலித்தனத்திலும், பலாத்காரச் செயல்களிலும் இறங்கிப் பொது ஜனங்களுக்குத் துன்பத்தை உண்டாக்கத் தொடங்கி விட்டார்கள் என்று சொல்லுவதில் என்ன குற்றமிருக்கின்றது?

இவ்வாறு தொண்டர்கள் என்பவர்கள் செய்வதற்குக் காரணம் காங்கிரசல்ல வென்றும், பொறுப்பற்ற சிலருடைய தூண்டுதலேயென்றும் சில தேசீயப் பத்திரிகைகள் என்பன குறிப்பிட்டிருந்தன. ஆனால் காங்கிரஸ் கமிட்டியில் தபால் தந்தி, ரயில்வே முதலியவைகளையும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணியிருக்கும் போது இவைகளுக் கெல்லாம் எப்படி காங்கிரஸ் காரணம் அல்லவென்று கூறமுடியும் என்று கேட்கின்றோம்.

ஆகையால் இவ்வாறு பொறுப்பற்ற தன்மையிலும், காலித் தன்மை யிலும், பொது ஜன நன்மைக்கு விரோதமாக நடந்து கொள்ளுவதோ - நடந்து கொள்ளுபவரோ - எதுவாயிருந்தாலும், எவராயிருந்தாலும் அவர்களை அடக்க வேண்டியதே பொது ஜனங்களின் கடமை என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.05.1932)

Pin It