periyar karunanidhi“மிகவும் சாமார்த்தியகரமாகவும், விர்த்தியாகத் தக்க வழியிலும், ஸ்தல ஸ்தாபன ஆட்சியின் கருத்துக்கள் நிறைவேற்றும்படியான முறையில் வெற்றிகரமாகவும் கரூர் முனிசிபல் நிறுவாகம் நடத்திக் காண்பிக்கப்பட்டி ருக்கின்றது” என்று சென்னை அரசாங்கத்தார் இந்த மாகாண ஜில்லா முனிசிபாலிட்டிகள் சம்மந்தமாக எழுதி வெளியிட்ட 29-30 வருஷத்திய பொது நிர்வாகக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இந்த பாராட்டுதலைப் பார்த்து நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவதோடு கரூர் முனிசிபல் அக்கிராசனரையும், அங்கத்தினர்களையும் மனமாரப் பாராட்டுவதோடு கரூர் முனிசிபாலிடிக்கு இந்த மாதிரியான ஒரு நன்மையையும், கௌரவத்தையும், நற்சாட்சிப் பத்திரத்தையும் சம்பாதித்துக் கொடுக்கத்தக்க அங்கத்தினர்களையும், தலைவரையும் தெரிந்தெடுத்த கரூர் மகா ஜனங்களையும் பாராட்டி போற்றுகின்றோம்.

(குடி அரசு - செய்திக்குறிப்பு - 10.05.1931)

ஜனாப் அலாவுதீன் ராவுத்தர்

தென்னிந்திய நல உரிமைச் சங்க உதவித் தலைவரும், மதுரை முனிசிபல் கௌன்சிலரும், நமது நண்பருமான ஜனாப் கா.ம. அலாவுதீன் ராவுத்தரவர்கள் 5.5.31ந் தேதி காலை 7மணிக்கு தமது 55 வது வயதில் முடிவு எய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம். ஜனாப் ராவுத் தரவர்கள் பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்தில் அதிகக் கவலை பூண்டு, மிக்க அக்கரையுடன் தொண்டாற்றியவராவர். ஜஸ்டிஸ் கக்ஷி தோல்வியடைந்த பிறகு மதுரையில் கூட்டப்பட்ட பார்ப்பனரல்லாதார் மகா நாட்டின் போது மிக்க ஊக்கத்துடன் ஒத்துழைத்து மகாநாட்டை சிறப்புர நடத்தி வைத்த பெரியார்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் காலஞ்சென்றது எல்லா பிராமணரல்லாதார்களுக்கும், சிறப்பாக மதுரை பிராமணரல்லாதாருக்கும் ஓர் பெரிய நஷ்டத்தை விளைவித்ததுடன் அவர்களின் முன்னேற்றத்தில் மிக்க கவலையுடன் அரும்பாடுபட்டு வந்த ஒரு உற்ற நண்பரை இழந்து விட்டார்களெனக் கூறுவது மிகையாகாது. நமது அனுதாபத்தை அன்னாரின் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - இரங்கல் செய்தி - 17.05.1931)

‘சுதந்திர வீரன்’

சுதந்திர வீரன் என்னும் பத்திரிகையின் முதல் மலர், முதல் இதழ் வரப் பெற்றோம். அதன் தலையங்கத்தில் கடவுள், காந்தி, காங்கிரஸ், புராதான நாகரீகம், தேசீயம் ஆகியவைகளைப் புகழ்ந்தும், எழுதியிருக்கின்றதுடன் இதையே தமது கொள்கையாகவும் கொண்டிருப்பதாகவும் அறியக் கிடக்கின்றது. ஆதலால் இதன் கொள்கை ‘காந்தீயம்’ என்பதாகவே தெரிய வருகின்றது. இப்பத்திரிகைக்கு உயர்திரு. எஸ். சத்தியமூர்த்தி ஐயரால் அனுப்பப் பட்டிருப்பதாய்க் காணப்படும் ஒரு வாழ்த்துச் செய்தியில் “இந்தியா சுயராஜியம் இழந்து அன்னியர் கையில் சிக்கிப் படும் கஷ்டத்தில் ஒரு பாகத்தை அனுபவிப்பதுடன் தமிழ் நாட்டார் தங்கள் சுயமரியாதையையும் இழந்து கஷ்டப்படுகின்றார்கள்.”

“ஆகவே சுதந்திர வீரன் சுயராஜியத்திற்குப் போராடுவதுடன் தமிழ் நாட்டார் இழந்ததை (சுயமரியாதையை) அடைய உதவுமென்று நம்புகின்றேன்” என்பதாக எழுதி இருக்கின்றார். ஆகவே இதை லட்சியம் செய்து நடக்கும் முறையில் முயன்று நின்று வெற்றி பெற விரும்புகின்றோம்.

ஆசிரியர் திரு.ஜெ.பி.ராட்ரிக்ஸ்

“சுதந்திர வீரன்” ஆபீஸ்,

பெரிரா வீதி,

தூத்துக்குடி

(குடி அரசு - மதிப்புரை - 17.05.1931)

Pin It