மூடநம்பிக்கைகளில் மூழ்கி - இன்னலிலே துயின்றிருந்தத் தமிழர்களை உலுக்கி விழிப்புறச் செய்திட்ட இடிமுழக்மென கடவுளால் விதிக்கப்பட்டது இந்தத் துன்ப வாழ்க்கை என வீழ்ந்து கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களை எழுச்சியுறத் திசை காட்டிய விடிவெள்ளியாய், அறியாமை இருள் நீக்கிடும் செம்பரிதியாய் ‘குடிஅரசு’ உதித்த நாள் 02.05.1925.

பெரியார் 22.11.1925இல் காஞ்சிபுரத்தில் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறி இருந்தாலும் ‘பார்ப்னரல்லாதார் சுயமரியாதை இயக்கம்’ 26.12.1926இல் மதுரையில் கொள்கை விளக்கங்களுடன் தோற்றம் பெற்றது. ஆயினும் ‘குடிஅரசு’ தோன்றிய நாளையே பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளாகக் கொள்ளப்படுகின்றது.

காங்கிரசுக் கட்சியின் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காகப் பெரியாரும் அவரது நண்பர் தங்கபெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் சிறைவாசத்தின் போது கலந்துபேசி ‘சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோதரத்து வத்தையும் உண்டாக்க குடிஅரசு என்னும் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும்’ என்று தீர்மானித்திருந்தனர். அது போலவே வெளியில் வந்த கொஞ்ச நாள்களுக்குள் ‘குடிஅரசு’ என்று ஒரு வாரப் பத்திரிகையையும் ‘கொங்கு நாடு’ என்று ஒரு மாதாந்திரியையும் நடத்திட அரசிடம் பதிவு செய்து விட்டதாக குடிஅரசு வெளிவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவின்போது 01.05.1927 குடிஅரசு இதழின் தலையங்கத்தில் பெரியார் எழுதியுள்ளார்.

குடிஅரசு தொடங்கிய போது அவ்வேட்டின் கொள்கைக் குறிப்பாகத் தலையங்கப் பகுதியில் கீழ்க்காணும் பாடலை வெளியிட்டார்.

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி எவர்க்கும் ஆற்றி

மனத்துளே பேதா பேதம்

வஞ்சம், பொய், களவு, சூது

சினத்தையும் தவிர்ப்பா யாகில்

செய்தவம் வேறொன் றுண்டோ

உனக்கிது உறுதி யான

உபதேசம் ஆகுந் தானே!

இப்பாடல் சமயச் சார்புள்ளது போலத் தோன்றினாலும் ‘மக்கள் அனைவரும் சமம்’ என்ற பெரியாரின் கோட்பாட்டை வலியுறுத்துகின்றது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்பாடல் இடம்பெறவில்லை. இதேபோல குடிஅரசு முகப்பு அட்டையின் மேற்புறத்தில் வெளியிட்டு வந்த பாரத மாதா, காந்தி நெசவு செய்வது, தொழிலாளர் தொழில் புரிவது முதலான படங்கள் 18.12.1927 இதழுக்குப் பின் இடம்பெறவில்லை.

குடிஅரசு 02.05.1925இல் தொடங்கிய போது பெரியார், திருப்பாதிரிபுலியூர் ஞானியாரடிகளைக் கொண்டு அலுவலகத்தைத் தொடங்கி வைத்திடவும் முதல் இதழை வெளியிடவும் செய்தார். குடிஅரசு தொடங்கிய போது அதன் ஆசிரியர்கள் ஈ.வெ.இராமசாமி மற்றும் வழக்குரைஞர் கருங்கல்பாளையம் வா.மு. தங்கபெருமாள் பிள்ளை ஆகிய இருவர். 1925இலேயே வா.மு. தங்க பெருமாள் பிள்ளை குடிஅரசு ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். 06.03.1926இல் வா.மு. தங்கபெருமாள் பிள்ளை மறைந்து விட்டார்.

குடிஅரசு முதல் இதழில் திராவிட இயக்கத் தலைவர் பி. தியாகராயர் மறைவுற்ற செய்தி பின் காணுமாறு வெளியிடப் பட்டிருந்தது.

“பார்ப்பனரல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கிய ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியார் அவர்கள் 28.04.1925 அன்று இரவு 9.45 மணிக்கு இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகெய்தியச் செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகிறோம்.”

“அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் 2009 பதிப்பு, தொகுதி 6, பகுதி 2, பக்கம் 4684).

1928 வரையில் பெரியார் இக்கருத்தில் இருந்தார். 26.11.1928இல் சென்னையில் நடைபெற்ற சீர்திருத்தக் காரர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை அவருடைய சிந்தனையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுவிட்டதைப் பட்டாங்கமாக உணர்த்தியது. (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் 2009 பதிப்பு, பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து அவர்களின் முன்னுரை பக்.xIiv (44), தொகுதி 1, பகுதி 3).

வேதங்களைக் கண்டிப்பவன் “நாத்திகன்” என்று அழைக்கப்பட்டபடியும், அய்ம்புலன்களுக்குத் தட்டுப்படாமலும் அறிவியல் ஆய்வுக்குப் புலப்படாமலும் உள்ள எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த ஒன்று அல்லது ஒருவர் இருக்க முடியாது; இல்லை; இல்லவே இல்லை என்கிற முடிவின்படியும் ஈ.வெ.இரா. ஒரு கடவுள் மறுப்பாளர்  என்பது திட்டவட்டமான ஒன்றாகும். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் 2009 பதிப்பு, பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து முன்னுரை பக்.xIiii (43), தொகுதி 1, பகுதி 3).

குடிஅரசில் கடவுள், மதம், ஆத்மா, மறுபிறவி முதலான மூடநம்பிக்கைகளைப் பெரியார் தொடர்ந்து வன்மையாகக் கண்டித்துள்ளார்.

குடிஅரசு ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் எனக் குறிப்பிட்டு வந்தது 18.12.1927க்குப் பின் 25.12.1927 இதழ் முதல் ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி என இடம்பெற்றது.

தொடக்கத்தில் ஸ்ரீமான் எனப் பயன்படுத்தியது 1927க்குப் பின் திரு, திருமதி, செல்வி எனவும் 20.11.1932க்குப் பின் தோழர், தோழியர் என மாற்றம் பெற்றது.

1928க்கு முன் ‘பிராமணர்’ என்று வழங்கப்பட்ட சொல் 1928க்குப் பின் ‘பார்ப்பனர்’ என மாற்றம் பெற்றது.

1932 அக்டோபர் வரை சொற்பொழிவாற்றும் போது விளித்த அக்ராசனர் அவர்களே! அக்ராசனாதிபதி அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! என்பது 17.10.1932 முதல் தலைவர் அவர்களே! தோழர்களே! என மாற்றம் பெற்றது.

கோவில்பட்டியில் 19.06.1927 அன்று ‘கோவில்பட்டி திராவிடர் கழகத்தின் 18ஆம் ஆண்டு விழாவில்’ பெரியார் தலைமையுரையாற்றினார் என்ற செய்தி 28.08.1927 குடிஅரசு இதழில் வெளியாகியுள்ளது. இதேபோல் திருவாரூரில் ‘திராவிடர் கழகம்’ என ஓர் அமைப்புச் செயல்பட்டது என்ற செய்தி 22.05.1927 குடிஅரசு இதழில் இடம்பெற்றுள்ளது.

இதுபோன்று பற்பல செய்திகள் அறியக் கிடைக்கும் சுரங்கமாக 99 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்ற குடிஅரசு இன்றளவும் அறிவூட்டிக் கொண்டுள்ளது; உணர் வூட்டிக் கொண்டுள்ளது. குடிஅரசு முதலாவதுத் தொகுதியின் தலையங்கத்தில் பெரியார் குறிப்பிட்டுள்ளதாவது :

“மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும் சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும். உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள் மறைய வேண்டும். மேற்சொன்ன கொள்கைகளைப் பரவச் செய்வதற்காக உழைக்கும் காலத்தில், நம்மைத் தாக்குபவர்களுடைய வார்த்தைகளையாவது நாம் சிறிதளவு பயமின்றி ­சினேகிதர், விரோதி என்ற வித்தியாசமில்லாமல் யாரையும் கண்டிக்க நாம் பயப்படப் போவதில்லை.”

சாதி ஒழிய வேண்டுமானால் சாதிக்கு ஆதாரமான வருணாசிரம அமைப்பு ஒழிய வேண்டும். சாதியை நிலை நாட்டும் சாதித் தொழிலும் ஒழிய வேண்டும் என்பதோடு ­வகுப்புரிமை மக்கள் தொகை எண்ணிக்கை விகிதாசாரப்படி அளிக்க வேண்டும் என்பதாகப் பெரியார் கொண்ட கொள்கை களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே குடிஅரசு தோற்றம் பெற்றது. எந்த ஒரு நிலைப்பாட்டை பெரியார் மேற்கொள்ள விரும்பினாலும் அதற்கு அவர் கொண்டிருந்த உரைகல் ஒன்றே ஆகும்.

சுயமரியாதைக் கொள்கைக்கு ஆக்கமும், பார்ப்பனரல்லாத மக்களின் சமுதாய இழிவு ஒழிப்புக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவும் ஒரு இம்மியளவு அதிகமாகக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அவருக்கு எப்போது தோன்றினாலும் அதற்கு முன்னிடம் கொடுத்து எந்த நிலைப்பாட்டையும் மாற்றிக் கொண்டார்.

17.02.1929, 18.02.1929 நாள்களில் செங்கல்பட்டில் நடந்த ‘சென்னை மாகாண சுயமரியாதை முதல் மாநாடு’ சாற்றிய செய்திகள் :

1. சுயமரியாதை இயக்கம் 1925இல் தோன்றியது; 2. 1925 முதல் ஈ.வெ. இராமசாமி சகாப்தம் பிறந்தது; 3. நம் தலைவர் ஈ.வெ. இராமசாமி பெரியார்; 4. சுயமரியாதை இயக்கத் தந்தை ஈ.வெ. இராசாமி பெரியார் என்பன வரலாற்றுக்குட்பட்ட பேருண்மைகளாகப் பலராலும் அறியப் பட்டன.

24.08.1929 பிற்பகல் பெரியாரின் புதிய இல்ல மாடியில் சுயமரியாதைப் பயிற்சிப் பள்ளி திறப்பு விழா நடந்தது. அவ்விழாவில் ஆர்க்காடு இராமசாமி முதலியார், ஆர்.கே. சண்முகம் செட்டியார், பெரியார் பங்கேற்றனர். இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான வரலாற்றுப் பதிவுகளின் கருவூலமாக குடிஅரசு திகழ்கின்றது.

இருக்கும் நிலையை மாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடன் என இதழாசிரியர் பெரியார் 29.10.1933 குடிஅரசில் ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’ என ஆசிரியவுரை எழுதிய தற்காக பிரித்தானிய அரசு ‘இராச நிந்தனை’ குற்றஞ்சாட்டி விசாரணை நடத்தி 24.01.1934 அன்று பெரியாருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. குடிஅரசு இதழின் வெளியீட்டாளர் என்பதற்காகப் பெரியாரின் தங்கை ச.இரா. கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டார். குடிஅரசு இதழ் வெளியிட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் குடிஅரசு 19.11.1933 நாளிட்ட இதழுடன் நிறுத்தப்பட்டது. ஓராண்டுக்குப் பின் 13.01.1935 நாளிட்ட இதழ் முதல் குடிஅரசு மீண்டும் வெளிவரலாயிற்று.

மேற்குறிப்பிட்ட காலத்தில் குடிஅரசு வெளிவராததால், பொது மக்கள் நலம் நாடி புதுக்கருத்தைச் சொல்ல 26.11.1933 முதல் ‘புரட்சி’ எனும் புதிய வார இதழ், குடி அரசின் கதிரொளியைப் பரப்பியது. ‘புரட்சி’யும் 17.06.1934 நாளிட்ட இதழுடன் நிறுத்த நேரிட்டது. மக்களை ஒன்று சேர்த்திடும் இதழ் பணியை ‘பகுத்தறிவு’ 26.08.1934 முதல் 06.01.1935 வரை அதாவது குடிஅரசு 13.01.1935இல் மீண்டும் வெளியிடப்படும் வரை தொடர்ந்தது.

06.01.1935 பகுத்தறிவு வார இதழில் எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இடைநிறுத்தப்பட்டிருந்த குடிஅரசு மீண்டும் 13.01.1935 அன்று வெளிவந்த போது அவ்வேட்டில் தொடங்கி தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் நடை முறைக்கு வந்தது.

மக்கள் எண்ணம் செழித்திட புதுக்கருத்தை ஊற்றி ஊற்றி பார்ப்பனரல்லாத-ஒடுக்கப்பட்ட-உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மனிதர்களுக்குள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என நிலவும் நிலை மாற்றிட 05.11.1949 வரை குடிஅரசு சமர்புரிந்தது. பின்னர் விடுதலை நாளேடு பெரியாரின் போர்க் கருவியாய் விளங்கியது.

மக்களிடையே சமத்துவம் நிலவ, சமஉரிமைத் தழைக்கச் சமர்புரிந்த குடிஅரசுத் தாங்கிவந்த பெரியாரின் புரட்சிக் கருத்துக்களை கற்போம்! புதியதோர் சமுதாயம் படைப்போம்! வெல்க பெரியாரியம்!

(இக்கட்டுரைக்கு அடிப்படை பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூல் தொகுப்பு 1974, 2009 பதிப்புகளுக்கு பதிப்பாசிரியர் பெரியாரியல் அறிஞர் வே. ஆனைமுத்து அவர்களின் முன்னுரைகள்)

- சா.குப்பன்