வட மாகாணத்தில் சுயராஜ்ஜியத்திற்காக என்று செய்யப்படும் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் பிரமாதமாக விளம்பரப் படுத்தப்பட்டாலும் ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணாசிரம சுயராஜ்ஜிய சூட்சிகளும் அங்கு தாராளமாய் நடந்து கொண்டுதான் வருகின்றன.
அங்கு வருணாசிரம சுயராஜ்ஜிய மகாநாடு என்பதாக ஒன்று பெருத்தமுறையில் ஏற்பாடு செய்து வருணாசிரமமும், ஜாதி உயர்வு தாழ்வும், மனுதர்ம சட்டங்களும் அவசியம் என்றும் அவைகளை நிலை நிறுத்த பிரசாரம் செய்ய வேண்டுமென்றும் பிரயத்தனங்கள் செய்யப்பட்டதை அறிந்து தாழ்த்தப்பட்ட மக்களாகிய ஆதி திராவிடர்கள் என்போர்கள் அம்மகாநாடு நடக்கமுடியாமல் சத்தியாக் கிரகம் செய்ததாகவும் அதற்காக, அவர்களில் பலரைச் சிறைப்படுத்தி இருப்ப தாகவும் பொது ஜனங்கள் எல்லாம் கூடி வருணாசிரமத்தை நிலை நிருத்துபவர்களைக் கண்டித்ததாகவும் காணப்பட்டிருக்கின்றன.
வெள்ளைக்காரர் ராஜ்ஜிய மாகிய “பட்டப்பகலில்” இந்த அக்கிரமம் நடக்கும்போது இனி வருணாசிரம சுயராஜிய ராஜ்யத்தில் என்ன வித அக்கிரமம் நடக்காது என்பதை யோசித்துப் பார்க்கும்படி நினைப்பூட்டுகிறோம்.
(குடி அரசு - செய்தி விளக்கம் - 04.01.1931)