தோழர்களே! பன்னீர்செல்வம் நினைவுநாள் என ஒரு நாளை நாம் கொண்டாடுகிறோம். எத்தனையோ பேர் தினம் சாகிறார்கள். ஏதோ இரண் டொருவர் களுக்குத்தான் நினைவு நாள் கொண்டாடுகிறோம். 

periyarசெத்துப்போனவர் களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமார்த்தியம் முதலியவைகளைப் பற்றியோ  எவருக்கும் நாம் நினைவுநாள் கொண் டாடுவதில்லை. இவை காரணமாக நாம் எவரையும் போற்றுவதில்லை, துதிப் பதுமில்லை; பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத் தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரெரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டு மானால் என்சைக்கிளோபீடியா, ரேடியோ முதலியவை ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியான அனேகவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவு என்பவையெல்லாம் இவை களை உத்தேசித்ததல்ல.
 
மற்றெதற்கு ஆக என்றால் மனிதர் களாக மனிதத் தன்மை உடையவர்களாக இருந்து மறைந்த மனிதர்களுக்கு ஆக இரங்கி அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி மற்றவர்களையும் மனிதர் களாக ஆகுங்கள் என்பதற்கு ஆகவே யாகும்.

அப்படியானால் செத்துப்போன மற்றவர்களும் இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல் லவா என்று கேட்பீர்கள். அவர்களை யெல்லாம் மனிதர்கள் என்று சொல்லு கிறோமே ஒழிய, மற்ற ஜீவப்பிராணி களுக்கும், மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனி தர்கள் என்று சொல்வதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவ பேதம் அல்ல; நடப்பிலும் நடப்பால் ஏற் படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.

உலகிலுள்ள எல்லா ஜீவப்பிராணி களுக்கும் மனிதர்கள் என்பவர்கள் உட்பட உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.

ஜீவன் என்றால்?

ஜீவன் என்றால் பிறத்தல், தன் நல னுக்காக வாழ்தல், இனத்தைப் பெருக் குதல், இறத்தல் ஆகியவைகளைக் கொண்டதேயாகும். இந்தத் தத்துவங் களைப் பார்த்தால் செத்த மனிதர்களும் இருக்கும் மனிதர்களும் முக்காலே மூன்று வீசம் முக்காணி அரைக்காணி பேரும் அதற்கும் மேற்பட்ட எண் ணிக்கை உடையவர்களும் மேற்கண்ட குணங்களுடைய ஜீவப்பிராணி என் பதில் சேர்ந்தவர்களாக ஆகாமல் அவை களில் நின்றும் உயர்ந்தவர்களாகக் கருதப்படவேண்டிய மனிதத்தன்மை உடையவர்களாக இருக்க நியாயம் எங்கே இருக்கிறது?

ஜீவன் என்றால் சுய   உணர்ச்சி என்றுதான் கருத்து. சுய உணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய, தன் வாழ்வைப் பற்றிய, தன் பாதுகாப்பைப் பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான் முடியும். இந்தத் தன்மையை உடையவர் களை ஜீவப் பிராணிகளில் நத்தை, சங்கு, ஈ, எறும்பு, பாம்பு, தேள், குயில், கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை, ஆடு, மாடு, குரங்கு, மனிதன் என்பதாக மனிதனை மற்றவைகளோடு சேர்த்துச் சொல்லுவதற்கு அல்லாத தனிக்குணம் வேறு என்ன பெரும்பாலான மனிதர்களி டம் இருக்கிறது என்று கருதிப் பாருங்கள்.

மனிதனுக்கு ஆறு அறிவு இருக்கிறது என்று சொல்வது மனிதனை ஜீவப் பிராணிகளிடம் இருந்து பிரிப்பதற்குப் போதுமான காரணமாகாது. சிந்திக்கிற குணம் எல்லா ஜீவப்பிராணிகளிடமும் இருக்கிறது. ஜீவத்தன்மை எந்தெந்த ஜீவனுக்கு இருக்கிறதோ, அவற்றிற்கெல் லாம் சிந்திக்கும் தன்மை உண்டு. ஆனால் அதில் அளவு வித்தியாசம் இருக்கிறது என்பது உண்மை. அதனால் எதுவும் வேறுபட்ட உயர்ந்த ஜீவனாக ஆகிவிடாது. அதன் பலனாலும் ஏதும் உயர்ந்ததாக ஆகிவிடாது.

தேன் ஈக்களால் மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள்; மாடுகளால் மக்கள் பால் சாப்பிடுகிறார்கள்; ஆடு, கோழி களால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள்; நாய்களால் காக்கப்படுகிறார்கள்; கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடை கிறார்கள். இப்படி எத்தனையோவற்றால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை. அப்படித் தான் மனித ஜீவனும் பல வழிகளில் பல காரணங்களால் வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்பட லாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிட மாட்டான்.

எதனால் மனிதன் உயர்ந்தவன்?

மற்றபடி எதனால் மனிதன் மற்ற ஜீவப் பிராணிகளுடன் சேராத உயர்ந்தவனாக லாம் என்று கேட்கப்படலாம். அதைச் சொல்லத்தான் இவ்வளவு சொன்னேன்.

ஜீவ சுபாவ உணர்ச்சியான தன்மை உணர்ச்சியும், தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட் சியம் செய்து,அதாவது தன்னைப் பற்றிய கவலையும், தனது நலத்தையும், தன் மேன்மையையும் பற்றிய கவலையும், தனது மேல் வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து மனித சமுதாய வாழ்வில் மேன்மைக்காக பணியாற்றவே மற்ற ஜீவன்களுக்கு இருக்க முடியாத வசதி, எண்ணும் தன்மை, தொண் டாற்றும் சக்தி ஆகியவை இருக்கிறது என்று கருதித் தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ் வாகக் கொண்டிருக்கிறானோ அவன்தான் மற்ற ஜீவப்பிராணிகளில் இருந்து வேறு பட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனா வான். மனிதஉரு ஜீவப்பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவு நாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்கு ஆகத்தான் இருக்கலாமே ஒழிய வேறு ஒன்றுக்காக இருக்க முடியாது.

ஒரு மனிதனுக்கு அவனது மலமும், மூத்திரமும் உயர்ந்த நறுமணமுள்ளதாக இருந்தாலும் அதனால் மனிதன் மேன்மை யானவனாகவோ, மதிக்கத் தகுந்தவனா கவோ ஆகிவிட மாட்டான். சிற்சில புல் பூண்டுகளுக்கு நறுமணம் உண்டு. சில ஜந் துக்களின் மலங்களுக்கும் நறுமணமுண்டு, அவற்றை நாம் மதிக்கிறோமா? போற்று கிறோமா?

அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கி றோமா? அல்லது தெய்வங்கள் என்பவர் களையாவது மதிக்கிறோமா? மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை, மடாதிபதி களை மதிக்கிறோமா? இவர்களையெல் லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும் தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள்தான் மதிப்பார்கள். மற்றவர்கள் ஏன் மதிப் பார்கள்? ஏன் என்றால் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பவனை யார் எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன் அன்னதானப் பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர் குருநாதனாவானா? தாசி காதலியாவாளா? என்பதுபோல்தான். தன் தன் நலத்துக்குத் தன் தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் எப்படிப் பட்டதாயிலும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழியப் போற்றக்கூடியதாகாது. அப்படியல் லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிற வன் மதிக்கப்பட்டே தீருவான். அத் தொண்டால் பாதகமடையும் தனிப்பட்ட வர்கள் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் மதிக்காமல் இருக்கலாம். அவமதிக்கலாம். அது பொதுவாய் மதிக்காததாகாது.

ஆகவே, நாம் நினைவு நாள் கொண் டாடும் மக்களை உண்மையான மனிதர்களாய்க் கருதி அவர்களது மனிதத் தன்மையை மதித்து மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டும் என்கின்ற ஆசைக்காக எடுத்துக்காட்டுக்காக, பிரசாரத்துக்காகக் கொண்டாடுகிறோம்.

நம் பன்னீர்செல்வம்

நம் மறைந்த பன்னீர்செல்வம் அப்படிப் பட்ட கொண்டாடவேண்டிய குழுவில் சேர்க்கப்பட வேண்டியவர் என்றே சொல் லலாம். அவர் நம் இனத்திற்குத் தன்னல மின்றிப் பல தொண்டாற்றினார். இன்னும் பல தொண்டாற்ற ஆவலாய் இருந்தார். அவர் நமக்காகத் தம்மை ஒப்படைத்தார்.

அவர் நம் இயக்கத்தில் ஓர் உண்மை யான பின்பற்றுகிறவராக இருந்தார்; தலை வருக்கு அடங்கி இருப்பதுதான் ஓர் இயக் கத்துக்கு, ஒரு கட்சிக்குச் சரியான கட்டுப் பாடு என்று பலதடவை பொது மேடை களில் பேசி அதுபோல் நடந்து வந்தார்.

இன்று சிலர் தாங்கள் கட்டுப்பாட்டுக்கும், ஒழுங்கு முறைக்கும் விரோதமாக நடந்து கொண்டு கட்சியில் கட்டுப்பாடு இல்லை என்றும், அதேசமயத்தில் தலைவர் சர்வாதி காரியாய் இருந்து கட்டுப்பாட்டைக் குலைக் கிறார்கள் என்றும் பேசி கலவரம் செய்து வருவதைப் பார்க்கிறோம். அந்தக் குணம் நம் பன்னீர் செல்வத்தினிடம் இல்லை. சிலர் தலைவர் என்பதற்கும், சர்வாதிகாரம் என்பதற்கும் பொருள் விளங்காமல் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓர் இயக்கம் அல்லது ஒரு ஸ்தாபனமாய் இருந்தால் அதில் உள்ள எல்லோருக்கும் தங்கள் இஷ்டப்படி பேசவும் நடக்கவும் உரிமை உண்டு என்பது பொருத்தமாகாது. நீ சர்வாதிகாரம் செய்கிறாய் என்று இங்கு (தஞ்சையில்) ஒரு கேள்வித்தாள் எனக்குக் கொடுக்கிறார்கள். இதற்குச் சமாதானம் சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.

இயக்கத்தின் - ஸ்தாபனத்தின் கொள் கைத் திட்டம் ஆகியவைகளைப் பற்றிச் சர்ச்சை செய்யும் போதும், தீர்மானிக்க விவாதிக்கும் போதும், பேசும்போதும் அதில் (இயக்கத்தில்) உள்ள ஒவ்வொருவருக்கும் தங்கள் அபிப்பிராயம் தெரிவிக்கும் உரிமை இருக்கும். அது முடிந்த பிறகு அதற்கு அடங்கி இருப்பதுதான் கட்டுப்பாடாகும். அதை மீறினவர்கள், குறை கூறுகிறவர்கள் செய்கையும் பேச்சும் கட்டுப்பாட்டுக்கு மாறுபட்ட காரியமாகும்.

ஒரு முதலாளி (எஜமான்) கீழ்இருந்து காரியம் பார்ப்பவர்களுக்கும், ஒரு இயக்கத்தில் ஒரு தலைவன் பின்னிருந்து பின்பற்றுகிறவர்களுக்கும் சுதந்திரம் இருக்க முடியாது. கொள்கைத் திட்டம் முடிந்து விட்டால் பேசாமல் பின்பற்ற வேண்டியது தான். அது தனக்குப் பிடிக்காவிட்டால் வெளியேறிவிட வேண்டியதுதான். வெளி யேறித் தனித்து வாழ முடியாவிட்டால் எதிர்த்துக்கொண்டு இருப்பதைச் சிலர் தங்கள் சமத்து என்று கருதுகிறார்கள். இதனால் இயக்கத்துக்குத் தொல்லை கொடுத்து தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதாகச் சிலர் கருதுகிறார்கள். அது அறியாமை என்பது மாத்திரமல்லாமல் தங்கள் நிலை தாழ்வடைவதையும் அறியாத வர்களாகிறார்கள்.

நம் இயக்கம் ஏதோ சிலர் மாத்திரம் சேர்ந்து தன்னலம் அடையும் (லிமிடெட்) கூட்டுக் கம்பெனியாய் இருந்தால் மாத் திரமே ஒவ்வொரு கூட்டாளியும் உரிமை கொண்டாடலாம். பலரது (பொது) நலனுக்கு என்று சிலர் பொது நலம் கருதி வந்ததாகச் சொல்லிக் கொண்டுவந்து சேர்ந்து அதில் தங்கள் நலனுக்குத் தக்கபடி நடைமுறை இல்லையானால் கலகம் செய்வது என்பதும், அப்படிக் கலகம் செய்து கொண்டு ஸ்தாபனத்தையும், தலை வரையும் கட்டுப்பாடு இல்லை; ஒழுங்கு இல்லை; சர்வாதிகாரம் நடக்கிறது என்பதும் வெறுக்கத்தக்கது என்பதோடு முடியாதது மாகும்.

யுத்தத்தில் சேர்ந்த யுத்த வீரன் ஊதிய மில்லாமல் சேவை செய்பவனானாலும் தளகர்த்தனைவிட அதிகம் தெரிந்தவனா னாலும் யுத்தக் காரியத்தில் தளகர்த்தன் சொல்வதைக் கேளாமல் தளகர்த்தன் சொல்வதைக் தவறு சொல்லிக் கொண்டி ருந்தால் அது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதா என்று பாருங்கள். யுத்தத்தில் சேரும்போது யோசித்தே சேர வேண்டும். அல்லது தளகர்த்தன் இன்னான் என்று தெரிந்த உடன் இவன் கீழ் நம்மால் தொண்டாற்ற முடியுமா என்று சிந்தித்துத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாமல் தளகர்த்தனை ஏமாற்றி அதிகாரம், கலவரம் செய்து பயன டைந்து விடலாம் என்று கருதி உடுப்பைப் போட்டுக்கொண்டு முன்னணியில் நின்று சலாம் செய்து விட்டு யுத்த முறை தனக்குக் கஷ்டமாய் இருக்கிறது என்று தெரிந்த உடன் தளகர்த்தனை, சர்வாதிகாரியாய் இருக்கிறான், கட்டுப்பாடில்லாதவனாய் இருக்கிறான் என்றால், இப்படிப்பட்ட வர்கள் தன்னைத்தான் ஏமாற்றிக் கொண் டவர்களாவார்கள். இது சாதாரண மக்க ளுக்கும் புரிந்திருக்க வேண்டிய காரியம். ஆசை நேர்மை அறியாது என்பதற்கு ஒப்பாக இப்படிப்பட்டவர்கள் காரியங்கள் இருக்கின்றன. என்றாலும் மற்றவர்கள் நடைமுறைகளை, திட்டங்களை, கொள் கைளை உணர்ந்து தம்மால் கூடுமானால் ஒத்துழைக்கவும், கூடாவிட்டால் விலகிக் கொள்ளவும் பழகிக்கொள்ளவேண்டும்.

தற்கால அரசியல்

மந்திரி பதவி சீக்கிரம் ஏற்படும் என் கின்ற உணர்ச்சியே சிலர் கலவரம் செய்யக் காரணமாகிவிட்டது. முதுகில் ஒரு கையும், காலில் ஒரு கண்ணும் முளைத்தாலும் முளைக்கலாம், சண்டை முடியுமுன் மந்திரி பதவி ஏற்படப் போவதில்லை; ஏற்பட்டா லும் வங்காளம், சிந்து முதலியவை போல் சிரிப்பாய்ச் சிரிக்க வேண்டித்தான் இருக் கும்; நமக்கு ஒன்றும் பலன் இருக்காது. ஆனால், அதனால் நமக்குச் சரியான வேலையும் உற்சாகமும் இருக்கும். சாப்ரூ கமிட்டி என்பது ஒரு ஜாலவித்தையாகும். அறியா மக்கள் அதை மந்திரம், குட்டிச் சாத்தான் வேலை என்பார்கள். அறிந்த வர்கள் அது ஜாலவித்தை என்பார்கள்.

எல்லாக் கட்சி மாநாடாக இருந்து பிறகு அது கட்சி இல்லாதார் மாநாடாகி சாப் ரூவின் தனி முயற்சி ஆகி காந்தி - ஆச்சாரி கூட்டுச் சூழ்ச்சி ஆசீர்வாதம் பெற்றதாகி இப்போது சந்தி சிரிக்கும் தந்திரமாக ஆகி விட்டது. அதைப்பற்றி நமக்குக் கவலை வேண்டியதில்லை.

சென்பிரான்சிஸ்கோ மாநாட்டுப் பிரதிநிதி

சென்பிரான்சிஸ்கோ மாநாட்டுக்குச் சர். இராமசாமி முதலியார் பிரதிநிதியாய்ப் போவது தகுதி இல்லை என்று பார்ப் பனர்கள் சொல்லுகிறார்கள். அவர்களது அடிமை தேசியவாதிகளும் ஆமாம் போடு கிறார்கள். சர். ராமசாமிக்குப் பூணூல் இல் லாததால்தான் தகுதி இல்லை என்று சொல் லுகிறார்களே தவிர வேறு அவரைவிட கெட்டிக்காரர், விஷயம் தெரிந்தவர் யார் என்று இவர்கள் கருதுகிறார்கள் என்பது விளங்கவில்லை! இவர்கள் குட்டு வெளியாய்விடும் என்று கருதித்தான் தேசியவாதிகள் ஆட்சேபிக்கிறார்கள். திராவிட நாடு வேண்டாம், பாகிஸ்தான் வேண்டாம் என்று சொல்லி நான் காங் கிரசுக்காரனுமல்ல என்று சொன்னால் சென்பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பப்பட லாம் என்று கருதி சிலர் கரணம் போட்டும் பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம் அடைந் தார்கள். 

---------------------------

மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ் நாட்டிலுள்ள திருச்சி, தஞ்சை, கும்பகோணம் முதலிய பல இடங்களில் நடந்த பன்னீர்செல்வம் நினைவு நாள் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சுகளின் தொகுப்பு------ - குடிஅரசு - சொற்பொழிவு - 14.04.1945

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It