anna periyar and karunanidhiமொழியின் அடிப்படையில் தமிழர்கள் ஓர் இனமாக அடையாளப்படுத்திக் கொள்ளாத வரலாற்றுச் சூழலில் தமிழர்களின் ஓர்மைக்குத் தடையாக இருக்கும் காரணிகளைக் கண்டறிந்தது திராவிட இயக்கம். தமிழர் ஒற்றுமைக்கு தடைச் சுவராக நின்ற சாதி அமைப்பு; அது கட்டமைத்த மேல்/கீழ் அடக்குமுறையிலான ஒடுக்குமுறைகளுக்குக் கருத்தியலை வழங்கி மாற்றங்களைத் தடுத்து வந்த பார்ப்பனியம்; சூத்திரர், பஞ்சமர் - இழிநிலை; தீண்டாமை இவைகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய திராவிடர் இயக்கம் முதலில் பார்ப்பனரல்லாதார் என்ற பெயரோடு களத்துக்கு வந்தது. பிறகு எதிர்மறைச் சொல்லைத் தவிர்த்து, திராவிடர் என்ற அடையாளத்தை ஏற்றது.

மொழி வழி பிரிக்கப்படாத அன்றைய சென்னை மாகாணத்தில் உருவான திராவிட இயக்கம் பார்ப்பனரல்லாதார் கொடுங்கோல் ஆதிக்கத்துக்கு எதிராகப் பார்ப்பனரல்லாத மக்களுக்கான திராவிடர்களுக்குக் கல்வியில், பதவியில், அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் கேட்டது. ஒரு தேசம் / தேசியம் என்ற உருவாக்கத்தின் உயிர் மய்யம் பிறவி அடிப்படையிலான பாகுபாடுகளை மறுக்கும் சமத்துவமே என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்த பெருமை திராவிடர் இயக்கத்துக்கு உண்டு. தமிழ்த் தேசியத்துக்குத் திராவிடர் இயக்கம் வழங்கிய மகத்தான கொடை இது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற உரிமைக்காக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே போராடினார் பெரியார். சுதந்திர இந்தியாவில் வகுப்புகளாகப் பிரிந்து கிடக்கும் அனைத்துப் பிரிவினருக்கும் சமத்துவத்தை எதிர்காலத்தில் உறுதி செய்யும் கொள்கையைக் காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்றார் பெரியார். இக்கோரிக்கையைப் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்த காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்தது. காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், தமிழரின் சுயமரியாதைக்குத் தடைக்கல்லாக நிற்கும் கடவுள், மதம், புராணம், சாஸ்திரம் - இவைகளைத் தங்களின் பாதுகாப்புக் கவசமாக்கி மக்களை சுரண்டி வந்த பார்ப்பனர்களுக்கு எதிராக மக்களை அணி திரட்டினார்.

எல்லைகளோடும் மொழி அடையாளங்களோடு மட்டுமே முன் வைக்கப்படும் வெகு மக்களின் சுயமரியாதையை மறுக்கும் தேசியத்தைப் பெரியார் ஏற்க மறுத்தார். சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்காத எந்தத் தேசியமும் அர்த்தமற்றது என்பதில் உறுதி காட்டிய பெரியார், இந்திய தேசியமே பார்ப்பன - பனியாவின் ஆதிக்க மய்யமாகி யிருப்பதைச் சுட்டிக் காட்டி, தமிழ்நாட்டு விடுதலையை 1938ஆம் ஆண்டிலேயே முன் மொழிந்தார். மொழி வழியில் பிரிக்கப் படாத அன்றைய சென்னை மாகாணம் என்ற தமிழர்களுக்கான பகுதியை இந்தியாவிடம் இணைத்து விட்டால் மீளமுடியாத அடிமையில் தமிழர்கள் சிக்கி விடுவார்கள் என்பதே பெரியாரின் பெரும் கவலை.

மொழிவழி மாநிலப் பிரிவினை நடந்த போது சென்னை மாகாணத்திடமிருந்து சுயமரியாதை உணர்வில்லாத ஆந்திரர்களும், கன்னடர்களும் ஒரு வழியாக விலகிப் போய் விட்டார்கள் என்று மகிழ்ச்சி அடைந்த பெரியார், மொழிவழி மாநிலப் பிரிவினையை ஆதரித்தார்.

பெரியார் பேசிய திராவிடர் கோட்பாடு தமிழர்களின் இழிவு ஒழிப்புக்கும், சுயமரியாதைக்கும், சமத்துவத்துக்கும், வளர்ச்சிக்குமானது என்பதை திசைத் திருப்பி, அதுவே தமிழகத்துக்குப் பகை என்பது போன்ற ஒரு மாயை, கருத்துக் குழப்பம் திட்டமிட்டு சில முகாம்களிலிருந்து பரப்பப்படுகிறது.

உண்மையில் தமிழர்களின் தனித்துவம், தன்னுரிமை, சுயமரியாதையை உள்ளடக்கிய தமிழ்த் தேசியத்துக்குத் திராவிடர் இயக்கம் வழங்கிய பங்களிப்பு மகத்தானது.

மொழிவழி மாநிலங்கள் உருவானாலும், மாநிலங்கள் தங்களுக்கான தேசிய உணர்வைப் பெற்றிருந்தாலும் சாதியமைப்பு உருவாக்கிய ஏற்றத் தாழ்வுகளைச் சமன் செய்ய கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு எனும் பங்கீட்டு முறையை வலியுறுத்திய திராவிடர் இயக்கம், அதுவே தேசிய இனங்களின் அடையாளத்தை முழுமையாக்கும் என்று வலியுறுத்தியது. இப்போது மொழி வழி மாநிலங்களில் மட்டுமல்லாது மத்திய அரசிலும் இடஒதுக்கீடு அமுலில் இருப்பதற்குக் காரணம் திராவிட இயக்கம் தந்த சமூக நீதி வெளிச்சம்தான்.

சென்னை மாகாணம் என்றிருப்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று 1963இல் மாநிலங்கள் அவையில் முதல் குரல் கொடுத்தார் அண்ணா. தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் கூட சூட்ட முடியாத நிலையை பெரியார் கவலையுடன் எடுத்துரைத்தார். 1967இல் அண்ணா முதல்வரானவுடன் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைச் சட்டசபையில் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார்.

இந்தியைத் திணித்து விட்டால் அதன் வழியாக சமஸ்கிருதத்தையும் பார்ப்பனியக் கலாச்சாரத்தையும் மக்களிடம் எளிதாகப் புகுத்தி விடலாம் என்று கருதி சென்னை மாகாண முதல்வராக இருந்த இராஜகோபாலாச்சாரி இந்தியை 1938இல் பள்ளியில் கட்டாயமாக்கிய போது பெரியாரும் திராவிடர் இயக்கமும் எதிர்த்துப் போராடி இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்தியது.

சனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டுமல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர் தான் சனநாயகம் - என்று மாநிலங்கள் அவையில் 1963இல் அண்ணா பேசினார். தமிழ்த் தேசியத்தின் அடையாளத்துக்குள் மதச் சிறுபான்மை மக்களையும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதைப் பேச்சில் மட்டுமல்ல; இஸ்லாமிய - கிறிஸ்தவ மக்களிடையே நல்லுணர்வையும் சகோதரத் துவத்தையும் உருவாக்கி தமிழ்த் தேசியத்துக்குள் அவர்களை அடையாளப்படுத்தியது திராவிடர் இயக்கம்.

பெண்களின் சமத்துவத்துக்காகச் சுயமரியாதைத் திருமணம்; பாரம்பரியக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை; கணவனை இழந்த பெண்ணின் மறுவாழ்வு; மறுமணத்தை ஊக்குவிக்கும் திட்டங்களை உருவாக்கியது, திராவிட இயக்க ஆட்சி. உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்களையும், அரசுப் பணிகளில் 30 சதவீத இடங்களையும் ஒதுக்கியதும் திராவிட இயக்கம்தான்.

ஒரு தேசிய இனத்தின் மொழியை தமிழ் நாட்டின் அரசு அடையாளமாக்கி மொழி வாழ்த்தை உருவாக்கியது திராவிட இயக்கம் தான்.

மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்பதற்காக இராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை நியமித்து அதன் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக 1971ஆம் ஆண்டு நிறைவேற்றி நடுவண் ஆட்சிக்கு அனுப்பி வைத்ததும் திராவிட இயக்க ஆட்சிதான்.

கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறைகளை அறிமுகப்படுத்தியதும், தமிழன் கட்டிய கேயில்களில் தமிழர்களை அர்ச்சகர்களாக்க சட்டமியற்றியதும், அதற்காக அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கிப் பயிற்சி அளித்ததும் தமிழ்த் தேசியத்துக்குத் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு. மாநிலங்களுக்கான திட்டமிடுதலுக்கும் நிதி ஒதுக்கல்களுக்கும் வழிகாட்டிட மத்திய திட்டக் குழுவுக்கு இணையாக தமிழ்நாடு திட்டக் குழுவை உருவாக்கியது திராவிட இயக்க ஆட்சிதான்.

மாநில முதலமைச்சருக்கு, சுதந்திர நாளில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்ததும் திராவிட இயக்க ஆட்சி தான்.

தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் இந்தியை ஒழித்து இரு மொழித் திட்டத்தை அமுல்படுத்தி நடுவண் ஆட்சியின் மொழித் திணிப்பை எதிர்த்ததும் திராவிட இயக்கம் தான். தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய மொழிப் போராளிகளுக்கு அரசு உதவித் தொகை; மருத்துவக் கல்லூரிகளில் அவர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடுகளை வழங்கி தமிழ்த் தேசிய அடையாளத்தை உறுதி செய்ததும் திராவிட இயக்கம் தான்.

மாநில உரிமைகளைவிட இந்திய ஒற்றுமையே பெரிது என்ற கண்ணோட்டத்தில் ஒரு காலத்தில் செயல்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் மாநில உரிமைக்கு முன்னுரிமை தரும் அணுகுமுறையை உருவாக்கியது திராவிட இயக்கத்தின் தாக்கம்தான்.

இப்போதும் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, நாட்டை ஒற்றையாட்சி முறைக்கு இழுத்துச் செல்லும் பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியம் மற்றும் தன்னாட்சிப் பார்வையில் குரல் கொடுப்பதும் போராடுவதும் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். தமிழ்நாடே இன்று ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்டுகிறது. அதற்கான உணர்வுகளுக்கு அடித்தளமிட்டது திராவிட இயக்கம் தான்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் எத்தனையோ சமூகநீதி, மக்கள் நலத் திட்டங்களைப் பட்டியலிட முடியும். ஆனாலும் தமிழ்த் தேசியப் பார்வையில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பில் சிலவற்றை மட்டும் பட்டியலிட்டுள்ளோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It