periyar 296பஞ்சரத்தினம்

உலகத்தில் எங்குமே பெண்கள் தாழ்த்தப்பட்டிருக்கின்றார்கள். நமது நாட்டில் அவர்கள் மனிதப் பிறவியாயிருந்தும் மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்படுவதும் அவர்கள் ஆண்களின் காம இச்சை தணிக்கும் கருவியாகவும், பிள்ளைபெறும் யந்திரமாகவும், ஆண்களுடைய சொத்துக்களில் ஒன்றாகவும், தகப்பன் என்பவனாலும் சகோதரன் என்பவனாலும் புருஷன் என்பவனாலும் பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கவோ விற்கவோ வாடகைக்கு விடவோ தனது சுயநலத்துக்காக மற்றவர்களுக்குக் கூட்டிக் கொடுக்கவோ கூட சுவாதந்தரியமுள்ள வஸ்துக்களாகவும் பாவிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களை விலைக்கு வாங்கியவர்கள் மற்றவர்க்கு கூலிக்கு விபசாரத்திற்கு விட்டு பணம் சம்பாதிக்கும் ஒரு யந்திரமாகவும் உபயோகப்படுத்தி வருகின்றனர். இத்தகைய கொடுமைகள் அநேகமாய் மதத்தின் பேராலும் தர்ம சாஸ்திரத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடை பெற்றுவருவதும் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

ஆனால் நமது நாட்டைத் தவிர மேல் நாடுகளில் இக்கொடுமைகள் வரவரக் குறைந்து அவர்களுக்குச் சுதந்திரம் வளர்ந்து வருகின்றது. உதாரணமாக அமெரிக்க நாட்டில் பெண்கள் ஆண்களைப்போலவே கோடிக்கணக்கான ரூபாய்கள் சொத்துக்களுடனும் சுதந்திரத்துடனும் ஆயிரக்கணக்காக வாழ்கின்றார்கள்.

இவைகளை அறிந்த இந்திய நாட்டு பெண்மணிகள் தங்கள் சுய மரியாதையை எண்ணி இப்போது விடுதலை அடைந்து முற்போக்கடைய முயற்சித்துவிட்டார்கள். உதாரணமாக சென்ற வாரத்தில் சென்னையில் கூடிய பெண்கள் முன்னேற்ற மகாநாட்டில் நடைபெற்ற விஷயங்களும் அங்கு செய்யப்பட்ட தீர்மானங்களும் மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

அதை பார்க்கின்றவர்கள் பெண்கள் விடுதலை விஷயத்தில் கடுகளவும் கவலை உள்ளவர்களாயிருந்தாலும் ஆனந்தக் கூத்தாடாமல் இருக்க மாட்டார்கள். ஏன் என்றால் அம்மகாநாட்டுத் தீர்மானங்களில் முக்கியமாக அய்ந்து தீர்மானங்கள் மகிழ்ச்சிப் பெருக்குடன் பாராட்டக் கூடியவைகளாகும்.

அவ்வைந்தையும் பஞ்சரத்தினம் என்றே சொல்ல வேண்டும். அதாவது. 1. பெண்களுக்கு விவாக சுதந்திரம், 2. சொத்து சுதந்திரம், 3. கண்கள் சுதந்திரம் (கோஷாமுறை) 4. ஒழுக்க சுதந்திரம், 5. விவாக விலக்கு சுதந்திரம் ஆகிய ஐந்து விஷயங்களைப் பொறுத்த தீர்மானங்களேயாகும்.

இப்போது நமது நாட்டு விவாக சுதந்திரமானது மிருகங்களை உடையவனிடம் சென்று விலைக்கு வாங்குவது போல் பெண் பிள்ளைகள் உள்ளவர்களிடம் சென்று “உன்னுடைய பெண்ணை எனக்குக் கொடுக்கின்றாயா” என்று கேட்பதும், தகப்பன் பெண்ணின் கையைப் பிடித்துக் கொடுக்க புருஷன் பெண்ணின் கழுத்தில் கயிறு கட்டி அழைத்துக் கொண்டு போவது மாயிருக்கின்றது.

மேலும் புருஷன் வீட்டிற்குப் போகும்போது பெண்ணுக்குத் தாய் தகப்பன் சொல்லி அனுப்பும் புத்திமதியோ ஒரு மிருகத்திற்குக் கூட சொல்லியனுப்ப யோக்கியதையில்லாததானதாகும். அதாவது “ஓ பெண்ணே! இன்று உன்னை இன்னாருக்குக் கொடுத்து விட்டேன்.

நீ அங்கு போய் மிக்க கீழ் படிதலாய் நடந்து கொள்ள வேண்டும்; மாமன், மாமி, நாத்தி, மைத்துனர் மார்களுக்கு அடங்கி நடக்கவேண்டும். கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன்; அவன் அடித்தாலும் உதைத்தாலும் பட்டினி போட்டுக் கொன்றாலும் அவனை தெய்வம் போல் கருத வேண்டும்.

புருஷனுக்கு மிஞ்சிய தெய்வம் கிடையாது. நீ ஏதாவது உன் இச்சைப் படி நடந்து எனக்கு கெட்ட பெயரைக் கொண்டு வந்து விட்டுவிடாதே; ஆனால் உன் புருஷன் என்ன சொன்னாலும் கிணற்றில் விழு என்றாலும் உடனே விழுந்துவிட வேண்டும்.

புருஷன் என்ன சொன்னாலும் அந்தப்படி நடப்பது தான் கற்பு. அவன் என்ன செய்தாலும் நீ அதைப்பற்றி ஒன்றும் கேட்காதே” என்று சொல்லி பெண்ணின் கையைப் பிடித்து புருஷன் கையில் கொடுத்து புருஷனைப் பார்த்து “இன்று முதல் இது உன்னுடைய சொத்தாய் விட்டது. நீ இதை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்; அதற்கு தகுந்தபடி எல்லாம் அடங்கி நடப்பாள்” என்று ஒப்படைக்கின்றான்.

அநேகமாக இதுவே கல்யாண மந்திரமாகவும், சடங்காகவும், சாஸ்திர சம்மதமாகவும், கடவுள் நீதியாகவும் இருந்து வருகின்றது. அன்றியும் எந்தப் புருஷனுக்கு தன்னைக் கொடுக்கின்றார்கள் என்கின்ற விஷயம் பெண்ணுக்கு கழுத்தில் கயிறு கட்டும் வரை தெரிவதே கிடையாது.

அன்றியும் புருஷன் தன்னை தனது உபயோகத்திற்கு வாங்கிக் கொண்டு போகின்றானா மற்றவர்கள் உபயோகத்திற்கு வாங்கிக் கொண்டு போகின்றானா என்பது கூடத் தெரியாது! நமது நாட்டில் அநேக இடங்களில் இன்றும் பெண்களை கல்யாணம் செய்வது என்பது புருஷனுக்கு என்ற அர்த்தம் இருந்தாலும் மாப்பிள்ளையின் தகப்பன் உபயோகத்திற்கும் தமையன் உபயோகத்திற்குமே பெண் ஜாதியாய் இருக்க கல்யாணங்கள் நடைபெறுகின்றது.

மற்றும் சில இடங்களில் புருஷனின் உத்தியோகத்திற்கும் தொழில் விருத்திக்கும் அந்நியருக்கு உபயோகப்படுத்த என்றே கவனித்து கல்யாணம் செய்யப்படுகின்றது.

பெண் மிக்க சிறு பருவமுடையதாதலால் அதுவும் இதுதான் கல்யாணத்தின் தத்துவமோ என்று கருதி சிறிதும் யோசனை கூட இல்லாமல் எதற்கும் கட்டுப்பட்டு நடக்கின்றது.

இதுவே தாய் தகப்பன் செய்விக்கும் கல்யாணத்தினுடையவும் ஸ்மிருதி சுருதிகளினுடையவும் தெய்வீகத்தினுடையவும் உயர்ந்த தத்துவங்களாய் இருக்கின்றன.

இன்னும் சில இடங்களில் கல்யாணப் பெண்ணை விலைபேசி தகப்பனிடம் விலைகொடுத்து கயிறு கட்டி இழுத்து போவதாகவும் இருக்கின்றது. இன்னும் சில இடங்களில் ஒரே பெண்ணை மாற்றி மாற்றி இரண்டு மூன்று பேருக்கு விலைக்குக் கொடுத்து ஏமாற்றி பணம் வாங்குவதுமாயும் இருக்கிறது.

மற்றும் சில இடங்களில் விபசாரத்தின் மூலம் வயிறு வளர்க்கவும் பணம் சம்பாதிக்கவும் உபயோகப்படவுமே பெண்களை வளர்க்கப்படுகிறது.

எனவே, இதிலிருந்து கல்யாண விஷயத்தில் பெண்களுக்கு இப்போது இருக்கும் வழக்கம் மேலானதா அல்லது பெண்கள் சீர்திருத்த மகாநாட்டில் பெண்களுக்கு கல்யாண விஷயங்களில் தாங்களாகவே புருஷர்களை தெரிந்தெடுத்துக் கொள்ள கேட்கும் சுதந்திரம் மேலானதா என்பதும் இது பெண்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத முதல் படியல்லவா என்பதும் விளங்காமல் போகாது.

கல்யாண விஷயத்தில் இவ்வித சுதந்திரம் அளிக்க நமது சமூகமோ மதமோ சாஸ்திரமோ எந்தக் காரணத்தைக் கொண்டாவது மறுக்குமானால் இனி நாம் கண்டிப்பாய் பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் அந்தப்படி மீறி பெற்றோர்களால் செய்யப்படுமானால் அவ்வித கல்யாணங்களை விலக்கிக் கொள்ள சட்டத்தில் இடமேற்படும் வரை தங்களை “தாங்கள் இனிமேல் குடும்பப் பெண்கள் அல்ல” என்றாவது விளம்பரப்படுத்திக் கொண்டு விடுவது மேலேன்றுமே சொல்லுமாறு நிர்பந்தப்படுவதற்கு மிகவும் வருந்துகிறோம்.

ஏனெனில் மேல் கண்ட “தெய்வீக” கல்யாண முறையானது நமது நாட்டில் உள்ள ‘குடும்பப்பெண்’ அல்லாதவர்களுடைய நிலைமையைவிட மிக்க மோசமானதாயிருக்கிறது எப்படியெனில் ஒரு பெண் கல்யாணம் செய்து கொள்வதை விட “குடும்பப் பெண் அல்லாதவராக” இருக்க சம்மதிப்பதிலோ அல்லது இம்மாதிரி கல்யாணமான புருஷனிடமிருந்து விலகி வெளிப்பட்டுப் போய் தனியாக வாழ்வதிலோ அதிக சுதந்திரமும் சவுகரியமும் இருக்கின்றதைப் பார்க்கலாம்.

அதாவது ஒரு பெண் குடும்பப் பெண் அல்லாதவள் ஆகி விட்டால் அந்தப் பெண்ணுக்கு ஒழுக்கமுடன் வாழ உரிமையுண்டு. இஷ்டப்பட்ட கணவனை மாத்திரம் சேர்த்துக் கொள்ள உரிமையுண்டு.

இஷ்டமில்லாத போது எந்தக் கணவனையும் விலக்கவோ மறுக்கவோ சுதந்திரம் உண்டு. தன் இஷ்டப்படி தொழில் செய்து பணம் சம்பாதிக்க சுதந்திரம் உண்டு. அந்தப் பணத்தை தன் இஷ்டப்படி செலவு செய்ய உரிமையுண்டு.

இயற்கை இன்பங்களை இயற்கை உணர்ச்சிக்கேற்ப அனுபவிக்க சுதந்திரமுண்டு. தனது பிள்ளைக் குட்டிகளை இஷ்டப்படி வளர்க்க சுதந்திரமுண்டு. தனக்கு வேண்டிய அளவு மாத்திரம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள சுதந்திரமுண்டு.

தனது நியாயமான இஷ்டப்படி நகைகள் அணியவும் ஆடைகள் அணியவும் உரிமை உண்டு. ஆனால் நமது “தெய்வீக கல்யாணத்தில்” இவை ஒன்றுமே கிடையாது. வெறும் சாப்பாட்டிற்கும் துணிக்கும் அதுவும் தனது இஷ்டத்திற்கு ஒத்ததாக இல்லாத சாப்பாட்டிற்கும் துணிக்கும் மாத்திரம் அவன் (புருஷன்) ஆயுள் அளவும் ஒரு புருஷனின் காம இச்சையை அவனுடைய தேவைக்கும் சமயத்திற்கும் தகுந்தபடி தணிக்கக் கூடிய ஒரு கருவியாய் இருப்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

ஒருபெண் சரீர சவுக்கியத்தில், தான் எந்த நிலையில் இருந்தாலும் எவ்வளவு தேவை இல்லாத உணர்ச்சியுடன் இருந்தாலும் புருஷனுக்கு இஷ்டப்பட்ட போது சம்மதித்துத் தான் ஆக வேண்டும். அவன் மூலமாய் அவன் வேறு எங்கெங்கே சம்பாதித்துக் கொண்டு வந்த வியாதிகளையும் தனது சரீரத்தில் ஏற்றுமதி செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் பெண்ணுக்கு இஷ்டமேற்பட்ட போது தனது உணர்ச்சியை வெளியில் காட்டுவது கூட “உத்தமப் பெண்களின் தர்மத்திற்கு” விரோத மானதாகும். இதுவேதான் இப்போது இந்தியாவில் உள்ள பெண்மணிகளில் நூற்றுக்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட நிபந்தனைகளின் பேரில் கடவுள் கட்டளையாக சுமத்தப்பட்டு வருகின்றது.

ஆகவே இவ்வித கொடுமையை ஒழிக்க முதற்படியாக பெண்கள் சீர்திருத்த மகாநாட்டில் கல்யாண சுதந்திரம் கேட்டு தீர்மானித்திருப்பது நல்ல அறிகுறியே ஆகும்.

இரண்டாவதாக சொத்துரிமை, இது இப்போது இந்திய நாட்டில் இந்து மதத்தில் மாத்திரம் இல்லாமலிருக்கின்றது. இந்து மதப்படி பெண்கள் தாங்களே தங்களுக்குச் சுதந்திரமல்லாதவர்கள் என்று தீர்மானிக்கப்பட்ட பிறகு மதத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்குச் சொத்துரிமை என்று பேசுவது பிறவிக் குருடன் சித்திரமெழுதப் புறப்பட்டது போலவேயாகும். என்றாலும் இவ் விஷயத்தில் துணிந்துத் தீர்மானம் செய்தது போற்றற்குரியதேயாகும்.

மூன்றாவதாக கண்கள் சுதந்திரம், அதாவது கோஷா முறை விலக்கு. இது இந்துக்கள் என்பவர்களுக்குள் நம் நாட்டில் இல்லையானாலும், மற்றவர்களிடமும் வடமாகாணத்தில் பல வகுப்பு இந்துக்களுக்குள்ளும் இருக்கின்றது.

நம் நாட்டில் கோஷா என்பதான பெண்களுக்குத் தலையணை உறை போல அடியோடு உறை போட்டு மூட்டை மாதிரிக் கட்டிவிட்டாலும், அநேகம் பேர்கள் மேல்மக்கள் என்பவர்களில் நூற்றுக்கு 90 பேர்களும் படித்தவர்கள் என்பவர்களில் நூற்றுக்கு 75 பேர்களும் பெண்களை வெளியில் போகாமலும் மற்ற மக்களுடன் பழக முடியாமலும், வீதிக்குக் கூட வர முடியாமலுமே சிறை வாசம் போல் அடைத்து வைத்திருக்கின்றார்கள்.

ஆகவே இந்த கோஷா முறையும் சிறைவாசமும் பெண்களின் சுயமரியாதைக்கு மிகவும் கேடானது என்பதே நமது அபிப்பிராயம்.

பெண்கள் தாங்களாகவே தங்கள் புருஷனிடமுள்ள உண்மைக் காதலினால் புருஷனைத் தவிர வேறு எந்த வஸ்துக்களைக் கூடப் பார்க்க மாட்டேன் என்று சொல்வதானாலும், நமக்கு அதில் அதிக கவலை இல்லை.

புருஷன் நிர்ப்பந்தத்திற்காகவும், பயத்திற்காகவும் உறைபோட்டுக் கொள்வதும், அவர்களை அடைத்து வைப்பதும் மகா கொடுமையானது என்றே சொல்லுவோம். இதற்கு ஜீவ இம்சை நிவாரண சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு சமயம் நாம் இப்படிச் சொல்வதால் பலருக்கு வருத்தமுண்டாகலாம். அதாவது, பெண்களை மிருகம் போல், ஆடு மாடுகள் போல், ஆணும் பெண்ணும் ஒன்றாய்த் திரிய விடும்படி சொல்வது யோக்கியமா என்றும், முறை துறை வரையறையில்லாமல் மிருகங்கள் போல் நடந்து கொள்ள விடுவது சரியா என்றும் கூட கேட்கலாம்.

உலக சுபாவத்தில் நூற்றுக்கு 80 பெண்களுக்கு மேலாகவே கோஷா இல்லை. சிறை அடைப்பும் இல்லை என்பதையாரும் மறுக்க முடியாது. எனவே இந்த நூற்றுக்கு 80 பெண்கள் மிருகங்கள்போல நடக்கின்றவர்களா அல்லது நடத்தப்படுகின்றவர்களா என்று கேட்பதுடன் மேல் கண்ட 100-க்கு 80 பெண் களுடைய காதலர்களும் நாயகன்மார்களும் தாய் தந்தை சகோதரன்மார்களும் மிருகங்கள்போல நடக்க சம்மதிக்கிறவர்கள் என்றோ சொல்லக் கூடுமா என்றும் கேட்கின்றோம்.

ஆகவே கோஷா முறையை நீக்க மகாநாட்டில் தீர்மானித்ததை நாம் பாராட்டுகின்றோம். அதோடு இதே சமயத்தில் கோஷா முறை உள்ள நாடுகளிலும் அங்குள்ள அரசாங்கத்தார் சட்ட பூர்வமாயும் நீக்கி இருப்பதையும் மேலும் நீக்க முயற்சித்து வருவதையும் இச்சமயத்தில் ஞாபக மூட்டிப் பாராட்டுகின்றோம்.

நான்காவதாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஒழுக்கம் சுதந்திரம். ஒழுக்கம் என்னும் பேரால் பெண்களை கொடுமைப்படுத்துவது மாத்திரமல்லாமல், ஆண்களில் நூற்றுக்கு தொண்ணூறுபேர்கள் அயோக்கியர்களாகவும் கொடுமையாளர்களாகவும் ஏற்பட இடமேற்பட்டுக் கொண்டு வருவதே இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

அதாவது மனித வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதே எல்லாவற்றிலும் உயர்வு என்ற கொள்கை ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அவ்வொழுக்கத்திற்கு போடப்பட்டிருக்கும் திட்டங்கள் மிகவும் இயற்கைக்கும் அறிவிற்கும் நியாயத்திற்கும் நேர் எதிர் மறையானதென்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

உதாரணமாக ஆண் பெண்களின் மாற்ற முடியாத இயற்கை உணர்ச்சியில் பிரவேசித்து ஒழுக்கம் என்பது நிர்பந்தத்திற்குக் கட்டுப்பட்ட காதலும் பலவந்தத்திற்கு கட்டுப்பட்டாலும் அன்பும் கொண்டது என்றும், அதுவும் புருஷர்களுக்கு ஒரு விதம் பெண்களுக்கு ஒரு விதம் என்று பாரபட்சமாகவும் வழக்கத்தில் புருஷன் எவ்வளவு ஒழுக்க ஈனமாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டாலும் பெண்கள் அதைப் பற்றி சிறிதுகூட சிந்திக்கக் கூடாதென்றும், அந்தப் படி சிந்திக்காமல் இருப்பது மாத்திரமல்லாமல் தான் ஒரு சிறிதுகூட அப்படிப்பட்ட அவனைப் போல் நடக்க எண்ணக் கூடாது என்றும், அந்தப் படி நடந்தால் பாவம் நரகம் அடுத்த ஜன்மத்தில் இழிபிறப்பு என்பவைகளோடு உலகத்தில் இழிவு, அவமானம், சமூக பஹிஷ்காரம், அடி, உதை, இம்சை முதலியவற்றிற்கும் கட்டுப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டும் சில விஷயங்களில் அதன்படி செய்யப்பட்டும் வருகின்றது.

இந்த திட்டங்களின் தன்மை எப்படிப்பட்டது என்பதைப் பற்றி யோசிக்கும் முன், இதனால் ஏற்படும் பயன் என்ன என்று பார்த்தால் இவ்விஷயங்களால் ஆண்கள் ஒழுக்கத் தவறுதலாக நடந்து தீர வேண்டியதற்கு இந்த திட்டமே காரணமாயிருக்கின்றது என்றும் சொல்ல வேண்டியிருக்கின்றது.

ஏனெனில் ஒரு ஆண், தான் என்ன செய்தாலும் குற்றமில்லை என்று நினைத்துவிடச் செய்கின்றது. அதனால் விபசாரப் பெண்கள் ஏற்பட இடமுண்டாகின்றது.

அன்றியும் இம்மாதிரி தைரியமுள்ள புருஷர்களின் நிர்ப்பந்தத்தால் பலாத்காரத்தால் பலபெண்கள் விபசாரிகளாக வேண்டி நேரிடுகின்றது. இன்னும் அநேக கெடுதிகள் ஏற்படுகின்றது.

ஆதலால் மேல்கண்ட புருஷனுக்குள்ள ஒழுக்க சுதந்திரம் போலவே பெண்ணுக்கும் ஒழுக்க சுதந்திரம் என்று சொல்லி விட்டால் பெண்களில் ஒழுக்க ஈனமாக எத்தனை பேர் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் கருதுகின்றார்களோ, அதைவிட இரட்டிப்பான ஆண்கள் ஒழுக்க ஈனம் என்பதிலிருந்து திருந்துவார்கள் என்பது நமது உறுதியான முடிவு.

ஆதலால் இதைப் பற்றி பொது ஒழுக்கம் என்பதில் கவலையுள்ள யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே சொல்லுவதுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டுகின்றோம்.

கடைசியாக கல்யாண ரத்துக்கு சட்டம் செய்ய வேண்டும் என்பதாகும். இது எல்லாத தீர்மானத்தைவிட மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், கல்யாணக் கொடுமையைப் பற்றி முன்னமேயே சொல்லி இருக்கின்றோம்.

அன்றியும் பெண்ணின் பெற்றோரும் மாப்பிள்ளையின் பெற்றோரும் சேர்ந்து செய்து கொண்ட ஒரு காரியத்திற்காக யாதொரு தகவலுமில்லாத தம்பதிகள் என்பவர்கள் தங்களுக்கு இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவரால் ஒருவர் கொடுமைபடுத்தப்பட்டாலும், இழிவுபடுத்தப்பட்டாலும், வதைக்கப் பட்டாலும் பிரிந்து போக மார்க்கமில்லாமல் கட்டுப்பட்டுக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது என்ன நியாயம் என்று நமக்கு விளங்கவில்லை.

கலியாணம் என்பதை ஒரு ஒப்பந்தமாகக் கொண்டு இருவரும் சம்மதித்து செய்து கொண்டதாயிருந்தால் ஒப்பந்தத்தையும் கட்டுப்பாட்டையும் காப்பாற்ற வேண்டியது தம்பதிகளின் சமமான கடமையாகும்.

அப்படிக்கில்லாமல் யாரோ செய்த காரியத்திற்கு யாரோ எதற்காக கட்டுப்படுவது என்பது நமக்கு விளங்கவில்லை. அன்றியும் ஒரு புருஷனுக்கு அவனுடைய பெண்ஜாதி வியாதியுடையவர்களாகவோ, அழகில்லாதவளாகவோ, பிள்ளை பெறாதவளாகவோ, இஷ்டமில்லாதவளாகவோ போய்விட்டால் அவள் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டுவிடவும், அவளை விபசாரி என்று பேராக்கி அச்சிலவு கொடுப்பதிலிருந்து கூட தப்புவித்துக் கொள்ளவும் செய்துவிட்டு, சில சமயங்களில் சிலவுக்கு பணமும் கொடாமல் தள்ளிவிட்டு, சில சமயங்களில் அடித்தும் உதைத்தும் அடக்கி அடைத்துவைத்து தனது இஷ்டப்படி மறுபடியும் ஒரு பெண்டாட்டியோ, பல பெண்டாட்டிகளோ, அல்லது தாசிகளோ, வைப்பாட்டிகளோ வைத்துக் கொள்ளத்தக்க விதமாக ஆண்களுக்கு கல்யாண உரிமை இருக்கும்போது; பெண்களுக்கு புருஷன் கொடுமை சகிக்க இஷ்டமில்லையானால், சோறும் சேலையும் கூட கேட்காமல் வேறு ஒரு புருஷனைக் கட்டிக் கொள்ளவோ அல்லது அதுகூட இல்லாமல் சும்மா இருக்கவோ ஏன் உரிமை இருக்கக் கூடாது என்று கேட்கின்றோம்.

உண்மையாய் கல்யாணமான பெண்களில் நூற்றுக்கு ஐம்பத்தொரு பெண்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தால் விதவைத் தன்மை மேலென்றே தோன்றுகின்றது.

விதவைகளுக்கு இன்ப நுகர்ச்சிக்கு மாத்திரம் இடமில்லாமல் போகலாமே தவிர, அடி உதை ஆகிய கொடுமைகள் கிடையாதென்றே சொல்லலாம். இதற்கு உதாரணங்கள் ஆயிரக்கணக்காக நாம் பார்த்து வருகின்றோம்.

ஒரு நாட்டில் பெண்களுக்கு எந்த வழியிலாவது முன்னேற்றம் என்பது சிறிதாவது ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு மார்க்கமிருந்தால்தான் முடியுமே ஒழிய வேறில்லை. அன்றியும் உண்மையான அன்பும் காதலும் அப்பொழுது தான் இருக்க முடியும். அஃதில்லாமல் “கல்யாணம் செய்தாய்விட்டது ஆதலால் சாகும் வரை ஒருவருக்கொருவர் கட்டி அழுதுதான் தீரவேண்டும்” என்கின்ற நிலைமை அறிவீனமுள்ள வாழ்வேயாகும்.

இயற்கை இன்பம் ஒருக்காலும் கட்டுப்பாட்டினாலும் நிர்பந்தத்தினாலும் ஏற்படவே ஏற்படாது. ஆண் பெண் என்பது இயற்கை இன்ப நுகர்ச்சிக்கே ஒழிய புருஷன் பெண்ஜாதியாய் குடும்பம் நடத்த பிள்ளைகள் பெற்று சொத்துக்கள் சம்பாதித்து பிள்ளைகளுக்கு வைத்துவிட்டு போவதற்கு அல்ல என்பதை உணர்ந்தவர்களே உண்மை இன்பம் நுகருகின்றவர்களாவார்கள்.

மனிதன் பாடுபட்டு சம்பாதிக்கப் பிறந்தான் என்றும், அந்த சம்பாதனைக்கு அதிக சௌகரியம் செய்ய பெண்கள் பிறந்தார்களாதலால் செய்து கொடுக்க ஒரு பெண் ஜாதி வேண்டுமென்று நினைத்தே கல்யாண காரியங்கள் நடக்கின்றன.

மக்கள் வாழ்வின் பயனை உயர்த்த வேண்டுமானால் இந்த எண்ணத்தையும் இந்த முறையையும் ஒழித்தே தீர வேண்டும். ஆகையால் கல்யாண ரத்து சட்டம் செய்த இத்தீர்மானமானது மிகமிக போற்றற்குரியதாகும்.

இத்தீர்மானங்கள் எல்லாம் சென்ற வருஷம் கூடிய செங்கற்பட்டு சுயமரியாதை மகாநாட்டில் செய்யப்பட்டவைகளேயாகும். அன்றியும் ஐரோப்பா, அமெரிக்கா, ஜெர்மனி முதலிய நாடுகளில் நடைபெறும் சட்டங்களும் வழக்கங்களுமாகும்.

நமது இந்தியாவிலும் பரோடா அரசாங்கத்தில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டமேயாகும். நமது மாகாணத்திலும் அநேக வகுப்புக்களிலும் மலையாள தேசத்தில் எல்லோருக்குள்ளும் இருந்துவரும் வழக்கமேயாகும்.

ஆதலால் இதில் ஏதும் அதிசயம் இருக்க நியாயமில்லை. ஆனால் செங்கல்பட்டு மகாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேறியவுடன் பலர் இந்த காரணத்தாலேயே மகாநாட்டைக் குற்றம் சொன்னார்கள்.

சுயமரியாதை இயக்கத்தையும் குற்றம் சொன்னார்கள். அப்படிச் சொன்னவைகளில் முக்கியமான காரணம் இத்தீர்மானத்தை பெண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், இது பெண்களுக்கு மிக்க ஆபத்து என்றும் சொன்னார்கள்.

ஆனால் இப்பொழுது பெண்களே தாங்கள் மகாநாட்டில் தீர்மானித்து விட்டார்கள். அதுவும் மிக்க கல்வியும் அறிவும் ஆராய்ச்சியும் பொறுப்புள்ள உத்தியோகங்களும் பெற்றுள்ள பெண்மணிகள் ஒன்று கூடிய கூட்டத்திலேயே நன்றாய் எடுத்துப் பேசி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

ஆகவே, அம்மகாநாட்டில் இத்தீர்மானங்கட்கு ஆதரவாயும் இருந்த பெண்மணிகளாகிய திருமதிகள் மாலதி பட்டவர்த்தன அம்மாள், லட்சுமி அம்மாள், ருக்மணி லக்ஷிமிபதி அம்மாள் முதலியவர்களை நாம் மனதாரப் பாராட்டுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 24.11.1929)

Pin It