இந்த நிகழ்ச்சியானது இதுவரைத் தமிழ் மக்களாகிய நம்மிடையே நடைபெற்று வந்த முறைக்கு மாறாகப் பகுத்தறிவு கொண்டு, திருத்தத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

periyarஇப்போது இங்கு நடைபெற்ற இம்முறை நிகழ்ச்சியானது இதுவரை சட்டப்படிச் செல்லத்தக்கதாக இருந்ததை, இப்போது வந்துள்ள பகுத்திவாளர்கள் ஆட்சியானது சட்டப்படிச் செல்லுமென்றாக்கி இருக்கிறது. முதலில் நாம் அதற்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது நம் கடமையாகும்.

நம்முடைய சமுதாயத்தில் இம்மாறுதலான நிகழ்ச்சியை நடத்துவதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நம்மிடையே நடைபெற்று வந்த திருமணங்கள் யாவும் வைதிகத் திருமணங்களேயாகும். இப்போது இங்கு நடைபெற்றது பகுத்தறிவுத் திருமணமாகும். வைதிகத் திருமணத்திற்கும், பகுத்தறிவுத் திருமணத்திற்கும் உள்ள பேதம் என்னவென்றால், வேதத்தின் கருத்துப்படியானது வேத முறை என்றால் இந்து மத முறை. வேதம் என்பது பார்ப்பனருக்கு உரிமையானது. மற்றவர் பார்ப்பனரல்லாதார் தொடக் கூடாது, படிக்கக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கவும் கூடாது என்றிருக்கும் போது, வைதிகத் திருமணத்தைத் தமிழன் செய்து கொள்கிறானென்றால், அவன் தனது மானமற்றத் தன்மையையும், இழிவையும் நிலை நிறுத்திக் கொள்கின்றான் என்பதே பொருளாகும்.

வேதத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், ஜாதிக்கும் இங்கு இடமில்லை. இம்முறையில் அவற்றைக் குறிக்கும் எந்தக் காரியங்களும் நடைபெறுவது கிடையாது. பகுத்தறிவோடு அவசியத்தைக் கருதி, தேவையானவற்றைக் கொண்டு செய்யப்படுவதே இம்முறையாகும்.

மனிதன் தனது இழிவற்று வாழ வேண்டுமானால், கடவுள் - மதம் - புராணம் - இதிகாசங்களும் ஒழிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் ஒழித்தால் தான் நம் இழிவு - மானமற்றத் தன்மையும் நீங்கும். இந்நிகழ்ச்சியின் தத்துவம் பெண் சமுதாயம் ஆணிற்கு அடிமையல்ல, ஆண்களுக்குரிய அத்தனை உரிமைகளையும் பெண்கள் பெற வேண்டுமென்பதற்காகவேயாகும்.

பெண்ணடிமையை வலியுறுத்தவும் மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக்காமல் மடமையில் ஆழ்த்துவதாகவும், ஜாதிப் பிரிவினை, இழிவினை நிலைநிறுத்துவதாகவும் இருந்ததால் இதனை மாற்றிப் பெண்ணடிமையை நீக்கவும், மக்களைப் பகுத்தறிவுவாதிகளாகவும், ஜாதி இழிவுகளை ஒழிக்கவுமென்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இம்முறைத் திருமணங்களைச் சீர்திருத்தத் திருமணம், பகுத்தறிவு திருமணம், சுயமரியாதைத் திருமணம் - தமிழர் திருமணம் என்னும் பெயரால் 1926-முதல் சுமார் 40, 43-வருடங்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், இம்முறையானது சட்டப்படிச் செல்லாது என்று இருந்தது ஒரு பெரும் குறையாக இருந்தது.

இப்போது அமைந்திருக்கும் ஆட்சி தமிழர்களாட்சியானதாலும், திராவிடர் கழகக் கொள்கையை உடைய ஆட்சியானதாலும் இதனைச் சட்டப்படிச் செல்லுமென்றாக்கியுள்ளது. இம்முறையில் திருமணம் செய்யும் நாம் முதலில் இந்த அரசுக்கு நன்றி செலுத்துவது கடமையாகும்.

பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருப்பதற்கென்றே பிறப்பிக்கப்பட்டவர்கள். அவர்கள் உரிமையோடு ஆண்களுக்குச் சமமாக வாழக் கூடாதவர்கள் என்பதை வலியுறுத்தத் தான் நம்முடைய இலக்கியங்கள் என்பவைகள் இருக்கின்றன.

நாம் காட்டுமிராண்டிக் காலத்தில் காட்டுமிராண்டியாக மனிதன் இருந்த போது எழுதப்பட்டதுதான் நம் இலக்கியங்களாகும். நம் புலவர்கள் பெருமைப்படும் வள்ளுவன் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறான் என்றால், பெண் கடவுளைத் தொழ வேண்டும் என்கின்றான். மற்றும் புராணங்கள் - கடவுள் கதைகள், இலக்கியங்கள் எல்லாமே பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன. இந்தத் துறையில் ஒரு மாறுதல் ஏற்பட வேண்டுமென்று சொன்னதும் அதற்காகத் தொண்டாற்றியதும் நம் சுயமரியாதை இயக்கமேயாகும்.

பெண் சாகும் வரை தன் கணவனோடு இருக்கத் தக்கவள் என்று சொல்லி - ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், எவ்வளவு பெண்களோடு வேண்டுமாலும் சுகம் அனுபவிக்கலாம்.

ஆனால், பெண்கள் கணவனைத் தவிர மற்றவனை நினைத்தாலே கற்புக் கெட்டு விடும் என்கின்றான். நம் கடவுள் கதைகள் - புராணங்கள் - இதிகாசங்கள் யாவும் இதைத்தான் சொல்கின்றன. நம் கடவுள் கதைகளாக இருப்பதில் - ஒரு பக்தன் தன் மனைவியை இன்னொருவனுடன் தன் மனைவியை அடகுப் பொருளாக வைத்திருக்கின்றான் என்பது போன்று பல கதைகள் எழுதி வைத்திருக்கின்றான்.

நம் அரசு கண்ணகிக்குச் சிலை வைத்து நம் சமுதாயத்தை - குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டேன். ஏன் இப்படிக் குறிப்பிடுகின்றேன் என்றால், எதற்காக ஒரு பெண், தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் போனதற்காக உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்க வேண்டும்? இது மடத்தனத்தைக் காட்டுகிறதே தவிர, கற்பைக் காட்டுவதாக இல்லை.

எந்த ஆணும் தன் மனைவி இன்னொருவனுடன் சென்றுவிட்டாள் என்பதற்காக எவனாவது உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்கின்றானா? இருந்திருக்கின்றானா? என்றால் கிடையாது. மனைவிக்குக் கொஞ்சம் உடல் நிலை நலம் இல்லை என்று தெரிந்தாலே ஆண்கள் வேறு பெண்ணைத் தேட ஆரம்பித்து விடுகின்றனர். கண்ணகிக் கதை பெண்களை மடைச்சியாக்கப் பயன்படுமே தவிர, அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாது.

தமிழகத்தில், கற்புடையவள் கண்ணகி - அவளைப் பின்பற்றி அவளை வழிகாட்டியாகக் கொண்டு பெண்கள் வாழ வேண்டும் என்றால், தமிழகத்திலிருக்கிற மூன்று கோடி பெண்களில் கண்ணகி ஒருத்தி தான் கற்பு உடையவள் என்றால், மற்றப் பெண்கள் எல்லாம் விபசாரிகள் என்பதுதானே பொருள். இதை மானமுள்ள எவனும், அறிவுள்ள எவனும் ஒத்துக் கொள்ள முடியாதே. எதற்காக ஒரு பெண் ஆணிற்கு அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு என்ன அவசியம் என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்.

இரண்டாவது மூட நம்பிக்கையை வளர்ப்பது திருமணம் என்றால், நேரம் பார்க்க வேண்டும், நாள் - நட்சத்திரம் பார்க்க வேண்டும், சாமி கேட்க வேண்டும், பொருத்தம் - ஜாதகம் பார்க்க வேண்டும் என்பதன் மூலம் மடமையையும், சடங்குகள் என்பதாகச் சிறிதும் தேவையும், அவசியமும், சம்பந்தமும் அற்ற முறையில் பானைகள் அடுக்குவது, குத்துவிளக்கு வைப்பது, அம்மி - அரசாணி வைப்பது, ஓமம் வளர்ப்பது என்பதெல்லாம் எதற்காக என்று கேட்கக் கூடாது என்பதன் மூலம் மூடநம்பிக்கையையும் வளர்க்கின்றன. நேரம், காலம், பொருத்தம், ஜாதகம் எல்லாம் பார்த்துச் செய்யப்பட்டவை தான் சீதை, திரவுபதை, கண்ணகி, சாவித்ரி ஆகியோரின் திருமணங்கள் ஆகும் என்று கதை எழுதி இருக்கின்றார்கள். அந்தக் கதைகளில் இவர்கள் எப்படி எப்படி துன்பப்பட்டார்கள், என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்தப் பொருத்தமும், ஜாதகமும், காலமும், நேரமும் ஏன் அவற்றைத் தடுக்க முடியவில்லை என்பதைச் சிந்தித்தால் இவை யாவும் நம்மை மடையர்களாக்கவும், மூட நம்பிக்கைக்காரர்களாக்கவும் பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவையே யாகும்.

அடுத்தது ஜாதி இழிவைப் பாதுகாப்பது. ஒருவனுக் கொருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் - தீண்டப்படாதவன், பஞ்சமன் - சூத்திரன் என்பதை வலியுறுத்தக் கூடிய வகையில் நம்மை விட உயர்ந்தவன் என்று பார்ப்பானை அழைத்து அவனைக் கொண்டு திருமணம் செய்வது என்பது நம் ஜாதி இழிவை நிலை நிறுத்துவதேயாகும்.

சுயமரியாதை இயக்கத் தொண்டின் காரணமாக இப்போது ஜாதி விட்டு ஜாதி செய்யும் திருமணங்கள் 100-க்கு 50-நடைபெறுகின்றன. பெண்கள் நிறைய படிக்க ஆரம்பித்தால் இன்னும் இது அதிகமாகும். பெண்கள் 20, 22-வயது வரைப் படிக்க வேண்டும். அத்தோடு தங்கள் வாழ்விற்கான ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் திருமணம் ஆனாலும் பெண்கள் ஆண்களோடு சமத்துவமாக வாழ முடியும்.

இதுவரை அமைந்த ஆட்சிகளின் இலட்சியம் என்னவென்றால், மக்களைப் படிக்கவிடாமல் பாதுகாப்பதோடு, மதம், ஜாதி, சாஸ்திரம், பழமை ஆகியவற்றிலிருந்து மாறாமல் நம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நேற்று வரை நடைபெற்ற ஆட்சி இதைக் காப்பதாகத் தான் இருந்தது. இப்போது வந்திருக்கும் தி.மு.க ஆட்சிதான் இதை உடைத்தெறிந்து சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கி இருக்கிறது.

மணமக்கள் தங்கள் ஒப்பந்தத்தில் கூறியபடி சமத்துவத்தோடு பழக வேண்டும். முட்டாள்தனமான, மூடநம்பிக்கையான, காட்டுமிராண்டித் தன்மையுடைய பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடக் கூடாது. வரவுக்கு அடங்கிச் சிக்கனமாகச் செலவிட வேண்டும். பொதுத் தொண்டு செய்வதுதான் இல்லறம் என்று கருத வேண்டும். கூடுமான வரையில் குழந்தை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடியவில்லையென்றால் ஒன்று இரண்டு அத்தோடு நிறுத்திவிட வேண்டும்.

---------------------------------
09.03.1969 அன்று பூதலூரில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 17.03.1969
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It