உலகில் மக்களிடையேயுள்ள அறியாமைகளில் எல்லாம் தலைசிறந்த அறியாமை கடவுளைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகளேயாகும்.

உலகில் கடவுள் பெயரால் உள்ள மதங்களில் குறிப்பிடத்தக்க பெரிய மதங்கள் மூன்று என்று சொல் லலாம். அவை பெரிதும் உண்மைக்கு மாறுபட்டவை யேயாகும்.

அவை முறையே, கிறிஸ்தவமதம், இஸ்லாமிய மதம், இந்து மதம் - என சொல்லப்படுபவைகளாகும். இவைகளில் முதல் இரண்டு மதங்களும் சரித்திர சம்பந்தமான ஆதாரங் களைக் கொண்ட மதங்களாகும்.

மூன்றாவது மதமான இந்து மதம் என்பது காலப் போக்கில் கற்பனைக் கருத்துகளால் பெருக்கி சமயத்துக்கு ஏற்றபடி மக்களுக்குள் புகுத்தி, மக்களை ஏய்க்கும் ஒரு கதம்பக்கருத்து மதமாகும். இம்மதக் கோர்வைக்கு இந்துமதம் என்கின்ற பெயர் முறையே முன் இரண்டுமத காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயராகும்.

இது வேத மதமாக இருந்து ஆரிய மதம் என்றாகி, பிராமண மதம் என்று கூறப்பட்டு வந்து, கடைசியில் இந்துமதம் என்று சொல்லப்படுவதாகும்.

உலகில் கிறிஸ்தவமதம்தான் மிகப்பெரிய எண் ணிக்கை கொண்ட மக்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் மதம் ஆகும்.

அடுத்தது இஸ்லாம் மதம் என்பதாகும். இது கிறிஸ்தவ மத மக்கள் அளவில் சற்றேறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத மக்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்ப தாகும்.

மூன்றாவதான இந்து மதம் என்பது இஸ்லாம் மதத்தைவிட மிகச் சிறிய கூட்டத்தினரை, அதாவது இஸ்லாம் மத மக்களில் சற்றேறக்குறைய நான் கிலொரு பங்கு மக்களைக் கொண்டதாக இருக்க லாம்.

இவை தவிர `பவுத்த' மதம் என்ற ஒரு மதம் இருக்கிறது. இம்மதத்திற்குக் கடவுள் கிடையாது என்றாலும், கடவுள் நம்பிக்கை மதத்துக்கு உண்டான சடங்குகள் பெரிதும் உண்டு என்பதோடு கிறிஸ்தவ மதத்திற்கு அடுத்தபடியாக பெரிய எண்ணிக்கை கொண்ட மக்களைத் தனக்குள் அடக்கிக் கொண்டு இருக்கிறது.

சீனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன் முதலிய நாடுகளுடன் மற்றும் சில நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்கும் மதமாகும்.

புத்த மதம் என்று சொல்லப்படுவதற்கு மற்றொரு பெயர் சொல்ல வேண்டுமானால், `அறிவு மதம்' என்று சொல்லுவது மிகப் பொருத்தமாகும்.

புத்தி என்ற வடமொழிப் பெயரைக் கொண்ட புத்தமதம் என்பதைத் தமிழில் கூற வேண்டுமானால், அறிவுமதம் என்றுதான் கூறலாம்.

இதற்குப் புத்தமதம், அறிவுமதம் என்று கூறுவ தற்குக் காரணம் என்னவென்றால், முதலில் கூறப்பட்ட மும்மதங்களுக்கும் கடவுள் என்பதாக ஒன்று உண்டு! ஆனால், புத்தமதம், அறிவு மதம் என்பதற்குக் கடவுள் என்பதாக ஒன்று கிடையாது. ஏனென்றால், அறிவுக்கு ஏற்ற கொள்கை என்றால் அதில் கடவுளுக்கிடமில்லை. ஆதலால் புத்தமதம், அறிவு மதம் என்று சொல்ல நேர்ந்தது. அறிவுப்படி கூறும்போது புத்தமதத்தை ஒரு மதம் என்று உண்மையான புத்தர்கள், அறிவாளிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

மதம் என்றால் கடவுள் இருந்தாக வேண்டும். கடவுளை நம்ப வேண்டும். மற்றும் அறிவுக்கடங்காத சில விஷயங்களைக் கருத்துகளை நம்பியாக வேண்டும். ஆதலால் அறிவுக் கருத்துகளை, புத்திக் கொள்கைகளை மதம் என்று சொல்லுவதில்லை. கருத்து, கொள்கை, கோட்பாடு என்று பொதுவாக அறிஞர்கள் சொல்லுவார்கள்.

முற்கூறிய மும் மதங்களுக்கும் கடவுள் உண்டு என்றாலும் இவைகளில் ஒரு கடவுள் மதமும் உண்டு; பல கடவுள் மதமும் உண்டு. இம் மூன்று மதக் காரர்களும் கடவுளை அதாவது ஒரு கடவுளை பல கடவுளைக் கொண்டிருந்தாலும் கடவுளையா கட்டும் மற்றும் தேவர்களையாகட்டும் ஒன்று என்றும், பல என்றும் கொள்கையாகக் கொண்டிருந்தாலும், இவர்கள் எல்லோரும் கடவுளை ஒரே தன்மையாகத்தான் கருதுகின்றார்கள்.

எப்படி என்றால் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் எல் லோரும் கடவுளை மனிதனைப் போலவேதான் கருது கிறார்கள். அதாவது இலக்கணத்தில் அஃறிணை, உயர்திணை எனப்படுகின்ற இரண்டு திணைகளில் ஒன்றான உயர்திணைப் பொருளாக, அதுவும் மனி தனைப் போல் மனிதனுக்குண்டான எல்லாக் குணங் களையும் பொருத்தி, மனிதனாகவே மனிதத் தன்மையுடைய வனாகவே மனிதனைவிட எண்ணத்தில் மனித எண்ணமுடையவனாகவே இருந்தாலும் செய்கையில் சிறிது சக்தி அதிகம் உடையவனாகக் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எப்படி என்றால் மனிதன் தனது எண்ணத்தை நிறைவேற்ற செய்கையில் செய்தாக வேண்டும். ஆனால், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுள் மனிதனைப் போன்ற எண்ணங்களை உடையவனாகவே இருந் தாலும் அந்த எண்ணங்களை நிறைவேற்ற கரியத்தில் செய்யாது `நினைத்த மாத்திரத்தில் ஈடேறக் கூடிய' மாதிரி நினைப் பிலேயே செய்து விடுகிறான்.

இதுதான் மனிதனுக்கும், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுளுக்கும் உள்ள பேதமே தவிர, மற்றபடி தத்துவத்தில் ஒரு பேதமும் இல்லை.

இரண்டு பேரும் மனிதர்களேதான்; இரண்டு பேரும் மனித சுபாவம் உடையவர்களேதான். ஒன்றுக்கொன்று உயர்வுகூற வேண்டுமானால், செய்கையில் சக்தி அதிகம் என்பதைத் தவிர எண்ணத்தில் உயர்வான எண்ணம் என்பதாக என்றோ அல்லது தன்மையில் உயர்வான தன்மை என்பதாக என்றோ இருப்பதாக எதுவும் இல்லை. எதையும் நாம் காண - அனுபவிக்க தக்கதாகக் கற்பிக்கவில்லை.

கிறிஸ்து கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு ஒரு குமாரன் உண்டு. முகமது நபி கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு ஒரு தூதன் உண்டு. அதுபோலவே மனிதனுக்கும் குமாரன் உண்டு; தூதன் உண்டு. கடவுள் ``இவைகளை எண்ணத்தில் உண்டாக்கிக் கொண்டான்'' அதுவும் ஒரே ஒரு தடவைதான். மனிதன் இவைகளைச் செய்கையில் தினமும் உண்டாக்கிக் கொள்கிறான். இப்படியே தான் ஒவ்வொரு காரியத்தையும்.

உதாரணமாக, கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்கிறான்; தீமை செய்தவனுக்குத் தீமை செய்கிறான். மனிதனும் அப்படியே! தனக்கு நன்மை செய்தவர் களுக்கு நலம் செய்கிறான்; தீமை செய்தவனுக்குத் தீமை செய்கிறான்.

அவன் - கடவுள் - நினைத்த உடன் காரியம் ஆகும்படி செய்கிறான். மனிதன் அதற்காகச்  செயல் செய்தவுடன் காரியம் ஆகும்படி செய்கிறான். கடவுள் எவ்வளவு தவறு செய்த மனிதனையும் தன்னைப் பிரார்த்தித்து, தோத்தரித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டவனை மன்னிக்கிறான். கடவுளும் சிலரை மன்னிக்காமல் தண்டிக்கிறான். மனிதனும் அதுபோலவே மன்னிக்காமல் சிலரைத் தண்டிக்கிறான். கடவுளும் பழிவாங்குகிறான். மனிதனும் பழிவாங்குகிறான். இப்படியே மனிதனிடத்தில் உள்ள எல்லாக் குணங்களும் கடவுளிடத்திலும் உண்டு; கடவுளிடத்தில் உள்ள எல்லாக் காரியமும் மனிதனிடத்தில் உண்டு!

மனிதனுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு; கடவுளுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு! மனிதனுக்கும் பிற மனிதனைத் தண்டிக்க ஜெயில் உண்டு; கடவுளுக்கும் தண்டிக்க நரகம் உண்டு! மனிதனும் தண்டனை கொடுக்கிறான்; கடவுளும் தண்டனை கொடுக்கிறான்! மனிதனும் மனிதனை - ஜீவனை ஏராளமாகக் கொல்லுகிறான். கடவுளும் ஏராளமான மனிதர்களை - ஜீவன்களைக் கொல்லுகிறான்! அதாவது சாகடிக்கிறான்! மனிதனும் மக்கள் பட்டினிகிடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்; கடவுளும் ஏராளமான மக்கள் ஜீவன்கள் பட்டினி கிடப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

மற்றும் பல கடவுள்களையும் பல உருவக் கடவுள்களையும் கற்பித்துக் கொண்டவனும் மனிதனே. மனிதத் தன்மையையே தான் கடவுளாக ஆக்கிக் கொண்டான் என்றாலும், இவன் (பல கடவுள்காரன்)  அயோக்கியத்தனத்தையும் இழிகுணத் தன்மையும் கொண்ட மனிதனைத்தான் கடவுளாகக் கற்பித்துக் கொண்டான். ஏனென்றால், பல கடவுள்களை, பல உருவக் கடவுள்களைக் கற்பித்துக் கொண்ட மனிதன் காட்டு மிராண்டியாய், மூர்க்கனாய், மடையனாய், ஒழுக்கம், வரைமுறை என்பவை ஏற்படாதவனாய் இருந்த காலத்தில் கற்பித்துக் கொண்டதால், அன்றைய நிலைக்கு ஏற்ற, பொருந்திய, விளங்கிய தன்மைகளையும் கொண்டே கற்பித்துக் கொள்ள வேண்டியவனானான்.

உதாரணமாக பார்ப்பான் துவக்கத்தில் கடவுள், கடவுள் தன்மை என்பதாக எதையும் கற்பித்துக் கொள்ளவில்லை. ஏன் என்றால் அந்தக் காலத்தில் அவன் மலைவாசியாக இருந்தான். ஆனதால் அவன் `ஆகாயத்தில் மறைவாக சஞ்சரித்துக் கொண்டு இருக்கிற'தாக பல தேவர்களைக் கற்பித்துக் கொண்டான்! இவர்களையும் மிக்க கீழ்த் தரமான மனிதத் தன்மைகொண்டவர்களாகவே கற்பித்துக் கொண்டான்.

இந்தக் கற்பனைத் தேவர்களும்கூட அய்ரோப்பிய காட்டுமிராண்டி மக்களால் பல காரியங்களுக்கு, பல குண முடையவர்களாகக் கற்பித்து, பாவித்துக் கொண்ட தேவர் களையே அவர்களது பெயர்களை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். சைவர்களால் ருத்திரன் என்றும், துர்க்கை என்றும் போற்றப்படும் தேவர்கள் அய்ரோப்பிய காட்டுமிராண்டிகளால் ``தகப்பன் கடவுள்'' என்ற பெயரால் ஏற்பாடு செய்து கொண்ட தேவர்களாவார்கள். அதையேதான் சைவனும் இன்று `அம்மை கடவுள்' `அப்பன் கடவுள்' என்று சொல்கிறார்கள்.

அந்தக் கடவுளுக்குக் காட்டாளர்கள் போலவே ஆயுதங்கள், மழு, சூலாயுதம், மாட்டு வாகனமும், பெண் கடவுளுக்கு அரிவாள் சூலாயுதம், சிங்க வாகனமும், கோரமான உருவமும் கொண்ட பெண்களாகக் கற்பித்து வணங்கி வந்திருக்கிறார்கள். மற்ற தேவர்களும் அப்படியே கற்பிக்கப்பட்டு பரப்பிவிடப் பட்டார்கள்.

அக்காலத்தில் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட தேவர்கள் பஞ்ச பூதங்களுக்கு அய்ந்து தேவர்கள் என, நிலம் - பார்வதி; நீர் - வருணபகவான், காற்று - வாயு பகவான்; நெருப்பு - அக்னி பகவான்; ஆகாயம் - ஆகாச வாணி; சூரியன் - சூரிய பகவான்; சந்திரன் - சந்திர பகவான்; சாவு - எம தர்மன்; உற்பத்தி - பிரம்ம தேவன்; வாழ்வு - விஷ்ணுதேவன்; அழிவு - ருத்திர (சிவ) தேவன்; காலை நேரம் - உஷாதேவி! இன்னும் இப்படியே பல தேவர்கள்! இவர்களுக்கு அரசன் இந்திரன்! இவனைத் தேவேந்திரன் என்றே சொல்லுவார்கள்.

இவ்வளவு பேர்களுக்கும் கணவன், மனைவிகள்! சிலருக்கு மக்களும் உண்டு! இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இத்தனை பேர்களையும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம் இல்லாத அயோக்கியத் தன்மையுடைய மனிதர்களாகவே கற்பித் துக் கொண்டார்கள். இவர்களுக்கு வரைமுறையே இல்லாமல் இருக்கிறது. கூடாதது, இழிவானது. மகாபாதகமானது என்று நாம் இன்று கூறும் முறைகளை ஆண் பெண் சம்பந்தத்திற்குக் கற்பித்துக் கொண் டார்கள். பிற்காலத்தில் நாளா வட்டத்தில் இவர்களைக் கடவுளாகவே ஆக்கி விட்டார்கள்! நாமும் இன்று இவற்றை இவர்களைத்தான் பெண்டு பிள்ளை இழி தன்மை சகிதமாகக் கடவுளாகவும், கடவுள் தன்மை யாகவும் கருதி இவர்களை வணங்கினால் நமக்கு சகல பாக்கியமும் கிட்டும் என்று நம்பித் தொழுது வணங்கி வருகிறோம்.

கடவுள் என்றால், கடவுள் தன்மை என்றால் அது என்ன? எப்படிப்பட்டது? என்பதே தெரியாதவர்களாய் இருக் கிறோம்.

மனித  உருவத்தை - மனிதத் தன்மையை - ``மனிதத் தன்மையிலும் இழி குணமுள்ள மனிதத் தன்மையை'' கடவுளாகக் கருதி வணங்கி வருகிறோம் என்பதோடு, வாய்ப்பேச்சளவில் மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சர்வ சக்தி கொண்ட ``எல்லாம் வல்லவர் கடவுள்'' என்று பேசி மனப்பால் குடித்து வருகிறோம்! ஆனால், ஒன்றையும் காரியத்தில் அறிய முடியவில்லை.

பொதுவாக மனிதன் பெரிதும் எதில் முட்டாள் - மடையன் என்றால், இந்தக் கடவுள் எண்ணத்திலே தான், முதலாவது முட்டாளாக, மடையனாக விளங்கு கிறான்! என்ன காரணமோ இந்த மடைமையை விளக்க, எடுத்துக்கூற அறிவு படைத்த மக்களாகிய நம்மில் எவரும் முன்வருவதில்லை.

உலகிலேயே முதன்முதலாகத் தோன்றிய தத்துவ ஞானி என்பதாக ஒருவரைக் கூற வேண்டு மானால், சரித்திர அகராதிப்படி புத்தரைத்தான் சொல்ல முடி கிறது. அடுத்தாற்போல் மேல் நாடுகளில் தோன்றியவர் சாக்கரட்டீஸ் என்ற விஞ்ஞானியாவார். இவர் புத்தருக்குப் பின் தோன்றியவரே.

இவர்களுடைய விஞ்ஞான போதம் சிந்திப்பாரற்று - சீந்துவாரற்று மறைந்து கிடக்கின்றன. பொய்க் கற்பனையையும் மடமையையும் போதித்தவர்களையே உலகம் போற்றுகிறது, பின்பற்றுகிறது.

அரசன் - ஆட்சி பார்ப்பனர்க்கு அடிமைபட்டவனாகி விட்டான். பார்ப்பான் தன் (இன) சுயநலத்திற்கே அடிமைப்பட்டவனாகி விட்டான். அவன் (பார்ப்பான்) தன்னை மேலான பிறவி என்று ஆக்கிக் கொள்வதில் தான் கவலைகொண்டு, அதற்காகவே கடவுளை வைத்து வருகிறானே ஒழிய, மேலான பிறவி என்பதற்கு தன்னிடம் ஏதாவது மேலான குணமிருக்க வேண்டுமே என்பது பற்றிச் சிறிதுகூடக் கவலைப்படவில்லை.

அதுபோலத்தான் கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் `உள்ள' எல்லா வஸ்துக்களிலும் கடவுள் பெரியவர் என்று சொல்லி கற்பித்தார்களே ஒழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை இருக்கிறது? என்று எதையும் எவரும் நிரூபித்து மெய்ப்பித்துக் காட்டவே இல்லை.

-------------------------------

28.4.1968 அன்று 'விடுதலை'யில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை
அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

Pin It