பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியோர் களே! இந்த சீரங்க மாநகரில் எனது 87- ஆம் ஆண்டுபிறந்த நாள் விழாவை ஒருவார காலமாக சிறப் பாகக் கொண்டாடி வருகின்றீர்கள்.

இன்றைக்குக் கடைசி நாளில் என்னையும் வரவழைத்துப் பொன்னாடை போர்த்தியும், கை நிறைய அன்பளிப்பும், மனம் குளிர வாழ்த் துரைகளும் வழங்கியமைக்கு எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கின்றேன்.

சீரங்கம் என்பது மூடநம்பிக்கைக்கு சிகரம் வைத்தது போன்று காட்டுமிராண்டி ஊர் ஆகும். அப்படிப்பட்ட நகரில் சிந்தனை விழா என்ற தலைப்பில் ஒரு வார காலமாக விழாக்கொண்டாடி, சிந்தனையைக் கிளறும் கருத்துகளை, பல அறிஞர்களைக் கொண்டு வழங்கச் செய்தது ஆச்சரியமாகும்.

எனது பிறந்த நாள் விழாவை, நமது கொள்கையினைப் பிரச்சாரம் செய்ய ஒரு சாதனமாகவே கருதி, நானும் அனுமதித்து கலந்து கொள்ளுகின்றேன்.

தோழர்களே! பத்து ஆண்டு களுக்கு முன்பு கூட, நமது நாட்டு மக்களின் சராசரி வயது 32 தான். காமராசர் ஆட்சி காரணமாக இன்று 50 ஆண்டு சராசரி வயது என்று நமது நாட்டு சுகாதார நிலை அபிவிருத்தி அடைந்து உள்ளது: அந்த வளர்ச்சியின் பயனாகத்தான் என்போன்றவர்கள் 87 வயது வாழமுடிகின்றது.

இனி நமது மக்கள் 87 என்ன,  90-வயது, 100 வயது கூட வாழ் வார்கள்; எளிதில் சாகமாட்டார்கள்.

முன்பு தாய்மார்கள் கர்ப்பவதி யானால் 100-க்கு 25 பெண்கள் பிரசவத்தில் இறந்து விடுவார்கள். 100-க்கு 25 பிள்ளைகள் பிறக்கும்போதே செத்துப் போகும். பிறந்த 10 நாள், ஒருமாதத்தில், 25 போய் விடும். இன்று 100-க்கு நூறும் பிழைத்துக் கொள்கிறது. தலையில் கல்லைப் போட்டால் கூட சாகிறது இல்லை; இதற்காக நாம் காமராசருக்குத் தான் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

நல்ல சுகாதாரம், வைத்திய வசதி காரணமாக மக்கள் எண் ணிக்கை பெருக்கெடுத்து விட்ட தனால், அரசாங்கமும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மேற் கொண்டு உள்ளது.

இந்த விழாவிற்குச் சிந்தனை விழா என்று பெயர் வைத்து, பேச் சுக்கும் சிந்தனை என்று தலைப்புக் கொடுத்தது கண்டு நான் பெரிதும் மகிழ்கின்றேன்.

இந்தியாவிலேயே சிந்தனை யைப் பற்றிப்பேச வேண்டும் என் றால், பிரச்சாரம் செய்யவேண்டும் என்றால், நாங்கள்தான், எங்கள் கழகம் தான்.

சிந்தனை என்றால் பகுத்தறிவு என்பதுதான் பொருள். பகுத்தறிவு கொண்டு சிந்திப்பதை இந்த நாட் டில் நாத்திகம் என்று ஆக்கி விட்டார்கள்.

புராணங்களை, கடவுள் கதை களை, முன்னோர் கூற்றுகளை - சிந்திக்காமல் அப்படியே ஒத்துக் கொள்வது ஆத்திகம் என்று கூறுவார்கள்.

அறிவு கொண்டு அலசிப் பார்த்து, அறிவுக்குச்சரி என்று பட்டதை ஏற்றுக் கொண்டு, மற் றதைத் தள்ளி விடுபவர்கள் நாத்திகர்கள் என்று கூறி, வெறுப்பு உணர்ச்சியினை வளர்த்து விட்டு உள்ளார்கள்.

சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது ஜைன மதமும், புத்த மதமும் ஆகும். அவர்கள் முடிவு சரியோ, தப்பாகவோ இருந்தாலும், அவர்களுடைய மார்க்கத்தின் முடிவுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொண்டது பகுத்தறிவு ஆகும்.

சமண மதத்துக்கு பெயர் அருக மதம்; அருகமதம் அறிவை ஆதார மாகக் கொண்டு வகுக்கப்பட்டது. புத்த மதமும் புத்தியை ஆதாரமாகக் கொண்டு கொள்கை வகுக்கப் பட்டது ஆகும்.

ஜைன, பவுத்தர்களை சிந்தனை யாளர்கள் என்று கூறப்படக் கார ணம் என்னவென்றால், இவர்கள் பகுத்தறிவினை ஆதாரமாகக் கொண்டவர்களானதனால்தான்.

இதன் காரணமாக வைதிக மதக்காரர்கள் இந்த ஜைன, பவுத்தமதத்தினரை `நிரீசுவர வாதிகள்'' என்றே கூறி உள் ளார்கள்.

தேவாரத்தை எடுத்துக் கொண் டால் பல இடங்களில் ஜைன. பவுத்தர்களைக் கண்டித்துப் பாடியுள்ளார்கள்.

சம்பந்தன் 10 பாட்டுக்கு, ஒரு பாட்டாவது கண்டித்தே இருப் பதைக் காணலாம். ஜைன பவுத்த மதக்காரர்களின் மனைவிமார்களைக் கற்பழிக்க தனக்கு அரு ளும்படி கடவுளை நோக்கிப்பாடியும் இருக்கின்றார்கள்.

சமண, பவுத்த மதக்காரர்களை - சைவ, வைணவ மதக்காரர்கள் கழுவேற்றியுள்ளார்கள். சொத்துக் களைச் சூறையாடி, கொலையும் செய்து இருக்கின்றார்கள்.

இந்த ஜைன பவுத்தர்கள் செய்த அக்கிரமம்தான் என்ன? பகுத் தறிவு கொண்டு எதனையும் பார்க்க வேண்டும் என்று கூறியதுதான் ஆகும்.

கடவுள் கண்ணுக்கும் எட்டாத வன், அறிவுக்கும் எட்டாதவன், மனதுக்கும் எட்டாதவன் என்று ஆத்திகன் கூறுகின்றான். இந்த மூன்றுக்கும் எட்டாதவன், பிறகு எதற்குத் தான் எட்டுவான்? இது பற்றி ஆராயக் கூடாது; அப்படியே நம்பவேண்டும்; அதற்குப் பெயர் தான் ஆத்திகம். இப்படி எட்டாதது எப்படிக் கடவுளாகும்? என்று கேட்டால் - நாத்திகமா?

ஜீவராசிகளில் மனிதனைத் தனியாகப் பிரித்து உயர் திணை யாக ஆக்கி, மற்ற ஜீவராசிகளை அஃறிணையாக்கிப் பிரித்து வைக்கக் காரணம் என்ன? மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளிடம் காணப்படாத பிரத்தியேகமான அறிவு - பகுத்தறிவு இருப்பதனால் தான்! மற்ற ஜீவராசிகளுக்கு இந்தப் பகுத்தறியும் சக்தி கிடையாது.

கழுதைக்கும், எருமைக்கும் 1000  வருஷங்களுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ, அதே புத்திதான் இன்றும் உள்ளது.

ஆனால், ஓட்டுகின்றவன் மாற்றி ஓட்டுவதுமூலம் ஏதோ சில மாறுதல் இருக்குமே ஒழிய வேறு விதத்தில் மாற்றமே கிடையாது.

மனிதனோ பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப்போல பகுத்தறிவு அற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனுக்கு அறிவு வளர்ச்சியினைத் தடைப் படுத்த கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் முன்னோர்கள் நடப்பையும் கொண்டுவந்து புகுத்தி விட்டார்கள்.

அறிவுக்குச் சுதந்திரமில்லாமல், பெரியோர்கள் -   சாஸ்திரங்கள் - மதம் சொன்னபடி நடக்கணும் என்று தடைவிதித்ததன் காரண மாக வளர்ச்சி அடையவில்லை.

மற்ற நாட்டு மக்கள் கடவுள் உண்டு என்று நம்பினாலும், காலத் துக்கு ஏற்ப அறிவுக்கு ஏற்ப, ``கடவுள் ஒன்று உண்டு என்று நம்பு'' என்று அந்த அளவுக்கே சொல்ல வேண்டிய வர்களாக ஆகிவிட்டார்கள்!

ஆராய்ந்த மூட நம்பிக்கைகளை எல்லாம் ஒழித்து, எல்லா அமைப் புக்கும் காரணம் இயற்கை யான மாற்றம்தான் என்று சொல்ல வெட்கப் பட்டுக் கொண்டு - ஒரு கடவுள்தான் என்று கூறினார்கள்.

ஆனால் ஒரு கூட்டத்தார், இன்று உலக அமைப்புக்குக் கடவுள் தேவை இல்லை என்று பச்சை யாகக் கூறிக் கொண்டு வாழ்கின் றார்கள். அவர்கள்தான் இரஷ்யாக் காரர்கள். அவர்கள் சுமார் 30 கோடியாவர். அங்கு ஏழையும் இல்லை, பணக் காரனும் இல்லை; வாழ்க்கைத் தரத்திலும்பேதம் இல்லை.

காரணம், அவர்கள் அறிவை முன்வைத்து, சிந்தனையை முன் வைத்து, பார்த்துச் செய்கின்றார் கள். ``ஏன் வாழ்வில் பேதம்?'' என கேட்டு ஒழிக்கின்றார்கள் பிரத்யட் சத்துக்கு, அனுபவத்துக்கு ஒத்து வருகின்றதா? என்று பார்த்து காரியம் ஆற்றுகின்றார்கள்.

இவர்கள் மட்டும் அல்ல - சீனர் கள், ஜப்பானியர்கள், பர்மியர்கள், இலங்கைக்காரர்கள், சயாம்காரர் கள் இப்படியாக புத்தமதக்காரர் கள் இருக்கின்றார்கள். இவர் களுக்குக் கடவுளும் இல்லை, ஆத்மாவும் இல்லை, முன்ஜென்மும் இல்லை, பின்ஜென்மும் இல்லை.

இவர்களை எல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால், கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சுமார் 150 கோடி மக்கள்தான் உலகில் வாழ் கின்றார்கள். முஸ்லிம்கள் சுமார் 70, 80 கோடிமக்கள் இருக்கலாம். கிறிஸ்தவர்கள் 100, 120 கோடி இருக்கலாம். இந்த இரு மதங் களையும் முகமதுநபியும், கிறிஸ்து வும் தோன்றி, ஒரே கடவுள்; அதற்கு உருவம் இல்லை; அதற்கு ஒன்றும் தேவை இல்லை என்று கூறி ஜாக் கிரதையாக அமைத்து விட் டார்கள்.

நமது இந்தியாவில்தான் 25 கோடி மக்களாகிய இந்து என்று கூறப்படுகின்ற நமக்குத்தான் கடவுளைப் பற்றிய தெளிவான கொள்கையே இல்லை. ஆயிரக் கணக்கான கடவுள்கள் அதுகளுக் குப் பல உருவங்கள்! மனைவி மக்கள். சோறு, சாறு என்று ஆக்கிவைத்து உள்ளார்கள்.

நமது கடவுள்கள் காட்டு மிராண்டிக் காலத்தில் ஏற்பட்டவை தான் இன்றும் உள்ளன.

முஸ்லிமும், கிறிஸ்தவனும் திருத்தப் பாடு செய்து கொண்டது போல இவனும் செய்துகொள்ள வில்லை. அதன் காரணமாகத் தானே நாம் இன்றும் காட்டு மிராண்டியாக உள்ளோம்?

கிறிஸ்தவனும், முஸ்லிமும் கடவுள் ஒருவர்தான்; உருவம் இல்லை. ஒழுக்க மானவர், கருணையானவர், பெண்டுபிள்ளை சோறு, சாறு வேண்டாதவர் என் கின்றான்!

நமது மதக்காரன் அப்படி யாரடா சொன்னது? எங்களுடைய கடவுளுக்குப் பல உருவம், பெண்டு பிள்ளை, வைப்பாட்டி, சோறு, சேலை, நகை எல்லாம் வேண்டும் என்று கூறுவதுபோல கடவுளை அமைத்து உள்ளாள்.

இந்த ஊர் ரெங்கநாதன், சீரங் கத்திலே இருந்து உறையூருக்கு வைப்பாட்டி வீட்டுக்குத் தூக்கிப் போகும் விழாவானது 1965-லும் நடக்கின்றதே, சிந்திக்க வேண் டாமா? மக்கள் அய்ஸ்கட்டியைத் தொட்டால் ஜில் என்கின்றது. நெருப்பைத் தொட்டால் சுடுகின் றது. இதைப் பிரத்தியட் சத்தில் நாம் உணர்ந்து கொள்ளுகின்றோம். கடவுளைப்பற்றிய உணர்வு எதன் மூலமாவது நாம் காண முடி கின்றதா? இல்லையே!

கடவுளை உண்டு பண்ணி யவன், மனிதனைப் போலவே அதற்கு உருவம், ஆசாபாசங்கள் நடப்புகள் எல்லாம் கற்பித்து உள்ளான். நாம் நல்லது பண்ணி னால், கடவுள் நமக்கு நல்லது பண்ணுவார்; தீமை பண்ணினால், நமக்குத் தீமை பண்ணுவார் என்று கூறப்படுகின்றது.

நல்லது  பண்ணவும்,  தீமை பண்ணவும்  நமக்கு அதிகாரம் உள் ளது. நமக்கு நன்மையும், தீமையும் அளிக்கக்கூடிய அதிகாரம் கடவு ளுக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்?

கடவுள்தானே நம்மை நல்லதும், தீமையும் பண்ணச் செய்தவன்; அவன் அன்றி ஒன்றும் அசையாது என்கிறாயே, அப்படி இருக்க - அவன் ஏன் நன்மையும், தீமையும் நம் காரியங்களுக்காக செய்ய வேண் டும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.

இன்றைக்கு அறிவு வளர்ச்சி யின் காரணமாக மற்ற நாட்டுக் காரன்கள் சிந்தனை செய்து, எவ்வளவு விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டு முன்னேறுகின்றான்? நமக்கு மட்டும் ஏன் இல்லை? நமக்குச் சிந்தனைச் சக்தி உரிமை இல்லை.

சிந்திப்பது பாவம் என்று, மதத்தின் பேரால், முன்னோர்கள் நடப்பின் பேரால்தடை விதிக்கப்பப் பட்டு உள்ளது.

இதன் காரணமாகத்தான் ஒரு நெருப்புக் குச்சியைக் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. மற்ற நாட்டுக்காரர்களிடையே தோன் றுவதுபோல, நம்நாட்டில் அதிசய அற்புதங்களைக்கண்டு பிடித்தவர் களையே காணமுடிய வில்லையே.

காரணம் என்ன? நாம் சிந்த னையின் சக்தியை உணர வில்லை; மற்ற நாட்டுக்காரர்கள் உணர்ந்து பயன்படுத்து கின்றார்கள்.

நமக்கு அரசாங்கமும் 10,000-கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இதனுடைய வேலை மனிதனை மடையனாக வைத்து இருக்கவேண்டியது என்று தான் நடந்து வந்து இருக்கின்றது.

மதத்தினுடைய வேலையும் மனிதனை மடையனாக வைத்து இருக்கச் செய்வதுதான் ஆகும்.

நமது சாஸ்திரங்களும் இப்படியே யாகும்.

நமது நாட்டை விட்டு வெளியே போனால், நம்மைப்பற்றி மற்ற நாட்டுக்காரர்கள் என்ன கருத்துக் கொண்டு உள்ளார்கள் தெரியுமா இந்தியா ஒரு மூடநம்பிக்கை நிறைந்த நாடு; முட்டாள்கள் நிறைந்த நாடு என்பதுதானே?

தோழர்களே! எதற்காக நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வது? எதற்காக விபூதி பூசிக் கொள்வது? முட்டாள் என்று காட்டிக் கொள் வதைத் தவிர, வேறு என்ன? எதையும் சிந்தித்துப் பார்ப்பதே, நடப்பதே மனிதன் முன்னேற வழி என்று விரித்துரைத்தார்கள்.

மேலும் பேசுகையில், இன் றைக்கு ஏற்பட்டு உள்ள பாகிஸ் தான், சீனா ஆக்கிரமிப்பு பற்றியும், போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ள போதிலும் அபாயமும், நெருக்கடியும் நீங்கி விட்டதாகக் கூறமுடியாது. பொது மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பும் உதவியும் செய்ய வேண்டியதோடு ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும்.

துரோகச்  செயல்கள் நடை பெற்றால், அரசாங்கத்துக்குத் தெரி வித்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்கள். 

------------------------------------

சீரங்கத்தில் 17.9.1965 இல் தந்தை பெரியார்  ஆற்றிய உரை "விடுதலை", 26.9.1965

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It