பிராமணிய இலக்கியங்களில் சூத்திரர்களின் தோற்றத்தைப் பற்றி அறியத்தக்க விளக்கம் ஏதாவது கொடுக்கப்பட்டுள்ளதா? பிராமணிய இலக்கியங்கள், அகிலத்தின் சிருஷ்டி, மனிதன் மற்றும் வருணங்களின் சிருஷ்டி முதலியவற்றைக் குறித்தக் கற்பனைக்கதைகள் நிரம்பியவை என்பதில் ஐயமில்லை.

சூத்திரர்களின் தோற்றத்தைப்பற்றி அறிவதற்குரிய ஓரளவாவது யூகத்தையேனும் அவை அளித்தாலும் அளிக்காவிட்டாலும், சூத்திரர்களின் பிரச்சினை பற்றியதொரு புத்தகத்தில் அத்தகைய கொள்கைகள் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

சூத்திரர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி அவர்கள் கதையை முழுமையாக அளிப்பதற்காகவாவது இவற்றைத் தொகுத்தறிவது அவசியமாகின்றது. பிராமணிய இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு நாம் எடுத்துக் கொண்டுள்ள பொருளை அறிவதற்கு அவை எந்த அளவுக்கு உதவுகின்றன என்பதைக் காண வேண்டும்.

I

ambedkhar3 400வேதங்களிலிருந்து இதைத் தொடங்கலாம். ரிக்வேதத்தைப் பொறுத்தவரை, புருஷ சூக்தம் என்று அழைக்கப்படும் அதன் சூக்தத்தில் சிருஷ்டியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள கதை முன் இயலில் விளக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது, ஏனைய வேதங்களில் காணப்படும் பழங்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் காண்போம்.

யஜூர் வேதத்தில் திருத்தப்பட்ட இரு மூலப்பாடங்கள் உள்ளன. ஒன்று வெள்ளை யஜூர்வேதம். இரண்டாவது கருப்பு யஜூர் வேதம். முதலில் வெள்ளை யஜூர் வேதத்தை எடுத்துக்கொள்வோம். வெள்ளை யஜூர் வேதத்தின் வாஜஸனேயி சம்ஹிதை இருவகைத் தோற்றங்களைத் தருகின்றது. ஒன்று பின்வரும் வேறுபாடுகளோடு கூடிய ரிக்வேதத்தின் புருஷ சூக்தத்தின் வடிவம். அதாவது வெள்ளை யஜூர்வேதத்தில் 22 பாடல்கள், ரிக்வேதத்தின் மூல நூலில் அதுவே 16 பாடல்களாக உள்ளன. வெள்ளை யஜூர் வேதத்தில் மிகையாக உள்ள பாடல்கள் பின்வருவனவற்றைக் கூறுகின்றன:

17. நீரிலிருந்தும், பூமியின் சாற்றிலிருந்தும் அவர் விஸ்வ கர்மாவினால் ஆரம்பத்தில் உருவாக்கப்படுகிறார். துவஸ்தா, அவருக்கு உருவைக் கொடுக்கிறார். அதுதான் ஆரம்பத்தில் எல்லாத் திசைகளிலும் புருஷனின் பிரபஞ்சமாகும்.

18. சூரியனைப் போன்ற வண்ணத்தையும் இரவைக் கடந்தும் உள்ள இந்த மகாபுருஷனை எனக்குத் தெரியும். அவனை அறிவதின் மூலமே ஒருவர் இறப்பைக் கடந்திருக்க முடியும். அதை விட வேறொரு வழியுமில்லை.

19. பிரஜாபதி கர்ப்பப் பையின் உள்ளே நகருகிறார். பிறவாதிருந்த போதிலும், அவர் பல உருவங்களில் பிறந்திருக்கிறார். அறிவாளிகள் அவரது இருப்பிடத்தைப் பார்க்கிறார்கள்; அறிவாளிகள் மரீசிகள் இருக்கும் இடத்தை விரும்புகிறார்கள்.

20. யாரொருவர் கடவுளர்களுக்காகப் பிரகாசிக்கிறாரோ, யாரொருவர் கடவுளர்களின் பூசாரிகளாக இருக்கிறாரோ, யாரொருவர் கடவுளர்களுக்கும் முன்னால் பிறந்திருக்கிறாரோ, அந்த பிரம்மாவின் பிரகாசிக்கும் பிள்ளைக்கு வணக்கங்கள் செலுத்துவோம்.

21. கடவுளர், பிரம்மாவின் ஒளிவீசும் பிள்ளைகளைப் படைத்து, ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்: “கடவுளர் பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியவர்கள் என்பதைப் பிராமணர்கள் நன்கறிவர்.”

22. ஶ்ரீயும் இலக்குமீயும் அவரது மனைவிமார்கள்; பகலும் இரவும் அவரது பக்கங்கள்; விண்மீன்கள் அவரது அணிமணிகள்; அஸ்வினிகள் அவரது பிரகாசமான முகம். எனக்கு நான் விரும்பியதை அளிப்பீராக. அதை எனக்கு அளிப்பீராக; ஒவ்வொன்றையும் எனக்கு அளியுங்கள்.

வாஜஸனேயி சம்ஹிதை தரும் இரண்டாவது விளக்கம் புருஷ சூக்தத்திற்கு முற்றிலுமாக மாறுபடுகின்றது. அதில் கூறப்படுவதாவது:

வா.ச.xiv: 28. (முய்ர் தொகுதி 1, ப.18) “அவன் ஒன்றுடன் புகழ்ந்துரைத்தான். உயிரினங்கள் தோன்றின. பிரஜாபதி அதிபதியானான். அவன் மூன்றுடன் புகழ் பாடினான். பிராமணன் தோன்றினான். பிராமணஸ்பதி அதிபதியானான் ஐந்துடன் புகழ்பாடினான். உளதனைத்தும் தோன்றின. பூடணாம்பதி அதிபதியானான். ஏழுடன் புகழ் பாடினான். ஏழு ரிஷிகள் தோன்றினர். தாத்ரி அதிபதியானான். ஒன்பதினோடு புகழ்பாடினான். தந்தையர் தோன்றினார். அதிதி அதிபதியானாள். பதினொன்றோடு புகழ் பாடினான். பருவங்கள் தோன்றின. அர்த்தவர்கள் அதிபதிகள் ஆயினர். பதின்மூன்றோடு பாடினான். மாதங்கள் பிறந்தன. வருஷம் அதிபதியாயிற்று. பதினைந்துடன் பாடினான். சத்தரா (சத்திரியன்) தோன்றினான்.

இந்திரன் அதிபதியானான். பதினேழுடன் புகழ்பாடினான். விலங்கினங்கள் தோன்றின. பிரகஸ்பதி அதிபதியானான். பதினொன்பதுடன் புகழ்பாடினான். சூத்திரனும் ஆரியனும் (வைசியன்) தோன்றினர். இரவும் பகலும் அதிபதிகளாயினர். இருபத்தொன்றுடன் புகழ் பாடினான். பிளவுபடாத குளம்புகளை உடைய விலங்கினங்கள் தோன்றின. வருணன் அதிபதியானான். இருபத்து மூன்றுடன் புகழ் பாடினான். சிற்றுயிர்கள் தோன்றின. புஷன் அதிபதியானான்.

இருபத்தைந்துடன் புகழ்பாடினான். கொடிய காட்டுவிலங்குகள் தோன்றின. வாயு அதிபதியானான். (ஒப்பிட்டு நோக்குக: ருக்வேதம்:90:8) இருபத்தேழுடன் புகழ்ந்தான். விண்ணும் மண்ணும் பிரிந்தன. வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள் அவற்றோடு பிரிந்தனர். அவர்கள் அதிபதிகளாயினர். இருபத்தொன்பதோடு புகழ்ந்தான். உயிரினங்கள் தோன்றின. மாதத்தின் முதல் பாதி இரண்டாம் பாதிகள் அதிபதிகளாயின. முப்பத்தொன்றுடன் போற்றிப் பாடினான். இருந்தவை அனைத்தும் அசைவற்று அமைதியாயின. பிரஜாபதி பரமேஸ்தின் அதிபதியானான்.”

இப்பொழுது கறுப்பு யஜூர் வேதத்தைப் பார்ப்போம். கறுப்பு யஜூர் வேதத்தின் தைத்திரிய சம்ஹிதை மொத்தம் ஐந்து விளக்கங்களைத் தருகின்றது. Iv. 3, 10 ல் உள்ள ஒன்றுதான் வெள்ளை யஜூர் வேதம் வாஜஸனேயி சம்ஹிதையில் (xiv.28) திரும்ப அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அது ஏற்கெனவே முன்னால் தரப்பட்டிருக்கிறது. ஏனையவற்றில் சூத்திரர்களின் தோற்றம் பின்வருமாறு விவரிக்கப்பட்டிருக்கிறது:

தை.ச.ii.4.13.1 (முய்ர், தொகுதி 1, ப.22) – “ராஜன்யன் கருவில் இருந்தபோது அவனை நினைத்துத் தேவர்கள் பயந்தனர். அவர்கள் அவனைக் கட்டுகளால் பிணித்தனர். அதனால் அவன் கட்டுகளோடு பிறந்தான். அவ்வாறு கட்டப்படாமல் அவன் பிறந்திருப்பானாயின் பகைவர்களை அவன் கொன்று குவித்திருப்பான். ராஜன்யன் இத்தகைய கட்டுகள் இல்லாமல் பிறந்து, பகைவரைக் கொன்று குவிக்க வேண்டுமென்று கருதுவோன் இருப்பானாயின் அவன் ஐந்திர – பிரஹஸ்பதியை பலியளிக்க வேண்டும். ராஜன்யன் இந்திரனுக்குரிய குணங்களையும் பிராமணன் பிரஹஸ்பதிக்குரிய குணங்களையும் பெற்றுள்ளனர். எனவே பிராமணன் மூலமே ரஜன்யனை அவனது கட்டுகளிலிருந்து விடுவிக்க முடியும். ஒரு பரிசாக உள்ள இந்தத் தங்க கட்டுகள் அவனைப் பிணித்து வைத்துள்ள கட்டுகளிலிருந்து வெளிப்படையாக விடுவிக்கின்றது.”

2) தை.சம்.vii.1.1.4.(முய்ர், தொகுதி 1, ப.16) – பிரஜாபதி ‘யான் பல்குவேனாக’ என விரும்பினானர். அவர் வாயிலிருந்து திரி விருத் (ஸ்தோமா)வை உண்டாக்கினார். தெய்வம் அக்னியையும், காயத்திரி மந்திரத்தையும், ரதாந்தரம் என்றழைக்கப்படும் சாமனையும் உண்டாக்கிய பிறகு, மனிதர்களுள் பிராமணர்களையும், விலங்குகளுள் வெள்ளாடுகளையும் உண்டாக்கினார்.

முகத்திலுள்ள வாயிலிருந்து அவர்களை உண்டாக்கியதால் அவர்கள் முதன்மையானவர்கள். அவரது மார்பிலிருந்தும், அவரது தோள்களிலிருந்தும், பஞ்சதாச ஸ்தோமத்தை உருவாக்கினார். பிறகு, கடவுளையும், இந்திரனையும், திரிஸ்டுப மந்திரத்தையும், பிரிஹத் என்னும் சாமனையும், மனிதருள் ராஜன்யனையும், விலங்குகளுள் செம்மறியாடுகளையும் படைத்தார். ஆதலால் அவர்கள் பலம் பொருந்தியவர்கள்.

ஏனென்றால் பலத்திலிருந்து அவர்கள் உண்டாக்கப்பட்டார்கள். அவரது நடுவிலிருந்து அவர் சப்ததாசாவை உருவாக்கினார். அதன் பிறகு கடவுளர்கள் அதாவது விஸ்வதேவர்கள், ஜகதி மந்திரம், சாமன் என்றழைக்கப்படும் வைருபா, மனிதர்களுள் வைசியர்களையும், மிருகங்களில் பசுக்களையும் உண்டாக்கினார். இப்படியாக அவைகள் தின்பதற்காகவே உண்டாக்கப்பட்டன. ஏனென்றால் உணவிலிருந்து அவை உண்டாக்கப்பட்டன. அதனால் தான் அவை மாற்றத்தைக் காட்டிலும் எண்ணிறந்தவையாக உள்ளன.

சப்ததாசாவிற்குப் பிறகு எண்ணற்ற கடவுளர்கள் சிருஷ்டிக்கப்பட்டனர். அவரது பாதத்திலிருந்து அவர் ஏகவிம்சாவை படைத்தார். பின் அனுஸ்டுப மந்திரம், சாமன் என அழைக்கப்படுகிற வைரஜத்தையும் மக்களில் சூத்திரர்களையும், மிருகங்களுள் குதிரைகளையும் உண்டாக்கினார். ஆகவே இந்த இவ்விரண்டும் மற்ற எல்லா சிருஷ்டிகளையும் ஏற்றிச் செல்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள். ஆதலால், சூத்திரர்கள் யாகம் செய்ய இயலாதவர்களாயினர். ஏனென்றால் எந்தக் கடவுளரும் ஏகவிம்சாவிற்குப் பிறகு படைக்கப்படவில்லை. ஆதலால் இவ்விரும் அவர்களது பாதங்களில் பணிந்து பிழைக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் பாதத்திலிருந்து உருவானவர்கள்.

அதர்வண வேதத்தைப் பார்த்தோமானால் ஒட்டுமொத்தமாக அங்கே நான்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ரிக்வேதத்தின் புருஷ சூக்தத்தை ஒத்ததே. இது xix 6.ல் உள்ளது. ஏனையவை கீழே தரப்பட்டுள்ளன:

i) அ.வே.,iv.6.1.(முய்ர், தொகுதி 1, ப.21) – பிரம்மன் பத்து தலைகளுடனும், பத்து முகங்களுடன் முதலில் பிறந்தார். அவர் முதலில் சோமபானத்தைப் பருகினார். அவர் விஷத்தைச் சக்தியற்றதாக்கினார்.

ii) அ.வே.xv.8.1.(முய்ர், தொகுதி 1,ப.22) – அவர் (விராட்டியன்) உந்தும் தீவிர உணர்ச்சிகளால் நிரப்பப்பட்டார். அங்கிருந்து ராஜன்யன் தோன்றினான்.

iii) அ.வே.xv.9.1.(முய்ர், தொகுதி 1,ப.22) – இதைத் தெரிந்த விராட்டியன் அரசருடைய வீட்டிற்கு ஒரு விருந்தாளியாக வருகை தர, அவரை உயர்ந்தோராக எண்ணித் தக்க மதிப்புடன் வரவேற்றார். அப்படிச் செய்கையிலே, அவர் அரசுஸ்தானத்திற்கோ அவரது ராஜ்யத்திற்கோ தீங்கு எவ்விதத்திலும் செய்யவில்லை. அவரிலிருந்து (பிரமனும்) பிராமண மற்றும் சத்தராவும் (சத்திரியரும்) தோன்றினர். அவர்கள், ‘யாரினுள் நாங்கள் புகுவோம்’ என்பது முதலாகக் கூறினார்.

II

பிராமணங்களைப் பார்ப்போம். சதபத பிராமணங்கள் ஆறு விளக்கங்களைக் கொண்டது. அதிலும் இரு விளக்கங்கள் வருணங்களின் தோற்றத்தைப் பற்றியதாகும். அவை இரண்டில் ஒன்று சூத்திரர்களின் தோற்றத்தைப் பற்றிப் பேசுகின்றது:

ச.பி.xiv.4.2.23(முய்ர்,தொகுதி 1, ப.20): பிரம்மா (இங்கு, வியாக்யானம் பண்ணுபவர் கருத்துப்படி அக்னி உருவிலே இருப்பவரும், பிராமண சாதியைச் சார்ந்தவரும்) முன்னர் இந்த அண்டம் ஒன்றாக மட்டுமே இருந்தார். ஒன்றானதாக இருந்ததால், எதுவும் அதிகரிக்கவில்லை. ஒரு வீரிய வடிவத்தில் சத்திரியர்களை வல்லமையோடு உண்டாக்கினார்; அதாவது கடவுளர்களுள் மிக்க சக்தி வாய்ந்த இந்திரன், வருணன், சோமன், ருத்ரன், பர்ஜானியன், யமன், மிருத்யு, ஈசானன் முதலானோர்கள் தோன்றினார்கள். ஆகவே சத்திரியர்களுக்கு மேலானவர்கள் யாருமில்லை.

எனவே பிராமணர் ராஜசூய யாக வைபவத்தில் சத்திரியர்களுக்குக் கீழேதான் உட்காருவர். அவர் சத்திரியர்களுக்கு அரசு சக்தியைத் தருகிறார். இதில் பிரம்மாதான் சத்திரியர்களின் பிறப்பிடமாகும். ஆதலால், அரசர் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்த போதிலும், அவர் கடைசியில் பிராமணர்களைத் தனது உயர்வுக்கு மூலாதாரமாகக் கருதி நாடினர். யாரொருவர் பிராமணர்களை அழிக்கிறார்களோ அச்செயல் அவர்களையே அழித்துக் கொள்வதாகும்.

ஒருவர் தனக்கும் மேலுள்ள ஒருவரைத் துன்புறுத்தினால், அதனால் அவர் மிகவும் துக்ககரமான நிலையை அடைவார். அவர் வளரவில்லை. அவர் விசுக்களைச் சிருஷ்டித்தார். கடவுளர்களது வகுப்பைச் சேர்ந்த அவர்கள் வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், விஸ்வ தேவர்கள், மருத்துகள் ஆகிய சைனியங்களாகப் பெயரிடப்பட்டார்கள். அவர் வளரவில்லை. அவர் சூத்திரர் வகுப்பை (புஷன்) உண்டாக்கினார். பூமிதான் புஷனி என்பது. அவள் உலகில் வாழ்வன அனைத்தையும் வாழ்விக்கிறாள். அவர் வளர்ச்சி பெறவில்லை. அவர் பேரார்வத்தோடு ஒப்பற்ற வடிவில் சிறந்த நியாயத்தை (தர்மம்) உண்டாக்கினார்.

எனவே சத்ரா ஆள்பவராகிறார், சத்ராவை ஆள்பவர் தான் நீதி தேவதை. எனவே எதுவும் நீதிக்கு மேம்பட்டதல்ல. ஆகவே பலவீனமானவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களைவதற்குப் பலம் வாய்ந்த நீதி, அதாவது நீதிக்குப் பிரதிநிதியான அரசரை நாடுகிறார்கள். இந்நீதியானது உண்மை, சத்தியம் என்பது.

இதன் முடிவு தான் ஒரு மனிதன் உண்மையைப் பேசுகிறான் என்றால் நீதியைப் பேசுகிறான் என்றாகிறது. எனவே இதுதான் இரண்டுக்கும் நிலைப்பது. இதுதான் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்பவர்கள். அக்னியின் மூலம் கடவுளர்களிடையே பிரம்மாவும், பிராமணர்கள் மனிதர்களிடையேயும், தெய்வீக சத்திரியர் மூலம் மானிட சத்திரியரும், தெய்வீக வைசியர் மூலம் மானிட வைசியர்களும், தெய்வீக சூத்திரர் மூலம் மானிட சூத்திரர்களும் உருவானார்கள். ஆகவே இவர்கள் கடவுளர்களுக்கிடையே அக்னியிடமும், மானிடர்களுக்கிடையே பிராமணர்களிடமும் வாழுமிடத்தைத் தேடி அலைந்தார்கள்.

தைத்திரிய பிராமணம் கீழ்க்காணும் விளக்கத்திற்கு இடமளிக்கிறது:

1) தை.பி.,i.2.6.7 (முய்ர், தொகுதி 1, ப.21) – பிராமண சாதி கடவுளரிடத்திலிருந்தும், சூத்திரர்கள் அசுரர்களிடத்திலிருந்தும் அவதரித்தார்கள்.

2) தை.பி.iii.2.3.9 (முய்ர், தொகுதி1,ப.21) – சூத்திரர்கள் இல்லாததிலிருந்து தோன்றினார்.

III

இங்கே பிராமணங்களின் யூகங்களிலிருந்து கிடைக்கும் நான்கு வகுப்பினர் மற்றும் சூத்திரர்களின் தோற்றத்தைப் பற்றிய தொகுப்பைக் காணலாம். இந்த நான்கு வகுப்பினர்களின் தோற்றம் வழக்கத்திற்கு மாறானது, பொது விதிக்கு வகுப்பினர்களின் தோற்றம் வழக்கத்திற்கு மாறானது, பொது விதிக்கு அப்பாற்பட்ட சமூக விசித்திரம் என்பதையும், அதிலும் சூத்திரர்களை அவர்களுள் வைத்திருக்குமிடமானது எவ்வளவு இயற்கை வழக்கத்திற்கு மிக மாறானது என்பதையும் பழங்கால பிராமணர்கள் நன்கு உணர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

எனவே, இங்கே சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன. இல்லையேல், சதுர்வருணங்கள் அதுவும் சூத்திரர்களின் தோற்றுவாயைப் பற்றி விவரிக்க எடுத்துக் கொண்ட இவ்வெண்ணற்ற முயற்சிகளும் பயனற்றுப் போகும்.

ஆனால் இவ்வித விளக்கங்களைப் பற்றி எப்படி எடுத்துரைப்பது? பல வகைப்பட்ட விளக்கங்கள் வெறும் குழப்பத்தைத்தான் உண்டுபண்ணியிருக்கின்றன. சிலர் புருஷனே நான்கு வருணங்களின் தோற்றத்திற்கு மூலம் என்று சுட்டுகின்றனர். சிலர் அவற்றின் தோற்றத்திற்குக் காரணம் பிரம்மா என்றும், சிலர் பிரஜாபதி என்றும், சிலர் விரத்தியன் என்றும் குறிக்கின்றனர். எனினும் இதில் மூல நூல்களே வேறுபட்ட பல விளக்கங்களைத் தருகின்றன.

வெள்ளை யஜூர் வேதம் இருவிளக்கங்களைத் தருகிறது. ஒன்று புருஷன் வழியாகவும், மற்றொன்று பிரஜாபதி வழியாகவும் வந்ததாகக் கூறுகிறது. கறுப்பு யஜூர் வேதம் மூன்று விளக்கங்களைக் கொடுக்கிறது. இரண்டு பிரஜாபதி மூலமாகவும், மூன்றாவது பிரம்மா மூலமாகவும் ஏற்பட்டன எனக் கூறுகிறது.

அதர்வண வேதத்திலோ நான்கு விளக்கங்கள். ஒன்று புருஷன் மூலம், இரண்டு பிரம்மா மூலம்,மூன்று விரத்தியன் மூலம் மற்றும் நான்காவது விளக்கம் முன் சொல்லப்பட்ட மூன்று விளக்கங்களுக்கும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அடிப்படைக் கொள்கை என்னவோ, அதை அப்படியே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அதில் கூறப்பட்டுள்ள விவரங்களோ மாறுபட்டுள்ளன. சில விளக்கங்கள் பிரஜாபதியின் வாயிலாக என்பதுவும், பிரம்மா மூலமென்பதுவும் சுயச்சார்பானது. ஏனைய மனு அல்லது கஸ்யப்பர் மூலம் என்பது மானிட இனச் சார்பானது. அது அதீதமான கற்பனைத்தன்மையுடையது. இவற்றில் வரலாற்றுணர்வோ, அறிவுக்கேற்றதாகவோ எதுவுமில்லை. பேராசிரியர் மாக்ஸ் முல்லர் பிராமணங்களைப் பற்றிக் கூறுகையில் பின்வருமாறு கருத்துரைத்துள்ளார்:

“பிராமணங்கள் இந்தியச் சிந்தனை வரலாற்றில் கவர்ச்சிமிக்கதோரு கட்டத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆயினும் அவற்றை இலக்கியப் படைப்புகள் எனக் கொண்டு மதிப்பிட்டால், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பவையாக உள்ளன. மிகத் தொன்மையானதொரு காலக்கட்டத்தில், சமுதாயம் முதிர்வுறாதிருந்ததொரு நிலையில் வேறு எவற்றினோடும் ஒப்பிட்டுக் கூற முடியாத அளவுக்கு வெற்ற ஆரவாரமும் அபத்தமும் நிறைந்த இத்தகையதொரு இலக்கியம் தோன்றியிருப்பது எண்ணிக்கூடப் பார்க்க முடியாததாகும்.

இவற்றில் கருத்தைக் கவரும் சிந்தனைகள், துணிவான கருத்துகள், ஆணித்தரமான வாதங்கள், விந்தையான ஐதீகங்கள் ஆகியவற்றிற்குக் குறைவில்லாமல் உள்ளன. ஆனால் அவை சிதறுண்ட சிலையின் முண்டத்தைப் போலவும் விலையுயர்ந்த வைடூரியக்கற்களை இழிந்த ஈயத்திலும், பித்தளையிலும் பதித்தது போன்றுமுள்ளன. இந்த நூல்களின் பொதுத்தன்மை ஆழமற்றும் சுவையற்ற சொற்பகட்டும் கொண்டதாகும். புரோகிதர்களின் ஏமாற்றுப் புளுகும், பகட்டும் நிறைந்ததாகும்.

ஒரு நாட்டின் நவீன மற்றும் ஆரோக்யமான வளர்ச்சி, மதகுருமார்களின் தந்திரத்தாலும் மூடநம்பிக்கைகளாலும் எத்தகைய வகையில் நாசமாகக் கூடும் என்பதை வரலாற்றாசிரியர்கள் அறிவது மிக முக்கியமாகும். அதைவிட முக்கியமானது, நாடுகள் இளமையில் அடையும் இத்தகையதொரு கொள்கை நோய் முதுமையில் தோன்றும் அவற்றின் மனத்தளர்ச்சிக்கும் இடமளிப்பதாகிவிடக்கூடும் என்பதை நாம் அறிவதாகும். இந்த நூல்கள், ஒரு மருத்துவர் முட்டாளின் உளறல்களையும், பைத்தியக்காரனின் பிதற்றல்களையும் எவ்வாறு ஆராய்வாரோ அவ்வாறு ஆய்வதற்கே உரியவை” (மாக்ஸ் முல்லர், பண்டைய சமஸ்கிருத இலக்கியங்கள், ப.200)

நான்கு வருணங்களின் தோற்றங்களைப் பற்றிய குறிப்பாக சூத்திரர்களைப் பற்றிய இந்த பிராமணங்களின் யூகங்களைப் படிக்கும் பொழுது, ஒருவருக்குப் பேராசிரியர் மாக்ஸ் முல்லர் அவர்கள் கூறிய கூற்றுகளே மனக்கண் முன்னே படமாகக் காட்சியளிக்கின்றன. இந்த அனைத்து யூகங்களும், உண்மையிலேயே அறிவிலிகளின் உளறல்களாகவும், பைத்தியத்தின் பிதற்றல்களாகவும்தான் காட்சியளிக்கின்றனவே தவிர வேறென்ன? எனவே மனிதனின் பிரச்சினைகளைப் பற்றி இயற்கையான விளக்கங்களைக் கண்டறிவதற்காக ஆராயப் புகும் வரலாற்று மாணவர்களுக்கு உருப்படியானதும், உபயோகமானதும் எதுவும் இங்கில்லை என்பது துணிபு.

 (பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 2)

Pin It