கோபிசெட்டிபாளையம் என்பது பல பிரபல குடியான மிராசுதாரர்களையுடையது. அங்குள்ள பூமிகள் ஆதியில் அந்த தாலூகா பார்ப்பனரல்லாத வேளாளர்களுக்கேயிருந்து வந்தது. இப்பொழுதோ அவை ஏறக்குறைய முழுவதும் அடமானம், போக்கியம், கிரயம் மூலியமாய் கோபி பார்ப்பனர்களைச் சேர்ந்திருப்பதுடன் மிகுதியும் சேலம், கோயமுத்தூர், சென்னை முதலிய ஜில்லாக்களில் இருக்கும் பார்ப்பன வக்கீல்களுக்கும், உத்தியோகஸ்தர்களுக்குமே சொந்தமாயிருக்கிறது. குடித்தனக்காரர்கள் இந்தப் பார்ப்பனர்களை ‘சுவாமிகளே’ என்று கூப்பிட்டுக்கொண்டு அவர் கள் பின்னால் சுற்றுகிறவர்களாகவேயிருக்கிறார்கள். அல்லாமலும் பெரும்பாலும் இந்தக் குடியானவர்களை தப்பு வழிக்குக் கூட்டிபோவதும் வக்கீல் வீட்டுக்குக் கூட்டிப் போவதும் சூதாடக் கூட்டிப்போவதும், அவர்கள் கலியாண காலங்களில் அவர்களுக்கு வெளி ஊர்களில் இருந்து தாசி, வேசிகளையும் பார்ப்பன வித்வான்களையும் அழைத்துவரச் செய்து அவர் களுக்கு ஆயிரம் பத்தாயிரமாகச் செலவு செய்யச் செய்வதும் சிலர் அவர்களிடம் தரகு வாங்குவதுமாகிய இவைகளினால் குடியானவர்களைக் கடன் கரராக்கி சிலரைப் பாப்பராக்கி அவர்கள் பூமிகளை எழுதிவாங்குவதும் இந்த சில பார்ப்பனர்களேயாகும். இவ்வளவு யோக்கியதையில் உள்ள தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு ஐயங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்கு அந்த ஊர்களில் வாயில்லாப் பூச்சிகளும் சாதுக்களுமான இரண்டொரு குடியானவர்களைக் கை ஆயுதமாக வைத்துக்கொண்டு, கான்பரன்ஸ் என்ற அரசியல் விஷயத்தின் பேரால் ஒரு திருட்டுக் கூட்டம் கூட்டி, அதற்கு ஒரு பார்ப்ப னரை தலைவராகத் தெரிந்தெடுத்ததாய் ஏற்பாடு செய்து, சில பார்ப்பன ரல்லாத பேராசைக்காரர், அதாவது ஓட்டு வேட்டைக்காரரையும் கூட்டி வைத்துக்கொண்டு, பார்ப்பனரல்லாதாரிலும் காலிகளான இரண்டொரு ஆள்களையும் கூட்டிவைத்து இவர்கள் பெயரால் ஓட்டு பெறச்செய்யும் சூழ்ச்சி நாடகத்தின் யோக்கியதையை என்னவென்று சொல்லுவது?

நாடகத்தின் அயன் ராஜபார்ட்டான தலைவர் திரு. சீனிவாசய்யங்கார் பேசியதாவது:- “பார்ப்பனரல்லாதார் கட்சியான ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைக்கவேண்டும்.பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்கு பாடுபடும் திரு. ஈ.வெ. இராமசாமி நாயக்கரை வெட்டிப் புதைக்க வேண்டும்.” இவைதான் அக்கிராசனர் பிரசங்கத்தின் சுருக்கம். இதைப் பேசும்போதே அவர் மூர்ச்சையாகி கீழே விழுந்து ஆவி ஊஞ்சலாடி நிலை பெற்றதாம். நாடகத்தின் அயன் ஸ்திரீ பார்ட்டான திரு. சி.வி. வெங்கட்டரமணய்யங்காரோ “நான் மகா காங்கிரஸ் பதிவிரதை’ இன்னமும் கன்னியே கழியவில்லை. ஈ.வெ. இராமசாமி நாயக்கர் பேச்சை நம்பாதீர்கள்; அவர் திருடர், பொய்யர், என்னைக் கற்பழிக்கப் பார்த்தவர், நான் ஒரு நாளும் கற்பழியவில்லை.” என்று தலைமயிரை அவிழ்த்து விரித்துவிட்டு, மாரடித்துக்கொண்டதுதான் பெண் வேஷத்தின் நடிப்பு. இந்தப் பதிவிரதைக்கு ஆள்களைக் கூட்டிவிட்டு வயிறு வளர்க்கும் தோழிகளான சில பார்ப்பனரல்லாத பிரசாரகர்களோ “ ஆமாம்! ஆமாம்,! நாயக்கரை நம்பாதீர்கள். ஸ்ரீமான் வெங்கட்டரமண அய்யங்கார் மகா பதிவிரதை. எனக்குத் தெரியாமல் அவர் ஒரு காரியமும் செய்திருக்க முடியாது. என்னை வைத்துக்கொண்டுதான் என்னால்தான்- அவர் எல்லாக் காரியமும் செய்கிறது; இன்னமும் யாருடைய கையும்படவே இல்லை. ஆதலால் நாயக்கர் வார்த்தையை நம்பாதீர்கள்,” என்று சொல்லி ஓட்டு வாங்குவது தான் அத்தோழிகளுடைய நடிப்பாய் இருந்தது. இக்காரியங்களுக்குத் திரை பிடித்தும் தீவட்டி பிடித்தும் நிற்பதுதான் கோபி பார்ப்பனர்களான ஐயங்கார் நாடகக் கம்பெனியின் சிப்பந்திகளது நடிப்பாய் இருந்தது. உப வேஷக்காரர்களான பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்களோ, யார் நடிப்பு சரியாயிருந்தாலும் சரி, யார் நடிப்பு சரியாயில்லாவிட்டாலும் சரி, எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு ஓட்டு கொடுங்கள் என்பதே அவர்கள் நடிப்பாயிருந்தது. இந்நாடகத்தின் பெருமையை விளம்பரப் படுத்தி நோட்டீஸ் வினியோகம் செய்வதே பார்ப்பனப் பத்திரிகைகளின் கடமை யாயிருந்தது.

முடிவில் எல்லா யோக்கியதையும் வெளியாகிவிட்டது. அதாவது இந்த நாடகம் நடந்த 4, 5 நாள்களுக்குள்ளாக கோபி பிரமுகர்களும் பொது ஜனங்களும் இவர்களின் யோக்கியதையை அறிந்து, உண்மை அறிய ஆசைப்பட்டு, வேறு ஒரு கூட்டம் கூட்டி, திரு. ஈ.வெ. இராமசாமி நாயக்கரையும் திரு. என். தண்டபாணி பிள்ளையையும் வரவழைத்து உண்மையை வெளியிடும்படி கேட்டுக் கொண்டார்கள். அந்தப்படியே ஒரு பெரிய பிரதிநிதித்துவக் கூட்டம் கூட்டி அக்கூட்டத்தில் அவ்விருவர்களும் திரு, எஸ். இராமநாதன் அவர்களும் மற்றும் திரு, எஸ்.பி. கிருஷ்ணய்யர், திரு. ஜி.வி. நாராயணய்யர் ஆகியவர்களும் பேசினார்கள், பேசிய விஷயம் மறுமுறை வெளியாகும்.

ஆனாலும் கூட்ட ஆரம்பத்திலேயே திரு. எஸ். பி. கிருஷ்ணய்யர் எழுந்து 4, 5 நாளைக்கு முன் இந்த ஊரில் காங்கிரசின் பெயரால் ஒரு நாடகம் நடந்ததென்றும், அது காங்கிரஸுக்கு சம்மந்தப்பட்டதல்லவென்றும், அது பொதுஜனங்களால் நடத்தப்பட்டதல்லவென்றும், யாரோ சிலர் தங்க ளுக்கு வேண்டிய சிநேகிதர்களுக்காக சட்டசபைக்கு ஓட்டு வாங்கி கொடுக்க செய்த சூழ்ச்சியென்றும், அதில் பல ஒழுக்கமில்லாத காரியங்கள் நடந்திருக்கிறதென்றும், அக்கூட்டத்தில் மகாத்மாவைப்பற்றியோ அவர் கொள்கை களைப் பற்றியோ ஒரு பிரஸ்தாபமும் இல்லையென்றும், இரண்டொரு தேசபக்தர்களை திட்டுவதும் எப்படி ஓட்டு சம்பாதிப்பதென்பதுமே முக்கிய விஷயமாயிருந்ததென்றும், தலைவரை தெரிந்தெடுத்ததில் கொஞ்சமும் புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ளவில்லையென்றும், இது போலவே உள்ளூர் விஷயங்களிலும் பல தவறுகள் செய்து வருகின்றார்களென்றும், வந்திருக்கும் கனவான்கள் உண்மையான விஷயத்தைச் சொல்வார்கள், கவனமாய் கேட்க வேண்டும் என்றும்” சொன்னார். மற்ற விஷயம் பின்னால்.

ஒரு நிருபர்

(குடி அரசு - கட்டுரை - 20.06.1926)

Pin It