கடல் வற்றிப் போய்விட்டால் என்ன செய்வது என்பதைப் பற்றி இனிமேல் யாருக்கும் கவலை வேண்டாம்! கடல்மீன் தின்று பழக்கப்பட்ட வர்கள், “அய்யய்யோ! ஆற்றுமீன் ருசியாயிருக்காதே!” என்று கவலைப்பட வேண்டாம். மீன் பிடிக்கும் தொழில் போய்விட்டால், நாங்களெல்லாம் தினம் 7-8 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தது போய், போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்காவது, பள்ளி ஆசிரியர் வேலைக்காவது, குமாஸ்தா வேலைக்காவது போய் தினம் ஒரு ரூபாய் - இரண்டு ரூபாய் வாங்கி, அதில் கால்வாசியை நல்ல துணிமணிக்கும், சினிமாவுக்கும் பாழாக்கிவிட்டு, அரைப்பட்டினியாகக் கிடந்து தொலையவேண்டுமே, என்று மீன்பிடிக்கும் தோழர்கள் அஞ்சவேண்டியதில்லை!
இந்திய சர்க்கார் திடீரென்று ஒரு மாபெரும் புரட்சி செய்துவிட்டார்கள்! அமெரிக்காவோ, ஜப்பானோ, ரஷ்யாவோ, இனிமேல் நம்மைக் கண்டு வெட்கப்பட வேண்டும்!
இந்தியக் கடற்படைக்கு இப்போது புதிய சின்னம் ஒன்றை ஏற்படுத்தி விட்டார்களாம்! பழைய கிரீடத்துக்குப் பதிலாக இனி அசோக சிங்கங்கள் இடம் பெறுமாம்! இது அவ்வளவு முக்கியமல்ல. இந்தப் புதிய சின்னத்திற்குள், “ஷம் நோ வருணா” என்று சமஸ்கிருதத்தில் பொறிக்கப்படுமாம்! இதென்ன, கருமாதி மந்திரமா? - என்று கேட்காதீர்கள்! “வருண பகவானுடைய அருள் எங்களுக்குக் கிட்டட்டும்”, என்பதுதான் இதன் பொருளாம். இது யாரோ ஒரு சோம்பேறிப் பார்ப்பான் சொன்னது என்று யாரும் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்! இது சாட்சாத் வேதத்திலிருந்தே எடுக்கப்பட்ட வாக்கியமாம்!
கடற்படைக்கு வருண பகவான் அருள் எதற்காகத் தேவையென்றால், கடலில் ஏராளமாக மழை பெய்தால் தானே தண்ணீர் வற்றாமலிருக்கும்? நீர் இல்லாத கடல் கிரிக்கெட் விளையாடவும் பொதுக்கூட்டம் நடத்தவும் தானே பயன்படும்? கடல் இல்லாவிட்டால் கப்பல்களைத் தரைமீதா ஓட்ட முடியும்? ஆதலால்தான் வருணபகவானின் அருள் கிடைக்கட்டும் என்று கேட்டிருக்கிறார்கள்!
இந்தப் பேர்வழி (வரண பகவான்) யார் என்று என்னைக் கேட்காதீர்கள்! உலகப் புகழ் பெற்ற பண்டிதர் நேரு, அடுத்த முறை சென்னை வரும் போது கேட்டுப் பாருங்கள்! அல்லது தந்தியடித்துக் கேட்டுப் பாருங்கள்! அந்தப் பேர்வழி ஒருக்கால் அவருக்கு நெருங்கிய நண்பராயிருக்கலாம்!
இந்தியக் கடற்படையின் சாமான்களில் 100க்கு 95க்கு மேல் இரவல்! மற்ற நாட்டுக் கடற்படைகளுக்கிருப்பதெல்லாம் அந்தந்த நாட்டில் செய்யப் பட்ட கருவிகள்! அங்கே அவர்களுக்கு அறிவின் அருள் கிட்டியிருக்கிற படியால் வருணன் அருளோ, அவன் “மச்சான்” அருளோ அவர்களுக்குத் தேவையில்லை! ஆனால் இங்கே, பாரத புத்திரர்களிடையே அறிவின் அருள் சுன்னமாகவே இருப்பதனால், வருணனின் அருள் அவசரமாகத் தேவையாயிருக்கிறது என்க! குரானை இடிப்படையாக வைத்து ஆள்கிறார்களாம், பாகிஸ்தான் சர்க்கார்! அப்படியிருக்கும்போது நாம் ஏன் வேதத்தையும் ஸ்மிருதிகளையும் அடிப்படையாக வைத்து ஆளக்கூடாது?. . . என்று கேட்கலாம் அக்கிரகாரக் குஞ்சுகள்!
அதுதானே நடக்கிறது? போஸ்டல் ஸ்டாம்புகளைப் பார்த்தாலே தெரியவில்லையா?
ஆரியனாவது? திராவிடனாவது? - ஆரியக்கலையாவது? திராவிடக் கலையாவது?- என்று கேட்கிறார்களே, சிலர்! அவர்களுக்கு இதை லட்சத்தி மூன்றாவது உதாரணமாக அர்ப்பணஞ் செய்கின்றேன்!
“ஷம் நோ வருணா” என்று தமிழ்நாட்டு வேதியர்கள் கேட்டு, “ஷம் நோவாயு” என்று கடவுள் காதில் தவறுதலாக விழுந்து, பெரும் புயல் அடித்து தஞ்சைப் பகுதியைச் சேதமாக்கி விட்டதல்லவா? அதைப்போல் நடந்துவிடாதபடி இந்தியக் கடற்படைக்காரர்கள் எழுத்துமூலம் “வருணா” என்ற சொல்லைத் தெளிவாகப் பொறித்துக் கொள்ள வேண்டுகிறேன்!
எரிமலைப் பிரதேசங்களில் வாழ்கின்ற பிறநாட்டு மக்களும் இந்த வேத வாக்கியத்தை உணர்ந்து கொண்டு எரிமலைக் தீக்குழம்பு கிளம்பும் போது பயன்படுத்தலாம்.
இந்தியத் தீயணைக்கும் படைக்கும் இந்த மூல மந்திரத்தைக் கற்றுக் கொடுத்து விட்டால், அவர்கள் வேலையும் சுளுவாகும் என்பது என் தாழ்வான கருத்து!
நெருக்கடியான வேளையில் இந்த வேத மந்திரத்தைக் கண்டுபிடித்த நேருபுரோகிதர் (பண்டிட்) சர்க்காரையும், இதனால் பயனடையப் போகின்ற இந்தியக் கடற்படையினரையும் பாராட்டுவதுடன், கடல்வாழ் உயிர்களான கோடானுகோடி நண்டு - பாம்பு - மீன் - திமிங்கலம் அண்ட் கம்பெனியாரையும் பாராட்டுகின்றோம்!
- குத்தூசி குருசாமி (10-1-1953)
நன்றி: வாலாசா வல்லவன்