ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்கில் செங்கட லை ஒட்டியுள்ள நாடு சூடான். ஆப்பிரிக்க நாடுகளில் மிகப் பெரிய நாடு இது. உலகில் 10ஆவது பெரிய நாடு. இந்திய நிலப்பரப்பில் 75 விழுக்காடு அளவு கொண்டது. ஆனால் மக்கள் தொகை 4 கோடி மட்டுமே!

சூடான் 1956இல் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி யிலிருந்து விடுதலை பெற்றது. வரலாற்றில் சூடான் நிலப்பரப்பு முழுவதிலும் ஆப்பிரிக்க இனமக்களே வாழ்ந்திருந்தனர். ஆனால் கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல், இசுலாமிய சமயம் அங்கு வேகமாகப் பரவத் தொடங்கியது. அப்போது அராபிய இசுலாமியர்கள் அலையலையாய் நுழைந்து சூடானில் வடக்கின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். காலங்கால மாக வாழ்ந்த ஆப்பிரிக்கப் பழங்குடியினர் சூடானின் தென்பகுதிக்கு விரட்டப்பட்டனர். எனவே சூடானில் பல நூற்றாண்டுகளாக அராபிய இனத்தவரும், ஆப்பிரிக்க இனத்தவரும் பல முரண்பாடுகளுடன் வாழ்ந்து வந்தனர்.

பிரிட்டனின் குடியேற்ற ஆட்சியிலும், வடக்குச் சூடானும், தெற்குச் சூடானும் தனித்தனி ஆட்சிப் பகுதி களாகவே இருந்தன. ஆனால் பிரத்தானியர் வெளி யேறிய போது வடசூடானில் உள்ள கர்டோமைத் தலை நகரமாகக் கொண்ட ஒற்றை ஆட்சியை உருவாக்கிச் சென்றனர். எனவே சூடானில் இரண்டு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு கனன்று கொண்டேயி ருந்தது. இதனால் 1956 முதல் 1972 வரை இவ்விரு தேசிய இனங்களுக்கிடையில் மோதல்கள் நடந்தன. இந்த உள்நாட்டுப் போரில் தென் சூடானிய ஆப்பிரிக்கத் தேசிய இனமக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். இந்த உள்நாட்டுப் போரின் விளைவாகத் தென் சூடா னுக்குச் சுயாட்சி அதிகாரங் கள் வழங்கப்பட்டன.

தென் சூடானில் ஆப்பிரிக்க இனத்தவரில் பெரும் பகுதியினர் இயற்கையை வழிபடுவோராக உள்ளனர்; ஒரு பகுதியினர் கிறித்தவர்கள். இந்நிலை யில் 1970களில் சூடானில் இராணுவ ஆட்சித் தலைவராக இருந்த ஜாபர் நிமெய்ரி சூடானில் முதல் தடவையாக இசுலாமியச் சட்டத்தைக் கொண்டு வந் தார். 1980களில் இசுலாமிய ஷரியத் சட்டம் கண்டிப் புடன் பின்பற்றப்பட வேண்டும் என்று அரசு அறி வித்தது. இச்சட்டங்கள் வடக்கு சூடானுக்கு மட்டுமே பொருந்தும் என்று அரசால் அறிவிக்கப்பட்ட போதிலும், தென்சூடானியர், இந்த இசுலாமிய ஏகாதிபத்தியத் தைக் கடுமையாக எதிர்த்தனர்.

எண்ணெய் வளத்தில், ஆப்பிரிக்க நாடுகளில் சூடான் மூன்றாம் இடம்பெற்றுள்ளது. சூடானில் கிடைக்கும் எண்ணெயில் 80 விழுக்காடு தென் சூடானில் கிடைக்கிறது. ஆனால் எண்ணெய் துப்புரவு நிலையங்கள் அனைத்தும் வடசூடானில் அமைக்கப்பட்டுள்ளன. வடசூடானில் உள்ள துறை முகங்கள் மூலம் எண்ணெய் ஏற்றுமதி செய்யப் படுகிறது. இதனால் வடசூடானில் வேலை வாய்ப்புப் பெருகுகிறது. பிற தொழிற்சாலைகள் அமைப்பதிலும், கல்வி, மருத்துவம், முதலான நலத் திட்டங்களிலும், திட்டமிட்டுத் தெற்குச் சூடான் வட சூடானியர் ஆதிக் கத்தால் புறக்கணிக்கப்பட்டது. வடக்கு வாழ்ந்தது; தெற்குத் தேய்ந்தது.

எனவே, தென் சூடானியர் வடக்குக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். தென் சூடானில் மருத்துவர் ஜான் கரஸ் டி மபாயர் தலைமையில் சூடான் மக்கள் விடுதலை இயக்கமும், அதற்கான படையும் 1983 மே 16 அன்று போர்ட்டவுன் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.

முதலில் இது, கூட்டாட்சிக்குட்பட்ட தன்னுரிமைப் போராட்டமாகவே நடத்தப்பட்டது. மதச் சார்பற்ற சோசலிச அரசை அமைப்பதே நோக்கம் என்று தலைவர் மபாயர் அறிவித்தார். 1990இல் சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பின், மபாயர், கூட்டாட்சிக் கொள்கை இனி பயன்படாது என்று கருதி, சுதந்தரத் தனித் தென் சூடான் தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

வடக்கில் இருந்த இசுலாமிய கர்டோம் அரசு தென் சூடானியரின் தேச விடுதலைப் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கியது. 1983 முதல் 2005 வரை நடந்த தென் சூடான் தேசிய விடுதலைப் போரில் இரண்டு இலட்சம் தெற்குச் சூடானியர் கொல்லப்பட்டனர். இருபது இலட்சம் பேர் அகதிகளாயினர். 1989இல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ஒமர் அசன் அல் பஷீர், சூடான் ஆட்சியைக் கைப்பற்றினார். அதுமுதல் சூடானின் அதிபராக-சர்வாதிகாரியாக ஆட்சியில் இருந்து வருகிறார்.

அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளான மேற்கு அய்ரோப்பிய நாடுகளும் பஷீரின் கொடுங்கோலாட் சிக்கு ஆதரவாக இருந்தன. தெற்குச் சூடானின் விடு தலை தவிர்க்க முடியாத கட்டத்தை எட்டிய போது, தெற்குச் சூடானில் உள்ள எண்ணெய் வளத்தின் மீதான தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வ தற்காகத் தெற்குச் சூடானுடன் ஓர் உடன்பாட்டுக்கு வருமாறு பஷீர் அரசை இணங்க வைத்தன.

இந்தப் பின்னணியில் பஷீரின் அரசுக்கும், தெற்குச் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையில் 2005 மே மாதம் நய்வாஷா நகரில் உடன்பாடு ஏற் பட்டது. அமெரிக்காவின் குடியரசு தலைவராக இருந்த ஜார்ஜ் டபிள்யு புஷ் இந்த உடன்பாடு ஏற்படுவதற்கு அச்சாணியாகச் செயல்பட்டார். எல்லா நாடுகளிலும் அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பது அமெரிக்காவே!

இந்தஉடன்பாட்டின்படி, 2011 சனவரியில் தெற்குச் சூடான் தனிச் சுதந்தர நாடாவது குறித்து, அம்மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு (சுநகநசநனேரஅ) நடத்துவது என்றும், அதுவரையில் தெற்குச் சூடான், ஒருங்கிணைந்த சூடானின் ஒரு பகுதி யாகத் தனியாட்சி கொண்ட அரசாகச் செயல் படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஆறு ஆண்டுக் கால இடைவெளியில், வஞ்சகமான முறைகளில் தெற்குச் சூடானியரின் தனிச் சுதந்தர வேட்கை யை ஒடுக்கிவிடலாம் என்று வடக்கின் பஷீர் அரசு கருதியது. ஆனால் அது பகற்கனவாயிற்று.

2005 மே மாதம் உடன்பாடு ஏற்பட்ட இரண்டு மாதங் களுக்குப் பின் நடந்த உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) விபத்தில் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் மபாயர் உயிர்நீத்தார். அவருக்குப்பின் சல்வாக்கிர் மாயார்திக் என்பவர் இவ்விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்து வழிநடத்தி வருகிறார்.

தெற்குச் சூடான் தனி நாடாவது குறித்த கருத்து வாக்கெடுப்பு 2011 சனவரி 5 முதல் 15 வரை நடை பெற்றது. இதன்முடிவு 31.1.2011 அன்று அறிவிக்கப் பட்டது. மொத்த வாக்காளர்கள் 35 இலட்சம் பேர். தெற்குச் சூடானில் வாழ்ந்த வாக்காளர்களில் 80 விழுக்காட்டுப் பேர் வாக்களித்தனர். வடசூடான் பகுதியில் 20 இலட்சம் தென் சூடானியர் நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் இக்கருத்து வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை பெற்றவர்களில் 53 விழுக்காட்டி னர் மட்டுமே வாக்களித்தனர். ஏனெனில் வடசூடானிய நிருவாகம் வாக்கு எண்ணிக்கையின் போது பிரி வினைக்கு எதிரான வாக்குகளில் தில்லுமுல்லு செய்யும் என்று கருதியதால் வாக்களிப்பதைத் தவிர்த்தனர். ஆயினும் பதிவான மொத்த வாக்குகளில் 99 விழுக் காட்டினர் தென்சூடான் தனிச் சுதந்தர நாடாக வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். எனவே 2011 சூலை 9 அன்று தென்சூடான் முறைப்படி தனிச்சுதந்தரத் தேசமாக உலக வரைபடத்தில் ஒளிரும்.

கருத்து வாக்கெடுப்பில் கண்காணிப்பாளர் களாக உலகின் பல நாடுகளிலிருந்து பல ஆயிரம் பேர் செயல்பட்டனர். சீனாவிலிருந்து அதிக எண் ணிக்கையில் மேற்பார்வையாளர்கள் வந்திருந் தனர். மொத்தத்தில் கருத்து வாக்கெடுப்பு நேர் மையாகவும், நியாயமாகவும் நடந்தது என்று கருதப்படுகிறது. வட சூடானின் பஷீரின் இசுலாமிய அரசு, கருத்து வாக்கெடுப்பு நியாயமான முறையில் நடைபெற ஒத்துழைத்ததற்காக பயங்கர வாதிகளை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலிலி ருந்து சூடானை நீக்கவும், இது தொடர்பாக விதிக் கப்பட்டிருந்த பொருளியல் தடைகளை விலக்க வும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இசைவும், ஆதரவும் இல்லாமல் உலகில் எந்தவொரு புதிய தேசமும் உருவாக முடியாது என்ற நிலை நீடிக் கிறது. இணையற்ற வீரம் செறிந்த, ஒப்பரிய ஈகங்கள் ஈந்த, ஈழ விடுதலைப் போர் வெற்றி பெற முடியாமல் போனதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு இல்லாமையே பெருங்காரண மாகும். 2008ஆம் ஆண்டு கொசாவா தனிநாடானதற்கு அமெரிக்கா மருத்துவச்சியாகச் செயல்பட்டதே காரணமாகும். கொசாவாவின் விடுதலைக்கு விலையாக, அமெரிக்கா, கொசாவா மண்ணில் பெரும் படைத் தளத்தை நிறுவியுள்ளது. இதைப்போலவே தனிநாடாக மலரும் தெற்குச் சூடானிலும் அமெரிக்கா தன் படைத் தளத்தை அமைக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றியம், இனம் அல்லது மதம் அடிப்படையில் ஆப்பிரிக்க நாடுகள் மேலும் பிளவுபடக் கூடாது என்ற கொள்கையைக் கொண் டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன், பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஆலந்து முதலான முத லாளிய நாடுகள்தம் ஏகாதிபத்திய விரிவாக்கப் போட்டியில், ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தமக்கிடையே கூறுபோட்டுக் கொண்டன. இதன் அடிப்படையில் நாடுகளையும், எல்லைகளையும் வகுத்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளங்களைக் கொள்ளையடித்தன. மேலும் உலகில் வேறு எந்தவொரு கண்டத்திலும் இல்லாத தன்மையில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல ஆயிரம் இனக் குழுக்களாக மக்கள் வாழ்கின்றனர். கோடைக் காலத்தில் சிறுபொறி, காட்டுத் தீயாவது போல் இவர்களிடையே உருவாகும் மோதல்கள் பேரழிவையும் பெருமளவிலான உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே இருக்கும் நிலையைக் காப்பது என்கிற கொள்கையை ஆப்பிரிக்க ஒன்றியம் கொண்டுள்ளது. மேலும் நாடுகளின் எல்லைகளை மாற்றியமைப்பதற்கு அனுமதித்தால் அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்திய நாடுகளும் கூட்டுச்சேர்ந்து தம் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ப ஆப்பிரிக்க நாடு களின் வரைபடத்தை மாற்றி அமைத்துவிடுவார்கள் என்று ஆப்பிரிக்க ஒன்றியம் அஞ்சுகிறது.

எனவே 1993இல் எதியோப்பியா மட்டும் தன் நிலப் பகுதியிலிருந்து எரித்ரா என்ற நாடு தனியாகப் பிரிவதற்குத் தானாகவே முன்வந்து இசைந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குள்ளாகவே இவ்விரு நாடுகளிடையே எல்லைப் போர் மூண்டது. இன்றும் அப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது.

வடக்குச் சூடானுக்கும் தெற்குச் சூடானுக்கும் இடை யில் 1900 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லை யைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. ஜுபாவைத் தலைநகராகக் கொண்ட தெற்குச் சூடான் அரசுக்கு இது பெரும் அறைகூவலாக விளங்குகிறது. மேலும் வட சூடானின் எல்லையை ஒட்டித் தென் சூடானில் அமைந் துள்ள அபேயி பகுதி எண்ணெய் வளம் நிறைந்ததாகும். இப்பகுதியில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக நீடித்து நடந்த மோதல்கள் காரணமாக, கருத்து வாக்கெடுப்பை இரண்டாம் கட்ட மாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அபேயி பகுதியில் கருத்து வாக்கெடுப்பு நடத்தி - வடக்குடன் சேர்வதா? - தெற்குடன் இணைவதா? என்பது முடிவு செய்ய வேண்டியுள்ளது.

2005ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி எண்ணெய் வருவாயில் பாதி தெற்குச் சூடானுக்குத் தரப்படுகிறது. ஆனால் நாட்டில் எடுக்கப்படும் எண்ணெயில் 80 விழுக்காடு தெற்குச் சூடானிலிருந்து பெறப்படுகிறது. எனவே தெற்குச் சூடான் தலைவர் சல்வாக்கிர் மாயார்திக் தெற்குச் சூடானுக்கு வருவாயில் இன்னும் அதிகமான பங்கு கேட்கிறார். இதற்கு வடக்குச் சூடானின் பஷீர் அரசு தற்போதுள்ள அரசுக்கு உள்ள 2800 கோடி யூரோ கடனில் தென்சூடான் அரசு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. தெற்குச் சூடானில் எண்ணெய் வளம் மிகுந்துள்ள போதிலும், கச்சா எண்ணெயைத் துப்புரவு செய்ய வடசூடானில் உள்ள நிலையங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதேபோன்று வடக்குச் சூடானில் உள்ள துறைமுகம் மூலமே அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு அமைதி யான முறையில் தீர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை, தென்சூடான் தேசத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வுள்ள சல்வாக்கிர் மாயார்திக் உணர்ந்துள்ளார். அதனால் கருத்து வாக்கெடுப்பின் வெற்றிக் களியாட்டங்களில் மூழ்கிட வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளார்.

கருத்து வாக்கெடுப்புக்கு முன்பாகவே வடக்குச் சூடானிலிருந்து 1,20,000 தெற்குச் சூடானியர் தாயகம் திரும்பினர். இதுபோல் தெற்குச் சூடானில் உள்ள அராபிய இசுலாமியர் வடக்குச் சூடான் நோக்கிச் செல்கின்றனர். இப்புலம்பெயர்தல் அமைதியாக நடை பெற்று வருகிறது. இதைப்போலவே மற்ற சிக்கல் களும் குருதி சிந்தாத வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று சனநாயக - மனித உரிமைப் பற்றாளர்கள் விரும்புகின்றனர்.

நைல் ஆறு சூடானில் வடக்கிலிருந்து தெற்கு வரை பாய்கிறது. தெற்குச் சூடானில் மட்டும் 1200 கி.மீ. தொலைவு ஓடுகிறது. ஆனால் இந்த நெடுந்தொலைவுக்கும் சேர்த்துத் தலைநகர் ஜுபாவில் ஒரே ஒரு பாலம்தான் அமைக்கப் பட்டுள்ளது. தென் சூடான் இந்திய நிலப்பரப்பில் 19 விழுக்காடு-ஸ்பெயின் நாட்டைவிடப் பெரியது. ஆனால் 100 கி.மீ. அளவுக்கே தரமான நல்ல சாலைகள் உள்ளன. 56 இலட்சம் மக்கள் வாழும் தெற்குச் சூடானில் ஒரு மருத்துவமனை மட்டுமே இருக்கிறது. சில பள்ளிகள் மட்டுமே உள்ளன. 90 விழுக்காட்டினர் எழுத்தறிவற்றவர்கள். குடிநீர், பீர் தொழிற்சாலை தவிர வேறு தொழிற்சாலைகள் இல்லை. உயிர் வாழ்தலுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளும் வாழ்வாதாரங்களும் அளிக் கப்படாமல் வஞ்சிக்கப்பட்டதால், தங்கள் தேசிய அடையாளங்கள் மறுக்கப்பட்டதால், தென்சூடான் மக்கள் தன்னுரிமைப் போரில் ஈடுபட்டனர்; வெற்றி பெற்றனர்.

தென்சூடானின் எண்ணெய் வளங்களையும், வேளாண்மைக்கான பெருநிலப்பரப்பையும் கொள்ளை யிட அமெரிக்கா - அய்ரோப்பிய நாடுகள் மட்டுமின்றிச் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பெருமுதலாளிகளும் கழுகுகள் போல் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே சுதந்தர நாடாக மலரும் தெற்குச் சூடான் அயல்நாட்டு ஏகாதிபத்தியங்களின் கொள் ளையைத் தடுத்து நிறுத்தவும், தன் நாட்டு மக் களுக்கு நல்வாழ்வு தரவும், தெற்குச் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் தந்தையாக விளங்கிய ஜான் கரஸ்டி மபாயர் விரும்பியவாறு, தெற்குச் சூடானை உண்மையான மதச்சார்பற்ற சோசலிசக் குடியரசாக அமைக்க வேண்டும்.

Pin It