ஒரு வக்கீல் வீட்டிற்கு ஒரு கக்ஷிக்காரர் வருகிறார்.

வக்கீல்:- வாங்க கவுண்டரே, சவுக்கியமா என்ன விசேஷம்?

கட்சிக்காரன்:-ஒரு கேசு கீழ் கோர்ட்டில் நமக்கு விரோதமாய்ப் போய் விட்டது.அப்பீல் போடவேண்டும் தயவுசெய்து கட்டை பாருங்கள்.

வக்கீல்:-கட்டில் ஒரு ரிகார்ட்,அதாவது ஜட்ஜ்மெண்டை எடுத்து பார்த்துக்கொண்டு தன்னுடைய குமாஸ்தாவிடம் பேசுவதுபோல் “ஏண்டா ரங்கநாதா,யாரடா ஜட்ஜிமெண்ட் எழுதிய சப்ஜட்ஜி சுத்த முட்டாளாயிருக்கிறானே. அவன் தனக்குமேல் ஏதாவது கோர்ட்டு இருப்பதாக நினைத்தானா அவனேதான் முடிவான ஜட்ஜி என்று நினைத்துக்கொண்டானா? இந்த ஜட்ஜ்மெண்ட் நம்ம ஜட்ஜி துரையிடம் அரை நிமிஷம் நிற்குமா? அல்லாமலும் இந்த சப்ஜட்ஜை சும்மா விட்டுவிடுவார்களா?”

கட்சிக்காரன்:- (என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே கட்சிக்காரன் ஆனந்தத்துடன்) ஏனுங்கொ எஜமான்றே எதிர்கட்சிக்கு நோட்டீசு அனுப்பி மாற்றுவார்களா? அதில்லாமலே கீழ்கோர்ட் தீர்ப்பை மாற்றிவிடுவார்களா?

வக்கீல்:- அதெல்லாம் உங்களுக்கெதற்கு? நான் பார்த்துக்கொள்ளுகிறேன். 700 ரூ. பீசு கொடுத்தால் கேசு அப்பீல் போடுவேன்.

கட்சிக்காரன்:- 700ரூ. கேட்க்கிறீர்களே, சொத்தே 2000ரூ. தான் பொரும். கீழ்கோர்ட்டில் 1000ரூ. க்கு மேலாகவே செலவாய் விட்டது. கேசு போட்டு இரண்டரை வருஷமாச்சுது. கீழ்கோர்ட்டு செலவு பிரதிவாதிக்கு 440ரூ. கொடுக்கும்படி தீர்ப்பாயிருக்கிறது. ஆகையால் 500ரூ. வாங்கிக்கொள்ளுங்கள்.

வக்கீல்:-கீழ்கோர்ட்டு செலவை வேறே மாற்றவேண்டும். 700க்கு குறையாது.

இதற்குள் வக்கீல் குமாஸ்தாவும் தரகனும் கட்சிக்காரனுக்கு கண்ணடித்து உடனே ரூ. கையில் கொடுத்துவிடும்படி ஜாடை செய்கிறார்கள். கட்சிக்காரன் சரி 700ரூ.க்கு ஒப்புக்கொள்ளுகிறேன். 500ரூ. எடுத்துக்கொள்ளுங்கள். மீதி அனுப்புகிறேன். மறுபடியும் நான் வரவேண்டுமா?

வக்கீல்:-அநேகமாய் வரவேண்டியதில்லை. ஒருசமயம் நோட்டீஸ் வந்தால் வாரும். பாக்கி பீசு எப்போது அனுப்புவது?

கட்சிக்காரன்:- நான் ஊருக்குப்போன உடன் அனுப்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு குமாஸ்தாவுக்கும் தரகனுக்கும் 15ரூ. கொடுத்துவிட்டுப் போய் விட்டார் - போனவுடன் 200ரூ. யும் அனுப்பிவிட்டார். பிறகு 4 µ கழித்து நோட்டீஸ் வந்த பிறகு விசாரணைக்கு முதல் நாள், கட்சிக்காரர் மறுபடியும் வக்கீல் வீட்டுக்கு வருகிறார்.

வக்கீல்:- எந்த ஊரையா நீர்?

கட்சிக்காரன்:- நான் தான் 4 மாதத்திற்கு முன் வந்து ஒரு அப்பீலுக்கு 700 ரூ. பீசு பேசி 500ரூ. கொடுத்து விட்டுப் போய் மறுபடி 200ரூ. அனுப்பினேனே தங்களுக்கு ஞாபகமில்லையா?

வக்கீல்:- (குமாஸ்தாவை) ரங்கநாதா இந்த ஆள் யார் பாரு?

குமாஸ்தா: இவர்தான் 108 நெம்பர் அப்பீல்வாதி. இந்த கேசு நாளைக்கு போட்டிருக்கிறது.

வக்கீல்:- நாளைக்கு கேசு இருக்கும்போது இன்றைக்கே வந்து உபத்திரவம் செய்கிறீரே. நாளை வாரும் போம்.

கட்சிக்காரர் போய்விட்டார்.

வக்கீல்:- (குமாஸ்தாவை) ரங்கநாதா இந்த கேசு என்ன பார்த்தையா?

குமாஸ்தா:- பார்த்தேன். அது ஒன்றும் மாறாது. ஜட்ஜிமெண்டு ரம்பவும் சரியாய் எழுதியிருக்கிறார். அதிலொன்றும் பிசகு இல்லை.

வக்கீல்:- நாளைக்கு கோர்ட்டில் வேறு ஏதாவது வேலை இருக்கிறதா?

குமாஸ்தா :- இல்லை.

மறுநாள் கட்சிக்காரர் சிரித்துக்கொண்டே வருகிறார்.

வக்கீல்:- உன்னுடைய கேசைப் பார்த்தேன். கீழ்க் கோர்ட்டில் சரியான வக்கீலை வைத்து வேலை செய்யாமல், எவனையோ ஒரு முட்டாளை வைத்து வேலை செய்திருக்கிறாய், சரியான “இஷுக்களை” போடவில்லை சரியானபடி சாட்சிகள் விடவில்லை. கேசை பாழாக்கிவிட்டு இங்குவந்து முட்டிக் கொண்டால் என்ன பிரயோஜனம்? ஒரு ஐந்து நிமிஷமாவது கேசைப்பற்றிச் சொல்வதற்கு ஏதாவது பாயிண்டுகள் வேண்டாமா? இன்றைக்கு கோர்ட்டுக்குப் போவதில் ஒன்றும் பிரயோசனமில்லை.

கட்சிக்காரன்:- ஐய்யய்யோ, தாங்கள் அன்று ஜட்ஜிமெண்டைப் பார்த்து இது அரை நிமிஷம் கூட நிற்காது. ஜட்ஜிக்குக்கூட ஏதாவது கெடுதி வரும் என்று சொன்னீர்களே, இப்பொழுது 700ரூ. வாங்கிக் கொண்டு கோர்ட்டுக்குப்போவதில் பிரயோசனமில்லை என்கிறீர்களே. இந்த கேசு ஜெயிக்காவிட்டால் என் குடித்தனமே முழுகிப்போகுமே; கை முதலும் போய் கடன்காரன் ஆகிவிடுவேனே; அப்பீலுக்காகவென்று ஆயிரம் ரூபாய் என் மைத்துனன் ஜாமீன் பேரில் கடன்வாங்கி செலவு செய்துவிட்டேன். இப்பொழுது இப்படிச் சொல்லுகிறீர்களே சாமி சாமி இது தர்மமா!

வக்கீல்:- ஓய், நீர் அன்று கட்டுப் பூரா என்னிடம் எப்பொழுது காட்டினீர்? ஜட்ஜ்மெண்டு மாத்திரம் காட்டினீர். அதில் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். இப்போது மற்ற ரிகார்ட்டுகளைப் பார்க்கத்தான் விஷயம் தெரிந்தது.

கட்சிக்காரன்:- (அழுதுகொண்டு) எப்படியோ இருக்கட்டும், தாங்கள் இன்று கோர்ட்டுக்கு வாருங்கள், அப்புறம் என் விதிப்படி ஆகட்டும்.

வக்கீல்:- மறுபடியும் முட்டாள்த்தனமாய் உளருகிறீரே. கோர்ட்டில் எடுத்து சொல்லவே ஒன்றும் இல்லை என்று சொன்னால் திரும்பவும் கோர்ட்டுக்கு வாருங்கள் என்று கூப்பிடுகிறீரே உமக்கு புத்தி இருக்கிறதா இல்லையா?

குமாஸ்தா:- (கட்சிக்காரரைப் பார்த்து) நீங்கள் போய் இருங்கள், நான் வக்கீலை வரும்படி செய்கிறேன்.

அழுதுகொண்டே கட்சிக்காரர் கோர்ட்டுக்குப் போகிறார். கோர்ட்டில் ஜட்ஜி வந்தவுடன் இந்த கேசையே முதலில் கூப்பிடுகிறார். குமாஸ்தா இல்லை, வக்கீல் இல்லை. கட்சிக்காரர் நேரில் போய் வக்கீல் வருவார் கொஞ்ச நேரம் பொறுக்க வேண்டும் என்று கேழ்க்கிறார். ஜட்ஜு கேசை வீட்டிலே படித்து வந்தவராதலால் அப்பீலுக்கு ஒன்றும் சரியான காரணமில்லை. காத்திருப்பதிலும் பிரயோஜனமில்லை என்று சொல்லி அப்பீலை செலவுடன் தள்ளி விட்டார். கட்சிக்காரர் வக்கீல் வீட்டிற்குக் கூடப்போகாமல் ஊருக்குப் போய் பாப்பராய் விட்டார்.

(குடி அரசு - உரையாடல் - 16.08.1925)

Pin It