நாகப்பட்டிணத்தில் திராவிட சங்கமென ஓர் சங்கம் நிறுவப்பட்டி ருப்பதாகத் தெரியவருகிறது. ஆனால் முன்பு பிராமணரல்லாதார் சங்கமென்ற பெயருடன் இருந்த ஒரு சங்கத்தையே திராவிட சங்கமெனப் பெயர் மாற்றிப் புதிதாக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். சங்கத் தின் அக்கிராசனர் ஸ்ரீமான் கே.ஸி.சுப்பிரமணியஞ் செட்டியார் அவர்கள் கதரை ஆதரிக்க வேண்டுமென்றும், தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென ஸ்ரீமான் திருஞானசம்பந்தன் அவர்களும் பேசியிருப்பதாகத் தெரியவரு கிறது. இப்படி வெரும் வாய் வார்த்தையுடனே நின்று விடுவதாயிருந்தால் இச்சங்கம் முன்பு இருந்த பெயருடனேயே இருந்து உத்தியோகத்தை எதிர் பார்த்துக்கொண்டே இருக்கலாம். புதிதாக இவர்கள் பெயரை மாற்றிச் சங்கத்தை நிறுவியதற்கு ஏதாவது ஒரு காரணமாவது, நன்மையாவது அதில் ஏற்படவேண்டாமா? அப்படி ஏற்படவேண்டுமாயின் சங்கத்தின் அங்கத்தி னர்கள் ஒவ்வொருவரும் கதர் உடுத்த வேண்டுமென்றும். சங்கத்தின் அங்கத்தினர்களாய் இருப்பவர்களுக்கு மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வும், தீண்டாமையும் இல்லையென்றும் ஒரு தீர்மானம் செய்திருப்பார்களானால் புதுச்சங்கம் ஏற்படுத்தியது சரியென்று சொல்லலாம். காங்கிரஸ் சம்பந்தப்பட்ட பிராமணர் அல்லாதாரும் இச்சங்கத்தில் சேருவார்கள். ஒவ்வொரு ஊரிலும் இவ்வித சங்கத்தை பொதுமக்களும் ஆதரிப்பார்கள். அப்படியில்லாமல் பழைய தோசையையே திருப்பிப் போட்டுக்கொண்டு இதற்கு வேறு பெயர் சொன்னால் பொதுமக்கள் எப்படி நம்புவார்கள்? இதற்குள் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றதெனத்தான் நினைப்பார்கள். ஆகையால் அவ்வித சந்தேகத் திற்கு இடமில்லாமல் இத்தீர்மானத்தை நிறைவேற்றுவார்களென நம்பு கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.08.1925)

Pin It