மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரம் இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற விருதை 2017 முதல் 2024 வரை தொடர்ந்து எட்டு முறை பெற்றுள்ளது. இசை ஒலிக்கும் வாகனம், பள்ளிக் குழந்தைகளின் வாக்குறுதி, மக்களின் பெருமை உணர்வு போன்றவையே இந்த வெற்றிக்கதைக்கு பின்னால் இருக்கும் இரகசியம்.

பல பெருநகரங்களையும் அச்சுறுத்தும் குப்பைகள் என்ற மாபெரும் பிரச்சனையை இந்த நகரம் அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் இந்த நகரம் துர்நாற்றம் வீசும் குப்பைகளால் நிறைந்திருந்தது. ஆனால் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்களால் இங்கு இன்று குப்பைகளை எங்கும் பார்க்க முடியாது.cleaning the street 601இந்தியாவில் வழக்கமாக நிகழ்வது இதுதான். ஓர் அரசியல்வாதி திடீரென்று ஒரு நாள் விழித்துக் கொண்டு தூய்மை இயக்கத்தை ஆடம்பரமாகத் தொடங்கி வைப்பார். தெருவை சுத்தம் செய்வார். உணர்ச்சி பொங்கும் சொல் விளையாட்டுடன், தூய்மையின் முக்கியத்துவத்தை விரிவாகப் பேசி பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார். ஊடகங்கள் இந்த காட்சிகளை புகைப்படங்கள், காணொளிகளாக எடுத்து வெளியிடும்.

அடுத்த நாள் ஆரவாரங்கள் எல்லாம் முடியும்போது வீதிகள் முன்பு போல காட்சி தரும். ஆனால் இந்தூரில் கதை வேறு. 2017ல் நாட்டிலேயே மிகத் தூய்மையான நகரம் என்ற அங்கீகாரத்தை முதல்முறையாக அடைந்தது முதல் எட்டு முறைகள் தொடர்ந்தும் இந்நகரம் அதே பெருமையை நிலைநிறுத்தி வருகிறது.

“விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தால் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படாது. அந்த அளவு எங்கும் தூய்மையைக் காணலாம்” என்று அடிக்கடி இங்கு வந்து செல்லும் ஒரு தனியார் நிறுவன செயல் அலுவலர் நிதீஷா அகர்வால் (Nitisha Agarwal) கூறுகிறார். 2017ம் ஆண்டிற்கு முன்பு இந்த நகரம் 471 சிறு மற்றும் பெருநகரங்களுக்கு இடையில் அரசின் தூய்மை தரவரிசைப் பட்டியலில் 25 ஆவது இடத்தில் இருந்தது.

இந்த மாற்றம் நகரின் சமூக வாழ்வில் ராணுவம் போல செயல்படும் 850 தூய்மைப் பணியாளர்களின் பெரும் படை மற்றும் சிறிய சந்தில் கூட அணிவகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான பல வண்ணக் குப்பைத் தொட்டிகள் மூலம் குப்பைகள் அகற்றப்படும் விதம் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது. பல நகரங்களிலும் குடும்பங்கள் தங்கள் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்திருப்பர். ஆனால் வீட்டு வாசல் கதவிற்கு சில அடி தூரத்தில் எங்கும் குப்பைகள் சிதறிக் கிடக்கும்.

“மற்ற இடங்களில் காணப்படுவது போல தன் இடத்தைத் தவிர மற்றவை வேறு யாரோ ஒருவரின் பொறுப்பு. நாற்றமடிக்கும் குப்பைகள் குவிந்து கிடக்கும் மற்ற இடங்கள் வழியாக நடப்பதைப் பற்றி யாரும் கவலைப்படாமல் இருக்கும் நிலை இங்கு இல்லை” என்று உள்ளூர் வேதியியல் ஆசிரியர் ஆஜன் சேகல் (Arjun Sehgal) கூறுகிறார். தெருவில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளை தெருவில் அலையும் மாடுகளும் பன்றிகளும் நாய்களும் கிளறிவிட்டு தங்கள் கழிவுகளையும் அதில் கலந்து தெருவெங்கும் பரப்பிவிடும் காட்சியை முன்பு இங்கு காண முடிந்தது.

அப்போது குப்பைத் தொட்டிகள் நோய் பரப்பும் இடங்களாக இருந்தது. ஆனால் இப்போது விடிகாலைப் பொழுதில் நடைபாதைகள், சாலை தடுப்புச் சுவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரால் குழாய்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்கள் “இந்தூர் முதலிடத்தைப் பெற்றுவிட்டது” (Indore Has Become Number One) என்ற கணீரென்று மணியோசையுடன் ஒலிக்கும் பாடலை இசைத்தபடி அங்குமிங்கும் உலா வருகின்றன.

இசை அருகில் வருவதைக் கேட்டவுடன் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைத் தொட்டிகளுடன் வெளியில் வருகின்றனர். பணியாளர் குழு ஒன்று இருப்பிடமறியும் தொழில்நுட்பத்தை (GPS) பயன்படுத்தி குப்பை வாகனங்கள் எந்த ஏமாற்று வேலையிலும் ஈடுபடாமல் தங்கள் கடமையை சரிவரச் செய்கிறார்களா என்பதை அவற்றின் நடமாட்டத்தின் மூலம் கண்காணிக்கிறது.

நூறு சதவிகிதக் குப்பைகளும் ஈரமானவை, மின்னணு, பிளாஸ்டிக், பிளாஸ்டிக் அற்ற, உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் ஆபத்தான பொருட்கள் என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இவை எரிபொருளாகவும் எருவாகவும் மாற்றப்படுகிறது. விவசாயிகளுக்கு எருக்கள் உரமாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பல உணவகங்களும் நடமாடும் கம்போஸ்ட்டிங் வாகனங்களை உணவகத்தின் வெளியில் நிறுத்தி வைத்திருப்பதைக் காண முடியும்.

“காய்கறி மற்றும் பழக் கடைகள் வெவ்வேறு வகையான கழிவுகளுக்கு வெவ்வேறு நிறங்களுடன் உள்ள குப்பைத் தொட்டிகளைக் கொண்டுள்ளன. கழிவுகள் அங்குள்ள இயந்திரத்தின் மூலம் எரிபொருளாக மாற்றப்பட்டு அதுள் நகரப் பேருந்துகளில் எரிபொருளாக, வீடுகளில் சமையல் வாயுவாகப் பயன்படுகிறது” என்று வீட்டுத் தலைவி நீரு ஷர்மா (Neeru Sharma) கூறுகிறார்.

“தூய்மையில் முதலிடம் என்ற பெருமையே இந்த வெற்றிக்குக் காரணம். இந்த விருது பெருமைக்குரியது. நகரின் புகழை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதி மக்களிடையில் உள்ளது. இது மக்களை ஊக்கப்படுத்துகிறது” என்று கடந்த ஐந்தாண்டுகளாக இந்தூரில் வாழும் ரியா ரகுவன்ஷி (Riya Raghuvanshi) கூறுகிறார்.

“நகரின் குடியிருப்போர் தூய்மையை தங்கள் சொந்தப் பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளனர். குப்பையை தெருவில் போடுபவரைப் பார்த்தால் மற்றவர்கள் அவரை நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். தெருவில் குப்பை இருந்தால் கார் ஓட்டுபவர்கள் வாகனத்தை நிறுத்தி அதை அகற்றுகின்றனர். இங்கு தூய்மை என்பது ஒரு இயக்கமாக மாறியுள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உணர்வூக்கம் தருகிறது” என்று நகரில் பெட்ரோல் பம்ப் வைத்திருக்கும் ப்ரப்னிட் சோவ்னி (Prabhnit Sawhney) கூறுகிறார். இந்த மாற்றம் மக்களிடையில் உருவாக பொது விழிப்புணர்வு தீவிர பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. பள்ளிக் குழந்தைகள் தூய்மைக்கான வாக்குறுதி எடுத்துக் கொண்டனர்.

சி சி டி வி கேமராக்கள் பொருத்தப்பட்டு குப்பை போடுபவர் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. தூய்மைக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. ஹோலி பண்டிகையின் போது கட்டிடங்கள், வீதிகள் பிரகாசமான நிறச் சாயங்களால் பல வண்ணங்களாக மாறும். ஆனால் உடனே அந்த சாயங்களைச் சுத்தம் செய்ய கூடுதல் வாகனங்கள் நீருடன் வருகின்றன. கழுவி சுத்தம் செய்யப்படுகிறது.

தூய்மைப் பணியில் இந்தூரின் மாதிரி உலகிற்கே ஒரு சிறந்த முன்மாதிரி. மனமுவந்து செயலாற்றும் மக்கள், உறுதியான நிர்வாகம், இலட்சியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்க தனிநபர்கள் இருந்தால் நம்மிடையில் காலம் காலமாக குப்பைகளை வீசியெறியும் நடத்தையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2025/apr/04/how-indian-city-indore-beat-the-rubbish?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.