நம் நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்து விட்டது. பல்வேறு நலத்திட்டங்களும், தொழிற்சாலைகளும் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்தும் தனித்தனியாகவும் பல கோடிகள் செலவு செய்து செயல்படுத்திவருகின்றன.

மாநில, தேசிய நெடுஞ்சாலைகளும் உலகத்தரம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி, தனியார் ஆம்னி பஸ்களும் பெருமளவில் நம் மாநிலத்திற்குள் மட்டுமின்றி, வெளி மாநிலத்திற்கும் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பாக செயல்பட்டும் வருகின்றன.

ஆனால், வழியிலுள்ள உணவுச்சாலைகளும்,  கழிப்பிடங்களும் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதில்லை. தரம் குறைவான, சுகாதாரக் குறைவான கழிப்பிடங்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப் படுகிறது. எனவே நீண்ட தொலைவு பயணம் செய்யும் பொதுமக்கள் பேருந்து நிறுத்துமிடங்களில் பொது இடங்களையும், ரோட்டோரங்களையும் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துகின்றனர். உணவகங்களையும், கழிப்பிடங்களையும் குத்தகைக்கு எடுத்தவர்கள் நீண்ட கம்புகளுடன் ஆட்களை நிறுத்தி பயணிகளை மிரட்டுகின்றனர்.

28 ஜனவரி 2011 தேதியிட்ட 'கீற்றில்'  பாவலர் வையவன் எழுதிய கவிதையில் 'அரிசி ஒரு ரூபாய்; அதுக்கு இரண்டு ரூபாய்... ' என்ற தலைப்புடன் 'பொது இடங்களில், பேருந்து நிலையங்களில், ஒன்னுக்கு - ரெண்டுக்குப் போவதென்றால் அஞ்சு, பத்துன்னு அழவேண்டியுள்ளது' என்று வேதனைப்படுகிறார்.

அமெரிககா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நல்ல முறையில்  ஓய்விடங்கள் (Rest rooms) அமைத்து சாலைப் போக்குவரத்துத் துறையாலேயே சிறிய அளவில் சிற்றுண்டியகமும், கழிப்பறை வசதியும் இலவசமாக, சுகாதாரமானதாக செயல்படுகிறது. பயணிகளுக்கு பிஸ்கட் மற்றும் காபி, டீ இலவசமாக முகமலர்ந்த வரவேற்புடன்  வழங்கப்படுகிறது.

தேர்தலில் எவ்வளவோ இலவசங்களைச் சொல்லி வெவ்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரம் செய்தன. வெற்றி பெற்று யார் ஆட்சியமைத்தாலும், ஒவ்வொரு நெடுஞ்சாலையிலும், சுமார் 100 கிலோமீட்டர் இடைவெளியில் போக்குவரத்துத் துறையின் வருமானத்திலேயே / தனியார் பேருந்து இயக்குபவர்கள் உதவியுடன் இணைந்து ஓய்வகமும் (Rest rooms) (உள் தங்குமிட வசதி கூடாது, தவறான பயன்பாட்டுக்கு ஏதுவாகலாம்), சிற்றுண்டியகமும், கழிப்பறை வசதியும் இலவசமாக, சுகாதாரமானதாக அமைத்து சேவை செய்தால் பொதுமக்கள் பயன்பெறுவர். பொதுமக்களிடமும், படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி பொது இடங்களை அசுத்தப்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

அவரவர்கள் உணவைக் கொண்டு வந்திருந்தாலும், சாப்பிட்டுச் செல்ல தரமான மேசைகளும், அமரும் நிரந்தரப் பலகைகளும் அமைக்கலாம். இத்தகைய செயல்பாடுகளால், சற்று நேரம் ஓய்வெடுத்து, களைப்பைப் போக்கி இனிய பயணம் தொடர ஏதுவாயிருக்கும். இதைச் செய்வதில் யாரும் பொருளாதார லாபம் கருதக் கூடாது. இவைகளைப் பராமரிப்பதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ளலாம்.

சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை வசதி செயல்படுவது பாராட்டுக்குரியது. பெருகிவரும் மக்கட் பெருக்கத்தினாலும், மக்கள் அலட்சியத்தினாலும் பராமரிப்பு போதுமானதாக இல்லை. மற்ற நகரப் பேருந்து நிலையங்களிலும் இலவச கழிப்பறை வசதி செய்து தந்தால் பொதுமக்கள் பயன் பெறுவர்.

அரசுக்கு நற்பெயர் கிடைப்பது உறுதி.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It