பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதலே தொடர்ந்து பொருளாதார சீரழிவை நோக்கி நம் நாட்டை கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அவர்களது தவறான பொருளாதாரக் கொள்கைகளான பணமதிப்பு நீக்கம், GST வரி விதிப்பு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான செஸ் வரி விதிப்பு, அன்னிய செலாவணி குறைவு, வங்கிகளில் இருந்த பணத்தை பெரு முதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்தது என்று பல்வேறு அம்சங்களினால் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வகையிலே மாநிலங்களையும் அந்தப் பொருளாதார வீழ்ச்சியை நோக்கித் தள்ளும் வகையிலே நிதி அயோக் திட்டங்களின் மூலமும், GST கவுன்சில் கூட்டங்களின் மூலமும் தீர்மானங்களை ஒன்றிய பாசிச பாஜக அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. அப்படி நிறைவேற்றி நிர்பந்திக்கும் தீர்மானங்களுக்கு திராவிட மாடல் அரசும் செய்வதறியாது அப்படியே அமல்படுத்தி வருவது தான் நமக்கு மிக வேதனையாகவும், இந்தக் கொள்கைகள் முன்னேறிய தமிழகத்தை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்று விடும் என்ற எண்ணத்தை சமீப கால ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நடவடிக்கைகள் நிரூபிக்கிறது. பொருளாதார நிபுணர்கள், ஆலோசகர்கள் என்று பலரை வைத்துக் கொண்டு ஏற்கனவே பொருளாதாரத்தில் பாதிப்பில் இருக்கும் மக்கள் மீது மேலும் மேலும் அழுத்தங்களைக் கொடுத்து சிரமத்திற்கு உள்ளாக்குவது ஏன்?
மாநகராட்சி வரி உயர்வு
ஒன்றிய அரசின் மானிய நிதிகளைப் பெறுவதற்காக 15 ஆவது நிதி 2021 – 2026க்கான அறிக்கையின் அடிப்படையில் இந்த வரி உயர்வை ஏற்படுத்தியதாக தமிழகத்தில் இப்போது ஆட்சியில் இருக்கும் திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
· 15 ஆவது திட்ட அறிக்கையில் குறிப்பாக ஒன்றிய அரசின் மானியங்களைப் பெற சில நிபந்தனைகள் இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு நிபந்தனையான ஒவ்வொரு மாநகராட்சியும் தணிக்கை செய்யப்பட ஆண்டு அறிக்கையை பொது இணைய தளங்களில் வெளியிட வேண்டும். மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சியில் 2016 – 17 வரை உள்ள ஆண்டறிக்கை மட்டுமே பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள். மீதி உள்ள காலங்களுக்கான ஆண்டறிக்கையை இந்த அரசு எப்போது பதிவேற்றம் செய்யும்?
· அதே 15 வது திட்ட அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அரசின் ஆண்டு வருவாயில் உள்ளாட்சி அமைப்புக்களுக்காக 25% வரை நிதிப் பங்கீடு செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இதை தமிழக அரசால் செய்துவிட முடியுமா?
· அதே 15வது திட்ட அறிக்கையின் படி உள்நாட்டு உற்பத்தியில் 1% அளவுக்கு சொத்து வரி வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதைச் செய்து விடுவிடுவீர்களா?
ஒன்றிய அரசின் நிபந்தனைகளில் வரி உயர்வை மட்டும் முன்னின்று செய்துவிட்டு மற்றவற்றை குறிப்பாக வெளிப்படைத்தன்மையோடு நிதிநிலை அறிக்கையை மாநகராட்சிகள் இன்னும் பொதுவெளியில் வைக்காமல் இருப்பது, மாநில அரசின் வருவாயில் 25% உள்ளாட்சி நிர்வாகத்திற்குப் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது ஏனோ?
பால் தயிர் விலை உயர்வு
ஒன்றிய பாசிச பாஜக அரசு ஏழை எளிய மக்களிடம் இருந்து வரியாகப் பெற்ற பணத்தை இவர்களின் முதலாளிகளுக்கு விசுவாசமாக தள்ளுபடி என்று சொல்லி தூக்கி கொடுப்பதற்குத் தான் GST வரி விதிப்பு. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களான பால், தயிர், நெய், அரிசி, பனைவெல்லம் போன்றவற்றிற்கு 5% GST என்று சென்ற GST கவுன்சில் கூட்டத்தில் பாசிச ஆட்சியாளர்களின் பெரும்பான்மை மூலம் முடிவெடுத்து அமலுக்கு வந்த நிலையைப் பார்க்கிறோம்.
மொத்த விலையில் அரிசி வாங்கும் வியாபாரிகளின் அரிசி மூட்டையில் அடைக்கப்பட்டு வருகிறது. அந்த மூட்டைகளில் அடைக்கப்பட்ட அரிசிக்கு 5% GST சேர்த்து தான் அந்த வியாபாரி சில்லறை வியாபாரிக்கு விற்கிறான். சில்லறை வியாபாரியின் அடக்க விலையில் அந்த GST உண்டு. காரணம் அந்த சில்லறை வியாபாரி GST பதிவு செய்தவர் அல்ல. அந்த சில்லறை வியாபாரி சில்லறைக்கு விற்கும் போது அவரது அடக்கவிலை (அதாவது அந்த வியாபாரி கொள்முதல் செய்த GST உடன் சேர்த்து வாங்கிய விலை) உடன் தனது லாபத்தைச் சேர்த்து விற்கிறார். ஆகவே இந்தப் பொருட்களை வாங்கும் சராசரி மனிதனும் இந்த GST வரியில் இருந்து தப்ப முடியாது.
இந்த வரி உயர்வை ஒரு சாக்காக சாதகமாக வைத்துக்கொண்டு ஒன்றிய அரசு GST வரியான 5% ஐ விட கூடுதலாக தயிர் – 500 மிலி ரூ.30/- லிருந்து ரூ.35/- அதாவது 17% விலை உயர்வும், லஸ்ஸி– 200 மிலி ரூ.27/- லிருந்து ரூ.30/- அதாவது 11% விலை உயர்வும், மோர் – 200 மிலி ரூ.15/- லிருந்து ரூ.18/- அதாவது 20% விலை உயர்வும் செய்துவிட்டு நெய்க்கு மட்டும் அந்த ஒன்றிய அரசின் நிர்ணயமான 5% மட்டுமே வரி உயர்வை செய்தது அவாளை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலா?
ஏற்கனவே மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் திராவிட மாடல் என்று விளம்பரத்துடன் நிற்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் செய்வது ஒன்றிய அரசின் கொள்கைக்கு உடன் சேர்ந்து லாலி படுவதாகப் படுகிறது.
மின் கட்டண உயர்வு
ஒன்றிய அரசின் திட்டமான உதய் மின் திட்டம் என்பது விவசாயத்திற்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை முடக்குவதற்கும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்குமான ஒரு திட்டம் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது விமர்சித்த தி.மு.க இன்று ஒன்றிய அரசின் நிர்பந்தமான 10% நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்றுக் கொண்டது. உள்நாட்டு நிலக்கரி டன் ரூ. 3,500/- கிடைக்கும்போது எட்டு மடங்கு அதிக விலை கொடுத்து அதானி மூலம் இறக்குமதி ஆகும் நிலக்கரியை 10% க்கும் அதிகமாக விலை கொடுத்து இறக்குமதி செய்தது ஏனோ?
இந்த இறக்குமதி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் செலவு அதிகமாகி இப்போது அந்த மின் கட்டண உயர்வை உயர்த்துவது ஏனோ?
திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு பொருளாதாரக் கொள்கைகளில் பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை ஏற்று சிறு பிசகும் இல்லாமல் தமிழகத்தை இத்தனை பொருளாதார ஆலோசகர்கள் இருந்தும் வழி நடத்க்ச் செல்வது ஏனோ?
திராவிட மாடல் என்பதே சுயமரியாதையும் சமூக நீதியும் தான். சமூக நீதி என்பது பொருளாதாரக் கொள்கைகளிலும் கடைபிடித்தால் தான் அந்தக் கொள்கையோடு செல்ல முடியும்.
தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்க்கும் இடத்தில் எதிர்த்துவிட்டு மக்களுக்கான திட்டங்களை மக்களுக்கு சுமைகளை ஏற்றாத அரசாக இனிமேலாவது விளங்க வேண்டும் என்பது தான் கருப்பு நீலம் சிவப்பு கூட்டணியின் எண்ணமாக நோக்கமாக இருக்க வேண்டும்.
- ஆர்.எம்.பாபு