தீபாவளி வந்து விட்டது. கூடவே நோட்டுப் புத்தகமும் கையுமாக  தனித்தனியாகவும், குழுவாகவும் அறிந்தவர்களும் அறியாதவர்களும் வரிசையாக வர ஆரம்பித்துவிட்டார்கள். இனாம், இனாம் கேட்டு வருகிறார்கள்.

படிப்புக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற வருமானம், திறமைக்கேற்ற ஊதியம் இவைகளில் தங்களை வளப்படுத்தி, தேவைகளைப் பெற்று திருப்திப்படுவதை விட்டு இனாம் என்ற பெயரில் யாசகம். எதிர்பார்க்கும் அளவு பணம் தரவில்லை என்றால் முறைப்பு. மனித நேயம், ஒழுக்கம், சுயமரியாதை குறைந்து விட்டது.

வழக்கமாக சமையல் எரிவாயு தீர்ந்து பதிவு செய்ய அழைத்தால், போன் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் மலர்ச்சியான தகுந்த பதிலும் தருவதில்லை. எரிவாயு சிலிண்டர் 10 - 15 நாட்கள் கழித்துதான கிடைக்கும். கொண்டுவரும் பணியாளர்க்கு குறிப்பிட்ட விலைக்கு மேல் 10 ரூபாயும் அதற்கு மேலும் தரவேண்டியிருக்கும். நேற்று சிலிண்டர் கொண்டு வந்தவர் 'தீபாவளி இனாம்' என்று தயங்கி நின்றார். இன்னொரு பத்து ரூபாய் கொடுத்தேன். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கையில் வாங்கிய பத்து ரூபாய் தாளை திரும்பக் கொடுத்து விட்டு அலட்சியமாக சென்று விட்டார்.

பத்து ரூபாயின் மதிப்பென்ன? ஏதும் வாங்க முடியாதா? பயனற்றது எனத் தூக்கி எறிந்து விடலாமா?

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் தபால்காரர் 100 ரூபாய் மணியார்டர் கொண்டுவருவார். சில்லரையாகத் தருவார். கடைசி ஒரு ரூபாய்க்கு ஒரு எட்டணா, இரண்டு நாலணா தருவார், இனாம் எதிர்பார்த்து தலையைச் சொரிவார். எட்டணா கொடுத்தால் நன்றியுடம் சலாம் செய்து செல்வார்.


நாற்பது வருடங்கள் முன், என் மகன் பிறந்த போது பார்க்க வந்த உறவினர் அன்புடன் ஒரு ரூபாய் கொடுத்துச் சென்றார். என் தந்தை தீபாவளியன்று முன்னதாகவே நூறு ரூபாய்க்கு சில்லறை மாற்றி வைத்து கிராமத்தில் திண்ணையில் அமர்ந்திருப்பார். எட்டணா, ஒரு ரூபாய் என்று தானம் அளிப்பதை நன்றியுடன் வாங்கிச் செல்வர். அந்த மரியாதையும், நன்றியும் இன்று எவரிடமும் இல்லை.

என் டாக்டர் நண்பர் ஒருவர் 40 வருடங்களுக்கு முன் திண்டுக்கல் பேகம்பூரில் சிறு ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். ஊரில் மற்ற டாக்டர்கள் ஒரு ஊசி போட 3 ரூபாய் வாங்கும் பொழுது இவர் மட்டும் 2 ரூபாய் வாங்குவார். ஏன் குறைத்து வாங்குகிறீர் என்று கேட்டால், 3 ரூபாய் வாங்கினால் 5 நோயாளிகள் வருவர், 2 ரூபாய் வாங்கினால் 10 நோயாளிகள் வருவர் என்பார். எனவே 2 ரூபாய்க்கும் மதிப்புண்டு.

அதே கால கட்டத்தில் எங்கள் கிராமத்தில் ஒரு சில முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மருத்துவமனை போன்ற பொது இடங்களுக்குச் செல்வதில்லை. .ஊரில் உள்ள ஒன்றிரண்டு டாக்டர்கள் நோயாளிகளைப் பார்க்க இரட்டை மாட்டு வண்டியில் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவதுண்டு. அப்பொழுது நோயாளியைப் பார்த்து சிகிச்சையளித்த பின், மிகுந்த மரியாதையுடன் வெள்ளித்தட்டில் இரண்டு ரூபாய் நோட்டு வெற்றிலை பாக்குடன் House visit fees ஆக மருத்துவரிடம் அளித்ததுண்டு. மருத்துவத்திற்கு கணக்கெழுதி வருடம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மருந்தாளுனர் மூலம் மருத்துவக் கட்டணத்தைப் பெற்றுக் கொள்வார். அன்று அந்த 2 ரூபாய்க்கும் மதிப்புண்டு.

கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிப் பணம் செலுத்தும் பொழுது, மீதம் 50 பைசாவிற்கு கடைக்காரர் ஒரு சாக்லேட் தந்தால் யாரும் வாங்குவதில்லை. 50 பைசா தர வேண்டும் என்று சண்டை பிடிப்போரும் உண்டு. எனவே 50 பைசாவிற்கும் மதிப்புண்டு.

(ஆதவன் தீட்சண்யா' வின் 'அணா பைசா விவகாரம்' சிறுகதை எனக்குப் பிடித்தது)

எனக்கு டயபடிஸ் சில வருடங்களாக இருக்கிறது. மாத்திரைகளுடன் இன்சுலின் ஊசியும் போட்டு வருகிறேன். காலையில் பதினோரு மணிக்கும், மாலையில் சுமார் ஆறு மணிக்கும் சில நேரங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் பொழுது, பிஸ்கட் சாப்பிட வேண்டியிருக்கும். பெட்டிக் கடையில் கிடைக்கும் மூன்று ரூபாய் விலையுள்ள Tiger அல்லது Sun feast பிஸ்கட் பாக்கட் ஒன்று வாங்கி வைத்துக் கொள்வேன். மூன்று பாக்கட் வாங்கினால் மீதம் ஒரு ரூபாய் இருக்கும். அந்த ஒரு ரூபாயை யாரும் வேண்டாம் என்று சொல்வதில்லை.

முன்பெல்லாம் உறவினர்களோ, தெரிந்தவர்களோ நம்மைச் சந்தித்து விட்டு திரும்பிச் செல்லும்போது காப்பி அருந்த, வழிச் செலவுக்கென்று சிறு தொகையை கொடுப்பதுண்டு. இப்பொழுது ஏதாவது வேலைக்கு, சிறு சிறு செயல் உதவிகளுக்கு வரும் தொழிலாளர்கள் இனாமாக காப்பிச் செலவுக்கென்று தரும் பத்து, இருபது ரூபாய் என்ற சிறு தொகையை அலட்சியம் செய்கின்றனர். ஒருவேளை அவர்கள் ஒரு குவாட்டர் மதுவுக்கான தொகையை இனாமாக எதிர்பார்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதைவிட வேடிக்கை, சென்ற ஆண்டு என் வீட்டிற்கு வெள்ளையடிக்க ஏற்கெனவே அறிந்த ஒரு தொழிலாளியை அழைத்துப் பேசும்போது, கறாராக ஆளுக்கு தினக்கூலி ரூபாய் 180 என்று பேசி சிலர் வந்து வேலை செய்தனர். இரண்டு வாரங்களில் வேலை முடித்து கூலி வாங்க காகிதத்தில் அவரே எழுதி, இனாம் ரூ. 2000 - (இரண்டாயிரம்) என்றும் எழுதிக் கேட்டார். கறாராகக் கூலி பேசிய பின், இனாமிற்கு இடம் எங்கே? 

இனாமாகப் பெறுவதும், இலவசமாகப் பெறுவதும் தன்மானத்தை இழந்த யாசகம் அன்றி வேறல்ல. ஒரே வித்தியாசம் 'அம்மா, தாயே, அய்யா..என்று இரந்து கேட்பதில்லை.

Pin It