காலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக் கொண்டாரா என்கிற கேள்விகளுக்கான விடையை திரைப்படத்திகுள் தேடக் கூடாது; திரைக்கு வெளியில்தான் தேடவேண்டும்.
அரசியல் மந்தம் தமிழ்நாட்டில் நிலவிய காலத்தில்தான் எந்தக் கதை வெற்றிபெறும் என்று புரியாமல் திரையுலகம் மண்டையைப் பிய்த்துக் கொண்டது. சின்னத்தம்பி போன்ற படங்கள் எதனால் ஓடின என்ற மயிர் பிளக்கும் விவாதங்களும் நடந்தன. ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் வாலைப் பிடித்தே ஒரு பத்து படங்களாவது எடுத்து லாபமீட்டத் துடிப்பார்கள். இதே நிலைதான் இன்னமும் நீடிக்கிறது என்றாலும், தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை மத்திய பாஜக ஆட்சிக்குப் (2014) பின் மாறியுள்ளது. பாஜக கும்பலின் திட்டமிட்ட தொடர் தாக்குதல்களையும், திட்டமிட்டு கிளறிவிடப்படும் அரசியல் புழுதிகளையும் எதிர்க்கவும் தற்காத்துக் கொள்ளவுமான போராட்டங்கள் பெருகின. இதன் விளைவாக முற்போக்கு சமூகக் கருத்துகள் கொண்ட படங்கள், அரசியல் பேசும் படங்கள் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்தன. அதற்குகந்த வேறுபட்ட கதைக்கரு உள்ள இயக்குனர்களுக்கு வாய்ப்பும் வெற்றியும் கிடைத்தன. காக்கா முட்டை, குற்றம் கடிதல், மெட்ராஸ், ஜோக்கர், அறம், அருவி........ இப்படி பட்டியலிடலாம்.
நடிக்கவே தெரியாத - தமிழ் பேசவே தெரியாத நடிகைகள்கூட சில வருடங்களில் நடிக்கவும், தமிழ் பேசவும் கற்றுக் கொள்ளும்போது... 40 வருட திரை அனுபவத்தில் ரஜினி அடுத்த படத்தை யாருக்கு இயக்கக் கொடுக்கலாம் என்பதை கற்றுக் கொள்ளாமலா இருந்திருப்பார்? மேலும் கோச்சடையான், லிங்கா தோல்வியும் ரஜினியை சிந்திக்க வைத்திருக்கும். எனவே வணிக வெற்றிக்கான சூத்திரத்தை ரஜினி சமூக நிலைமைகளில்தான் தேடியிருப்பார். முற்போக்கு சமூகக் கருத்துக்கள் அரசியல் சாயல் உள்ள படம்தான் இச்சூழலில் வெற்றி பெறும் என்பதை உணர்ந்ததன் விளைவாகவே ரஞ்சித்தை அழைத்து கபாலி வாய்ப்பு கொடுத்திருக்கிறார். GST எதிர்ப்பு வசனங்களைக் கொண்ட மெர்சல் படத்திற்கு பாஜக கிளப்பிய அரசியல் சூட்டையும், தமிழக மக்களின் அதற்குரிய எதிர்வினையையும் ரஜினி பார்த்திருக்கிறார். சில காரணங்களால் கபாலி சிறு சறுக்கலைத் தந்தாலும் புற அரசியல் சூழல் மாறாததால் மீண்டும் காலா மூலம் வாய்ப்பை ரஞ்சித்திற்கே தந்திருக்கிறார்.
ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினரின் வணிக வெற்றிக் கண்ணோட்டம்தான் ரஞ்சித்திற்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றனவே அன்றி வேறில்லை.
மார்ச் 2018 ல் எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்து வைத்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். ஆட்சியை நான் தருவேன் என ரஜினி அறிவித்தார்.
அண்ணாவும், கருணாநிதியும் நாடகம் மற்றும் திரைத்துறையை திராவிட இயக்கக் கருத்துக்களின் பிரச்சாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தியதோடு நில்லாமல், அவற்றின் பிரபல நடிகர்களை தேர்தல் கவர்ச்சிக்காகப் பயன்படுத்தியதிலிருந்துதான் நடிகர்களும் அரசியலும் கலந்த சீரழிவு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் தொடங்கின. எம்.ஜி.ஆரோ அதே திரைக் கவர்ச்சியை அரசியலில் மூலதனமாக இட்டு, கொடி நாட்டி திராவிட அரசியலை சீரழித்தார். அதாவது திராவிடக் கொள்கைகளை தனது நாயகப் புகழ் ஒளிவட்டத்திற்குள் விழுங்கி நீர்த்துப்போகச் செய்தார்.
திரையில் உழைக்கும் மக்களுக்காகப் போராடுபவனாக, பெண்களைக் காப்பவனாக, குழந்தைகளை - முதியவர்களை நேசிப்பவனாக, நன்னெறி - நல்லொழுக்கப் போதகனாக உருவாக்கப்பட்ட பிம்பத்திற்கு நேர்முரணாக... சாராய உடையார் போன்ற பணக்காரர்களின் நண்பனாக, பல கட்டப்பஞ்சாயத்தில் வயது வேறுபாடின்றி அடங்காதவர்களைக் கடத்தி ரகசியமாக ராமாவரம் தோட்டத்தில் தண்டனை வழங்கும் நாட்டாமையாக, கொடைவள்ளல் செயல்களை ஒருபக்கம் நிகழ்த்திக்கொண்டே மக்கள் மீது துப்பாக்கிச்சூடு என அரசு பயங்கரவாத ஒடுக்குமுறையை மறுபக்கம் நிகழ்த்தும் கொடூரனாக நிஜவாழ்வில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
ஆனால் திரை பிம்பத்தால் ஏற்படுத்தப்பட்ட மயக்கத்திலிருந்த மக்கள் எம்.ஜி.ஆரின் நிஜ வாழ்க்கை முரண்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் பொய்-வதந்தி எனப் புறந்தள்ளி நம்ப மறுத்தார்கள்.
மக்களின் வாழ்வியலில் நல்லவை தீயவைக்கு இடையிலான எல்லைக் கோடு வலுவாக அதேநேரம் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்தது. அது நாடகம் மற்றும் திரைத்துறையில் கதைநாயகன் வில்லன் என்ற பாத்திரங்களை பிரபலங்கள் மாற்றி நடிக்காத மரபாக எதிரொலித்தது. அதனால் திரைக்கதை பிம்பத்தை அந்நடிகர்கள் மீது எப்பொழுதும் அதாவது திரைக்கு வெளியிலும் செலுத்திப் பார்க்கும் பார்வை எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் வரை மக்களிடம் நிலவியது.
1980 இறுதியில் - 1990களில் உற்பத்தியில் அராஜகம் அதாவது தேவையற்ற பொருள், போலிப் பொருள், கள்ளச் சந்தைப் பொருள் உற்பத்தி முன்பைவிட பெருகியது. இன்னொரு புறம் அந்நிய பொருள் இறக்குமதி அதிகரிப்பால் உள்நாட்டு அத்தியாவசிய உற்பத்தியும் முன்பைவிட அதிகம் சீர்குலைந்தது. இது சமூகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் பிரதிபலித்தது. சமூக வாழ்வியலில் அராஜகத்தை - மதிப்பீடு மீறல்களை தோற்றுவித்தன.
ரஜினி, கமல் காலத்தில் திரையுலகிலிருந்த பழைய மரபு மீறப்பட்டது - உடைக்கப்பட்டது. வில்லன் கதாநாயகனாகவும் கதாநாயகன் வில்லனாகவும் நடித்ததால் மக்களும் திரைக்கு உள்ளே, வெளியே நடிகர்களின் செயல்பாடுகளைப் பிரித்தறியப் பழக்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆரின் திரைப்பிம்ப செல்வாக்கு, மக்கள் என்பதிலிருந்து ரஜினியின் திரைப்பிம்ப செல்வாக்கு ரசிகர்கள் என்பதாகச் சுருங்கிப் போனதில் அது வெளிப்பட்டது. விஜய், அஜித் காலத்தில் இப்போக்கு மேலும் குறுகி தீவிர ரசிகர்கள் மத்தியில்தான் அப்பிம்ப மாயை செல்வாக்கு செலுத்துகிறது. தனுஷ், சிம்பு காலம் அடுத்தது என்று எடுத்துக் கொள்வீர்களானால் அது ரசிக வெறியர்கள் மிகச் சிலரிடம் மட்டுமே இருப்பதைப் பார்க்கலாம்.
ஆக, எம்.ஜி.ஆரின் திரைப்பிம்ப அரசியல் மாயையிலிருந்து விடுபட்ட மக்களிடையே ரஜினியின் திரைப்பிம்ப அரசியல் மாயை பெரும் செல்வாக்கை ஏற்படுத்தாது என்பது ரஞ்சித்திற்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். படம் எடுக்கும்பொழுதும் இருவரிடையே எந்த முரண்பாடும் எழவில்லை என படக்குழுவினரில் ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவிக்கிறார். இப்படத்தயாரிப்பு காலம் முழுதும் படத்தயாரிப்பிற்கு வெளியிலும் இருவரும் அவரவர் கருத்துக்களின் தளத்தில் இயங்கினர். ரஜினி IPL மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமது காவிக் கருத்துகளை கக்கினார். ரஞ்சித் Casteless Collective நடத்தினார்.
காவிக் கருத்து சார்புடைய ரஜினியும், நேரெதிர் தலித்திய கருத்துடைய ரஞ்சித்தும் அவ்வளவு genuine ஒப்பந்தம் போட்டு முரணில்லாமல் பயணித்ததற்குக் காரணம் என்ன? ரஜினியின் வணிக லாப நோக்கம், ரஞ்சித்தின் இயக்குனர் புகழ் - பொருளியல் வளர்ச்சி நோக்கம் என்று மட்டும் சொல்லிவிட முடியுமா? இல்லை... ரஜினியும் ரஞ்சித்தும் விடாக் கொண்டன், கொடாக் கொண்டன் உறவு முறையில் கருத்தியல் போர் நடத்தினார்கள் என்று சொல்ல முடியுமா?
மகள்-மருமகனுக்காகவும், வேதாந்தா, குருமூர்த்தி போன்றவர்களுக்காகவும் ரஜினி தலையாட்டுவதற்கும், ரஞ்சித் கதைக்குத் தேவையென சொல்வதற்காக தலையாட்டுவதற்கும் வேறுபாடு உண்டு. பணம், புகழ், பதவி நோக்கம் மட்டுமே இரண்டிற்கும் பொதுவானது.
படத்திற்கு வெளியே உள்ள யதார்த்தத்தைப் பாருங்கள். ரஜினியின் திரைப் பிம்பம் அது தலித்திய நிலையில் காவி எதிர்ப்பாக இருந்தாலும், பயன் என்னவோ ரஜினிக்குத்தான் இருக்கும். அடுத்த தேர்தலில் குறிப்பிட்ட அளவிற்கு அதை அறுவடை செய்ய ரஜினி தரப்பு முயலும். ஏற்கனவே கிருஷ்ணசாமி காவிப் பாம்பால் விழுங்கப்பட்ட உதாரணம் உள்ளது.
மெர்சலிலுள்ள அரசியல் வசனங்களை பாஜகவினர் எதிர்த்ததற்கும், காலாவில் உள்ள அரசியல் வசனங்களை - குறியீடுகளை எதிர்க்காததற்கும் காரணம் இருக்கிறது. மெர்சல் குழு கிறித்தவர்கள் என்கிற மதப் பகைமையைக் கிளப்ப கூடுதல் காரணமாக இருந்தது. ஆன்மீக அரசியலை அறிவித்தும், தூத்துக்குடி போராட்ட மக்களை சமூக விரோதிகள் என பேட்டி கொடுத்தும் ரஜினி தனது காவி விசுவாசத்தை உறுதிப்படுத்தியது இங்கு கூடுதல் காரணமாக இருந்தது. சிஸ்டம் சரியில்லை என ரஜினி சொல்வதை ஏற்றுக் கொள்கிறவர்களால், தேர்தலைப் புறக்கணிக்கும் இடதுசாரிகள் சொல்லும் சிஸ்டம் சரியில்லை கருத்தியலை ஏற்றுக் கொள்ள முடிவதில்லையே ஏன்? அதே வேறுபாட்டைத்தான் மெர்சலுக்கும் காலாவிற்கும் காட்டுகிறார்கள். சினிமாத்தனமான காவி எதிர்ப்பைக் காட்டிக்கூட ரஜினி ஆட்சியைப் பிடித்தாலும் பரவாயில்லை, அவருடன் அல்லது அவர் பின் நின்று இங்கு காலூன்றி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற இழிந்த நிலைக்கும் போக காவிக் கும்பல் தயாராகிவிட்டது.
தலித்திய அரசியல் பேசும் காலா மூலம் ரஞ்சித்திற்கு வேண்டுமானால் புகழ்வழி வசதி வாய்ப்புகள் பெருகுமே ஒழிய, தலித் கருத்தியல் பரந்துபட்ட மக்களிடையே சென்று தலித் மக்களுக்கு எந்தப் பயனையும் தரப் போவதில்லை; ஏனெனில் ரஜினி படத்தில் வரும் தலித்திய கருத்துக்கள் யதார்த்தமற்ற அதிரடி கவர்ச்சி முழக்கங்களாக மட்டுமே தலித்தல்லாத மக்களை ஈர்க்கும். சமூக வாழ்வியலில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரத் தக்கனவல்ல.
உழைக்கும் தலித் மக்களோடு சேர்ந்து நிற்கும் நபராக இருக்கும் வரையே, ஒடுக்கப்பட்ட வர்க்கமான தலித் மக்கள் நிலையிலிருந்து அரசியலை முன் வைக்கும் அமைப்பாக இருக்கும் வரையே, தலித்தியம் என்பது சரியான முழுப் பொருளோடு இருக்கும். ரஜினியின் வர்க்க நிலைக்கு ரஞ்சித் தன்னை உயர்த்திக் கொண்டு அல்லது அப்படி கருதிக்கொண்டு வைக்கும் கருத்துகளும் செயல்களும் (Rock, Rap Gana என்பதுகூட நகர்ப்புற உதிரி பாட்டாளி வர்க்கமாக உள்ள தலித்துகளுக்கு மட்டும் சற்றே பொருந்தகூடிய இசைவடிவம்தான்) எவ்வளவு கூர்மையாக இருந்தாலும் உழைக்கும் வர்க்கமாக இருக்கும் தலித் மக்களுக்குப் பயனளிக்காது. அவர்களையும் ஒரு மாயைக்குள் தள்ளி மழுங்கடிக்கவே செய்யும்.
அம்பேத்கரையே காவியின் சூழ்ச்சி விழுங்கியுள்ள நிலையில் ரஞ்சித் எம்மாத்திரம்? காவியை எதிர்க்கும் காட்சி, வசனங்களுக்குப் பதில்... காலாவில் அம்பேத்கரை காவிகள் பொய்யுரைத்து உரிமை கொண்டாடுவதை, தாழ்த்தப்பட்டவரை குடியரசுத் தலைவர் போன்ற அதிகாரத்தில் அமர்த்தி ஏய்ப்பதை காட்சிகளாகவும் வசனங்களாகவும் வைத்திருந்தால் தலித்திய அரசியல் கட்டமைப்பிற்கு உதவியிருக்கும். மாறாக காலாவில் ரஞ்சித் முன்வைத்திருக்கும் காவி எதிர்ப்பு அரசியல் என்பது ரஜினியின் தமிழக அரசியல் நுழைவிற்கோ, ரஜினியின் பின்னுள்ள காவியின் தமிழக அரசியல் கட்டமைப்பிற்கோ உதவி செய்யும்.
- ஞாலன்