police atrocitiesமதியம் ஒரு மணி; ‘இந்தப் படத்தைப் பாருங்க’ என்றபடியே மருத்துவ மகன் கட்டிலில் படம் ஓடும் கருவியை வைத்தார். பத்து வயதுப் பேத்தி வசதியாக உட்கார்ந்து பார்க்கச் சாய்வு நாற்காலியை எடுத்துப்போட்டுப் பக்கத்தில் அமர்ந்து கொண்டது.

திரைப்படம் பார்க்கக் கூடாது என்னும் வைராக்கியம் இல்லை. எழுபதைக் கடந்தாலும் படிப்பதற்கும் எழுதுவதற்குமே நேரம் போதவில்லை. ‘நீங்கள் ஏன் குடிப்பதில்லை?’ என்று மேலை நாட்டு நாடக ஆசிரியர் பெர்னாட்ஷாவைக் கேட்டபோது’ ‘நான் குடிக்க வேண்டியதை எல்லாம் என் அப்பா குடித்து விட்டுப் போய் சேர்ந்து விட்டார்’ எனக் கூறியதாக இளமைக் காலத்தில் படித்தது நினைவிற்கு வந்தது. அவ்வாறே, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும்போதே திரைப்படங்கள் பார்க்க நாட்கள் கழிந்தமை நினைவுக்கு வந்தது.

எந்த ஒன்றைப் பார்த்தாலும் படித்தாலும் இன்னொன்றை இன்னும் பலவற்றைக் கிளறி வெளிக் கொண்டு வரவேண்டும். அப்படித்தான் செய்தது ‘ஜெய்பீம்’ திரைப்படம்.

படிநிலை வாழ்க்கையை - உயர்வு - தாழ்வைத் தூக்கிப் பிடிக்கும் சனாதனம் எழுப்பும் ஜெய்ராம் என்பது போலச் சமூக நீதியை முழங்க எழுந்ததே ஜெய்பீம். அண்ணல் பீம்ராவ் ராமோஜி பாபாசாஹேப் அம்பேத்கர், பெரியார் ஈ. வே. ராமசாமி என இப்பெயர்களை எல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும்போதே இவற்றில் இருந்து முற்போக்குச் சிந்தனைகள் எவ்வளவு பொழிந்துள்ளன!

‘தென்னை மரத்திற்குத் தேள் கொட்டினால் பனை மரத்திற்குப் பல் கிட்டியதாம்’ என்பார்கள். இப்படித்தான் மாமேதை கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரின் பெயரைக் கேட்டாலே சீறி எழுகின்றார்கள். சிலைகளை உடைக்கின்றார்கள்; சாயம் பூசுகின்றார்கள். அவர்களுடைய கோட்பாடுகளுக்கு விளக்கம் சொல்லத் தெரியாதவர்கள் இவற்றைத்தானே செய்வார்கள். தெளிவாகப் படித்தால் தானே விளக்கம் சொல்ல முடியும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறப்பட்ட மண்ணில் இப்படிப்பட்ட மனிதத் தன்மையற்ற வன்கொடுமைகள் நடக்கக் கூடாது என்னும் எண்ணம் மனதில் ஊற வேண்டும்.

ஒரு வேடிக்கை என்னவென்றால் பிற்போக்கான கருத்துக்களைக் கூறுவோர் அவர்கள் முற்காலத்தவர், பிற்காலத்தவர் என்னும் வேறுபாடு இல்லாமல் கூறிவிட்டு அவற்றால் வாழ்வார்கள்; அவற்றில் குளிர் காய்வார்கள். அவற்றை மறுப்பதற்காக முற்போக்குச் சிந்தனையாளர்கள் படாத பாடுபடுவார்கள்; பக்கம் பக்கமாகப் படிப்பார்கள்; எழுதுவார்கள். கார்ல் மார்க்ஸ் தம் வாழ்நாளையே நூலகங்களிலும் எழுதும் இடத்திலும் அமர்ந்து கரைத்துள்ளார்.

அவர்கள் யாருக்காக எழுதினார்களோ, அவர்கள் எந்த அளவு படித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. படித்திருந்தால் நிறைய எதிர்வினை ஆற்றியிருப்பார்கள். மகாகவி பாரதியாரைப்போல மனம் இளகி இருப்பார்கள். பொங்கி இருப்பார்கள். மானுட நேயத்திற்கு எதிராக நீதி கூறிய மனுநீதியை அண்ணல் அம்பேத்கருடன் நின்று எரித்த கங்காதர் நீல் காந்த் சகஸ்ர புத்தே பார்ப்பன இனத்தைச் சார்ந்தவர்.

உண்ணும் உணவிலும் உடுக்கும் உடையிலும் அவற்றிற்காக உழைத்தவர்களின் வியர்வை, இரத்த வாடையை உணர்பவனே மனிதன். உணர்ந்தால் ஜெய்பீம் திரைப்படத்தில் காட்டப்படுவது போன்ற பொய்வழக்குப் போட்டு உழைக்கும் மக்களைச் சித்திரவதை செய்ய வாய்ப்பே இல்லை.

அதிகார வர்க்கங்களுக்கு மட்டுமல்லாமல் பழங்குடி மக்களுக்கும் இந்தத் திரைப்படம் ஒரு விழிப்புணர்வைக் கொடுத்துள்ளது. சமூக ஆர்வலர்களும் மேலும் தங்கள் விழிகளை அகலமாக விரித்துப் பார்க்கிறார்கள்.

படம் ஓடிக் கொண்டிருக்கின்றது. நகையைத் திருடியவர்களாகப் பிடித்து வரப்பட்டவர்களைக் காவல் துறையினர் அடிக்கும்போது சாய்வு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. அது திரைப்படம்தான் என்றாலும் அடிகள் நம்மீது விழுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஜெய்பீம் படத்தைப் பார்த்து ஒரு துளியேனும் கண்ணீர் சிந்தாதவர்கள் இருந்தால் இரக்கமற்றவர்கள் என்றெல்லாம் திட்ட வேண்டியதில்லை; பாராட்ட வேண்டும். அதிகார வர்க்கத்தில் இப்படிப்பட்டவர்கள்தானே நிறையப் பேர் இருக்கின்றார்கள்!

அவர்களின் மேல் அடி விழுவதற்கு முன்பும் அடி விழும்போதும் அடி வாங்கிய பிறகும் எழுந்த - எழும் கதறல் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றது. கட்டுப்படுத்த முடியாத கண்ணீர், இதயப் படபடப்பு இவற்றோடு படத்தைப் பார்க்க முடியவில்லை; பார்க்காமலும் இருக்கமுடியவில்லை.

பக்கத்தில் இருந்த பேத்தி தன் கண்களைத் துடைத்துவிட்டு என் கண்ணீரையும் துடைத்து விட்டுத் துண்டையும் கையில் கொடுக்கின்றது. மருத்துவர்களின் மகள்; அடிக்கடி இல்லத்தில் இருப்பவர்களின் இதயத்துடிப்பைத் தன்னுடைய விளையாட்டு இதயத் துடிப்புக் கருவியால் சோதனை செல்யும். தன் வலது கையை நீட்டி என் இதயத் துடிப்பைப் பார்க்கிறது.

‘படத்த நிப்பாட்டிடுறேன் தாத்தா’

‘வேணாம்மா ஓடட்டும்’

இப்படிப் பட்ட காட்சிகளை நேரடியாகப் பார்க்கவில்லையே தவிர, காவல் துறையினர் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகள் கேட்டும் படித்தும் அறிந்தவை ஏராளம். சாத்தான் குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் அடிபடுபவர்களாக கடையில் புகுந்து கண்ணில் தென்படுகின்றார்கள்.

திருடுபவர்களும் மாட்டிக் கொண்டு அடிபடுகின்றார்கள். திருடாத அப்பாவிகளும் மாட்டிக் கொண்டு துவைத்து எடுக்கப்படுவார்கள்; இறந்துபோனவர்கள் ஏராளம். கணக்கு வழக்கு இல்லாமல் படுகொலை செய்யப்பட்டிருப்பார்கள். மதுரையில் ஜெய்பீம் போல பாண்டியன் நெடுஞ்செழியனால் கோவலன் அரசியின் சிலம்பைக் கவர்ந்தான் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். ராஜாக்கண்ணு காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்படுவதற்கும் கோவலன் கொல்லப்படுவதற்கும் காலந்தான் வேறுபடுகின்றது. காட்சி ஒன்றேதான். அவ்வாறே செங்கேணியின் அலங்கோலத்தில் கண்ணகியைக் காணமுடிகின்றது.

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாண்ட காலத்திலும் சோழ நாட்டில் பிழைக்க வழி­யில்லாமல் குடியானவர்களும் உழைக்கும் மக்களும் வெளிநாடுகளுக்கு போயுள்ளார்கள். அங்குப் போயும் நாட்டு விடுதலைக்காக இந்திய தேசிய இராணுவத்தில் (INA) சேர்ந்து போராடினார்கள்.

நாடு விடுதலை அடைந்தது; சொந்த நாட்டில் சுகமாக வாழலாம் என்று ஊர் திரும்பினார்கள். எப்படி நிம்மதியாக வாழ முடியும்? புதிய பொங்கலில் பழைய உப்புத்தான். நாட்டு விடுதலைக்குப் பின் மதுவிலக்கு தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது.

திடீரென்று காவல்துறையினர் அரைக்கால் காக்கிச் சட்டை, சிவப்புத் தொப்பியுடன் வெள்ளி முளைக்கும் நேரத்திற்குத் திடுதிடுவென ஓடி வருவார்கள். உழைத்து விட்டு வந்து படுத்துப் பிணம் போலக் கிடக்கும் மக்களை ஓரிடத்தில் சேர்ப்பார்கள். தெருவுக்கு ஒன்று இரண்டு பேர் காய்ச்சுவார்கள். அவர்கள் யார் என்பதும் காவல்துறையினருக்குத் தெரியும். இருந்தாலும் மக்களைப் பயமுறுத்த அப்படிச் செய்வார்கள்.

சாராயம் காய்ச்சுபவர்களைப் பிடித்துக் கோமணம், காற்சட்டையுடன் சாராயப் பானையைத் தலையில் வைத்து, கரும்புள்ளி - செம்புள்ளி குத்தி சாலையில் நடக்க விடுவார்கள். ஆனால் அவர்கள் ஆசியுடன் சிலர் சாராய ஆலை அமைத்து வடித்துக் கொண்டிருப்பார்கள்!

ஐந்தாறு வயதில் தூக்கம் கலைந்து அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நின்றது தற்போதும் பசுமையாக இருக்கின்றது. காவல் துறையினருக்கு மாமூல் கொடுத்துச் சாராயம் காய்ச்சுவது அறுபது - எழுபதுகளில் பரவலாக இருந்தது. கொடுக்கும் மாமூலை வாமுட்டு, வாய்க்கரிசி என்றெல்லாம் கூறுவார்கள்.

திருடாத இருளர் இன ராஜாக்கண்ணு, மொசக்குட்டி போன்ற இளைஞர்களை ஒப்புக் கொள்ளச் சொல்லி அடித்து நார் நாராகக் கிழிப்பதைப் போலச் சாராயம் காய்ச்சியவர்களையும் அடிப்பார்கள். சிலர் சாராயம் காய்ச்சி அவமானப்பட்டு வாழ்வதை விடக் கூலி வேலை செய்து பிழைக்கலாம் என்று திருந்தி விடுவார்கள். மாமூலுக்காகவும் வழக்குப் போடவும் அவர்களையும் விடமாட்டார்கள். அப்படி அடிபட்டு இறந்தவர்களைப் பற்றியும் எப்போதாவது செய்தி வரும்.

அண்மைக் காலத்தில் வடக்கு, தெற்கு என்று வேறுபாடு இல்லாமல் இந்தியக் கோயில் சிலைகள் வெளி நாடுகளில் இருந்து இங்குக் கொண்டுவரப்படுகின்றன. தெய்வங்களுக்குச் சக்தி இருக்கின்றது. இல்லை என்று கருதுவது அவரவர் உரிமை. கரோனா பரவலுக்கு எல்லா மத வழிபாட்டுத் தலங்களும் ஒரு காரணமாக இருக்கின்றன என ஒன்றிய, மாநில அரசுகள் மூடச் சொல்லி விட்டன. கடவுள் உண்டா? இல்லையா? என்பதற்குள் போக வேண்டியதில்லை. பிற மதத்தினர் போரிட்டுக் கொள்ளை அடித்தவை பற்றியும் பேச வேண்டியதில்லை.

ஆனால் விடுதலைக்குப் பிறகு ஆயிரக் கணக்கான கோயில் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன அல்லது போலியாக மாற்றப்பட்டுள்ளன. சிலைகள் தாமாக வெளிநாடு போய் இருக்க முடியாது என்பதை ஆத்திகர் - நாத்திகர் என அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கடத்தியவர்கள் யார்? தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர்? கடத்தப்பட்ட சிலைகள் திரும்பக் கொண்டு வந்தமை பற்றி பெருமையாகப் பேசப்படும். எழுபது - எண்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. கண்டு பிடிப்பது சிரமம் என்று கூறிவிடலாம். கோயில், சிலை, கோயில் சொத்து தொடர்பாக ஒரு கடவுள் மறுப்பாளருக்கு இருக்கும் அக்கறை ஆத்திகர்களை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை. சிலைத் திருட்டு, சிலை மாற்றம், நகைக்கொள்ளை, கோயில் நில ஆக்கிரமிப்பு போன்றவற்றின் வரலாற்றை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரியும். அன்மைக்காலங்களில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப்பணம் பற்றிய செய்தியே கருப்பாகத்தான் தெரிகின்றது.

ஒரு வேளாண் பெருங்குடி மகனோ வேறு தொழில் செய்பவரோ. கடனை வாங்கித் திரும்பச் செலுத்தா விட்டால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் தள்ளப்படுகின்றார்கள். ஆனால் ஆயிரக் கணக்கான கோடிகளை வங்கிகளில் மோசடி செய்தவர்கள் கோயில் சிலைகளைப் போல வெளிநாட்டுக்குக் கடந்து போய் விடுகின்றார்கள்.

ஜெய்பீம் படம் பார்த்து ஊடகவியலாளர், திறனாய்வாளர்கள் கூறும் கருத்துகள் முக்கியமானவை. வெறுமனே படத்தைப் பார்த்துக் கடந்துபோய் விட முடியாது. முன் நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க வைக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் படத்தைப் பார்த்துக் கண்ணீர்விட்ட முதல்வர் மு. க. ஸ்டாலின் உடனடியாக இருளரின மக்கள் மட்டுமல்லாமல் அவர்கள் போலவே விளிம்பு நிலையில் வாழும் நரிக்குறவர் இனமக்களுக்கும் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

அவர்கள் வாழும் இடங்களுக்கே சென்று வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ், தொழிற்பயிற்சி, வங்கிக் கடன் போன்றவை பெறத் தமிழக முதல்வர் உதவியுள்ளமை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தரத்தக்கச் செய்திகளாகும்.

நாட்டில் எவ்வளவுதான் வளங்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சிறு துளி கூட உழைக்கும் மக்களைச் சென்றடைவதில்லை. சான்றாகக் கீழத் தஞ்சை பகுதியைக் குறிப்பிடலாம். நிலம் முழுவதும் கோயில், மடம், பண்ணைகளுக்கு உரிமை உடையவை. பண்ணைகளில் உழைத்துக் கால்வயிற்றை நிரப்ப, பெரியவர்கள் கூறுவது போல அவர்கள் பட்டபாடு அந்தச் சூரியனுக்குத்தான் தெரியும். சாட்டையால் அடிப்பார்கள். சாணிப்பால் கொடுப்பார்கள். நகக் கண்ணில் ஊசி ஏற்றுவார்கள். சோற்றுப்பானையை வெளியே தூக்கிப் போட்டு உடைப்பார்கள். அடைக் கோழியைப் போலத் தலைகீழாகத் தொங்க விடுவார்கள்; உப்பைக் கொட்டி முட்டிபோட வைப்பார்கள்; கால் கையைச் சேர்த்துக் கட்டி வெயில் கீழ் பாய்ச்சிப் போடுவார்கள்; சூடு போடுவார்கள்; பெண்டாட்டியின் சிறுநீரைக் கூடக் குடிக்க வைப்பார்களாம்! பாலியல் தொந்தரவும் இருக்கும்

பெற்ற பிள்ளைகள் அல்லது உறவினர்களிடம் ஓர வஞ்சனையாக நடப்பவரை ‘நீ ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிற ஆளு’ என்பார்கள். ஜெய்பீம் படத்தில் காவல் துறையினர் மிளகாய்ப் பொடியைக் கண்ணில் அள்ளிப் போடுகிறார்கள். கொல்லப்பட்டவர் கண்ணில் எதை அள்ளிப் போட்டால் என்ன? உயிரோடு இருப்பவர் கண்ணில் அள்ளிப் போட்டால்? நினைத்துப் பார்க்கும் போதே நம் கண்களில் எரிச்சல் பீறிட்டு வருகின்றது.

ஆறறிவின் உச்சம் தொட்டவர்களாக நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்ளும் நம் காலத்தில்தான் இப்படிப்பட்ட நாகரிகமற்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுவுடைமை இயக்கம் தான் இப்படிப்பட்ட வன்கொடுமைகள் தொழிலாளர்களுக்கு நிகழாதிருக்கக் கோடு போட்டது. தோழர் பி. சீனிவாசராவும் பொதுவுடைமைக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்ட மண்ணின் மைந்தர்களும் பண்ணைத் தொழிலாளர்களுக்கு விவசாய சங்கம் அமைத்துக் கொடுத்துக் களத்தில் இறங்கினார்கள்.

பொதுவுடைமை சாதி, இனமாகப் பார்க்காமல் வர்க்கமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தது. இரணியன், சிவராமன், ஆறுமுகம் போன்ற இளைஞர்கள் 1950 மே மாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பண்ணையார்களிடம் கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களுக்குத் துணை நின்றதற்காக அரசு தோட்டாக்களைப் பரிசாகக் கொடுத்தது.

பழங்குடி மக்கள், நரிக்குறவர் போல் அல்லாமல் தலித்து மக்கள் ஓரளவு தலை நிமிர்ந்து வாழ்வதற்குப் பொதுவுடைமைக் கட்சி செய்துள்ள பணி அளப்பரியது. களப்பால் குப்பு திருச்சி சிறையில் நஞ்சு கொடுத்துக் கொல்லப் பட்டாராம்.

வாட்டாக்குடி இரணியன் வீட்டைக் காவல் துறையினர் இடித்துத் தரை மட்டம் ஆக்கினார்கள். தற்போதும் அவர் குடும்பத்தால் நிமிர்ந்து நிற்கமுடியவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் பொதுவுடைமைக் கோட்பாட்டிற்காகத் தங்கள் இன்னு­யிரைக் கொடுத்தவர்கள் குடும்பங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அந்தத் தியாகிகளின் நினைவிடங்களில் ஆண்டுதோறும் மலர் வளையம் வைப்பதோடு பொதுவுடைமைக் கட்சியினர் தங்கள் பணியை முடித்துக் கொள்கின்றார்கள்.

இப்படி எல்லாம் கடந்த காலம், நிகழ்காலம் என எல்லாவற்றையும் தூசு தட்டிப் பார்க்க வைத்து விட்டது ஜெய்பீம் என்னும் திரைப்படம். நடிகர் சூர்யாவின் திறமைகளை எல்லாம் குறிப்பிட்டு இப்படி ஒரு படத்தில் நடித்து உச்சம் தொட்டதை ஊடகவியலாளர்கள் வியப்புடன் நோக்குகின்றார்கள்.

நடிகர் சூர்யா திரைப்படத்தில் நடிக்கின்றார்; சமுதாயத்தில் வாழ்கின்றார்; முன்னேற வாய்ப்புக் கிட்டாதவர்களுக்கு ஊன்று கோலாகக் இருக்கின்றார். அகரம் அறக்கட்டளை வழி எண்ணற்ற வர்களுக்கு வழி ஆகின்றார். ஜெய்பீம் கண்ணீரைப் பொழியவிட்டதைப் போல இன்னொரு காட்சியும் கண்ணைப் பனிக்கச் செய்தது.

ஊடகத்தில் பார்த்து நெஞ்சம் கனத்த நிகழ்ச்சி. அகரம் அறக் கட்டளை வழிப் பயன்பெற்ற ஒரு இளம் பெண் பேசுகிறார். அதற்கு மேல் ஒருவரால் தன் நன்றி உணர்வைக் காட்டமுடியாது. அப்படி ஒரு உருக்கமான பேச்சு!

நடிகர் சூர்யா எழுந்து போய் அந்த மாணவியின் தலையோடு தலை வைத்து அன்போடு கண்ணீரையும் பொழிகின்றார். ஆதரவு வேண்டி நிற்போர் எல்லோரையும் சேர்த்து உச்சிமுகர்வது போல இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கண்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கும். இதுதான் வாழ்க்கை. இயக்குநர் த. செ. ஞானவேலும் பாராட்டுக்கு உரியவர்.

நீட் தேர்வு இருபதுக்கு மேற்பட்ட மாணவர்களைக் காவு வாங்கியது. நடிகர் சூர்யா அத்தேர்வு முறையை எதிர்த்தார். இருளர் இனமக்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு கோடி நிதியை முதலமைச்சரிடம் அளித்துள்ளார்!

ஜெய்பீம் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே பழங்குடிமக்கள் ஆங்காங்கே தங்கள் உரிமைக்காக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள். இதுவே படத்தின் முதன்மையான வெற்றியாகும்.

நடிகர் சூர்யாவுக்குள் இருந்த நடிகர்கள் எல்லோரையும் விஞ்சிவிட்டார் வழக்குரைஞர் சந்துரு. வழக்குரைஞர், நீதியரசர் என்னும் பதவிகளுக்குப் பெருமை சேர்த்தவர் சந்துரு. நூல்கள், கட்டுரைகள் வழி அவரின் ஆளுமையை அறிந்துகொள்ளலாம். பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (கிஹிஜி) சார்ந்தோர் நீதியரசர் சந்துருவைப் பற்றி நிறையக் குறிப்பிடுவார்கள். அவரின் நேர்மையும் தெளிவான தீர்ப்பும் கூடச் சூர்யாவின் சந்துரு என்னும் கதை மாந்தருக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கும்.

ஜெய்பீம் திரைப்படத்தில் அனைவரும் நடிக்கிறார்கள் என்பதை விட வாழ்கின்றார்கள் என்றுதான் கூற வேண்டும். அதனால்தான் இருளர், நரிக்குறவர் இனமக்களுக்குத் தமிழக அரசின் நலத்திட்டங்கள் உடனே கிடைத்துள்ளன.

மருத்துவமனையைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கூற வந்த நடிகர் சூர்யாவின் இணையர் ஜோதிகா கோயிலோடு தொடர்பு படுத்திக் கூறினார். உடனே ஒரு சிறு கூட்டம் பொங்கி எழுந்தது. பேசியதோடு மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மிராசுதார் மருத்துவமனையின் மேம்பாட்டிற்காக இருபத்தைந்து லெட்சம் ரூபாய் நன்கொடையும் அளித்தார்! யாரும் மூச்சுவிடவில்லை.

வேளாண் விளை பொருளைத் தவிர, மற்றவை எல்லாம் யானை விலை, குதிரை விலை என ஏறிக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் விலை ஏற்றம்போல வேளாண் இடுபொருள்கள், கட்டுமானப் பொருள்களின் விலைகள் ஏறிக் கொண்டே போகின்றன.

இவற்றைப் பற்றி மக்கள் பேசுவதைத் திசை திருப்ப வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது பற்றியும் சமயம் சார்ந்தும் பேசுகின்றார்கள். அரசியலில் ஆன்மீகம் புகுந்தால் சிக்கல்தான்.

இந்தியாவின் அரசியலும் ஆன்மீகமும் எல்லா நாடுகளிலும் இருக்கும். தண்டவாளம் போல இருக்க வேண்டும். ஆன்மீகம் அரசியலை ஆண்டால் அறிவியல் வளராது. அறிவியலைக் கடன்தான் வாங்க வேண்டும். அரசியல் ஆன்மீகத்தின் பொய் மூட்டைகளைச் சுமக்கும்; வரலாறு மறையத் தொடங்கும். தென்கோடி முதல் வட கோடி வரை திராவிட மொழிகளையும் இந்தோ-ஆரிய மொழிகளையும் பேசும் பழங்குடி மக்கள் கல்வி, மருத்துவம், இருப்பிடம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்போதும் கோடிக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்! தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த - வாழும் காடு, மலைகள், கனிமவளங்களைக் கொள்ளையடிக்க கார்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள், நக்சலைட் என்று முத்திரை குத்தப்படுகின்றார்கள்.

அரசாங்க, ஆளும் வர்க்கக் கோழிமுட்டை குடியானவர்களின் அம்மிக்கல்லையும் உடைக்கும் என்னும் சொலவச் சொல் ஒன்று உண்டு. குடியானவர் நிலையே இப்படி என்றால் பழங்குடி மக்கள் நிலை எப்படி இருக்கும்? உறவினர், தொழில் செய்வோர், மருத்துவர் என அனைவரையும் ராசாக்கண்ணுவின் கொலையை மறைக்கக் காவல் துறை அச்சுறுத்துகின்றது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பழங்குடி மக்கள் காலங்காலமாகவே தங்கள் வாழ்வாதாரங்களைப் படிப்படியாக இழந்து வருகின்றார்கள்.

நிலம் சார்ந்த தொழில் அடிப்படையில் வேறுபாடு இல்லாமல் குழுக்களாக மக்கள் பழந்தமிழகத்தில் வாழ்ந்தார்கள். சமயங்கள் புகுந்து கோழி சீய்ப்பதைப் போல் மக்களைச் சாதி அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பித்துக் கலைத்துப் போட்டு விட்டன. எட்கர் தர்ஸ்டன் ஏழு தொகுகளாக எழுதும் அளவிற்கு (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்) சமயத்தாலும் சாதியாலும் மக்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவுகளாக வாழ்கிறார்கள்.

இருளர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்; நரிக்குறவர்கள் இந்தோ - ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் பேசும் வாக்ரி போலி என்னும் மொழி ஆரிய இனத்தைச் சார்ந்தது. பழங்குடி மக்களின் வாழ்க்கையை வைத்துத்தான் வளர்ச்சியை உரசிப் பார்க்க வேண்டும்.

எப்படியோ ஜெய்பீம் என்னும் இந்தத் திரைப்படம் இந்தியப் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரிதும் உதவி உள்ளது. தமிழக அரசின் உடனடிச் செயற்பாடே இதற்குச் சான்று. ஜெய்பீம் திரைப்படம் முழுவதும் மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் பொங்கி வழிகின்றன. விளிம்பு நிலை மக்களுக்காக இந்தியா முழுவதும் பரவட்டும்.

- ச.சுபாஷ் சந்திரபோஸ்

Pin It