சரிக்கும் தவறுக்கும் இடையே நின்று விடலாம். ஆனால் சரிக்கும் சரிக்கும் இடையே நிற்க முடியாது. இயலாமையின் விளிம்பில் சமுத்திரக்கனி பாத்திரம் நிறைந்து வழிவது எங்கோ ஒரு மூலையில்... தினம் தினம் நிகழ்ந்து கொண்டிருக்கும் யாரோ ஒரு மகனின் மனவெளிதான்.

பாதி கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் மேல் தளத்தில் இருந்து தெரியாமல் விழுந்து கோமா நிலைக்கு சென்று விட்ட அப்பா. அவருக்கு தினம் தினம் அவருள் இருக்கும் பிணத்தை சுமக்கும் வேலை மட்டுமே. எதுவுமே தெரியாது. எல்லாமே படுக்கையில். பையன் பழனி பார்த்து பார்த்து செய்யும் பாசக்காரன். அன்பின் மிகுதி அல்ல அது. அது அன்பின் நியதி என்று வாதாடும் பேரமைதிக்காரன். மனைவிக்கு அப்படி இல்லையே. அது சுமை தான். பகலில் அப்பாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இரவில் செக்யூரிட்டியாக செல்லும் நாயகன். அதனால் வருமானம் குறைய... பகலில் தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் நாயகி.

மருத்துவம் கை விரித்து விட்டது. ஊரும் சாவுக்கு காத்திருக்கிறது. எதற்கும் உபயோகமில்லாமல் படுத்தே கிடக்கும் ஒரு ஜடம் மட்டுமே மருமகளுக்கு. வாழ்ந்து முடிந்த ஒரு ஜீவன்.. இனி இறப்புக்கு தான் தகுதி என்று நம்பும் எல்லார் மனநிலையும் தான் அவளின் நிலைப்பாடும். அது இயல்பும் தானே. வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கும் அளவுக்கு வந்த பிறகு போக வேண்டிய உயிர் போய் விட்டால் தானே நல்லது. தன்னால் யாவருக்கும் சிரமம் என்று தொடுத்துக் கொண்டிருக்கும் அந்த உயிரின் உள் உணர்வு சொற்களுக்கு அப்பாற்பட்டது. சோகம் நிறைந்த சொலவடைகள் அவைகள். அந்த நேரத்திலும் வாழ்ந்து விட விரும்பும் அதன் ஆழ் விருப்பம் மானுட வடிவம். எந்த உயிரும் இறப்புக்கு எதிரானது. அதன் போக்கு தான் இந்த வாழ்வெனும் தத்துவம் என்று நமக்கு புரிகிறது.thalaikoothalஅறிவுள்ள பேத்தி. டியூப் வழியாக உணவு தருவதாகட்டும்... பதில் பேசாத கண்கள் திறக்கும் தாத்தாவிடம் பேச்சு கொடுப்பதாகட்டும்.. தன் நண்பனை அழைத்து வந்து அவரிடம் அறிமுகம் செய்வதாகட்டும்... அப்பாவின் வழியிலே மகளுக்கும் நம்பிக்கை இருக்கிறது. எப்படியாவது தாத்தா எழுந்து விடுவார். அப்பா அம்மா சண்டையை நினைத்து பள்ளியில் அழுதபடி அமர்ந்திருக்கும் காட்சி....குடும்பம் ஒரு சங்கிலி... ஒன்று அறுந்தால் மற்றொன்று செய்வதறியாது தவிக்கும் என பாடம் சொல்கிறது. படம் நெடுகிலும் வினையும் எதிர்வினையும் ஒருவித இறுக்கத்தில் பக்கத்து வீதியில் நடப்பது போல தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அப்பாவின் விழிப்புக்காக வேண்டிக்கொண்ட கிடாய் விருந்து... கொஞ்சம் அபத்தம் என்றாலும்... அந்த கிராமத்தின் வழக்கம் தான் அது. அதற்கும் சமுத்திரக்கனி சொல்லும் தர்க்க ரீதியான அர்த்தம்... அர்த்தம் உள்ளவை. ஆம் என்று நம்பலாம். அப்பாவை முன் நிறுத்தி வீட்டுக்குள் கணவன் மனைவிக்குள் இடைவெளி. முகம் கொடுத்து பேசாமல்.. பேசினாலும்... குற்றம் குறை என்று தொடர் பனிப்போர். மனைவியும் லேசுப்பட்ட ஆளில்லை. எதுவாக இருந்தாலும் போட்டு உடைத்து கேள்வி கேட்டு உண்டு இல்லை என்று பண்ணி விடும்.. கிராமத்து துடுக்கி. அதுவும் அந்த பத்திரம் பற்றி விசாரிக்கும் காட்சி அக்மார்க் பொண்டாட்டி வகையறா.

வசுந்தரா... கனக் கச்சிதமாக பொருந்தி போகிறார். அவர் குரலில் இருக்கும் அழுத்தம்.... கோபத்திலும் வசீகரிக்கவே செய்கிறது.

வேலை முடிந்து கணவன் வீட்டுக்கு போகும் அதே வழியில் வேலைக்கு போகும் மனைவி... எதிர் எதிரே யாரோ போல போகும் காட்சி மனவெளி விரிசலை மிக நேர்த்தியாக எடுத்து வைக்கிறது. அந்த காட்சி தொகுப்பில் இருக்கும் சொல்லொணா துயரம் திரை மொழியில் திகைக்க வைக்கிறது. நிறைய இடங்களில் சினிமா... காட்சி மொழி என்பதை மிக அழகாக எடுத்து வைக்கிறது.

இருவரும் கணவன் மனைவியாகவே தெரிகிறார்கள். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. அதுவும் மனைவியிடம் நெருங்க விரும்பும் அந்த காட்சி அதன் இயல்பு.. ஒரு ஆணின் அந்தரங்க தவிப்பு.. பெண்ணின் தனிப்பட்ட விருப்பு என மானுட மனதுக்குள் பயணிக்கும் திரைக்கதை அபாரம். போகிற போக்கில் எல்லா குடும்பங்களிலும் நடக்கும் எளிமையான கோப தாபங்கள் தான். கிராமத்தில் நடக்கும் சம்பிராதய சம்பவங்கள் தான். மிகப்படுத்தாக திரை... அளவான மீட்டரில் ஒரு நல்ல சினிமாவாகி இருக்கிறது.

இழுத்து கொண்டு கிடக்கும் உயிர்... அது என்ன நினைக்கிறது என்று புரியாமல்... அதோடு போராடுவது... சாவு கட்டிலில் கிடக்கும் ஒவ்வொரு உடலுக்கும் நிகழ்வது தான். இந்த ஜீவன் போய்ட்டா கூட பரவால்ல... என்று நொந்த சுய கழிவிரக்க நினைவுகள் நம்மிடையே நிறைய இருக்கின்றன. வாழவும் முடியாத சாவும் வராத அந்த ஜீவன்களின் நினைப்பில் என்ன தான் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதன் வழியே மீந்து விட்ட காலத்தில் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்.

இங்கே ஒரு காதல் இருக்கிறது. துணி துவைக்கும் ஏழை மனுஷியின் சுடர் பூத்த அந்த கண்கள் இருக்கிறது. அவளோடு கொண்ட காதலும்.. அவளை விரட்டி விரட்டி காதலித்த அந்த நாட்களும்... முதல் முத்தமும்.. அவள் மடி கொண்ட குளக்கரையும்... என அது மாயத்தின் விளிம்பில் வந்து வந்து போகிறது.

எத்தனை போராடியும் நிலைமை தன் கையை மீறி விட்ட தருணத்தில் மகன் தென்னந்தோப்புக்குள் குழி தோண்டி தன்னை மறைத்துக் கொள்ளும்.. காட்சி திரைக்கு புதிது. அப்பாவுக்கும் பையனுக்கும் இடையேயான பாசமும்... அதன் இறுக்கமும்... ஓர் உயிரை இன்னொரு உயிர் உள் வாங்கி தவிக்கும் தவிப்பும்... இந்த வாழ்வுக்கு அர்த்தம் தேடி அலைகிறது. மனவெளியின் தீவிரத்தை காட்சியாக்க மெனக்கெட்ட இயக்குநர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுகள். மனசு எங்கிருக்கிறது என்றே தெரியாத போது அதனுள் நிகழும் நிஜமும் நிழலும் எத்தனை போராட்டம் நிறைந்தது என்று அவர் உணர்ந்திருக்கிறார். உருவாக்கம் படுத்துவது கடினம். முயன்றிருக்கிறார்.

அவன் எச்சில் சோற்றை அவள் சாப்பிட்டு விட்டு காதலை ஏற்றுக் கொள்ளும் அந்த காட்சியில்... கோயில் படித்துறையில் இருந்து அப்படியே நீருக்குள் குதித்து சந்தோசத்தை வெளிப்படுத்தும் போது... காதலுக்காக ஏங்கிய மனதின் தீவிரத்தை நீருக்குள் மலர்ந்து நாமும் உணர்கிறோம். அது ஒரு கிளாசிக் ஷாட் ஆக மாறி விடுகிறது. கதிர் ஏற்கும் பாத்திரங்கள் எப்போதுமே ஈர்க்கும். இதிலும் நினைவலைகளில் நீந்தும் நிழலின் உருவமாய்... அரூப சாயலில் அமர்க்களப் படுத்துகிறார். இளவட்ட உடல்மொழியில்... இதயம் நிறைந்த மனிதனாக... படத்தின் ஜீவனாக பிரகாசிக்கிறார்.

காதலியாக வரும் அந்த பெண். கண்ணழகி. காதலில் உருகி... அதற்காக அவள் இழக்கும் எல்லாமும்... வாழ்தலின் சாட்சி. அவள் தூரத்து நட்சத்திரமாய் ஆனால் கிட்டத்து நிலவாய். இறுதி காட்சியில்... இளையராஜா இசை போல அது தானாக நிகழ... நாம் நகர மறுத்து திரை வெறிக்கிறோம்.

இசையும் ஒளிப்பதியும்.. என்ன தேவையோ அதன் தீவிரம் உணர்ந்திருக்கிறது. மனதுக்குள் நிகழும் மாயத்தை திரைக்கு ஏற்ற... பட்ட மெனக்கெடல்கள்.. கண்டிப்பாக நல்ல சினிமா முயற்சி. ஆள் அரவமற்ற ஒற்றையடியில் நிகழும் எல்லாமும் நிலா வெளிச்சத்தில் நிகழ்வதாக நம்பலாம். மெல்லிய நீரோடையில் ஆசீர்வதிக்கப்பட்ட காலங்களின் ஊஞ்சலாக தான் முழு படமும்.

தன் பிள்ளை கஷ்டபடுவதை பொறுக்காத ஓர் அப்பாவின் மனநிலை.. தன் அக்கா வாழ்வுக்காக எதையும் சமரசம் செய்யும் தம்பி என ஒரு பெண்ணுக்கு அவள் தாய் வீடு எத்தனை பலம் என்று கண் முன் நிறுத்துகிறது. தலைக்கூத்தலுக்கு முன்பான... வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்து காட்சி. விட்டும் கொடுக்க முடியாத... விட்டு தான் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் அவரவருக்கு அவரவர் நியாயம். மானுடத்தை தராசில் நிறுத்தும் இடம்.

பிள்ளையா அப்பாவா என்று கேட்கையில்... அப்பா தான் என்று சொல்லும் ஒரு மகனின் பேரழுகை படம் முழுக்க விசும்புகிறது. சமுத்திரக்கனி என்ற மகா நடிகன்... காட்சிக்கு காட்சி பாத்திரமாகவே பரிணமளிக்கிறார்.

நண்பன் முருகதாஸ் இந்த படத்தில் ஒரு குறியீட்டு பாத்திரம். கையில் எப்போதும் புத்தகம் இருக்கிறது. ஒரு கால் இல்லை. அவர் இந்த வாழ்வை பார்க்கும் கோணம் ஒரு நாவலுக்குரியது. தூரத்து நட்சத்திரத்தை பூத கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. மறந்து விட வேண்டும். அது தான் அதன் மகத்துவம்.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஒரு உயிர் ஊசலாடுகையில்... அதனை சுமக்கும் இன்னொரு உயிர் மருகி தவிப்பது... உள்ளம் புரட்டும் உண்மை சுடர். அதனதன் கோணங்களில் அதனதன் சரி... சரி தானே. சரிகளின் சூழல் எத்தனை அழுத்தம். உள்ளே மருகி... வெளியே இறுகி... நல்ல சாவுக்கு ஏங்கும் வாழ்க்கை தான் எத்தனை புதிரானது.

"எவ்ளோ நாள் வாழ்ந்தோங்கறது வயசில்ல... இனிமேல் எத்தனை நாள் வாழ போறோங்கறது தான் வயசு.."

" நம்மால குடுக்க முடியாத உயிரை நாம் எடுக்கவும் கூடாது..."

போன்ற தத்துவார்த்த வசனங்கள் நெஞ்சை துளைப்பவை. இந்த வாழ்வின் மீது கவிழ்ந்திருக்கும் தத்துவங்கள் மெல்ல விடுபடுகையில்... கிடைக்கும் அற்புதங்கள்... வாழ்வின் அர்த்தத்தை சாவின் விளிம்பில் வெளிப்படுத்தி விடுகிறது.

படத்தின் தலைப்பே கதையை சொல்லி விடுகிறது. குழந்தைக்கு கள்ளி பால் மாதிரி... வயதானவர்களுக்கு தலைக்கூத்தல். நிகழ்ந்த சம்பவங்கள்... நினைவுகளில் கொஞ்சம் வண்ணம் கூடித்தான் வெளிப்படும். அது தான் அந்த அப்பாவின் காதல் காட்சிகளின் தொகுப்பாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அப்பாவின் காதலி வரும் காட்சிகள் எல்லாமே ஒரு வகை மாயத்தன்மை கொண்டவையாக... ஒரு கனவு காட்சி போல வந்து போவது அதனால் தான். நம்பகத்தன்மை நாடகத்தன்மை என்று பேசுவோருக்கு புரிதல் மட்டு அல்லது கற்பனை வறட்சி என்று நம்பலாம்.

"தலைக்கூத்தல்" கிடந்து தவிக்கும் ஜீவனுக்கு அது தான் விடுதலை என்று விடுதலைக்கு அர்த்தம் சொன்னவர்கள் சொல்வார்கள் தான். ஆனால் அந்த உயிரின் வழியே வந்த சின்ன உயிர் என்ன செய்யும். காப்பாற்றுமா.. கை கழுவுமா. இடதுக்கும் வலதுக்கும் இடையே எத்தனை சிரமம் இந்த ஓடைக்கு. ஆனாலும் அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டுமே.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்க வேண்டிய அந்த தகப்பன் பாத்திர தேர்வு சறுக்கி இருப்பது தான் குறையாக எனக்கு படுகிறது. மற்றபடி மற்ற பாத்திரங்கள் கனக்கச்சிதம். சில நேரங்களில் எல்லாரும் சொல்வது சரி ஆகி விடுகிறது. அது தான் பல காலமாக பூமிக்குள் வேர் விட்டிருக்கிறது. காதலின் பொருட்டு கல்லை தூக்கி கொண்டு அலையும் அதே சாதி இங்கும் சதி செய்கிறது. இது காதல் கதை என்பதையும் தாண்டி ஒரு சாவு கதை. ஆதலால் சாதியின் பின்புல காட்சிகள் தேவையான அளவுக்கு... புரிந்து கொள்ளும் அளவுக்கு... போதும் என்ற அளவுக்கு தான் இருப்பதாக படுகிறது.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தில் நினைவில்லாத அப்பாவும்... நினைவு கூடிய மகனும்.. என்ன ஆனார்கள் என்பதுதான் இந்த "தலைக்கூத்தல்".

மலையாள படங்களை மட்டும் தான் கொண்டாட வேண்டுமா என்ன. இந்த மாதிரி தமிழ் படங்களையும் கொண்டாடலாம்.

- கவிஜி

Pin It