இந்தத் திரைப்படத்தில் முக்கியமான மையக்கரு என்னவென்றால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் போதை பழக்க வழக்கங்களுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். மனித உரிமை எழுச்சி இயக்கம் என்று ஒரு கம்யூனிச அமைப்புதான் இந்த போதைப் பொருட்களை கடத்துவதும் இளைய தலைமுறைகளை சீரழிப்பதும் என யதார்த்தத்திற்கு மாறாக இந்த திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறார் இயக்குனர். மற்றொன்று இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மக்களின் உணர்வுகளை எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் கொச்சைப்படுத்துகிறது இந்தத் திரைப்படம்.

rudra thandavamமுதலில் இந்தப் படத்தை ஆதரிப்பவர்கள் யார் என்று பார்த்தால், பாஜக - ஆர் எஸ் எஸ் - இந்து முன்னணி - ஆண்ட பரம்பரை என்று சொல்லக்கூடிய அரைவேக்காடு கூட்டம் தான் இதை ஆதரிக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் எதார்த்தத்தை முழுமையாக மறைத்து, ஏதோ தங்களுடைய லாபத்திற்காக இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மக்கள் மாறியதாக மிகப் பெரிய குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

சிந்தித்துப் பாருங்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த தமிழகம் எப்படி இருந்திருக்கும்? கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மனிதர்களை மனிதர்கள் இழிவுபடுத்தும் ஒரு காட்டுமிராண்டி கூட்டமாக தான் வாழ்ந்திருக்கிறது.

தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, படித்தால் திட்டு, கோயிலுக்குள் நுழையக் கூடாது, சாமியை வணங்கக்கூடாது. அம்பேத்கர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஜாதி ஒழிப்பைப் பற்றி, அதனுடைய தாக்கத்தைப் பற்றி பின்வருமாறு விவரிக்கிறார்: இவ்வாறு தலித்துகள் தங்கள் கையில் விளக்கமாறு வைத்துக்கொண்டு தான் நடக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய காலடி பட்ட மண்ணை உயர் ஜாதியினர் மிதித்து விடக் கூடாது என்பதற்காக அவர்கள் நடந்து போகும்போது பின்புறமாக கூட்டிக் கொண்டே நடக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்க நகை அணிந்ததற்காக மட்டுமல்ல உலோகத்தாலான பாத்திரங்களால் தண்ணீர் பிடித்ததால் நடந்த சண்டைகள் எத்தனை எத்தனை. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் கழுத்தில் பானையை கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால் தலித்துகள் தெருவில் வேறு எங்கும் எச்சில் துப்பக் கூடாது என்பதற்காக. இப்படி ஒரு காட்டுமிராண்டி சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அம்பேத்கர் கண்ணீர் விடுகிறார். இந்துவாகப் பிறந்தது என் தவறல்ல நான் இந்துவாக இறக்க மாட்டேன் என்று முழங்கினார் அம்பேத்கார்.

ஒரு காட்டுமிராண்டி சமுதாயத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள ஒரு வழி தேடிய மக்களுடைய உணர்வுகளை உரிமைகளை கொச்சைபடுத்துவதோடு நின்றுவிடாமல், இளைய சமுதாயத்திற்கு எதிரிகளாக மக்களுடைய விரோதிகளாக கம்யூனிசத்தை காட்டி இருக்கிறார்கள். திரைப்படத்தில் மாவோ, ஸ்டாலின், லெனின் ஆகிய புரட்சியாளர்களின் பிம்பத்தை மக்கள் மத்தியில் எதிர்மறையாக பிரதிபலிக்க வேண்டும் என்பதை மக்கிப்போன மூளையில் உதித்த சாக்கடை என்று தான் உணர முடிகிறது.

தமிழகத்தில் உள்ள எந்த மூலை முடுக்கில் சென்றாலும், சிவப்புக் கொடி பறந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய தியாகங்கள் இன்றும் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மக்கள் நலனுக்காக வீடு, வாசல், பிள்ளைகள், சொந்தங்களை இழந்து நடுத்தெருவில் நிக்கிறான் பார் என்ற ஆதங்கக் குரல் நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுதான் எதார்த்த உண்மை. சிவப்புத் துண்டு போட்டு வந்தா போராடக்கூடிய நபர்கள் என்பது இன்றைய தமிழகத்தில் எதார்த்த வழக்குச் சொல். சீனாவில் புரட்சியை நடத்திய தோழர் மாவோ முதலில் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று போர் நடத்தியவர். எல்லாமே எல்லோருக்கும் பொதுவானது என்று தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் தோழர் காரல் மார்க்ஸ். உழைப்பவனுக்கு உரிமை, உழுபவனுக்கு நிலம் என்று முழங்கினார்கள் தோழர்கள் லெனின், ஸ்டாலின்.

இப்படி மக்களுடைய உரிமைக்காகப் போராடிய தலைவர்களைக் கொச்சைப்படுத்துகிறது இந்தத் திரைப்படம். எதார்த்த நிகழ்வு என்னவாக இருக்கிறது? பிஜேபி, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி என்று தங்களை இந்துக்களின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் இந்த அயோக்கிய சிகாமணிகள், போதைப் பொருட்களைக் கடத்துவதும், கொள்ளை அடிப்பதும், பெண்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதைப் படிப்பதற்கு வரலாற்றில் பின்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அன்றாட செய்தித்தாள்களை வாசித்தாலே இந்த காவி கூட்டங்களின் சாயம் வெளுத்துவிடும். எச்சரிக்கையாக இருப்போம். ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படுவது போல, இந்த ஓநாய்களை உணர்ந்து ஒதுக்கி வைக்க வேண்டும். தந்தை பெரியாரின் தடியோடு இவர்களின் பொய், புரட்டு அரசியலை விரட்டியடிக்க வேண்டும். 

- ஆ.பால் மகேந்திரன்

Pin It