இது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்ததல்ல. வெறும் சினிமா சார்ந்தது. வெறும் சினிமா என்று ஒன்று உண்டா? மசாலா சினிமா, பொழுதுப்போக்கு சினிமா என்பவையெல்லாம் வெறும் சினிமா. அதாவது அரசியல் சாராத சினிமா. இப்படித்தான் நமக்கு சொல்லித்தரப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கக்கூடாது என்று எல்லாவற்றிலுமுள்ள அரசியலை மூடிமறைப்பதற்காக ஆளும்வர்க்கம் மேற்கொண்ட அரசியலின் விளைவுதான் அரசியல் சாராதவை என்ற தகிடுதத்தம்.
நண்பர்கள் சிலரோடு சேர்ந்துவிட்டால், ‘ஜாலியா ஒரு படம்பார்க்கலாம் வா’ என சில தெலுங்கு படங்களுக்குப் போவோம். அப்படங்களுக்கு ஒரு ஃபார்மூலா இருக்கும். படத்தில் ஆணும் ஆணும் சந்தித்தால் சண்டை போடுவார்கள். ஆணும் பெண்ணும் சந்தித்தால் பாட்டுப் பாடுவார்கள். காசுக்கொடுத்து படம் பார்த்துவிட்டு, அதை எந்த அளவு கண்டம் பண்ணி பேசி சிரிக்க முடியுமோ (படம் ஓடிக்கொண்டிருக்கும் போதும்தான்) அந்த அளவு கொட்டமடித்துவிட்டுத் திரும்புவோம்.
இப்போது போலல்லாமல், தொழில் வளர்ச்சியடையாத, பெரும்பாலும் கிராமப்புற விவசாயப் பின்புலத்திலான பொருளாதார வாழ்க்கையை கொண்ட அன்றைய ஆந்திராவில் எளியவனும் வலியவனும் மோதிக்கொள்ளாமல் வாழமுடியாது என்ற எதார்த்தத்தை அரசியல் உணர்த்தியபோது ஜாலியானப் படங்களுக்குப் பின்னாலிருக்கும் அரசியலும் புரிந்தது.
ஆனால் தமிழ் திரையுலகம் இன்னமும் அரசியல்சாராத சினிமாக்கள் உள்ளதாக பிதற்றிக்கொண்டிருக்கிறது.
போகட்டும்! இப்போது தமிழ் சினிமாவை காப்பாற்ற சில இரட்சகர்கள் வந்திருக்கிறார்கள். அரசியல் சினிமாக்களை உருவாக்கி தமிழ் சினிமாவை உலக அளவில் பேசவைக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் சில விருதுகளை வாங்குகிறார்கள். உடனே, ‘ஏசு மறுபடி உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா...’ என கோஷங்கள் காதை கிழிக்கத் தொடங்குகின்றன.
இதற்கு நல்லதொரு சமீபத்திய உதாரணம்தான் அருவி. ஒரு பெண்ணிற்கு ஆக அதிகபட்சம் எவ்வளவு கொடுமைகள் இழைக்க முடியுமோ அவ்வளவு கொடுமைகள் இழைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் அந்தப் பெண் என்ன வினையாற்ற வேண்டும்? அன்பு காட்ட வேண்டும்.
படம் பார்த்து கண்களில் அருவியை ஓடவிட்டபடி வந்த அத்தனைப் போராளிகளும் உடுமலை கௌசல்யாவிடம் அன்பு காட்டும்படி போதித்தார்கள். ‘கொலைக்கு கொலை தீர்வாகாது மகளே!’ என்று உருகினார்கள்; ‘தூக்குத்தண்டனை ஒழிக!’ என கண்ணீர்மல்க, நரம்பு புடைக்க கதறினார்கள்.
இந்த அபத்தமான சூழலில்தான் தோழர் ஸ்ரீரசா “அரசியல் சினிமா – பாகம் 1” என்ற அற்புதமான நூலை தந்திருக்கிறார். 20 சினிமாக்கள் பற்றி 20 கட்டுரைகள். இரசியா, ஜெர்மன், அமெரிக்கா ஆகிய நாடுகளை சார்ந்த சினிமாக்கள்.
ஒருசமயம் தோழர் பாவெலும், நானும் ஸ்ரீரசாவை சந்திக்க சென்றிருந்தோம். மனிதர் சினிமாக்களுக்கிடையே வாழ்ந்துகொண்டிருந்தார். அன்று அவரோடு பேசிய பாவெலுக்கு இப்போது சினிமாதான் அனைத்துக்குமான நிவாரணம்.
தோழர் ஸ்ரீரசா தனது நூலில் அமெரிக்க இயக்குநர் D.W.கிரிஃபித்-ஐ நமக்கு அறிமுகம் செய்கிறார். கிரிஃபித்-இன் முதல் படமான The Birth Of Nation (ஒரு தேசத்தின் பிறப்பு) என்பது சினிமாவின் மைல்கல் என சிலாகிக்கிறார். மிக அற்புதமான ஆக்கத்திறமை மிக்க அப்படம் கறுப்பின மக்களுக்கு எதிரான வெள்ளையாதிக்க அரசியலின் சாயலைக் கொண்டிருக்கிறதென விமர்சனங்களை எதிர்கொண்டதாம்.
கிரிஃபித் தனது அடுத்தப் படங்கள் அனைத்தையும் ஆதிக்கத்திற்கு எதிரான படங்களாகவே திட்டமிட்டு உருவாக்குகிறார். சுயவிமர்சனமும், ஒழுங்குபடுத்தலும் கொண்ட கிரிஃபித்-ஐ நமக்கு பிடிக்காமல் போய்விடுமா?
நூல் அத்தகைய மாபெரு கலைஞர்களின் படைப்பை, அதன் ஆழத்தை அற்புதமாக விவரித்து செல்கிறது.
ஒரு கலைஞனுக்கு என்னதான் கடைமை? தனது ஆக்கங்களால் சமூகத்திற்கு நன்மை விளைய செய்யவேண்டியது அவனது கடமை. நன்மைகள் எப்படி விளையும்? தீமைகளை வீழ்த்தும்போது.
தீமைகளை வீழ்த்துவதையும், அதற்காகப் போரிடுவதையும், நன்மைகளை விதைப்பதையும், அதற்காக உயிரைக்கூட இழப்பதையும் குறித்து அற்புதமான கலைஞர்கள் அருமையான ஆக்கங்களை தந்திருக்கிறார்கள் என்பதை தோழர் ஸ்ரீரசாவின் உயிரோட்டமான வார்த்தைகளில் “அரசியல் சினிமா – பாகம் 1” பேசுகிறது.
நம்மிடையேயும் கலைஞர்கள் இருக்கிறார்கள்! ‘பணம் கொட்டி செய்கிற தொழிலுங்க, கருத்தெல்லாம் சொல்லீட்டு இருக்க முடியாது’ என விதண்டாவாதம் செய்கிற பதர்கள். ஆனால் ஸ்ரீரசா உண்மையான கலைகளையும், உன்னதமான கலைஞர்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறார். இந்த நூல் தமிழ் திரையுலக ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
நூல் கிடைக்கும் இடம்
காலம் வெளியீடு, 25- மருதுபாண்டியர் தெரு,
கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி
மதுரை – 625 002
பேச – 94430 78339
பக்கங்கள் – 160
விலை – ரூ-200/
- திருப்பூர் குணா