தங்களுடைய ஊதியம் மற்றும் உரிமைகள் மீது அண்மையில் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து ஏர் இந்தியா விமானிகள் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து "மெதுவாக செயல்படுதல்" போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர் அமைச்சகம், தொழிற் தகராறுகள் சட்டத்தின் "தொழிலாளி" பிரிவின் கீழ் விமானிகள் வரமாட்டார்களென வெளியிட்ட ஒரு குறிப்பிற்கு எதிராக ஏர் இந்தியா விமானிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அறிவிப்பு, விமானிகள் தொழிலாளர்கள் இல்லை எனவும், அவர்கள் "மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்" எனவும் கூறியிருக்கிறது.

ஏர் இந்தியா விமானிகள் ஒரு தொழிற்சங்கத்தை அமைக்க முடியாதெனவும், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட முடியாதெனவும், அவர்களுடைய ஊதியம் உட்பட வேலை நிலைமைகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாற்ற முடியுமெனவும் இதற்குப் பொருளாகும்.

இந்த ஆணைக்கு எதிராக, இந்திய கமெர்சியல் விமானிகள் அசோசியேசன் (ICPA)  நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஏர் இந்தியா விமானிகளுடைய ஊதியத்தை வெட்டிக் குறைக்க நிர்வாகம் திட்டமிட்டிருப்பதையும் அவர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர் லையன்சும் ஒருங்கிணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் இந்தியன் ஏர் லையன்சின் விமானிகளுடைய ஊதியத்தையும், முன்னாள் ஏர் இந்தியா விமானிகளுடைய ஊதியத்தையும் 'சமநிலைப்படுத்துவது' குறித்து நிர்வாகம் பேசி வருகிறது. இந்த இரு வகை விமானிகளுக்கும் இடையே தற்போது ரூ 50,000-லிருந்து ரூ 1,50,000 வரை ஊதிய வேறுபாடுகள் இருந்து வருகின்றன. நிர்வாகம், முன்னாள் ஏர் இந்தியா விமானிகளுடைய ஊதியத்தை வெட்டிக் குறைக்க திட்டமிட்டிருக்கிறது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் விமானிகள் கடந்த 7-8 மாதங்களாக அவர்களுக்கு வழக்கமான ஊதியம் கொடுக்கப்படவில்லையெனவும் புகார் கூறினர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்வதற்காக, ஆகஸ்டு முதல் செப்டெம்பர் 9 வரை இந்திய கமெர்சியல் விமானிகள் அசோசியேசன் ஒரு இரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதில் 95 % விமானிகள் நிர்வாகத்திடம் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டுமென வாக்களித்திருப்பதாக செப் 15-இல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நாம் கூறியிருப்பது போல, ஏர் இந்தியாவிற்கு நாடெங்கிலும் பெரும் சொத்துக்களும், மிகவும் திறமை வாய்ந்த ஊழியர்களும் இருக்கின்றனர். இந்த தேசிய விமான நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்தும் நோக்கத்தோடு ஏர் இந்தியாவை திட்டமிட்ட முறையில் அரசாங்கம் சீரழித்து வருகிறது. பெரும்பாலான சேவைகள் ஏற்கெனவே தனித்தனியாக தனியார்மயப்படுத்தப்பட்டு விட்டன அல்லது ஒப்பந்த முறையில் செய்யப்படுகின்றன.

தனியார் விமான நிறுவனங்களுக்கு இலாபகரமாக இருப்பதற்காக அரசாங்கம், பல முக்கிய வழித்தடங்களில் ஏர் இந்தியாவின் சேவைகளை நிறுத்திவிட்டு, அவற்றைத் தனியார் விமான நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, விமானிகள் மற்றும் பிற ஊழியர்களுடைய உரிமைகளையும் வேலை நிலைமைகளையும் அது திட்டமிட்ட முறையில் தாக்கி வருகிறது.

விமான நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதற்காக அரசாங்கமும், நிர்வாகமும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஏர் இந்தியாவின் விமானிகளும், ஊழியர்களும் கடந்த காலத்தில் பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

தொழிலாளர் ஒற்றுமைக் குரல் ஏர் இந்தியா விமானிகளுடைய நியாயமான போராட்டத்தை ஆதரிக்கிறது.

Pin It