நாட்டுக்கோழி அடித்து மணக்க மணக்க மசாலா தடவி நெருப்பில் வாட்டி ருசிக்க ருசிக்க குழம்பு வைத்து விருந்து தடபுடலாக ஏற்பாடாகி விட்டது. இலை போட்டு, பரிமாறி சாப்பிட யாவரும் தயாராகி விட்டனர். நாட்டுக்கோழியின் மணம் ஊரெல்லாம் சுண்டி இழுக்கிறது. நாவில் உமிழ்நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. கைக்குத்தல் அரிசிச் சோறோடு கோழிக்கறியை பிசைந்து வாயில் வைக்கும் போது "அய்யோ அந்த உணவில் விஷம் கலந்திருக்கிறது. யாரும் சாப்பிடாதீர்கள்" என்று ஒருவன் கத்துகிறான். எல்லோரும் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள், இவ்வளவு சிரமப்பட்டு செலவு செய்து விருந்து படைத்து விட்டார்கள் என்று விஷம் கலந்த உணவை யாரும் சாப்பிடுவார்களா?

kamal_vishwaroopam_370அதேபோல்தான் 'விசுவரூபம்' திரைப்படமும். 'கோடிக்கணக்கில் செலவு செய்து விட்டோம்; பெரும் பொருட்செலவில் பல நாடுகளில் படப்பிடிப்பு எடுத்து விட்டோம். ஆகவே திரைப்படம் திரையிட்டே ஆக வேண்டும்' என்று சொல்வது ஞாயமா? நல்ல விருந்தில் ஒரு சொட்டு 'விஷம்' விழுந்தாலும் உணவு முழுக்கப் பரவி உண்பவர்களை சாகடிக்கும். அதேபோல்தான் பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுத்தாலும் இசுலாமிய சமூகத்திற்கெதிராக விஷத்தைக் கொட்டியிருப்பது சனநாயகத்தை, மதச்சார்பின்மையைச் சாகடிப்பதற்கு ஒப்பானதுதான்.

திரைப்படக் கலைஞர் கமல் எழுதி இயக்கியிருக்கும் 'விசுவரூபம்' திரைப்படத்தை இசுலாமிய சமூகத்தினரின் கடுமையான எதிர்ப்பால் தமிழக அரசு தடை செய்தது. கமல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக படத்தில் காட்சிகள் இல்லை என்று கூறி தடையை நீக்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்திய முஸ்லிம்களுக்கு என்று தனி கொள்கை, கோட்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிரானது என்று எண்ணத் தோன்றுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. இசுலாமிய சமூகத்தினர் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டுள்ளதாக இசுலாமிய சமூகம் மட்டுமல்ல படம் பார்த்த மற்றவர்களும் அப்படித்தான் வருத்தப்பட்டனர்.

படம் தடை செய்யப்பட்ட சூழலில் கமலுக்கு ஆதரவாக பலர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் இராமதாஸ் (இனி இவரை இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்) ஆகியோர் 'கமல் நல்லவர், வல்லவர், சிறந்த கலைஞன்' என்றெல்லாம் கமல் மீது தங்களுக்குள்ள தனிப்பட்ட மதிப்பை வைத்து அறிக்கை விடுத்து 'விசுவரூபம்' திரைப்படத்தை வெளியிட ஒத்துழைப்புத் தர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"உலக மகா கலைஞன் கமல். அவனது படைப்பைச் சுதந்திரமாக வெளியிட உதவுங்கள்" என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா உருக்கமாக கமலுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கமல் என்கிற தனிமனிதனுக்காகப் பேசும் இவர்கள் கோடிக்கணக்கான இசுலாமிய சமூகத்தினரைக் கொச்சைப்படுத்தி, திரித்துக் காட்டுவதைக் கண்டிக்கவும் இல்லை; அக்காட்சிகள் தணிக்கைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட‌ வேண்டும் என்று கமலுக்கு அறிவுரையோ ஆலோசனையோ சொல்ல முன்வரவும் இல்லை.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டுமே கமலின் இசுலாமிய விரோதப் போக்கைக் கண்டித்தார். கடந்த 27.1.2013 அன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து விட்டார்கள். அவர் நட்டப்படக் கூடாது என்று சொல்கிறார்கள். கோடிக்கணக்கான இசுலாமியர்களின் நன்மதிப்பைவிட, கோடிக்கணக்கான பணம் முக்கியமல்ல" என்றார். அது மட்டுமல்லாமல் தணிக்கைக் குழுவையும் கண்டித்து கட்சி, மதச் சார்பற்ற அறிவுஜீவிகளைத் தணிக்கை குழுவில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இச்சூழலில் 'விசுவரூபம்' திரைப்படத்தை முன்வைத்து இன்றைக்குப் பல விவாதங்களை நாம் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கமல்ஹாசன் நல்ல கலைஞர், இதற்கு முந்தைய திரைப்படங்களையெல்லாம் சிறப்பாக எடுத்திருக்கிறார் என்றெல்லாம் கமலுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். (உன்னைப் போல் ஒருவன் கூட நல்ல திரைப்படம்தானா?) "இது வரை நன்றாகத்தான் இருந்தான். பாவம் இப்போது புத்தி பேதலித்து விட்டது. தெரியாமல் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான். மன்னித்து விட்டுவிடுங்கள் யுவர் ஆனர்" என்று நீதிபதியிடம் வழக்கறிஞர் பேசினால் எப்படி நீதிமன்றமே சிரிக்குமோ அப்படித்தான் இந்த உலகமே சிரிக்கும். கமல் நல்ல சமூக சிந்தனை உள்ளவராக இருந்திருந்தால் ஒட்டுமொத்த சினிமா என்ன சிந்தனையைக் கொண்டுள்ளதோ அத்தகைய இந்துத்துவ சிந்தனைகளைக் கமலும் கொண்டிருப்பாரா? இதில் என்ன முற்போக்கு என்று புரியவில்லை.

கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் விஜயகாந்த் கூட இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டத்தான் திரைஉலகில் நுழைந்ததுபோல் பாகிஸ்தான் வரை சென்று இசுலாமியத் தீவிரவாதிகளை வேட்டையாடுவார். உச்சகட்டமாக இசுலாமியத் தீவிரவாதிகள் மதுரை அழகர் கோவிலைத் தகர்க்க சதித்திட்டம் தீட்டுவதையும், அந்தச் சதித்திட்டத்தை கள்ளழகர் 'விஜயகாந்த்' முறியடிப்பதையும் நாம் சகித்துக் கொண்டுதான் இருந்தோம். இப்படி விஜயகாந்த் மட்டுமல்ல பெரும்பாலான திரைப்படங்களில் இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளாக, இந்திய தேசத்திற்கே எதிரானவர்களாகத்தான் சித்தரிக்கிறார்கள்.

அண்மையில் விஜய் நடித்து வெளிவந்த 'துப்பாக்கி' படத்திலும் இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளாகத்தான் அப்பட்டமாகக் காட்டினார்கள். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த 'பயணம்' திரைப்படத்தில்கூட விமானத்தை இசுலாமிய பயங்கரவாதிகள் கடத்துவதைப் போலத்தான் காட்டினார்கள்.

இது திரைக்கதைக்காகவோ அல்லது விறுவிறுப்புக்காகவோ எடுக்கப்படுவதல்ல. சமூகத்தில் மேலாதிக்கம் செய்து வரும் இந்துத்துவச் சக்திகளின் திட்டமிட்ட பரப்புரையும் சிந்தனையும்தான் இதற்குக் காரணம்.

இன்றைக்குத் திரை உலகமே இந்துத்துவ ஆதிக்கவாதிகளின் பிடியில்தான் சிக்கி இருக்கிறது. அதனால்தான் இசுலாமியச் சமூகத்தை மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மற்றும் கிறித்துவ சிறுபான்மை சமூகத்தையும் இழிவுபடுத்தி காட்சி அமைக்கின்றனர்.

துணி வெளுப்பவர்களைக் கிண்டல் செய்வது, முடி வெட்டுபவர்களை முட்டாள்களாகக் காட்டுவது, தாழ்த்தப்பட்டவர்களை அடிமைத் தொழில் செய்பவர்களாக அல்லது அடிமைத் தொழிலை விரும்பியோ விரும்பாமலோ செய்பவர்களாகக் காட்டுவதில்தான் பெரும்பாலான திரைப்படங்கள் போட்டி போட்டுள்ளன. தலித்துகளை மட்டுமல்லாது பெண்களை எவ்வளவு உச்சத்திலும் நின்று கேலி செய்து கொண்டிருக்கிறது சினிமா உலகம்.

மானே, தேனே, மயிலே, குயிலே என்று வர்ணித்த திரைத்துறையினர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்கா, முத்துன மாங்கா என்றெல்லாம் பெண்களைக் காய்கறிகளை வைத்துக் கிண்டல் செய்யும் அளவிற்குச் சென்றனர். இந்த ஆணாதிக்க மனோபாவம் என்பது இந்துத்துவத்தின் உள்ளீடுதான்.

தலித்துகளைக் கூட இழிவுபடுத்தி ஏராளமான படங்களில் திட்டமிட்டும் தற்செயலாகவும் காட்சி அமைத்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு பல திரைப்படங்களில் "அட சண்டாளா" என்று பேசுவார். தாழ்த்தப்பட்டோரைப் பட்டியலிடும்போது 'சண்டாளன்' என்கிற சாதியும் உள்ளது என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். 'சாமி' திரைப்படத்தில் நடிகர் விவேக் முற்போக்கு வைதீகனாக நடிப்பார். அதில் மற்றொரு வைதீகன் அவனுடைய மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். அப்போது செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். உடனே நடிகர் விவேக், "அந்த புள்ளாண்டனுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடாதோ" என்பார். உடனே அந்த வைதீகன் "அவங்கள்ளாம் படிக்கக் கூடாது" என்று சாதியைக் காரணம் காட்டுவார். உடனே அந்த தாழ்த்தப்பட்ட பையனிடம் போய் என்ன படிக்க விரும்புகிறாய் என்று விவேக் கேட்பார். "லா படிக்க விரும்புகிறேன்" என்பான் அந்த தலித் பையன். "என்ன லா" என்பார் விவேக். அதற்கு 'சகிலா' என்பான். இப்படித்தான் தலித்துகளைப் பயன்படுத்தி கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.

அது மட்டுமல்ல இன்றைக்கு திரைப்படங்களில் மட்டுமல்ல, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ஒரு வார்த்தையை சகஜமாக பழக்கத்தில் விடுகிறார்கள். 'அட்டு பிகர்' என்கிற சொல்லாடல்தான்.

இந்தச் சொல்லாடல் அனைத்துத் திரைப்படங்களிலும் பெண்களைக் கிண்டல் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். இந்த 'அட்டு பிகர்' எங்கிருந்து வந்தது?

'Hut' என்கிற ஆங்கில வார்த்தையிலிருந்துதான் வந்திருக்க முடியும். ஏனென்றால் 'hut' என்றால் குடிசை என்று பொருள். சேரிகளெங்கும் குடிசைகள் இருப்பதனால் சேரிப் பெண்ணை அல்லது குடிசைப் பெண்ணைக் கிண்டல் செய்வதற்காக 'hut figure' அட்டு பிகர் என்று கூறுகிறார்கள். இன்றும் திரைப்படங்களில் கறுப்புப் பெண்களை அல்லது கிண்டல் செய்வதற்காகவே காட்டப்படும் பெண்களை இப்படி அழைக்கிறார்கள்.

kamal_vishwaroopam_400வில்லன்களாகச் சுட்டப்படும் பெயர்களைக் கூட பாருங்கள். ஆஸிப்கான், யூசுப்கான், அன்வர், பீட்டர், டேனியல் என்று சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த பெயர்களையே தொடர்ச்சியாகக் காட்டி வருகிறார்கள்.

இதுவெல்லாம் திரைக்கதை ஆசிரியருக்கும் தெரிந்தே, திட்டமிட்டே வைக்கப்படுகிற காட்சிகள், பெயர் சூட்டல்கள்தான். இதை திரைப்படத்துறையினர் மிகவும் துணிச்சலாக செய்து வருகின்றனர். இதில் உலக மகா கலைஞர் கமலஹாசன் எந்தவிதத்தில் முற்போக்கு? எந்தவிதத்தில் மற்றவர்களைவிட வித்தியாசமானவர் என்று புரியவில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

எதற்காக சினிமா எடுக்கிறார்கள், சமூகத்தை மாற்றவா? அல்லது புரட்சி செய்து புதிய மாற்றத்தை உருவாக்கவா சினிமா எடுக்கிறார்கள்? அதுவெல்லாம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் காலம். விதவைத் திருமணத்தை வலியுறுத்தி திரைப்படங்கள், சமூக இழிவுகளுக்கெதிரான திரைப்படங்கள், அறிஞர் அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு போன்றோரின் திரைப்படங்கள் எல்லாம் சமூகத்தைப் புரட்டிப் போட்டன. அது ஒரு காலம்.

இப்போது சமூகநீதிக்கு எதிரான திரைப்படங்களைத் துணிச்சலாக எடுக்கின்றனர். இடஒதுக்கீடுதான் சமூகத்தைச் சமப்படுத்தும் என்று தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வாழ்நாள் முழுக்கக் களமாடினார்கள். ஆனால் சினிமா மூலம் பிழைக்க வந்த அட்டக்கத்திகள் அப்போராளிகளுக்கு எதிராகவே திரைப்படம் எடுத்து வருகின்றனர். லட்சுமி நடித்த 'ஒரே ஒரு கிராமத்திலே', ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்', முருகதாஸ் இயக்கிய 'ஏழாம் அறிவு', அமிதாப்பச்சன் நடித்த 'ஆரக்ஷா' போன்ற படங்கள் எல்லாம் சமூகநீதிக்கு எதிரான விஷக் கருத்துக்களைக் கொண்டவை தான்.

இம்மாதிரி திரைப்படங்களை எடுப்பவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்களை விட சிறந்த சமூக சிந்தனையாளர்களா? எதுவும் இல்லை. இந்துத்துவத் கருத்தியலின் அடிமைகள்தான்.

கதாநாயகியை பாம்பு வந்து காப்பாற்றுவது, மயில் காப்பாற்றுவது, குழந்தை இல்லையென்றால் வேப்பிலை கட்டி ஒரே ஒரு பாட்டு பாடினால் குழந்தை பெற்று விடுவது, மறுபிறப்பில் வந்து பழி வாங்குவதுபோல், பிசாசு, பில்லி சூன்யம் இது போன்ற காட்சி அமைப்புகளும் கதை ஓட்டமும் இந்துத்துவ மன ஓட்டத்தில் எடுக்கப்படுவதுதான். இதுவெல்லாம் நம்பப்படுவதில்லை என்றாலும் திட்டமிட்டே நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.

திரைப்படங்கள் வணிகமயமாகி விட்டது. தயாரிப்பாளர்களுக்கு படம் ஓட வேண்டும். கதை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. கதையே இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் லாபம் தரும்படி ஓட வேண்டும். இதுதான் இன்றைக்கு அளவுகோலாக இருக்கிறது. இதில் எங்கே வந்தது சமூகம் குறித்த அரசியல்?

சமூகம் குறித்து திரைப்படம் எடுப்பவர்கள், சமூகத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்துதான் 'உலக மகா கலைஞன்' கமலஹாசன் விசுவரூபம் திரைப்படத்தை எடுத்தாரா? அவருக்கு இசுலாமியர்கள் பற்றிய பார்வை என்ன? சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் செய்கிற எதிர்வினையை பெரும் சமூகமான இசுலாமிய சமூகத்தின்மீது திணித்து, ஒட்டுமொத்தமாக பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது என்ன அரசியல்?

செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்காவின் இசுலாமிய பயங்கரவாத அறிவிப்பு 'உலகமயமாகிக் கொண்டிருக்கிறது'. அதைத்தான் உலகமெங்கும் கடை விரித்து வியாபாரம் செய்யத் துணிந்துள்ளார்கள்.

இந்த வியாபாரத்தில் இசுலாமியர்களைப் பலி கொடுத்துத்தான் லாபம் பார்க்கத் துடிக்கிறார் கமல். இதைப் புரிந்துகொள்ளாமல் சிலர் 'கருத்துச் சுதந்திரம்' என்று திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பண்பாட்டையே கொச்சைப்படுத்தி அவதூறு பரப்புவதுதான் கருத்துச் சுதந்திரமா?

முதலில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு திரைப்படங்களை எடுப்பது நல்லது. இத்தருணத்தில் நடிகவேள் எம்.ஆர்.இராதா சொன்னதுதான் ஞாபகம் வருகிறது - "கூத்தாடிகளுக்கு எதற்கு அரசியல்?".

நடிகவேளை விட சிறந்த சமூகக் கருத்துக்களை சினிமாவில் இதுவரை யாரும் சொன்னதில்லை. இனியும் சொல்லப் போவதும் இல்லை. இப்போது அரசியலும் சமூகமும் இந்துத்துவ ஆதிக்கத்தின் உச்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சினிமா வழி அமைத்துத் தந்து கொண்டு இருக்கிறது. வியாபாரிகளின் எண்ணமும் செயலும் லாபத்தை நோக்கித்தான். சினிமா வியாபாரிகளின் நோக்கம் பணத்தோடு இந்துத்துவக் கருத்தியலைப் பரப்புவதும்தான்.

அந்த வகையில்தான் நடிகர் கமல் இந்துத்துவ மேலாதிக்கத்தோடு இசுலாமிய விரோத திரைப்படத்தை எடுத்துள்ளார். ஆகவேதான் இப்படம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காட்சிகளில் மட்டுமல்லாமல் கதை முழுக்கவே இசுலாமிய சமூகத்தை பயங்கரவாதிகளாகவே காட்டுகிறது.

காவி பயங்கரவாதத்தின் எதிர்வினையை முறியடிப்பது சனநாயக முற்போக்குவாதிகளின் கடமைதான். அது எந்த 'ரூபத்தில்' வந்தாலும் முறியடிக்க வேண்டும். விசுவரூபமாக இருந்தாலும் முறியடிப்பதுதான் முதல் கடமை. தயாராவோம். அனைவரையும் தயாராக்குவோம்.

- வன்னிஅரசு

Pin It