“இந்து கோயிலுக்கு போவாங்க. கிறிஸ்டின் சர்ச்க்கு போவாங்க, முஸ்லீம் மசூதிக்கு போவாங்க. இந்த மூன்று பேரும் ஒன்னா  உட்காருமிடம் சினிமா தியேட்டர்" - இது  ஹவுஸ்புல் படத்தில் கிளைமாக்ஸ் வசனம். சினிமா மீதும், சினிமா தியேட்டர் மீதும் அதிருப்தி கொண்டவர்களைக்கூட  ஆமோதிக்க வைக்கும் வசனம் இது.   சினிமா தியேட்டர் சமரசம் உலாவும் இடமே.  சினிமாவில் சமரசம் இல்லாத பொழுது தியேட்டரில் இருந்து என்ன பயன்? எனும் கேள்விதான் இந்திய சினிமாவை பீடித்திருக்கும் நோய்.

எதையாவது சொல்ல வேண்டும் என சினிமா எடுக்கப்போய் எதையும் சொல்லாமல்  கதையை முடித்து விடுவது ஒரு ரகம். இதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம்.  சொல்ல வருவதை சொல்லத் தெரியாமல் தானும் குழம்பி ரசிகர்களை குழப்பிவிட்டு செல்வது மற்றொரு ரகம்.  இதுதான் இந்திய ஒற்றுமைக்கும் , பெண் சுதந்திரத்திற்கும் சவாலாக இருக்கிறது. அதிகப்பட்ச இந்திய சினிமாக்கள்  இந்த இரண்டாவது  ரகத்தில்தான் எடுக்கப்பட்டு வருகின்றன.

“சினிமா ரகசியம் ஒரு சாண் துணியில் இருக்கு. அந்தத்துணியும் தணிக்கைத் துறை ஒன்னு இருக்கேனு இருக்கு “ என எட்டப்பனாக இருந்து சினிமாவின் உண்மையான  முகத்தை  காட்டிக்கொடுத்தார் நடிகவேள் எம். ஆர். ராதா.  ரசிகர்கள் விசில் அடிக்க, கதாநாயகன் வேடத்தில்  திரையில் பவனி வருபவராக இல்லாமல் கொஞ்சம்  வில்லத்தனம் கலந்த நகைச்சுவை நடிகர் என்பதால் அவரால் அது முடிந்தது.

இன்றைக்கு இது மாதிரியான கருத்தை யாராவது ஒரு முன்னணி நடிகர்  சொல்ல முடியுமா? அப்படியே சொன்னாலும்  தொழிற்நுட்ப அரசியல் அவர்களை விட்டு வைக்குமா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்.  படத்தை திருட்டி சி.டியில் வெளியிடுவதில் சினிமாக்காரர்களுக்கும் பங்கு உண்டு என்பதெல்லாம் சினிமாக்காரர்களுக்கு தெரியாமல் இல்லை. பழி வாங்கும் படலத்தில் அரசியலிலுக்கு சளைத்ததில்லை சினிமா.

கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம் பேர் காண்பதுதான் சினிமா .  அந்த சினிமா விமர்சனத்திற்கும் தணிக்கைக்கும் உட்பட்டது. விமர்சனம் காலத்திற்கு ஏற்ப மாறுவதைப்போல தணிக்கை முறையும் மாறிக்கொண்டிருக்க வேண்டும் . இல்லையேல் தணிக்கைக்கு உட்பட்டு திரையிட அனுமதிக்கப்படும் ஒரு படம் ஒரு அரசால் தடை செய்யப்படும் அவலம் நிகழும். தியாக பூமி திரைபடம் தான் முதலில் தடை செய்யப்பட்ட தமிழ் திரைப்படம்.  கல்கி நாவலாக எழுதிய கதையை கே. சுப்பிரமணியம் திரைப்படமாக தயாரித்தார்.  படம் ஆண் ஆதிக்கத்திற்கு சவுக்கடிக் கொடுக்கும் கதையம்சம் கொண்டிருந்த போதும் “ தேச சேவை செய்ய வாரீர்................“ எனும் பாடல் இடம்பெற்றிருந்ததால் காங்கிரஸின் பிரச்சாரம் படம் இது என அந்தப்படத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்தது. சுதந்திரம் பெற்றதன் பிறகு அதே மாதிரியான  கொள்கை முடிவைத்தான்  சுதந்திர அரசும்  கடைபிடித்தது. ஒரு படத்தில்  (பராசக்தி ) கதாநாயகி  “ அண்ணா .........“   என  விளிக்க அந்த  அழைப்பை அன்றைய  தணிக்கைத்துறை கத்தரித்து விட்டது. “ அண்ணா “ என்றால் பேரறிஞர் அண்ணாத்துரையைக் குறிக்குமாம்.

இந்த இடத்தில் சினிமா யாருக்கானது? என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது.  “சினிமாவிற்காக தணிக்கைத் துறையா? இல்லை தணிக்கைத் துறைக்காக சினிமாவா? இந்த கேள்விகள் இந்திய சினிமாவைப் போல குழப்பமூட்டவே செய்யும். சினிமா மக்களுக்கானது என்றால் படத்தில் கற்பழிப்புகளும், பாலியல் வன்முறையும்  சாதி ,மத வாதங்கள் போன்ற பல இத்யாதிகள்  ஏன்? சினிமாவிற்காகத்தான் தணிக்கைத் துறை என்றால்  தணிக்கைத் துறை  ஏன் இத்தகைய காட்சிகளை அனுமதிக்க வேண்டும்?

பிரிட்டிஸ் போர்டு ஆப் சென்சார் 1912 ஆம் ஆண்டு  யு , எ என்கிற  இரண்டு  அடையாளத்திற்குள் சினிமாவை அடைத்தது. யுஎ என்பது நம் தணிக்கைத் துறை ஏற்படுத்திக்கொண்ட  விதி மீறல். அதாவது சட்டத்திருத்தம். ஒரு படம் எ சான்றிதழுடன் வெளிவருவதாக வைத்துக்கொள்வோம். அந்தப்படத்தை பெண்களும், குழந்தைகளும் பார்க்கக்கூடாது . சரி அதே படம் சில மாதங்களுக்கு பிறகு  தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் பொழுது பெண்களும் , குழந்தைகளும் பார்க்க நேரிடுகிறதே! உலகில்  அதிகமான திரைப்படங்கள் எடுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக படங்கள் வெளியாகும் நாட்டிலிருந்துதான் மிகச்சிறந்த படங்களை தேர்வு செய்ய முடியும்.அப்படி பார்க்கையில் சிறந்தப்படங்கள் வெளியிடும் நாடுகளில் இந்தியா இடம் பிடிக்க வேண்டுமே?  மிகக்குறைந்த படங்களை வெளியிடும் ஈரான் அல்லவா அந்த இடத்தை பிடித்திருக்கிறது. இந்தத் தாழ்விற்குக் காரணம் சினிமா இயக்குநர்களா? தணிக்கைத்துறையா?

உலகிலேயே மிகக் கடுமையான தணிக்கைக்கு உள்ளாகும் திரைப்படம் ஈரான் நாட்டு திரைப்படங்கள்தான். மத நம்பிக்கையை ஆதரிப்பதையும் எதிர்ப்பதையும் தடை செய்கிறது அந்த நாட்டு தணிக்கை. பெண்களைக் கவர்ச்சியாக காட்டுவது  கூடவே கூடாது.  அதனால்தான் ஈரான் நாட்டுத் திரைப்படங்களுக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. உலகின் மிகச்சிறந்த படங்கள் என பட்டியல் தயாரித்தால் அதில் ஈரான் நாட்டுப் படங்களே அதிக இடம் பிடிக்கின்றன. அடுத்து தென்கொரியா நாட்டு தணிக்கை. அந்த நாடு ஆசிரியரையும் , குழந்தைகளையும் கிண்டல் செய்து படம் எடுப்பதை அனுமதிப்பதில்லை. இந்திய சினிமாவில் டீச்சர் என்றாலும் குடையை சுற்றிவிட்டிக்கொண்டு டூயட் பாடியாக  வேண்டும்.  

உலக திரைப்படத்தில் சத்யஜித் ரேயின்  பதேர் பாஞ்சாலி திரைப்படம் முக்கிய மைல் கல். விபூதி பூஷன் எழுதிய பந்தோ பாத்யா எனும்  நாவலை திரைப்படமாக்கினார் சத்யஜித்ரே. அந்தப்படம் வந்ததன் பிறகு பந்தோ பாத்யா நாவல் உலக அளவில் தேடலுக்கு உட்பட்டது. அந்த திரைப்படம் ஒரு இந்திய புத்தகத்தை உலக அரங்கில் கொண்டு போய் சேர்த்தது . யுனேஸ்கோ, அந்த திரைப்படத்தையும் அந்த படத்தின் மூலமான பந்தோ பாத்யா நாவலையும் புதிய பரிணாமமாக பாதுகாத்து வருகிறது. 

தமிழகத்தின் தவிர்க்க முடியாத நாவல் ஜானகிராமனின் மோகமுள். அந்த நாவலை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டுச்சேர்த்து  அந்த நாவலை தழுவி எடுக்கப்பட்ட மோகமுள் திரைப்படம். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், காவிரியைப் போல,........... போன்ற நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டன.  ஒரு படைப்பை படித்தவர்களிடம் புத்தகமும் பாமர மக்களிடம் சினிமாவும் கொண்ட போய் சேர்த்தன. கலையின் இரு பக்கங்களாக எழுத்தும் சினிமாவும் இருந்த‌து ஒரு காலக்கட்டம். இன்று அத்தகைய‌ ஆரோக்கியமான சூழல் இல்லையே! ஈரான், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளில் இந்த யுத்தி இன்றும் உண்டு. சிறுவர்களை ஆட்கொண்ட ஹரிபாட்டர் நாவலும்,  லைப் ஆஃப் த பையும் சினிமாவாக புது அவதாரம் எடுத்து திரைகடல் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கிறது.  நம் நாட்டில் இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுவதில்லையே ஏன்? ஒரு படத்தின் கதையை திருடியல்லவா நம் இயக்குநர்கள்  லட்டு சாப்பிடுகிறார்கள். இதற்கிடையில் ரீ மேக், ரீ மிக்ஸ் எனும் இரண்டு பூதங்கள் வேறு. சின்ன மணி குயிலே ......... எனும் பாடலை ரீக் மிக்ஸ் என எடுப்பார்கள், சின்னம்மா நீ குயிலே.........“ இதுவெல்லாம்  தவறு என்று சுட்டிக்காட்டுவது யார்? தணிக்கைத்துறையின் வேலை அல்ல என்றால்  அதன் வேலை படத்தின் நீளத்தை குறைப்பது மட்டும்தானா?

கலை  ரசிகர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக இல்லாமல் அறிவைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்கிறார் காந்தி. அவரைப்பற்றிய ஆவணப்படமோ, திரைப்படமோ மிகச்சரியாக எடுக்க வெளி நாட்டுக்காரனாலயே முடிந்தது. துறவியானாலும் இந்திய சினிமாவிற்குள் வந்தால் டூயட் பாடி  காதலியை கரம் பிடித்தாக வேண்டும்.  என்ன சூத்திரமடா இது?. ஈரான் நாட்டு  இயக்கநர் அப்பாஸ் கிராஸ்தமி சொன்னார். “ இந்திய சினிமாவை பார்த்தால் அந்த நாட்டின் தணிக்கைத் துறைதான் எனக்கு தெரிய வருகிறது“ என்று.   வீரபாண்டிய கட்டப்பொம்மனையும், வ.உ. சிதம்பரனாரையும் மக்களிடம் கொண்டுச்சேர்த்த சினிமாதான் இன்று சந்தனக்கடத்தல் வீரப்பனையும்,  மலையூர் மம்பட்டியானையும்  திரைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் கசாப்பும், டெல்லி பாலியல் பலாத்கார குற்றிவாளியான அந்த 16 வயது சிறுவனும் கூட  கதாப்பாத்திரமாக மாறுவார்கள்.

தணிக்கை துறை எத்தகைய காட்சிகளை அனுமதிக்க வேண்டும் என்பதை விட எத்தகைய காட்சிகள் கூடாது என்பதில் தெளிவுப்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் படம் யாரெல்லாம் பார்க்கிறார்கள் என கவனத்தில் கொள்ளப்பட்டது. படிப்பறிவில்லாத பாமர மக்களாக அவர்கள் இருந்தார்கள். இன்றைக்கு அதே பார்வையைப் பார்க்க வேண்டியதில்லை. யார் நடிக்கிறார்கள்? யார் இயக்குகிறார்கள் ? என பார்க்க வேண்டியிருக்கிறது. பணத்தை சினிமாவில் போடு அல்லது நிலத்தில் போடு என்கிற பணந்தின்னிகளின் கையில் சினிமா அகப்பட்டுக் கொண்டது. மக்களுக்கானது சினிமா எனும் காலம் மலை ஏறிவிட்டது. சின்ன மீனை பெரிய மீன் விழுங்கும் இதுதான் சாணக்கியரின் வரி. சினிமாத் துறையிடம் அந்த கருத்து பொய்த்து விட்டது. பெரிய திரையை சின்னத்திரை அல்லவா விழுங்குகிறது.

துரியோதனாக இருந்து நடிகையின் துகிலை உரிக்கும் சினிமாவையும், துப்பாக்கி கலாசாரத்தையும் எத்தனை ஆண்டுகள்தான்  சகித்துக்கொண்டு பார்ப்பது?  சினிமா மக்களுக்கானதாக இல்லாமல் தணிக்கை துறைக்கானதாக இருந்திட்டு போகட்டும். தணிக்கை துறை மக்களுக்கானதாக இருக்க வேண்டும்  என்பதுதான் வெள்ளைத்திரையை நேசிப்பவர்களின் அவா. இனி,  எங்கே செல்லும் இந்த பாதை ? யாரோ, யாரோ அறிவார்...........?

Pin It