kumbamela12கும்பமேளாவை கொண்டாடிய கொரொனா!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் 2019, டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, அங்கிருந்து உலக நாடுகளுக்கு பரவிய இந்த தொற்று இந்தியாவை கடந்த ஜனவரி 2020ல் தாக்கியது.

இந்த வைரஸ் பாதிப்பால் முதல் மரணத்தை சீன ஊடகங்கள் உறுதி செய்தவுடன், உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த அவசர நிலையை உலகிற்கு அறிவிப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பே, அதாவது ஜனவரி 17ம் தேதியிலிருந்து விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வந்ததாக சுகாதாரத் துறை அமைச்சர் அர்ஷ்வர்த்தன் கூறியுள்ளதை இப்போது நினைவுபடுத்துவது அவசியம்.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளின் போது நோய் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என பயணிகளை அப்படியே விட்டுவிட்டனர்.

இங்கு தான் மோடி அரசு முதல் தவறு செய்தது. மருத்துவப் பரிசோதனைகள் செய்தாலும், வைரஸ் உடம்பில் பரவி நோயின் அறிகுறிகள் தென்படுவதற்கு குறைந்த பட்சம் 14 நாட்கள் வரை ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஊருக்குச் சென்றவர்கள் மூலம் தொற்று பரவி, நகரங்கள் கிராமங்கள் என விரிவடைந்தது.

விமான நிலையங்களில் சோதனை நடத்திய கையோடு வெளிநாடுகளில் இருந்து வந்த அத்தனை பேர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பின்பு அவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தி இருந்தால் அதில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து இருக்கலாம். ஆனால் அதை விடுத்து அவர்களை ஊருக்குள் அனுமதித்து பெரும் தவறிழைத்தது மோடி அரசு.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத அன்றைய சூழலில், எல்லா மத அமைப்பினரும் நாடு முழுவதும் தங்கள் மதக் கூட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருந்தனர்.

முக்கியமாக உத்தரபிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் முதல்வர் யோகி தலைமையிலும், கோவையில் ஜக்கி நடத்திய மதக் கூட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் கூடியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூடக் கூடாது என்ற அரசின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முந்தைய நிகழ்வான டெல்லி 'தப்லீக் ஜமாஅத்' தலைமையகத்தில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் தான் கொரோனா பரவலுக்குக் காரணம் என்று இந்திய உள்துறை அமைச்சகமே தெரிவித்ததைப் பார்க்கும் போது இஸ்லாமிய வெறுப்பு கொண்ட பாஜக அரசின் உள்நோக்கம் என்னவென்று புரியும்.

இதன் விளைவாக 2020 மார்ச் 29 அன்று டெல்லி நிஜாமுதீன் தலைமையகத்தில் இருந்து காவல்துறையால் 2,361 பேர் வெளியேற்றப்பட்னர், 233 பேர் கைது செய்யப்ட்டனர். மேலும் நாடு முழுவதிலும் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலும் 12 பெண்கள் உட்பட 129 தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜமாஅத் தலைமை நிர்வாகி மெளலானா மொஹம்மத் சாத் மீதான விசாரணை தொடர்ந்து நடக்கிறது. மெளலானா வழக்கை டெல்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 952 பேர் மீது விசா விதிகளை மீறியதாகவும், தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டு கொரோனாவை பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அதில், 900க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற அனுமதியுடன் தாய்நாடு திரும்பினர். இதில் 44 பேர் மட்டும் வழக்கை எதிர்கொண்டதில், எட்டு பேர் 2020 ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

மீதமுள்ள 36 வெளிநாட்டினர் மீது மட்டும் நடந்த விசாரணையின் முடிவில், குற்றத்தை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறி 36 பேரையும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியாவுக்குள் வந்த இந்த வெளிநாட்டினர் யாரும் மசூதிகளுக்குச் செல்லக்கூடாது என்று எந்த தடையும் இல்லை எனவும், அவ்வாறு எந்த தடை உத்தரவும் அரசு பிறப்பித்ததாக எந்த ஆவணத்திலும் இல்லாத பட்சத்தில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது பெறுந்தவறு எனவும், இந்தியாவிற்கு வந்த விருந்தினர்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டிய அரசு கடுமையாக நடந்துக் கொண்டதாக மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வு நீதிபதிகள் அம்மாநில அரசை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை இந்திய மரபுப்படி, கலாச்சாரப்படி உபசரிக்க வேண்டிய நிலையில் மோடி அரசு அவர்கள் மீது அவதூறு பரப்பி பொய் வழக்குகளை பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தது உலகளவில் இந்திய ஒன்றியத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியது.

கொரோனா தொற்றை இந்தியாவுக்குள் வரவிடாமல் தடுத்திருக்க வேண்டிய மோடி அரசு பிப்ரவரி மாத ஆரம்பத்திலேயே வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்தியிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது.

முதற்கட்ட தடுப்பு நடவடிக்கைகளைச் செய்யத் தவறிய இந்துத்துவ மோடி அரசு, இஸ்லாமியர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்தது மட்டுமல்லாமல், அவர்களை கொரோனவோடு தொடர்பு படுத்தி பல வதந்திகளையும் பரப்பியது. குறிப்பாக இஸ்லாமிய வணிகர்கள் நோயை பரப்புவதற்காக காய்கறிகள், இறைச்சிகளில் எச்சில் துப்பி வியாபாரம் செய்வது போன்ற காணொளிகளை பாஜகவினர் தொடர்ந்து பரப்பினர்.

இதன் தொடர்ச்சியே சுரேஷ் திவாரி போன்ற பாஜகவினர் முஸ்லீம் வியாபாரிகளிடம் எந்த பொருட்களும் வாங்க வேண்டாம் என்று வெளிப்படையாகவே பேசியது.

தமிழகத்திலும் அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த அறிக்கையில், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் தப்லீக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் பாதிக்கபட்டவர்கள் என பிரித்து தனித்தனியாக எண்ணிக்கையை அறிவித்தார்.

இவ்வாறு தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று பாதிக்கபட்டவர்கள் எண்ணிகையை மிகைப்படுத்தி இஸ்லாமியர்களை குற்றவாளிகளாக மக்களின் முன் நிறுத்தினர்.

சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் வீடு வீடாக சென்ற பாஜகவினர் "முஸ்லீம்களால் தான் இந்த நோய் பரவுகிறது, இதை விரட்டுவதற்கு சுலோகங்கள் கூறவேண்டும்" என்றும், நோய் பரப்பும் முஸ்லீம்களை தடுப்பதுதான் அவர்கள் வேலை என்பது போன்ற போலி பிரச்சாரத்தை நாடு முழுவதும் பரப்பியதன் விளைவு, அன்று பல இடங்களில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், இந்தியாவில் முதல் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்புதான், அகமதாபாத்தில் டிரம்ப், மோடி பங்குபெற்ற "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல வெளிநாட்டினர் உட்பட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் தப்லிக் ஜமாஅத் நடந்த அதே நாட்களில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகையும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெற்ற சீக்கியர்களின் ஆன்மீக விழாவும் நடைபெற்றது. இவ்வளவு நிகழ்வுகளையும் விட்டு விட்டு 3000 பேர் கலந்து கொண்ட தப்லீக் மாநாட்டை மட்டுமே கொரோனா பரவலுக்கு காரணம் என்று நாடு முழுவதும் பொய் பிரச்சாரத்தை திட்டமிட்டு பரப்பினர்.

தன் பொறுப்பற்ற அலட்சிய ஆட்சி திறனை மறைப்பதற்காக மக்களிடையே டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாடு மட்டுமே காரணம் என்ற போலி பிரச்சாரத்தை மேற்கொண்ட பாசிச பாஜக அரசு, கொரோனாவை வென்று விட்டதாக பொய் பிம்பத்தை கட்டியெழுப்பும் வேலையில் காட்டிய முனைப்பை கொரோனா தொற்றின் 2வது அலையை எதிர்கொள்ள காட்டவில்லை என்பதே நிதர்சனம். அதற்கு கும்பமேளா கொண்டாட்டமும், கங்கையில் மிதக்கும் பிணக் குவியல்களுமே சான்று.

அறிவியலை புறந்தள்ளி, இந்துத்துவ மூடபழக்க சித்தாந்த ஜோதிடத்தை நம்பி மக்களை காவு வாங்கிக் கொண்டு இருக்கிறது மோடி அரசு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா கடைசியாக 2010ல் நடைபெற்ற நிலையில் 2022ல் நடைபெற வேண்டிய நிகழ்வை ஓராண்டு முன்னதாகவே நடத்துவதற்கான காரணம் இந்துத்துவாவின் சனாதன கருத்தியலே ஆகும்.

ஜூலை 2020ல் "அகில பாரதிய அகரா பரிஷத்" என்னும் இந்துத்துவ அமைப்பு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்தரா சிங் ரத்தாவிடம் கும்பமேளா நிகழ்வு ஜோதிட கணிப்பின் அடிப்படையில் ஓராண்டு முன்னதாகவே நடத்த வேண்டும் என்று தெரிவித்ததை ஒப்புக் கொண்டு, கொரொனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ஒரு சில நிபந்தனைகளுடனே கும்பமேளா அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்ததும் அதை ஏற்க மறுத்த அகில பாரதிய அகரா பரிஷத் அமைப்பு கும்பமேளா நிகழ்வு சார்ந்து களத்தில் நேரடியாக இறங்கியதாக செய்திகள் வெளியாயின.

இதற்கு பின்னர் திரிவேந்த்ரா சிங் ராவத் இராஜினாமா செய்தார். அடுத்த முதல்வராக தீரத் சிங் ராவத் பொறுப்பேற்று கும்பமேளா எந்தவொரு நிபந்தனையுமின்றி நடக்க உதவினார்.

அறிவியல் விஞ்ஞானிகள், சுகாதார நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பு, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் 2021, மார்ச் மாதம் இந்தியாவில் 2வது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரித்தும், அதனை சற்றும் பொருட்படுத்தாத மோடி அரசு, கும்பமேளாவை அனுமதித்து இலட்சக் கணக்கானோர் ஒன்று கூடி பெருந்தொற்று பரவுவதற்கு அடித்தளமிட்டது.

மகந்த்தாஸ் எனும் 80 வயது இந்து மதகுருவிற்கு கும்பமேளா நிகழ்வில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை அங்கேயே தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தியும், அதை கேட்காமல் அவர் இரயிலில் 621 மைல்கள் பயணித்து வாரனாசி வந்தடைந்துள்ளார்.

அங்கு அவரது மகன் அவரை டாக்ஸியில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். மகந்தாஸ் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தன்னால் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்றும் கூறிய நிலையில், அவர் மகன் உட்பட பலருக்கு அங்கு தொற்று ஏற்பட்டு, சிலர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.

கும்பமேளாவில் கலந்து கொண்ட உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், நோபாளத்தின் முன்னாள் அரசர் ஞானேந்தராஷா, முன்னாள் அரசி கோமல்ஷா, மற்றும் பாலிவுட் இசையமைப்பாளர் ஷரவன் ரத்தோர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் ஷரவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். குஜராத்தைச் சேர்ந்த 313 பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டு இரயிலில் திரும்பியுள்ளனர். அதில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கும்பமேளாவில் கலந்து கொண்டவர்கள் கொரோனா தொற்றுடன் நாடு முழுவதும் இரயில்கள், பேருந்துகள் மூலம் பயணம் செய்தது தொற்று வேகமாக பரவ காரணமாக அமைந்தது.

மேலும் எந்த மாநிலத்திடமும் கும்பமேளாவில் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பியவர்களின் முழுமையான தகவல்கள் இல்லாத நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த முடியாமல் தொற்று வேகமெடுத்து உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.

தொற்று மின்னல் வேகத்தில் பரவியதோடு நில்லாமல், மோடி அரசின் மெத்தனத்தாலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமலும் மக்கள் ஆங்காங்கே கொத்து கொத்தாக மடிந்தனர்.

அவர்களை எரிப்பதற்கு கூட இடமின்றி தவித்த நிலையில் தான், கங்கையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வருவதாகத் திடுக்கிடும் செய்திகள் வெளியாகின.

அடக்கம் செய்ய இடமின்றி, சரியான சுகாதார கட்டமைப்பும் இன்றி வீட்டில் இறந்த நோயாளிகளின் உடல்களை உபி மக்கள் கங்கையில் வீசியதாக பீகார், பஸ்கர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனாவால் இறந்த உடலை மிகுந்த பாதுகாப்புடன் தகனம் செய்யும் நிலையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நதியில் வீசப்பட்டது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்துகளால் புனித நதியாகக் கருத்தப்பட்ட கங்கை இன்று அதில் மிதக்கும் பிணங்களால், நோய் தொற்றை பரப்பும் அபாய நதியாகக் கருத்தப்படுகிறது. இதேபோல் ஹமிர்ப்பூர் நகர், யமுனை நதிக் கரையில் பாதி எரிந்த நிலையில் பல உடல்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

ஆண்டிற்கு 200 கோடி செலவில் நவாமி கங்கை என்று கங்கையை தூய்மை செய்யும் திட்டத்தை அமல்படுத்திய மோடி அரசு, இந்த பேரிடர் காலத்தில் அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பைக் கூட வலிமை படுத்த திட்டமிடாமல் பிணங்களை நதியில் வீசும் அவல நிலைக்கு மக்களை தள்ளியுள்ளது.

மேலும் இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் கடந்த ஆண்டு தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்றவர்கள் மீது குற்றஞ் சுமத்தி அவர்களை விரட்டி விரட்டி கைது செய்த மோடி அரசு, பல சர்வதேச ஊடகங்கள் மற்றும் இந்திய ஊடகங்களும் கும்பமேளா கூட்டமே இரண்டாம் அலைக்கு காரணம் என்று பகிரங்கமாக தரவுகளோடு செய்திகளை வெளியிட்டும் இதற்கு காரணமான ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப் படவில்லை.

இதன் மூலம் இந்துத்துவ மோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு மனநிலை அம்பலமாகிறது. உலகளவில் அவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது!

- மே பதினேழு இயக்கம்

Pin It