நான் நடிகர் கமலின் இரசிகன் இல்லை. சொல்லப்போனால், 'ஒப்புக்கொண்ட அடிமை' என்றான இரசிகன் எனும் பதத்தை வெறுப்பவன் நான். இருந்தபோதும் கமலின் அனேக படங்களை நான் தவறாது பார்த்திருக்கிறேன்.

நான் படம் பார்ப்பது என்பதே வருடத்திற்கு ஒரு முறை நடந்தால் ஆச்சரியம். நேரமில்லை என்பது காரணம். கமல் சொன்ன 'அமெரிக்க விலை'யிலெல்லாம் என்னால் படம் பார்க்க இயலாது என்பது சமீப ஆண்டுகளின் காரணம்.

kamal_vishwaroopam_600

ஆனால், கமல் படங்கள் முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன். அதனால், அதற்கென முயற்சியெடுத்து, பார்த்திருக்கிறேன். ரஜினியின் படங்கள், விஜயின் படங்கள் அல்லது பிற நடிகர்களின் படங்கள் போல (குறைந்தது கமல் ஆளுமையால் தீர்மானிக்கப்படும்) கமலின் படங்கள் குப்பைகள் அல்ல. அவை சமூகம் பற்றி பேசுகின்றன.

'அன்பே சிவம்' படத்தை கிராமத்துப் பெண்களுடன் பார்த்தேன். பிறகு அவர்களுடன் உரையாடினேன். இந்த உலகத்தின் பாரபட்சமான நிலை குறித்து அந்தப் பெண்கள் பேசினர். நான் விரும்பும் கம்யூனிசம் பற்றி அந்தப் பெண்கள் பேசவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

நான் பெண்ணின் கோணத்தில் உலகைப் பார்க்க முயற்சி எடுப்பவன். அதனால், 'மகாநதி' படத்தைக் குறிப்பிட வேண்டும். கல்கத்தாவின் பாலியல் விடுதியில் சிக்கிய மகளைக் காப்பாற்றும் காட்சி.. சற்றும் பிசகு ஏற்படாமல், பெண்ணின் வேதனையை, உணர்வைச் சொல்லும் மகள் என்ற பெண்… தந்தை என்ற ஆணின் காட்சிகள் என்னை உலுக்கின. கமல், முதலில் மனிதனாக இருந்தால் மட்டுமே இப்படிச் சாத்தியம் ஆகும் என்று எனக்குத் தோன்றியது அப்போதுதான்.

திரைப்படம் என்ற வணிக உலகில் சமூகப் பிரச்சனைகளை விவாதிக்கும் கமல் 'முற்போக்கானவர்' என்று எனக்குப் படுகிறது. வணிக விதிகளுடன் சமரசம் செய்து கொண்டு பணம் பார்ப்பது அவருக்குச் சாத்தியம். ஆனால் செய்யவில்லை.

கமல் 'இன்னமும் சரியாகச் செய்ய வேண்டும்' என்று எனக்குப் பட்டிருக்கிறது. 'கமல் நழுவுகிறார், சொதப்புகிறார்' என்று பட்டிருக்கிறது. ஆனால், மனித சமூகத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று எனக்குப் படவில்லை. இருப்பை, இருக்கும் நிலையை எதிர்க்கும் எவரும், இருக்கும் நிலையை எதிர்த்து நடவடிக்கை எடுக்கிறார் என்றே நான் கருதுகிறேன். அதனால், நேசிப்புக்கு உரிய, அதே சமயம் விமர்சனத்துக்கு உரிய நபர் என்றே நான் கமலைக் கணக்கிடுகிறேன்.

அவர் என் போல மிகச் சரியான எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதற்காக, அல்லது நான் சரியெனக் கருதும் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதற்காக, அவரை ஒதுக்குவது சமூகத்துக்கு நான் இழைக்கும் கேடாகும் என்று கருதுகிறேன்.

நான் அவரின் 'விஸ்வரூபம்' பார்க்கவில்லை. ஒரு வேளை அது சமூகத்தின் முற்போக்கான பயணத்துக்குத் தடையாக இருக்கும் என்றால் அதனை எதிர்க்கும் நிலைபாடு எடுப்பேன்.

மற்றொன்றையும் சொல்ல வேண்டும்... ஏசு, நபி, புத்தர் போன்ற மாபெரும் மனிதர்கள் மனித சமூகத்தின் இழிவைக் கண்டு, அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள். அவர்களின் அன்றையக் கருத்தின் சாரத்தை புறந்தள்ளி, அதன் நிலைநிறுத்தப்பட்ட மத நிறுவனக் கருத்துக்களை, இன்றைக்குமான - கவனியுங்கள் -  இன்றைக்குமான கருத்தாக ஆக்க‌ முயல்வது மனித சமூகத்தின் முன்னோக்கிய பயணத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகும்.

உதாரணமாக... புத்தருக்காக இராஜபக்சேவை ஆதரிப்பதாகும். ஏசுவுக்காக ஒபமாவை, ரோமின் போப்பை ஆதரிப்பதாகும்.

அது இருக்கட்டும். தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம்.

ஜெ அரசு சிறப்புக் கூட்டம் கூட்டி விவாதித்து படத்திற்கு 144 சட்டப் பிரிவின் கீழ் இரு வாரத் தடையென்று முடிவெடுத்திருக்கிறது. அதே சமயம், ஊடகங்களில் இந்தக் கணம் வரை வரை வெளிவராத, மற்றொரு செய்தியையும் பார்க்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் இந்து மத வெறியமைப்புகளுடன் ஒத்துழைக்கும் காவல் துறை இஸ்லாமியர்களை இந்தக் கணம் வரை வேட்டையாடிவருகிறது என்று தகவல்கள் சொல்கின்றன.

நமக்கு எச்சரிக்கை தேவை. படத்துக்குத் தடையென்று முஸ்லீம்களுக்கு ஆதரவு, இந்து வெறி அரசியலுக்குத் துணையாக முஸ்லீம்களை ஒடுக்குவது, தூணாக இருப்பது, படத்திற்கான தடையை (எதிர்காலத்தில்) விலக்கிக் கொண்டு நடுநிநிலை வேடம் போடுவது, இப்படியாக வருகின்றன நாடாளுமன்ற மற்றும் 'நிரந்தர' வெற்றி என்று கணக்குப் போடும் ஜெ போன்ற இந்து வெறியாளர்க‌ளைத் தப்பிக்க விடுவது போன்ற தவறை நாம் இழைக்க முடியாது.

சமூகத்தின் முன்னோக்கிய பயணம் என்ற ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் கலை இலக்கியத்தின் அளவுகோலாக இருக்க முடியாது.

Pin It