உள்துறைச் செயலாளரிடம் முஸ்லிம் கூட்டமைப்பு வலியுறுத்தல்

kamal_viswaroopam_640

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் இன்று தமிழக உள்துறைச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

"கமலஹாசன் எழுதி இயக்கி நடித்து வெளிவர உள்ள விஸ்வரூபம் திரைப்படம் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் ஏற்கனவே கடந்த 7.1.2013 அன்று தங்களை நேரில் சந்தித்து அச்சத்தையும், ஐயங்களையும் பதிவு செய்திருந்தோம்.

திரைப்படத்தைப் பார்க்காமல் எந்த முன்முடிவுக்கும் வர இயலாது என்ற காரணத்தினால் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்க அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர்களுக்கு கடந்த 21ஆம் நாள் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு முழுமையாகப் பார்க்கப்பட்டது.

வழக்கமான ஒரு திரைப்படமாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவிற்கு அப்படம் முழுவதும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் காயப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது எங்களால் உணர முடிந்தது.

உலகம் முழுவதும் வாழும் 160 கோடி முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்றி வரும் திருக்குர்ஆனையும், முஸ்லிம்களின் வழிபாட்டு முறைகளும் கூட மிக மோசமாக சித்தரிக்கப்பட்டு, இதயங்களை ரணப்படுத்துகிறது.

உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆன், தீவிரவாதக் குழுக்களின் கையேடு புத்தமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளதை முஸ்லிம் சமுதாயம் எள்முனையளவும் ஏற்றுக்கொள்ளாது.

சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கிவிட்டு திரையிடப்படும் அளவிற்கு சில வசனங்களில் மட்டும் வலிகளை ஏற்படுத்தாமல், முழுக் கதையின் களங்களும் தளங்களும் காயங்களை உண்டாக்குபவை; உடன்பாடற்றவை; ஆட்சேபத்திற்கு உரியவை.

விஸ்வரூபம் திரைப்படம் இப்போதுள்ள நிலையிலோ அல்லது சிறிது திருத்தங்களுடனோ வெளியிடப்படும் பட்சத்தில் அது நல்லிணக்கமும், அமைதியும் நிலவும் தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து விடுமோ என்ற எங்கள் அச்சத்தை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறோம்.

விஸ்வரூபம் திரைப்படம் நாளை மறுநாள் திரையிட திட்டமிட்டிருப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இப்படம் திரையரங்குகளிலும் மற்றும் டி.டி.எச்.சிலும் வர இயலாத அளவுக்கு படத்தின் உபகரணங்களைப் பறிமுதல் செய்யும்படி ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் இயக்கத்தின் அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.''

- முஹம்மது ஹனீபா, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள்

Pin It