தவறான கருத்துக்களைத் திணித்து, திரித்தும் ஊதிப்பெருக்கி 'இதுதான் வரலாறு' என ஓங்கி உளறும் கோட்பாட்டாளர்கள் பெருகி விட்டார்கள். இத்தகைய வினோதக் கோட்பாட்டாளர்களால் வரலாற்றுக்கே வன்கொடுமை நிகழ்கிறது.
இந்திய அளவில் அந்த வன்கொடுமைகளை வகைப்படுத்தினால் இந்திய தேசியம் என்ற உணர்வே உன்னதமானது. காங்கிரசால்தான் நாட்டிற்கே பின்னடைவு, நேரு குடும்பத்தினர் நாட்டை சீரழித்து விட்டார்கள், இத்தியாதி , இத்தியாதி. .
தமிழகத்தை கவ்விய கருத்துக் கயமை என்னவெனில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தை ஒன்றுமில்லாததாக்கி விட்டன. சினிமாக்காரர்களை நம்பி தமிழன் சீரழிந்து போய்விட்டான் என்பது. இதில் திராவிடக் கட்சிகளால் தமிழ்நாடு நாசமாகி விட்டது என்ற கருத்து திரிபுக்கு அண்மைக்காலமாக பதிலடிகள் தொடங்கிவிட்டன.
மோடி புண்ணியத்தால் வாயாலே வடை சுடும் 'பாஜக'காரர்கள் இதற்கெனவே வாடகை சைக்கிள் எடுத்து, வான்டடாக வந்து வாங்கி கட்டிக்கொள்கிறார்கள். தமிழ்த் தேசிய பிள்ளைகளும் 'திராவிடம்' என எதையாவது பேசிவிட்டு தப்பிக்க வழிதெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அந்த வகையில் திராவிடக் கட்சிகளை, தத்துவத்தை தீண்டுபவர்கள் வாங்கி கட்டிக் கொள்கிறார்கள், திருத்தப்படுகிறார்கள்.
ஆனால் தமிழன் சினிமாக்காரர்கள் பின்னால் சென்று சிக்கி சீரழிகின்றான் என்ற திட்டமிட்ட திரிபுவாதத்திற்கு மட்டும் சரியான விளக்கமோ, பதிலடியோ தமிழ் சிந்தனையாளர்களால் கொடுக்கப்படவில்லை என்றே நினைக்கறேன்
இந்தியாவில் எல்லா மாநிலங்கிலும் எப்படி மாலை நேர மகிழ்ச்சியாக சினிமா பார்க்கப்படுகிறதோ, அவ்வாறே தமிழகத்திலும் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றதா? பிற மாநிலங்களில் அவை தொழிற்சாலையாகவும், கல்விக்கூடங்களாகவும் மாறிவிட்டனவா? இல்லையே!
இந்தியர்கள் அனைவரும் சினிமாவை ரசிப்பவர்களே, அதில் மனம் லயிப்பவர்களே! அப்படியானால் தமிழன் மட்டும் சினிமாக்காரர்கள் பின்னால் செல்பவர்கள், நடிகர்களின் பாதம் தாங்குபவர்கள் என தூற்றப்படுவது ஏன்? இது வகை தெரியாத வன்மமும் அபத்தமும் ஆகும்.
தமிழன் சினிமாக்காரன் பின்னால் செல்கிறான், நடிகர்களுக்கு முதல்வர் பதவியைத் தூக்கிக் கொடுத்து விடுவான் என்ற அவதூறின் மூலம் அழிச்சாட்டியம் செய்கிறார்கள். அதற்கு அவர்கள் ஆதாரமாக எம்ஜிஆர் முதல்வர் ஆனதைச் சொல்கிறார்கள். எம் ஜி ஆர் வெறும் நடிகர் என்பதற்காகவா இந்த நிலையை அடைந்தார்? அவர் திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தேர்தல் கால நட்சத்திரப் பரப்புரையாளராக விளங்கி சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மாநில சிறு சேமிப்பு வாரிய துணைத் தலைவராக இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் மூன்றாவது பெரிய பொறுப்பான பொருளாளர் பதவியை வகித்து வந்தார். அமைச்சராகி இருக்க வேண்டிய நேரத்தில் அரசியல் சூழலில் இன்னொரு திராவிட என்ற பெயரினைச் சூட்டி கட்சி தொடங்கினார். ஆட்சியைப் பிடித்தார்.
ஆனால் எம் ஜி ஆரின் பொது வாழ்வின் பெரும்பகுதி திமுகவில் தான் கழிந்தது. சுருக்கமாகச் சொன்னால் அவர் அண்ணாவின் தளபதியாய், அதன் பின்னர் கலைஞரின் தளபதியாய் வலம் வந்தவர். அவர் நாடாள வந்ததற்கு இந்தக் காரணங்கள் தான் முக்கிய பங்கு வகித்தன.
இன்றைய நடிகர்களைப்போல தமது கட்சியின் முக்கிய பதவிகளில் தமது ரசிகர் மன்றத்தினரை அமர வைக்கவில்லை. அவரது அமைச்சரவையில் முசுறிபுத்தனும், ஐசரிவேலனுமா அமைச்சர்களானார்கள்? இல்லவே! நாவலரும், நாஞ்சிலாரும், எஸ் டி எஸ்ஸும், பண்ருட்டியாரும்தான் அமைச்சரானார்கள். அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவை வாய்ப்பு கிட்டியபோது சத்தியவாணி முத்துவைத்தான் அமைச்சராக்கினார். தேங்காய் சீனிவாசனையோ, லதாவையோ, ராதாசலுஜாவையோ அல்ல.
திராவிட நோக்கங்களை சிதைத்தவராக வேண்டுமானால் அவரும், அவரது கட்சியும் நடைபோட்டு இருக்கலாமே தவிர, அவரது அடித்தளம் திராவிட அரசியல் தான். அவரது பழுத்த அரசியல் அனுபவம் தான் அவரை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
சினிமாக்காரன் பின்னால் தமிழன் எங்கே போனான்? ஜெயலலிதா வைரம் படத்தில் நடித்த அந்த தியாகத்தைப் பாராட்டும் விதமாகத்தான் முதல்வர் பதவி என்ற சோப்பு டப்பாவை பரிசளித்தார்களா? இல்லை தானே?
எம்ஜிஆருக்கு இணையாக திரையுலகில் வெற்றிகளைக் குவித்த சிவாஜி கணேசன் சட்டமன்றத் தேர்தலில் சொந்தத் தொகுதியில் சொந்த சாதி மக்களால் தோற்கடிக்கப்பட்டார். திரையில் அவர் அடித்த டயலாக்குகளுக்கு கலங்கிய தமிழக ரசிகர்கள் தரையில் அவர் அடித்த டயலாக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
திரை இசையில் முடிசூடா மன்னராக விளங்கிய கண்ணதாசன் பெஸ்ட் செல்லராக தனது அரசியல் அனுபவங்களை புத்தகங்களாக்கியபோதும், அர்த்தமுள்ள இந்துமதம் என சொற்பொழிவால் ரெக்கார்டு பிரேக் செய்தபோதும் கூட அவரது அரசியல் பேச்சை அர்த்தமுள்ளதாக மக்கள் நினைக்கவில்லை.
இதன்வாயிலாக தமிழ்கூறும் நல்லுலகம் அறிய வேண்டியது என்ன? தமிழக மக்கள் நடிகரை அரசியலில் முன் நிறுத்தி தூக்கி கொண்டாடவேண்டும் எனத் தவம் இருக்கவில்லை.
தமிழகம் கலைஞர்களை, அவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டதுண்டு. கலைவாணர் என் எஸ் கே, நடிகவேள் எம்.ஆர். ராதா ஆகியோருக்கு கட்சிக் கொள்கை தாண்டி செல்வாக்கு இருந்ததை யாரும் மறுக்கவில்லை.
விஜயகாந்த் அரசியலில் 7ல் இருந்து 8 விழுக்காடு வாக்குகள் தொடக்க காலத்தில் பெற்று இருக்கலாம். அதை வைத்து என்ன செய்ய முடியும்? 233 தொகுதிகளில் 3வது, 4வது இடம் வந்ததைத் தவிர சொல்ல என்ன இருக்கிறது? போட்டியிட்ட இடங்களில் கணிசமான தொகுதிகளில் டெபாசிட் வாங்கி இருக்கக் கூடும். (இந்த டெபாசிட்டுகளை வங்கிகளில் போட்டு 15 நாள் கழித்து ஏடிஎம்-களில் எடுத்திருக்கலாம். எதற்கு எலெக்சன் கமிஷனில் போட்டு விட்டு வாங்குவதற்கு?)
இரண்டு பெரியவங்க வந்து குதிக்கப்போறேன் குதிக்கப்போறேன் என்று சொல்லிக்கொண்டு, அதில் ஒருவர் நடுவிலே குதிக்காமல் ஓரத்தில் ஜம்ப் பண்ணி விட்டு 'நான் மைய்யம் தான். நடுவில் தான் இருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
அது சரி அந்த மற்ற ஒருவர் என்னாச்சு? அவர் குதிக்கப்போறேன் குதிக்கப்போறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிற இடத்திலேயே குதித்துக்கொண்டு இருக்கிறார்.
அட நாம் இவ்வளவு சொல்கிறோம்? அவர்கள் இரண்டுபேரும் வீட்டுக்குப் போகவில்லையா? அடப்பாவமே
நமக்கு தெரிந்து அரசியலில் குதித்து உடனடியாக வெற்றி பெற்றவர் நம்ம லொடுக்கு பாண்டி கருணாஸ் தான். ஜெயலலிதாவை நேரடியாகப் பார்த்தார், சீட்வாங்கி வென்றார். இன்று அவர் எம்எல்ஏ.
அதைப்போல இன்று அந்த பிரபல இரட்டையர்களும் நேரே சென்று அய்யாவைப் (மோடி ) பார்த்தால் 2 பேருக்கும் ராஜ்ய சபா சீட்டாவது தேறலாம். கருணாஸின் வழியே கச்சிதமான வழி. எதிர்காலத்தில் இதைத்தான் அந்த இரண்டு பெரியவர்களும் பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த மண்ணில் திராவிட சித்தாந்த பின்புலம் இல்லாமல் நடிகர்கள் மட்டுமல்ல, யாரும் ஜெயிக்க முடியாது.
நடிகர்கள் அரசியலில் ஜெயிக்கலாம் என்ற மாய்மால வாதம் இன்னமும் கட்டி முடிக்கப்படாத மேம்பாலம் போன்றது. அந்தப் பாலம் பூர்த்தியடைந்து விட்டது என நம்பி, பயணம் செய்து விபத்தில் சிக்கிய வாகனங்கள் எண்ணற்றவை. அரசியலில் நுழைந்த நடிகர்களை வச்சி செய்த மண் என்பதை தமிழகம் நிருபித்துக்கொண்டு தான் இருக்கிறது. டி. ஆர், பாக்யராஜ், கார்த்திக், சரத்குமார் வரை ஏராளமானோர் சாட்சி. இனியாவது வரலாற்றை திருத்தி எழுதுங்கப்பா..!
- அபுசாலிஹ்