சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு-16

1980களின் துவக்கத்தில் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதும், சென்னை பிலிம் சொஸைட்டியை தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த போதும் திடீரென ஒருநாள் மாணவர் இயக்கத்தை சேர்ந்த சக தோழர் ஒருவர் இரு புத்தம் புதிய 16எம்.எம். படச்சுருள் பெட்டிகளைக் கொடுத்தார். ப்ளாஸ்டிக்கில், பளிச்சென்ற வண்ணத்தில் அத்தனை நேர்த்தியான படப்பெட்டி களை நான் அதற்கு முன் பார்த்தது இல்லை. இரு படப் பெட்டி களும், தென் அமெரிக்காவில் அப்போது நடந்து கொண்டிருந்த மக்களின் புரட்சிகரப் போராட்டத்தைப் பற்றிய ஆவணப் படங் களாகும்.

சென்னையின் பிரபல ஆங்கில பத்திரிகையினைச் சேர்ந்த ஒருவர் தென் அமெரிக்க பயணத்தின் போது அவருக்கு தரப்பட்ட அந்த படப் பெட்டிகளை ரகசியமாக இந்தியாவுக்கு கொண்டு வந்தார். அந்தப் படப் பெட்டிகள் தான் பலருக்கு காண்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக என்னிடம் தரப்பட்டது.

தென் அமெரிக்க நாடுகளான எல்சால்வடோர், நிக்காரகுவாவில் அப்போது நடந்து கொண்டிருந்த அரசுக்கெதிரான மக்களின் புரட்சிகர போராட்டட்ஙகளைப் பற்றிய படங்களாகும் அவை.

அரசியல் ஆவணப்படங்கள் என்றாலே அப்போதெல்லாம் தென் அமெரிக்க (லத்தின் அமெரிக்க) படங்கள் தான் என்றிருந்த காலம். இது போன்ற படங்களை பெரிய சர்வதேச திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்க முடியும். அப்படிப்பட்ட நிலையில் என் கையில் இருந்த இரு படப் பெட்டி களும் ஏதோ பொக்கிஷம் போல இருந்தது.

உடனடியாக அப்படங்களை ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் திரைப்படக் கல்லூரியின் திரை யரங்கத்தில் திரையிட்ட போது பெரும் அளவில் சென்னையை சேர்ந்த கலைஞர்கள், அரசியல்வாதி கள், பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். திரை யிடல் முடிந்து எல்லோரும் கேட்ட ஒரு கேள்வி. “இந்தப் படம் உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்பது தான். “அது ரகசியம். வெளிநாட்டு நண்பர் ஒருவர் தந்தார் எனக்கூறி தப்பித்தேன்.

பின்னர் அப்படப் பெட்டிகளை யாருக்கும் தரக் கூடாது என்று என்னிடம் சொல்லப்பட்டிருந்தது. அதை நானே பல ஊர் களுக்கும், பல மாநிலங் களுக்கும் பயணம் செய்து, பல இடங்களில் போட்டு காட்டியிருக் கிறேன்.

சினிமாவின் முதல் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி யை இப்போது நினைத்துப் பார்த்தால் எனக்கு விநோதமாக உள்ளது. காரணம் இன்று மிக முக்கிய அரசியல் ஆவணப்படங்கள், ஆவண வீடியோ பதிவு கள் உடனுக்குடன் செயற் கைக்கோள் டெலிவிஷன் சேனல்களில் காட்டப் படுகிறது. பின்னர் அது உடனடியாக இணையத்தில் பாதுகாக்கப்படுகிறது.

சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் ஆவணப்படங்களின் மிக முக்கியமான பரிமாணம் அதன் டிஜிட்டல் பதிவுகள்தான். டிஜிட்டல் பதிவு களின் விஷேச அம்சம், அவை ஒளி ஒலி அலை களாக உடனடியாக உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடிவது தான். செயற்கைக்கோள் டெலி விஷன் சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகளை டிஜிட்ட லாக பதிவு செய்து ஒலி - ஒளி அலைகளாகத்தான் உலகெங்கும் அனுப்புகின்றன.

நாளுக்கு நாள் இந்த டிஜிட்டல் பதிவுகள் தொழில் ரீதியான மிக உயர்நிலையிலான பதிவு களாக மாறிக் கொண்டிருக்கின்றன.

HD - High Definition என்றழைக்கப்படும் வீடியோ டிஜிட்டல் பதிவுகள் இன்று தொழில் ரீதியான உயர் தொழில் நுட்பமாக கருதப்படுகிறது.

இந்த தொழில்நுட்ப கேமராக்கள், பல்வேறு விலைகளில், பல்வேறு நிலைகளில் ஐந்து லட்ச ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாய் வரையில் பல்வேறு மெருகூட்டல்களோடு கிடைக்கிறது.

தொழில் முறை அல்லாத சாதாரண வீடியோ பதிவு கேமராக்கள் பத்தாயிரம் ரூபாயிலிருந்தும் கிடைக்கிறது.

தரமான படங்கள் என்றாலே, தரமான ஒளிப் பதிவு, தரமான ஒலிப்பதிவு என்றாகி போன நிலை யில், தொழில் முறை ரீதியானவர்கள் மட்டும் தான் தரமான படங்களை எடுக்க முடியுமா? சொல்வதற் கும், பதிவு செய்வதற்கும் மிக முக்கியமான மானுட, சமூகப் பிரச்சனைகளை வைத்திருக்கும் சாதாரண மாணவர்கள் இவ்வூடகத்தை கையில் எடுக்க முடியாதா என பலர் கேட்பதுண்டு.

முடியும். நிச்சயமாக முடியும். சில ஆயிரங் களில், சில பத்தாயிரங்களில் எடுக்கப்பட்ட பல ஆவணப் படங்கள் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளது. அது போன்ற படங்களில் சொல்லப்படும் விஷயங்களின் முக்கியத்துவம், அவசரத்தன்மை காரணமாக தொழில் நுட்பத்தின் தரம் என்பது இரண்டாம் பட்சமாகி விடுகிறது.

எரியும் மனித பிரச்சனைகள், மானுடத்திற்கு எதிரான மிகக் கொடுமையான அத்து மீறல்கள் நிகழும் போது அதைப் பதிவு செய்வதும், பின்னர் சரியான பார்வையோடு அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதும் தான் முக்கியமே தவிர, தொழில் நுட்பத்தின் தரம் என்பதற்கு அங்கு இடமே இல்லை.

20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜி.ஜார்ஜ் ஹால்லிடே என்கின்ற சாதாரண நபர் தன்னுடைய அமெச்சூர் வீடியோ கேமராவால் எடுத்த ஒரு சில நிமிட காட்சிகளால் ஏஞ்செல்ஸ் நகரமே ஸ்தம்பித்து போனது.

1991ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் 25 வயதான ரோட்னி கிங் என்ற கறுப்பு வாலிபன் குடித்துவிட்டு காரை ஓட்டிச் சென்றான்.

வேகக் கட்டுப்பாட்டை மீறிச் சென்ற அந்த காரை போலீஸார் நிறுத்த முயன்றபோது அவன் நிற்காமல் சென்றான். பின்னர் அக்காரை துரத்தி சென்ற போலீசார், காரை நிறுத்தி ரோட்னி கிங்கை வெளியே இழுத்து போட்டு கீழே தள்ளி தங்கள் தடிகளால் அடித்து நொறுக்குகின்றனர். அவன் முகமும் மண்டையும் உடைந்து ரத்தம் கொட்டு கிறது.

ஆனாலும் சில போலீஸார் அவனை தொடர்ந்து அடிக்க, மற்ற அதிகாரிகள் அதை தடுத்து நிறுத்தாமல், ஏளனப் பேச்சுக்களோடு வேடிக்கைப் பார்க்கின்றனர்.

இதைத் தற்செயலாக அருகில் உள்ள குடியிருப்பில் இருந்து பார்த்த ஜியார்கே ஹால்லிடே என்பவர் தனது சாதாரண வீடியோ கேமராவில் அந்த வன்முறையை போலீஸாருக்கு தெரி யாமல் தூரத்திலிருந்து பதிவு செய் கிறார்.

பின்னர் இந்த வீடியோ பதிவு, செய்தி நிறுவனங்கள் மூலம் உல கெங்கும் உள்ள டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்பட்ட போது அமெரிக்கா வின் பல நகரங்களில், குறிப்பாக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஒரு பெரிய இனக் கலவரமே வெடித்தது.

அமெரிக்காவின் கறுப்பு இன மக்களும், அடிப்படை மனித உரிமை களை மதிப்பவர்களும் அந்த வீடியோ காட்சியில் சட்டத்தை மீறிய ஒரு இளைஞனை போலீசார் தண்டிப்ப தாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, நிறத் துவேசம் கொண்ட வெள்ளை போலீசார்கள் ஒரு கறுப்பு இளைஞன் மீது கட்டவிழ்த்த காட்டு மிராண்டித்தனத்தைப் பார்த்தனர்.

இதன் காரணமாக, தெருவிற்கு இறங்கி, கறுப்பு இன மக்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பின்னர் மக்களின் எழுச்சியைத் தாங்க முடியாமல், அமெரிக்க அரசு ரோட்னி கிங்கை அடித்து நொறுக்கிய நான்கு வெள்ளை காவல் அதிகாரிகளைக் கைது செய்தது. ஒரு வருடம் நடந்த வழக்கின் இறுதியில் நான்கு காவல் அதிகாரிகளும் விடுதைல செய்யப்பட்டனர்.

இதை அறிந்த கறுப்பு இன மக்கள் அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ், அட்லாண்டா, ஜியார்ஜியா போன்ற நகரங்களில் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இப் போராட்டத்தில் வெடித்த வன் முறையால் பேரழிவு ஏற்பட்டது. 53 பேர் இறந் தனர். 3000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் தனர். 7000 இடங்களில் தீ வைப்பு சம்பவம் நடை பெற்றது. 3100 வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இப் போராட்டத்தால் ஏற் பட்ட இழப்பு 4000 கோடி ரூபாயைத் தாண்டியது.

இத்தனை பெரும் இழப்புக்கும், பேரழிவுக்கும் காரணம் அந்த சிறிய வீடியோ பதிவுதான் என்றால் அது மிகையில்லை. காரணம் அப்போதும், அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நிறத் துவேசமும், நிறவெறித் தாக்குதல்களும் நடந்து கொண்டுதான் இருந்தன. அவை குறித்த செய்திகளும் அவ்வப்போது செய்தித் தாள்களில் வந்து கொண்டும் இருந்தன. ஆனால், அவையெல்லாம் ஏற்படுத்தாத பாதிப்பை இந்தச் சிறிய வீடியோ பதிவு எப்படி ஏற்படுத்தியது என்பதை ஆராய்ந்தோமானால் இந்த ஊடகத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான உண்மைகள் நமக்குத் தெரியவரலாம்.

 

இதுபோன்ற வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையின் அருகாமையும், அவசரத் தன்மையும் உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்ற தன்மையும்தான். இதுபோன்ற பாதிப்புகளுக்குக் காரணமா?

அப்படியானால் சமீபத்தில் இங்கிலாந்தின் சானல் 4 டெலிவிஷன் சேனல் ஒளிபரப்பிய “ஸ்ரீலங்காவின் கொலைக் களம்” என்ற ஆவணப் படம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே. ஸ்ரீலங்கவே பற்றி எரிந்திருக்க வேண்டுமே. ராஜபக்ஷே ஓடி ஒளிந்திருக்க வேண்டுமே. தமிழகத்தில் மாபெரும் ஆர்ப் பாட்டங்கள் வெடித்திருக்க வேண்டுமே. இவற்றில் எதுவுமே நிகழவில்லை. காரணம் இந்த ஆவணப் படம் இங்கிலாந்தில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு ஒருவேளை இந்தியா, இலங்கை டெலிவிஷன் சேனல்களும், தமிழ் சேனல்களும் இந்த படத்தை ஒளிபரப்பியிருந்தால், நிச்சயம் பெரும் பாதிப்புகள் தமிழகத்திலும், இலங்கையிலும் நிகழ்ந்திருக்க வேண்டும்.

48 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம், பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது. சேனல் 4ல் ஒளிபரப்பப்பட்ட அடுத்த நாள் இப்படத்தை நான் இணையத்தில் பார்த்த பின்பு பல மணிநேரம் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தேன். அந்த அளவுக்கு இப்படம் என்னை பாதித்தது. இப்படத்தை முகநூலில், பகிர்ந்து கொண்ட பின், இரு நண்பர்கள் மட்டும் இப் படத்தை பார்க்க துவங்கியதாகவும், சில நிமிடங் களிலேயே அதை பார்க்க மனோ திடம் இல்லாமல் நிறுத்தி விட்டதாகவும் குறிப்பு அனுப்பியிருந்தனர். பலர் இந்த ஆவணப்படத்தை பார்க்கவேயில் லையோ என சந்தேகம்.

இணையத்திலும் இப்படத்தை ஒரு சிலரே பார்த்திருக்க வேண்டும். டிஜிட்டல் புரட்சி என்று எவ்வளவு தான் நாம் சொல்லிக் கொண்டிருந் தாலும், நம்நாட்டில் இணையங்களை உபயோகிப் போர் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. சீனாவில் இணையம் உபயோகிப்போர் எண் ணிக்கை நம்நாட்டில் உபயோகிப்போரைப் போல ஐந்து மடங்காக உள்ளது. நம் நாட்டில் அப்படி இணையத்தை உபயோகிப்பவர்களில் பெரும்பாலோர், அதி முக்கியமான சமூக, அரசியல் நிகழ்வுகளுக்காக உபயோகிப்பதில்லை. மாறாக பொழுது போக்கு, சினிமா, வேடிக்கை, விளையாட்டு, தனிப்பட்ட அரட்டை போன்ற வற்றுக்குத்தான் உபயோகிப்படுத்தப்படுகின்றது. இதையெல்லாம் நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், “இலங்கையின் கொலை களம்” என்கின்ற இந்த ஆவணப்படம் தற்போதைக்கு இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்ப தால் தான் பலருக்கு இது போன்ற விஷயங்களில் அக்கறை உள்ளவர்களுக்கு கூட இப்படத்தைப் பற்றி தெரியவில்லை என நினைக்கிறேன்.

“இலங்கையின் கொலைக்களம்” என்கின்ற இந்த ஆவணப்படத்தை பல தளங்களில் முக்கியமான படமாகக் கருதுகிறேன். மனிதனை மனிதன் அழிக்க உதவும் கடைசி யுத்த தளவாடம் இவ்வுலகில் இருக்கும் வரையில் இவ்வுலகம் நிச்சய மாக வாழ்வதற்கு லாயக்கற்றது என் கின்ற என் கருத்தை இப்படம் மேலும் உறுதி செய்தது. எல்லா யுத்தங்களிலும் அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்படு வதும், பெண்கள் பாலி யல் ரீதியாக சிதைக்கப்படுவதும் எழுதப் படாத விதியாகவே உள்ளது. இரண் டாம் உலக யுத்தத்திலிருந்து வியட்நாம் யுத்தம், ஆப்ரிக்க உள்நாட்டு யுத்தங்கள், செர்மியா யுத்தம், ஈராக் யுத்தம் என்று எல்லாவற்றிலும் இதைத்தான் பார்க்கி றோம். “இலங்கையின் கொலைக் களம்” படத்திலும் அதைத்தான் பார்க்கி றோம்.

இப்படத்தின் விஷேச அம்சம் என்ன வென்றால், இப்படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள், இந்த ஆவணப் படத்துக்காக எடுக்கப்பட்டவை அல்ல.

உண்மையில் பார்க்கப் போனால், இலங்கை அரசு, தான் திட்டமிட்டு நடத்திய இந்த யுத்தக் கொடுமைகளை உலகின் கண்களிலிருந்து மறைக்க வேண்டும் என்பதற்காக, பத்திரிகை மற்றும் டெலிவிஷன் செய்தியாளர்கள் யாரையுமே, தங்கள் நாட்டுக்குள்ளோ, யுத்த நடந்த பகுதிக்கு அருகிலே யோ அனுமதிக்கவில்லை. எந்த அளவுக்கு இலங்கை அரசு இதில் கவனம் எடுத்துக் கொண்ட தென்றால், இலங்கையில் செயல்பட்டுக் கொண்டி ருந்த ஐ.நா. அலுவலகத்தையும் பாதுகாப்பு தர முடியாது என்ற காரணத்தைக் கூறி மூடி விட்டது. ஐ.நா. அலுவலகம் மூடப் போவதை அறிந்த தமிழ் மக்கள், ஏதோ பேராபத்து நிகழப் போகிறது என்பதை உணர்ந்து, ஐ.நா. அலுவலகம் முன் திரள் கின்றனர். மூடப்பட்ட கதவுகளின் பின்னிருந்து, கம்பிகளின் வழியே “போகாதே, போகாதே” என்று கெஞ்சுகின்றனர். அதை ஒரு ஐ.நா. அதிகாரி உள்ளிருந்த படியே தன் சிறிய கேமராவால் படம் பிடிக்கிறார். போகாதே, போகாதே என்று கதறும் மக்களிடையே, ஒரு இளம் பெண் அமைதியாக பார்க்கிறார். அந்த சிறு பெண்ணின் முகத்தில் உள்ள ஏக்கமும், பயமும் பல விஷயங்களை சொல்கிறது.

இப்படத்தின் துவக்க காட்சிகளில் இது முக்கியமான ஒன்று.

இப்படத்தின் பிராதான காட்சிகள் எல்லாமே இது போல் சிறிய கேமராவாலும், கைபேசி கேமராக் கொண்டும் எடுக்கப்பட்டது தான்.

உலகின் கண்களிலிருந்து, தான் நடத்திய யுத்த குற்றங்களை மறைக்க இலங்கை அரசு எத்தனை தான் முயற்சி செய்தாலும், இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப, கைபேசி யுகத்தில் உண்மையை மூடி மறைப்பது எத்தனை கடினம் என்பதையே இப்படம் காட்டுகிறது.

இப்படத்தின் முதல் பாகத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே அல்லது விடுதலை புலிகளே தங்களது சிறிய மற்றும் கைபேசி கேமராவில் எடுக்கப்பட்டவை தான்.

ஒரு காட்சியில் வானிலிருந்து எறியப்படும் குண்டுகளுக்கு பயந்து, பெண்களும், குழந்தை களும் கதறிக் கொண்டு குழிக்குள் பதுங்குவதும். அப்போது ஒரு பெண் பதுங்கு குழியிலிருந்து வீடியோ எடுக்கும் நபரைப் பார்த்து அழுது கொண்டே “இப்போ எதுக்கு வீடியோ எடுக்கிறீங் க? நாங்க சாகப்போறதை எடுக்குறீங்களா?...” என்று கதறுவது பார்ப்போரை அறைவது போல் உள்ளது.

இன்னொரு காட்சியில் வேலிக்கு அந்தப்பக்கம் இருந்து இளம் பெண்கள் குண்டுவீச்சில் அப் போதுதான் இறந்த அம்மாவின் உடலைப் பார்த்து அம்மா... அம்மா.... என்று கதறும் போது, அடக் கடவுளே! இதையெல்லாம் பார்க்கத்தான் வேண்டுமோ என்று நம் மனம் கதற, கண்களை மூடிக் கொள்ள தோன்றுகிறது. படத்தின் முற்பகுதி காட்சிகள் பெரும்பாலும் இப்படித்தான் உள்ளது. 25 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மாதமான 2009ஆம் ஆண்டில் மே-ஜூன் போது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய கொடூரம் தான் இது.

அப்பாவி மக்கள் தங்கியிருந்த முகாம்கள் மீதும், தற்காலிக மருத்துவமனைகள் மீதும் அரசு ராணு வம் வேண்டுமென்றே திட்டமிட்டு குண்டு வீசியதை இக்காட்சிகள் தெளிவாக உணர்த்து கின்றன.

தற்காலிக மருத்துவமனையின் மேற்பார்வை யாளர் மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லாத தால் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியிலேயே குண்டு வீச்சுக்கு பலியான அவரது உடலைப் பார்க் கிறோம். எந்த யுத்தத்திலும் மனித உயிர்கள் எத்தனை மலிவானது என்பதைத்தான் இக்காட்சி காட்டுகிறது.

படத்தின் இறுதிப்பகுதிக் காட்சிகளை எல் லோராலும் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.

யுத்தங்கள் மானுடத்தின் கடைசித் துளியையும் உறிஞ்சு விடும் என்பதற்கு அத்தாட்சியாய் உள்ளது இக்காட்சிகள். படத்தின் துவக்கத்திலேயே படத்தைத் தொகுத்து வழங்கும் ஜோன் ஸ்நோ நம்மை எச்சரிக்கிறார். “நீங்கள் பார்க்கப் போகும் சில காட்சிகள் உங்களை மிகுந்த பாதிப்புக்குள்ளாக் கலாம்”. அவரின் எச்சரிக் கையை இக்காட்சிகளின் போது நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

கைதிகளை நிர்வாண மாக கைகளை கட்டி ஒருவர் பின் மண்டையில் சுட்டுக் கொல்வது, பாலி யல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் களின் நிர்வாண உடல்களை மிக மோசமான முறையில் அப்புறப்படுத்துவது... என காட்சிகள் நம் தொண் டைக் குழியை அடைக்க வைக்கிறது.

இந்தக் காட்சிகளை யெல்லாம் யார் எடுத்தார் கள்? எப்படி எடுத்தார்கள் என்று பார்த்தால், அவை இன்றைய டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் சான்று களாக உள்ளன.

பெரும்பாலான இக்காட்சிகள், இக்கொடுமை களை நிகழ்த்திய ராணுவ வீரர்களே தங்கள் கைபேசி கேமராவால் எடுத்தது. இந்த காட்சிகள் எல்லாம் இந்தக் கொடூரங்களை நிகழ்த்திய ராணு வத்தினர் தாங்கள் நிகழ்த்திய செயல்களை சாதனை களாக நினைத்து அதற்கான கேடயங்களாக, சான்றிதழ்களாக தங்கள் கைபேசி கேமராவில் பதிவு செய்தது தான்.

என்னதான் உண்மையாக இருந்தாலும் இது போன்ற காட்சிகளைக் காண்பிப்பது நியாயம் தானா? தார்மீக அடிப்படையில் சரியானது தானா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

அதற்கு இப்படத்தைத் தொகுத்து வழங்கும் சேனல் 4ன் ஜோன் ஸ்நோ (துடிn ளுnடிற) சொல்கிறார்: “மக்கள் இக்காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர்தான் இதைக் காட்டுகிறோம். அப்படி காட்டினால் தான் இந்த யுத்தத்தில் கொடூரங்கள் நிகழ்த்தியவர்களின் உண்மை சொரூபம் தெரியவரும். அப்போது தான் சர்வதேச அளவில் இந்த யுத்தக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்”.

இதை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ, இல்லையோ, மொத்தத்தில் இந்த ஆவணப்படம், சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டுக்கே உரிய தொழில் நுட்பத்தின் மூலம், மனிதனுள் எப் போதும் மறைந்து கிடக்கும் அரக்கனை ஞாபகப் படுத்துவதாகவே உள்ளது. 

(செம்மலர் ஜூலை 2011 இதழில் வெளியானது) 

Pin It