இந்திய சினிமா தனது பொதுவான தனித் தன்மையை எப்போதுமே மாற்றிக்கொண்டதில்லை. உள்ளடக்க ரீதியிலும், கதை சொல்லும் பாணியிலும் பல காலமாகவே தேக்கமென்பது பழகிப்போன ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. அவ்வளவு எளிதில் பொது நீரோட்ட சினிமாவில் பெரிய மாற்றம் வந்துவிடுவதில்லை. இதுதான் நீண்டகாலமாகவே தமிழ் சினிமாச் சூழலுமாகும். இந்தச் சூழலை உடைத்துத் தகர்க்கக் கங்கணம் கட்டிக்கொண்டு அவ்வப்போது சிலர் கிளம்பி வரத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அந்த முயற்சிகள் சமுத்திரத்தில் கரைத்த பெருங்காயமாகவே போய்விடுகின்றன. இந்த நிலையில்தான் நல்ல சினிமாவின் ஆர்வலர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சிகொள்ளத்தக்க சூழல் தற்போது ஏற்பட்டுவருவதைக் கவனிக்க முடிகிறது. ஆமாம், தமிழ் சினிமா தன் மண்ணுக்கு உண்மையாக மாறத்தொடங்கியிருக்கிறது. தன் ரசிகர் பெருமக்களுக்கு நியாயம் வழங்க அதன் மனசாட்சி கிளர்ந்தெழத் தொடங்கியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவில் இந்த மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருக்கின்றன. உலக சினிமா ஆர்வலர்களின் கவனம் நம் தமிழ் சினிமாவின் மீதும் திரும்பும் வண்ணம் ஒரு புத்தம் புதிய சூழல் கனிந்துவருவதாகவே அதனை நாம் கணிக்கலாம். நம்பிக்கை பிறக்கிற வேளை இது என்று மனம் துள்ளத்தான் செய்கிறது.

அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த படங்களின் பட்டியலில் நல்ல சினிமா முயற்சிகளின் எண்ணிக்கை சற்றே அதிகரித்திருப்பது மகிழத்தக்கது. பாரதி, பெரியார், காமராசர், அம்பேத்கர் என்று நமது புதிய சமுதாயத்தின் சிற்பிகளின் வரலாறுகளை சினிமாவில் பதிவுசெய்யும் முயற்சிக்கு இன்று ஒரு உத்வேகம் ஏற்பட்டிருப்பதை அறிவோம். இது முன்பு ஏற்கெனவே வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிவகங்கைச் சீமை என்றெல்லாம் தொடங்கிய முயற்சிகளின் தொடர்ச்சிதான் என்றாலும், இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றத்தோடு, ரசிகர்களிடையே ரசனையில் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் சேர்ந்து இந்த வரலாற்றுப் படங்களின் தரத்தை மேம்படுத்தியிருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.

ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக உள்ள இன்றைய நிலையில்தான் இன்னொரு பக்கம் வணிகமயச் சூழல் சினிமா உலகைப் பாடாய்ப் படுத்துவதைப் பார்க்க முடிகிறது. ஏகபோகங்களின் வெறித்தனமான முதலீட்டுப் புயலை, அவை சந்தையில் ஏற்படுத்தும் செயற்கையான விளம்பரச் சுனாமியை இத்தகைய வரலாற்றுப் பதிவு முயற்சிகள் சந்திக்கவேண்டியதிருக்கிறது. இதனால்தான் அம்பேத்கர் திரைக்காவியம் பத்து ஆண்டுகளாகப் பெட்டியை விட்டு வெளியே வர இயலாத அவலம் அரங்கேறியது. கூடுதலாகத் ஊறிப்போயிருக்கும் தீண்டாமைப் பெருநோய் வேறு சேர்ந்துகொண்டதால் அம்பேத்கர் படத்துக்கு எதிரான அழுத்தம் அதிகமாக இருந்ததை உணரமுடிந்தது.

வரலாற்றுப் படங்கள் ஒருபுறமிருக்க பொதுவான தமிழ் சினிமாச் சூழல் ஆரோக்கியமாக மேம்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். அதிலும் அண்மைக்காலத்தில் சினிமாவில் இயங்கத் தொடங்கியிருக்கும் ஒரு இளம் கலைப் பட்டாளத்தின் புதிய வரவால் தமிழ் சினிமா புது ரத்தம் பாய்ச்சப்பட்ட உற்சாகத்தில் இருக்கிறதென்றே சொல்ல வேண்டும். கால மாற்றத்தின் ஒத்துழைப்பும், தொழில்நுட்ப மேம்பாடும், தகவல் பெருக்கத்தால் ஏற்பட்டிருக்கும் உலகளாவிய நெருக்கமும் இன்னும் பல காரணங்களும் இந்தப் புதிய காட்சியின் காரணிகளாக இருக்கின்றன. தேங்கிய குட்டையாக இனி எந்த சமூகமும் இருக்க இயலாது என்கிற இன்றைய புதிய நிலையில் தமிழ் சினிமாவிலும் ஒரு உலகளாவிய முதிர்ச்சியைக் காணமுடிகிறது. கடந்த ஆண்டுகளில் வெளிவந்து, புதிய புதிய உணர்வுகளை ஏற்படுத்திய படங்களின் பட்டியல் மிக நீளமானதுதான். ஒரு சில உதாரணங்களைச் சொல்லலாம். ஆட்டோகிராப், தவமாய்த் தவமிருந்து, மொழி, அபியும் நானும், பசங்க, பள்ளிக்கூடம், வெயில், காதல், அங்காடித் தெரு, பூ, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., அழகி, பேராண்மை என்று இன்னும் நீண்டுகொண்டே போய் இன்று நந்தலாலா, நெல்லு, தென்மேற்குப் பருவக்காற்று என்று அந்தப் பட்டியல் தொடர்கிறது.

நமக்கெல்லாம் மகிழ்ச்சிதான், தமிழ் சினிமாவின் தடம் புதிய திசையில் பயணப் பட்டிருப்பதை நாமெல்லாம் வரவேற்கவே வேண்டும். இந்த மாற்றத்தின் தன்மை எத்தகையதாக இருக்கிறது? இந்த மாற்றங்களினூடாக நமக்குப் புலப்படும் நிதர்சன உண்மைகள் என்னென்ன எனச் சற்றே பார்ப்போமா? இங்கே நாம் மேலே சொன்ன பட்டியலின் இறுதியில் இடம்பெற்றுள்ள மூன்று படங்களைக் குறித்துக் கொஞ்சம் பார்ப்போம்.

வளமையான காதல், சண்டை என்ற புளித்துப்போன கதையம்சத்தை இந்த மூன்று படங்களுமே சொல்லவில்லை என்பதே மிகப் பெரிய மாற்றம்தான். அதிலும், நெல்லு என்ற பெயரே எதையோ உணர்த்த முயலுவதை உணர முடிகிறது அல்லவா? தஞ்சைத் தரணியை நெற்களஞ்சியமாகச் செழிக்கச் செய்யக் காவிரி ஆறு மட்டுமா காரணம்? வியர்வை சிந்தி அந்த மண்ணில் தங்களின் கடுமையான உழைப்பை வழங்கிய அடித்தட்டு விவசாயக் கூலி உழைப்பாளிகள்தானே பிரதான காரணம்?

நிலப்பிரபுத்துவ ஆதிக்க சமூகத்தின் அத்தனைக் கொடுமைகளும் அரங்கேறுகின்றன கீழ்வெண்மணியில் நடந்த கொடுமையை மையமாக வைத்து வந்திருக்கும் இந்த நெல்லு படத்தில். கீழ்வெண்மணியில் பெண்ணென்றும், குழந்தையென்றும்கூடப் பார்க்காமல் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்திய அந்த மாபாதகச் செயலை சினிமாவாக்க எண்ணியதை முதலில் பாராட்டவேண்டும். இயக்குநர் எம். சிவசங்கரை இதற்காகப் பாராட்டலாம். அதற்குப் பொருத்தமான களமும், பின்னணி இசையும் நன்றாக உள்ளபோதும் படத்தில் நடித்தவர்களின் செயற்கையான நடிப்பு  படத்தின் நோக்கத்தைச் சிதைக்கிறதே? ஒரு சிறிய ஆறுதல் சிங்கமுத்துவும் கிரேன் மனோகரும் தரும் நகைச்சுவை.

அடுத்து, தென்மேற்குப் பருவக்காற்று படம் இந்தக் காலகட்டத்தில் வந்திருக்கும் இன்னொரு சிறந்த படம். கடுமையாக உழைத்துத் தன் மகனைக் காப்பாற்றும் ஒரு தாயின் கதை இது. இதில் காதல் இருந்தாலும் கிராமத்துக் குளத்தில்-பம்ப் செட் கிணற்றில் நாயகியை நனைய விடும் காட்சியோ அல்லது கனவுக் காட்சி என்ற பெயரில் காம விரச சமாச்சாரங்களை அரங்கேற்றும் கயமையோ துளியுமில்லாததற்கு இயக்குநர் சீனு ராமசாமிக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். ரொம்ப நாளுக்குப்பின் இந்தப் படத்தின் பாடல்கள் கதைக் களத்தோடு ஒன்றி நின்று கதைக்குப் பாடல் பக்கபலம் என்று மெய்ப்பிக்கின்றன. வெறும் காதல், தாய்ப் பாசம் என்று மட்டும் நின்று விடாமல் தென் தமிழகத்தின், குறிப்பாக தேனி மாவட்டத்தின் முரட்டுச் சமூகம் ஒன்றின் மனசாட்சியாகவே இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதுதான் இதன் சிறப்பெனலாம். மனிதன் ஏன் திருடுகிறான்? இயற்கை இடத்துக்கு இடம் வேறுபட்ட வாழ்க்கைத் தரத்தை மனிதனுக்கு விதித்திருந்தாலும் “மனுசப்பய அதை மாற்ற முயற்சித்திருக்கணும்ல?” என்று ஒரு சிகப்புத் துண்டு போட்ட கிழவர் சொல்வதாக வரும் இடம் இயக்குநரின் பார்வையை பறை சாற்றுகிறது.

முத்தாய்ப்பாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய படம் நந்தலாலா. முற்றிலும் வித்தியாசமான கதைக் களம். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் தாயைப் பார்க்கக் கிளம்புகிறார். தன்னை மனநலக்காப்பகத்தில் விட்ட தாயைப் பழி தீர்க்கவே அவர் தன் தாயைத் தேடிப் போகிறார். எதிர்பாராத விதமாக அவர் ஒரு சிறுவனைச் சந்திக்க நேர்கிறது. அந்தச் சிறுவனும் தனது தாயைத் தேடித்தான் போகிறான் என்பது கதையின் திருப்பம். இருவரும் நட்பாகிறார்கள். இவர்களின் அனுபவமே ஒரு நல்ல சினிமாவாகிறது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களைத் தந்த இயக்குநர் மிஷ்கின்  இந்தப் படத்தை இயக்கியிருப்பதோடல்லாமல், இதில் மனநலம் பாதிக்கப்பட்டவராக மிகத் திறம்பட நடிக்கவும் செய்திருப்பது சிறப்பு.

ஒரு சர்வதேசத் தரத்திற்கு, சினிமா மொழியில் காட்சிகளினூடாகக் கதை சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது, மகிழ்ச்சியையும்தான். ஜப்பானியப் படமான கிகுஜிரோவின் தழுவல்தான் இந்தப்படம் என்கிறார்கள்.  இருந்தாலும் படம் கவித்துவச் செறிவோடு கலக்குகிறது. மிஷ்கின் சில காட்சிகளில் புத்திசாலிபோல வருவதும், பித்துப் பிடித்தவராக அவரைச் சொல்வதற்கும் கொஞ்சம் இடிக்கத்தான் செய்கிறது. அந்தச் சிறுவன் நடிப்பு அபாரம். இருந்தாலும் வயதுக்கு மீறிய வாய் அவ்வளவு தேவையா எனத் தோன்றுகிறது. எது எப்படியோ நாம் எடுத்துக்கொண்ட இந்த மூன்று படங்களில் முதல் மதிப்பெண்ணை இந்த நந்தலாலாவே பெறுகிறது. அதற்கடுத்ததாகத் தென்மேற்குப் பருவக்காற்றையும், வெண்மணிக்கு மரியாதை செய்ய முனைந்ததால் நெல்லுவையும் நாம் பாராட்டி வரவேற்கலாம்.

தமிழ் சினிமாவின் இப்படிப்பட்ட மாறுபட்ட நல்ல முயற்சிகளை ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும். நெருக்கடிகள் சூழ்ந்துவரும் நம் பட உலகத்தை இப்படிப்பட்ட தரமான முயற்சிகளே காப்பாற்றிக் கரை சேர்க்கும் என்று அடித்துச் சத்தியம் செய்து சொல்வோம்.

Pin It