தமிழ் சினிமா வரலாற்றின் துவக்க காலத்தில் இன்றைக்கு நினைத்தாலும் நமக்குள் வியப்பை ஏற்படுத்தும் பல சாதனைகள் நடந்திருக்கின்றன. அப்படியொரு சாதனைப் படம்தான் சிந்தாமணி. இன்றைக்குச் சரியாக 74 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த சிந்தாமணிக்கு இந்த மார்ச் மாதம் பவளவிழா தொடங்குகிறது. ஆமாம், 1937 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ந்தேதி திரையரங்குகளுக்கு வந்த சிந்தாமணி சில குறிப்பிட்ட சாதனைகளைக் கண்டது.

சிந்தாமணியின் நாயகன் எம்.கே.தியாகராஜ பாகவதர். பவளக்கொடி படம்தான் பாகவதர் நடித்த முதல் படம். ஆனால் அது பெருவெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது. இந்தச் சிந்தாமணிதான் பாகவதரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டுசென்றது. இந்தப் படத்தை எரகுடிப்பாடி வரதாராவ் என்ற ஒய்.வி.ராவ் இயக்கினார். இந்த வரதாராவ் அந்த நாளின் பன்முகத்திறன்கள் கொண்ட கலைஞன். நல்ல அழகனான ராவ் மௌனப் படங்களின் காலத்திலேயே நாயகனாக வலம்வந்தவர். சினிமாவின் நுட்பங்கள் அறிந்த ராவ் சிறந்த இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். கன்னட மொழியின் முதல் பேசும்படமான சதி சுலோச்சனாவை இயக்கிய பெருமைபெற்ற இந்த ஆந்திராக்காரர் தமிழில் சில படங்களையே இயக்கினார். அதில் மிகமுக்கியமான படமாக இந்தச் சிந்தாமணி இடம்பெற்றது.

mkt_250சிந்தாமணி ஏற்கெனவே வட இந்தியாவில் நாடகமாகப் பல மொழிகளிலும் புகழ்பெற்றிருந்தது. பின்னர் அது மௌனப் படமாக எடுக்கப்பட்டு ஒரு சுற்று வந்தது. அப்போதும் அதனை விடமனமில்லாமல் பேசும்படமாக உருவாக்கினார்கள். முதலில் வங்க மொழியிலும், பின்னர் இந்தி மற்றும் தெலுங்கிலும் தயாரானது இந்தச் சிந்தாமணி. 1937 ல் மதுரையைச் சேர்ந்த பருத்தி நூல் வியாபாரிகள் ராயல் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தை நடத்திவந்தனர். இந்த நிறுவனத்தின் சார்பில்தான் சிந்தாமணி தமிழுக்கு வந்தாள்.

முதலில் ஒய்.வி.ராவ்தான் நாயகனாக நடிப்பதாக இருந்தது. செறுகளத்தூர் சாமாவின் பெயரும் இந்தப் படத்தின் கதாநாயகன் பட்டியலில் அடிபட்டது. ஆனால், தியாகராஜ பாகவதர் நாயகன் என்று இறுதியில் ஒப்பந்தமானது. இதன் நாயகி சிந்தாமணியாக நடித்த கன்னடத்தைச் சேர்ந்த அஸ்வத்தம்மாவின் படங்களும் பெயரும்தான் முதலில் பிரதானமாக விளம்பரப்படுத்தப் பட்டது. அஸ்வத்தம்மாவின் பெயருக்கு அடுத்துதான் பாகவதரின் பெயரே போடப்பட்டது. காரணம், அப்போது பாகவதர் அவ்வளவாகப் புகழடையவில்லை. இதையெல்லாம் விசித்திரக்கூத்தாக்கிவிட்டு பாகவதரின் நல்ல குரல் வளமும், நடிப்பும், அழகிய தோற்றமும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டுவிட்டன. பாகவதர் தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரானது இப்படித்தான். 1937 ல் வெளிவந்த இந்தச் சிந்தாமணியும், அம்பிகாபதியும்தான் பாகவதருக்கு அந்தச் சிறப்புப் பெயர் கிடைக்கக் காரணமாயின.

சிந்தாமணியில் பாகவதரோடு நாயகியாக அஸ்வத்தம்மா, செறுகளத்தூர் சாமா, எல்.நாராயணராவ், எஸ்.எஸ்.ராஜாமணி, சோமையாஜுலு போன்றோரும் நடித்தனர். இயக்குநரான ஒய்.வி.ராவ் திரைக்கதையை எழுதியதோடு சிறிய வேடமொன்றில் நடிக்கவும் செய்தார். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதியதோடு இசையமைக்கவும் செய்தார். 

அஸ்வத்தம்மா நல்ல பாடகியாகவும் இருந்ததால் பாகவதருக்கு ஈடுகொடுத்துப் பாடினார். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் அவரது தமிழ் உச்சரிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்களாம். நல்ல அழகியுமான அஸ்வத்தம்மா சிந்தாமணியைத் தொடர்ந்து இன்னொரு தமிழ்ப் படத்திலும் நடித்தார். ஆனால் அதற்குள் காசநோய் அவரின் கலை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 1939 லேயே மரணத்தைப் பரிசளித்துவிட்டது ஒரு சோகம்தான்.

சிந்தாமணி வெளிவந்து முன்னெப்போதும் வேறெந்தப்படமும் பெறாத வரவேற்பைப் பெற்றது. அதுவரையில் எந்தப் படமும் இப்படி ஓடியதில்லை எனுமளவுக்கு வெளியான திரையரங்குகளிலெல்லாம் ஒரு வருடத்தையும் கடந்து ஓடிக்கொண்டேயிருந்தது. இது அந்நாளின் அதிசயம். தமிழ் சினிமா பேசத்தொடங்கி ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களிடையே சலிப்பு ஏற்படவில்லை. பேசும் சினிமா எனும் அந்த மாய உலகத்தை வியந்து வியந்து வரவேற்றார்கள் இந்திய, தமிழ் சினிமா ரசிகர்கள். கறுப்பு வெள்ளைதான், ஏற்கெனவே தாங்கள் அறிந்திருந்த கதைகள்தான் என்றாலும் தொழில்நுட்பத்தில் அது நாடகத்தைவிடவும், கூத்தைவிடவும் மேம்பட்டிருந்தது. சினிமா மட்டுமே தங்களின் ஒரே பெழுதுபோக்கு என்ற நிலைமையும் இந்தியர்களை சினிமா வெகுவாக ஆக்கிரமித்துக்கொள்ளக் காரணமாயிற்று.

இந்தப் படத்தின் விமரிசனத்தை வழக்கம்போல கல்கி சுவைபட எழுதினார். அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: இந்தப் படத்தைப் பார்த்தபின் இல்லத்தரசிகளெல்லாம் மாயப்பிரபஞ்சத்தில் என்று முணுமுணுத்துக்கொண்டேதான் தங்களின் கணவன்மார்களுக்குக் காலையில் காபி போட்டுக்கொண்டுவந்து தரப்போகிறார்கள். அதேபோல, தங்களின் ஆசை மனைவிமாரைப் பார்த்துக் கணவன்மார்கள் அன்பொழுக, ராதே உனக்குக் கோபம் ஆகாதடி என்று பாகவதர் பாடுவதைப் பாடிக் களிக்கப்போகிறார்கள்.

1938 ஏப்ரல் ஈழக்கேசரியில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இந்தப் படத்தை இப்படிப் புகழ்ந்து எழுதியிருந்தார்: “தமிழில் இதுவரையில் தயாராகி வெளிவந்துள்ள சுமார் 80 படங்களில் சிந்தாமணிதான் மிகச் சிறந்த படமாக விளங்குகிறது. கதையமைப்பு, வசனம், இசை, நடிப்பு, கேமிரா ஒளிப்பதிவு, ஒலியமைப்பு என்று எல்லாமே மிகச்சிறப்பாக இந்தப் படத்தில் உள்ளது. இதுவரையில் வந்த படங்களிலேயே அதிக நாட்கள் ஓடுகிற படம் இதுதான். சிந்தாமணி படத்தின் நாயகி ஒரு கன்னடத்து நடிகையாக இருந்தபோதிலும் அவரது தமிழை நம் ரசிகர்கள் மிக விரும்புகின்றனர். தியாகராஜ பாகவதரின் நடிப்புத் திறனும் பாடும் அழகும் பெரிதும் வெளிப்பட்டுள்ளது.” 

சிந்தாமணியின் பாடல்கள் எல்லோராலும் பெரிதும் விரும்பிக் கேட்கப்பட்டன. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி, ஞானக் கண், கிருஷ்ணா கிருஷ்ணா, திவ்ய தரிசனம், மாயப் பிரபஞ்சத்தில், நாடகமே உலகம் ஆகிய பாடல்கள் நல்ல இசையும் குரலும் இணைந்ததால் விளைந்த இன்பத்தை ரசிகர்களுக்கு வழங்கின.

சிந்தாமணி வெளிவந்து 74 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. அதன் பவள விழா துவங்குகிற இன்றும் அது அந்நாளைய நினைவுகளைப் பேசிக்கொண்டிருக்கிறதல்லவா? இத்தனைக்கும் அதன் கதை என்னவென்று கேட்டால் நாமெல்லாம் கொஞ்சமேனும் நகைக்கத்தான் செய்வோம். வடமொழியில் எழுதப்பட்ட சிந்தாமணி நாடகத்தின் கதை நிகழ்விடம் காசி மாநகரம். அங்கே வடமொழியில் நன்கு தேர்ச்சிபெற்ற புலவர் பில்வமங்கள் வசித்துவருகிறார். அவருக்கு சிந்தாமணி என்ற தேவதாசியோடு தொடர்பேற்படுகிறது. அதனால் அவரது வாழ்க்கை சிதைவுறுகிறது. ஆனால், சிந்தாமணியோ மிகச்சிறந்த கிருஷ்ண பக்தை. அவளின் தொடர்பால் பில்வமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணனின் மீது ஈடுபாடுகொள்ளத் தொடங்குகிறான். அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணனை வைத்து வடமொழியில் ஸ்ரீகிருஷ்ண கர்னாமிர்தம் என்ற காவியத்தை இயற்றுகிறார். இதுதான் கதை. எப்படியிருக்கிறது கதை? 

கதை எப்படியிருந்தாலும், முன்னெப்போதும் தாங்கள் கண்டு - கேட்டு அனுபவித்திராத இசையும், நடிப்பும், காட்சியமைப்பும், வெளிப்புறக் காட்சிகளும் சினிமா என்ற அந்தப் புதுமை ஊடகத்தின்பால் ரசிகர்களைக் கிறங்கச் செய்தன என்றால் அது மிகையல்ல.

தாங்கள் நுகரத்தொடங்கியிருக்கும் ஊடகம் மிகவும் புதியதென்பதால் அதன் உள்ளடக்கம் எப்படியிருப்பினும் ரசிகர்களின் ஈர்ப்பை சினிமா பெறத்தவறவில்லை. இதுதான் அந்நாளைய நிலைமை. இன்றும்கூட சினிமா நமது பாமர ரசிகர்களைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கும்போது அன்றைய துவக்ககாலம் அப்படித்தானே இருந்திருக்க முடியும்?

Pin It