பாரம்பரியமிக்க நமது சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து விதிகளை பிறப்பித்துள்ளது. விதிகள் 25-5-2016 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஒழுக்கக்கேடாக செயல்பட்டு வழக்கறிஞர் சமுதாயத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் உருவாகக் காரணமாக இருக்கின்ற வழக்கறிஞர்களை அடக்கி ஒடுக்கிட இந்த விதிகள் அவசியம் என்று ஒரு சிலரும், சுதந்திரமாக தொழில் செய்யும் தங்களது உரிமையை இந்த புதிய விதிகள் நசுக்குவதாகவும், விதிகளை அறிமுகப்படுத்துவற்கு முன்பு முறையாக வழக்கறிஞர் சங்கங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்று பெரும்பான்மையானவர்களும் வாதிட்டு வருகின்றனர். எந்த செயல்கள் ஒழுங்கீனம், எவைகள் ஒழுங்கீனமானவை அல்ல என்பதற்கு பல முன் தீர்ப்புகள் உள்ளன. எனவே இந்த புதிய திருத்தங்கள் தொடர்பான சட்டநிலையினை முன் தீர்ப்புகளின் வழியில் பகுத்து ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

high court chennai1926-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் பின்னர் பலமுறை திருத்தப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது, இடையூறு ஏற்படுத்துவது, அவமதிப்பது என பல்வேறு வியாக்கியானங்கள் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதோடு இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடுபவர்களுக்கு நேரிடையாக நீதிமன்றமே தண்டனை வழங்கிடவும், மேல்முறையீடு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர இந்திய தண்டனை சட்ட பிரிவு 228-ன் படி நீதித்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பொது ஊழியருக்கு அவமானமோ, இடையூறோ செய்வோருக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கிடவும் அபராதம் விதிக்கவும், சட்டம் இயற்றப்பட்ட 1860ம் ஆண்டிலேயே வழிவகை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 345-ன் படி குற்றம்சாட்டப்பட்டுள்ளவரை இ.த.ச. பிரிவின் கீழ் தண்டிப்பதற்கு முன் நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சட்டங்களில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகின்ற வழக்கறிஞர்களின் உரிமத்தை நீதிமன்றமே ரத்து செய்திட வழிவகை செய்யப்படவில்லை. அதாவது தவறிழைக்கும் வழக்கறிஞர்களின் தொழில்புரியும் உரிமத்தை ரத்து செய்திட வேண்டுமென்றால் வழக்கறிஞர்கள் சட்டம் 1961ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள அந்த மாநில பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். வழக்கறிஞர் ஒழுங்கீனமாக செயல்பட்டார் என்பது விரிவான விசாரணை நடைமுறைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அதாவது நிரூபிக்கப்பட்ட ஒழுங்கீனத்திற்காக மட்டுமே வழக்கறிஞர்கள் தொழில்புரிவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது தடை செய்யப்படும். இதன் பேரில் மேல்முறையீடு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பார் கவுன்சில் தேர்தல் நமது தேசத்தில் நடைமுறையிலுள்ள ஜனநாயக முறைப்படி நடைபெறுவதும், அவ்வப்போது தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளை வகுப்பதும் பிறகு தேர்தல் திருவிழா நடப்பதும் நாம் அறிந்தது தான். எவ்வாறாகினும் வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட உரிமை. தொழில் செய்யும் இந்த உரிமையை உகுந்த வழிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டத்திற்கு மாறாக நிறுத்தி வைப்பதற்கோ, தடை செய்வதற்கோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ல் இவ்வாறு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கி பாராளுமன்றம் திருத்தம் கொண்டு வந்து புதிய விதிகளை சேர்த்திடவும் இல்லை.

ஆனால் சட்டத்தில், விதிகளில் இல்லாத ஒரு நடவடிக்கையை நீதிமன்றங்கள் தண்டனையாக திணிக்க முடியுமா என்பதே கேள்வி. இயற்றப்பட்ட சட்டங்களை செல்லாது என அறிவிக்கவோ, சட்டங்களை பொருள் விளக்கம் செய்திடவோ நீதிமன்றங்களுக்கு வழிவகை இருக்கின்ற போது புதிய சட்டங்களை தீர்ப்புகள் வாயிலாக நீதிமன்றங்கள் அமுல்படுத்த முடியுமா என்பதே கேள்வி. 203 பத்திகளை கொண்ட பிரபலமான R.K.ஆனந்த் வழக்கில் (2009-5-MLJ-1377 SC) மூன்று நீதியரசர்களடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பத்தி 206(3)-ல் வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 34-ன் கீழ் விதிகளை வகுக்காத உயர்நீதிமன்றங்கள் காலதாமதமின்றி விதிகளை தீர்ப்பு பத்தி 147-க்கு இணங்க வகுத்திட வேண்டுமென நெறியுறுத்தியுள்ளது. 29-7-2009 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பின்னர் 21-11-2012 அன்று மீண்டும் விசாரணைக்கு வரப்பெற்று தவறிழைத்த வழக்கறிஞருக்கு தண்டனை வழங்கப் பெறுவதோடு முற்றுப் பெற்று விட்டது.

நமது சென்னை உயர்நீதிமன்றத்தினால் வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ல் வகுத்துள்ள விதிகள் 21-1-1970 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டன. விதி 14 நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட எவரொருவரும் நீதிமன்றங்கள் முன்னிலையாகி வழக்காடிட முடியாது என்று சொல்லுகின்றது. இந்தப் பின்ணனியில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளின் செல்லும் தன்மையை பரிசீலனை செய்திட வேண்டியுள்ளது. மாண்பு உச்சநீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் நமது நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்று இந்திய அரசியலமைப்பு சட்ட ஷரத்து 142 சொல்லுகிறது. இரண்டு நீதியரசர்களால் பிறப்பிக்கப்படும் தீர்ப்பு ஏற்கனவே மூன்று நீதியரசர்கள் பிறப்பித்த தீர்ப்பிற்கு மாறாக இருந்தால் முரண்பாடு எழுகின்றது. சட்டநிலைகளை சரியாக விளக்கிடாத தீர்ப்புகள் per-incuriam எனப்படுகின்றன.

ஜந்து நீதியரசர்கள் அடங்கிய அமர்வு அல்லது அரசியல் சாசன அமர்வினால் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் வலிமைமிக்க முன் தீர்ப்புகளாகி அதன் பின்னர் வரும் எல்லா தீர்ப்புகளையும் முன்தீர்ப்புகள் கட்டுப்படுத்துகின்றன. அதேபோல் தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றம் அந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்திடாத போதோ அல்லது அதற்கு மாற்றாக பாராளுமன்றம் சட்டம் கொண்டு வராதபோதோ ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பே எல்லா வழக்குகளிலும் மேலதிகாரம் செலுத்தக் கூடியதாகும். நடைமுறையில் இதுபோல் மூன்று நீதியரசர்கள் ஆயம் வழங்கிய தீர்ப்புகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்புகளையோ தொடர்புடைய வழக்கில் அந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படாத போது ஒரு சில சமயங்களில் பிழைகள் ஏற்படுகின்றன. இந்த கட்டுரையின் ஆசிரியர்களுக்கு 17-4-1998 அன்று ஐந்து உச்சநீதிமன்ற நீதியரசர்களால் (AIR 1998 Supreme Court 1895) Supreme Court Bar Association –Vs- Union of India என்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு கவனத்திற்கு வரப்பெற்றது.

“வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு மட்டுமே தொழில் புரியும் போதோ (அ) மற்ற வகையிலோ வழக்கறிஞர்களால் செய்யப்படும் ஒழுங்கீனங்களுக்காக தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வழக்கறிஞர் தொழில்புரிவதை நிறுத்தி வைக்கும் தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்று அறிவிக்க வேண்டி” உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளரால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு முன் தீர்ப்புகளை அலசி ஆராய்ந்துள்ள ஐந்து நீதியரசர்களின் ஆயம் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் கோரிக்கையை அங்கீகரித்து அறிவித்து விட்டது. இந்த கட்டுரையின் ஆசிரியர்கள் அலசி ஆராய்ந்த வரையில் ஐந்து நீதியரசர்கள் வழங்கியுள்ள தீர்ப்பு இன்று வரை மறு ஆய்வு செய்யப்படவில்லை. ஒருவேளை தீர்ப்பு தற்போது போராட்ட களத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கற்றறிந்த வழக்கறிஞர்களின் மேலான கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம். எவ்வாறெனினும் வழக்கறிஞர்கள் தொழில்புரிவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ அல்லது நிரந்தரமாக நிறுத்தி வைக்கவோ, அதுகுறித்து விசாரணை செய்திடவோ நீதிமன்றங்களுக்கு தண்டனை வழங்கும் காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே அமுலில் உள்ள வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழான விரிவான நடைமுறைகளைப் பின்பற்றிடாமல் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு நேரிடையாக வழங்கிட விளைவது ஏற்புடையதல்ல.

மேலும் ஐந்து நீதியரசர்கள் வழங்கியுள்ள தீர்ப்பு நடைமுறையில் இருக்கின்ற வரையில் தீர்ப்பை இல்லா நிலையாக்கும் விதிமுறைகளை உருவாக்க பாராளுமன்றத்தை தவிர வேறு எவருக்கும் அதிகாரம் இல்லை. ஆக தற்போதைய புதிய விதிகளை அனுமதிப்பதின், அங்கீகரிப்பதின் மூலம் பாராளுமன்றத்திற்கு மாற்று அமைப்புகளை உருவாக்கிய பெருமை நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளது. நீதிமன்றம் தன்னுடைய ஆள்வரை என்ன என்பதனை பொருட்படுத்தாமல், தன்னுடைய ஆளுகையை வேறு அமைப்பிற்கு ஒப்படைத்தும் உள்ளது. இச்செயல் ஆங்கிலேய கும்பினி ஆட்சி அருமையான ஆட்சி என்று எண்ணி மேலதிகார அமைப்பிற்கு உட்படுத்திக் கொண்டுள்ள குறுநில மன்னர்களின் செயல் போல் உள்ளது. இவ்விடத்தில் எம் தேசியகவி பாரதியின் வரிகள் நினைவு கூறத்தக்கவை.

“படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோவென்று போவான்”

- வழக்கறிஞர்கள் சுப்பு & ஜஸ்டின், All India Lawyers Union, வழக்கறிஞர்கள், தூத்துக்குடி

Pin It