வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்டம் ஒரு வழியாகக் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால அதில் பல முரண்பாடான பிரிவுகள் உள்ளன. அவை விவாதத்துக்குரியவை...

யாரும் அதைப் பற்றிப் பேச முன்வருவதில்லை. பெண்களே கூட அதைப் பற்றி விவாதிக்கக் கூச்சப்பட்டுக்கொண்டு விலகிக் கொள்கின்றனர். வேலை செய்யும் இடங்களில் உண்மையிலேயே பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனரா? இது பற்றிக் கேள்வி கேட்கும்போது பல பெண்கள் தெளிவில்லாத பதிலையே அளிக்கின்றனர். சிலர் கூடுதலாகப் பேச முன்வருகின்றனர். வேறு சிலர் இது ஒரு பிரச்சனையே இல்லை, வேலை செய்யும் இடங்களில் வரும் “தீங்கற்ற பாலியல் தொல்லைகளைச்” சமாளிப்பதற்கு பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு தான் தேவை என்று தெரிவிக்கின்றனர்.

      ஆனால், பெண்கள் தங்கள் உரிமைகள் பற்றி மேலும் மேலும் விழிப்புணர்வு பெற்றுவருவதால் அவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வாறாக அண்மையில் மும்பையில் பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்காவலர்கள் பேசியிருக்கிறார்கள், ஆசிரியைகள் பேசியிருக்கிறார்கள். வேறு பணிகளில் பணியாற்றும் பெண்களும் கூட அப்படிப்பட்ட துன்புறுத்தல் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும், இந்தப் பிரச்னையை வெளியே தெரிவிப்பதற்குத் தயங்குவதற்குக் காரணம் துன்புறுத்துவோருக்கும் அவர்களுக்கும் இடையில் பதவி நிலையில் இருக்கும் ஏற்றத்தாழ்வே ஆகும். முறையீடு செய்தால் வேலைக்கு ஆபத்து என்னும் நிலை இருக்கும்போது பெண்கள் வேலையைக் காப்பாற்றிக் கொண்டு  அமைதியாக இருந்து விடுவதையே தேர்ந்தெடுக்கின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் முறையீடு செய்ய விரும்பினாலும் கூட, பெண்கள் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாக தருவதற்கு முழு நம்பிக்கைக்குரிய, பக்கச்சார்பு இல்லாமல் விசாரிக்கக் கூடிய அமைப்பு முறைகள் பெரும்பாலான நிறுவனங்களில் இருப்பதில்லை.

பயன்தராத வழிகாட்டுதல்கள்

1997ல் விசாகா எதிர் இராஜஸ்தான் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றே இதுவரை இந்தப் பொருளில் முன்னுதாரணமாகச் செயல்படக்கூடியதாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சட்டம் இல்லாதபோது, வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்குரிய வழிகாட்டு நெறிகளை நீதிமன்றம்  வகுத்தது. இது போன்ற முறையீடுகளை ஆய்வு செய்வதற்கு உள் விசாரணைக் குழுக்களை அமைக்குமாறு வேலையளிப்போரைக் கேட்டுக் கொள்வதும் இவ்வழிகாடுதல்களில்  அடங்கும். ஆனால இது முறையாகச் செயல்படும் நிறுவனங்களில் வேலைசெய்யும் பெண்களுக்கு மட்டுமே உதவும்.

முறைசாரா நிறுவனங்களில் வேலை செய்யும் பல லட்சக்கணக்கான பெண்களின் நிலை என்ன? மேலும் இவை வழிகாட்டுதல்கள் மட்டுமே சட்டம் அல்ல என்பதால் இவை வழக்கமாகவே புறக்கணிக்கப்பட்டன அல்லது தீவிரமாகக் கடைபிடிக்கப் படவில்லை. இவ்விதமாக, குழுக்கள் அமைக்கப்பட்ட நிறுவனங்களில் அவை  இயங்குவதில்லை அல்லது அவை இருப்பதே பெண்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படுவதில்லை.

         வேலை செய்யும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவதைத் தடுப்பதற்கு சட்டம் கொண்டுவரவேண்டும் அப்போது தான் அச்சட்ட விதிகளை மீறுவோருக்குத் தண்டனை வழங்க முடியும் என்று பெண்கள் அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. இறுதியாக, அத்தகைய ஒரு சட்டம் வந்துள்ளது. வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலிலிருந்து  பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் முன்வரைவு டிசம்பர் 7 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் கிருஷ்ணா திராத் அதைத் தாக்கல் செய்தார்.

      துரதிர்ஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் எந்தப் பணியுமே நடைபெறாத ஒரு அமர்வில் இது நடந்துள்ளது. 2ஜி ஊழல் காரணமாக பல நாட்களாக, வாரங்களாக பாராளுமன்றம் முடங்கிக் கிடந்தது. அதன் விளைவாக இது போன்ற ஒரு சட்டம் தொங்கு நிலையில் விடப்பட்டது. அது விவாதிக்கப்படுமா அல்லது விவாதம் இல்லாமலே நிறைவேற்றப்படுமா அலலது நிலுவையிலேயே இருந்துவிடுமா, பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிக்குத் திரும்புவார்களா என்பது யாருக்கும் தெரியாது.
                                    
இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தபட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை  என்றாலும் கூட, அது சட்டமாக்கப்படுவதற்கு முன்னதாக விளக்கமாக விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. நோக்கங்கள் மற்றும் காரணங்கள் பற்றிய அறிக்கையில் அந்த சட்ட முன்வரைவு பின்வருமாறு தெரிவிக்கிறது “வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களின் சமத்துவம், உயிர்வாழும் உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை மீறுவதாகக் கருதப்படுகிறது. அது வேலைச் சூழலில் பாதுகாப்பின்மையையும் பகைமையையும் உருவாக்குகிறது. அது வேலையில் பங்கேற்பதில் பெண்களின் ஊக்கத்தை குன்றச்செய்து அதன்மூலம் அவர்களுடைய சமூகப் பொருளாதார அதிகாரம் பெறுதலையும், உள்ளடங்கிய வளர்ச்சிக் குறிக்கோளையும் எதிர்மறையாகப் பாதிக்கிறது.”
        
  அச்சட்டம் வேலையளிக்கும் முதலாளி ஒவ்வொருவரும் தமது நிறுவனத்தில் முறையீடுகளை ஆய்வு செய்வதற்கு ஒரு உட்குழு நிறுவ வேண்டும் என்று கூறுகிறது. மேலும் அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்யும் பெண்களின் முறையீடுகளை விசாரிப்பதற்கான மாவட்ட மட்டத்திலான உள்ளூர் குழுக்களை நிறுவுவதையும் கட்டாயமாக்குகிறது. பின்னது குறிப்பாக மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் பெரும்பான்மையான பெண்கள் அமைப்புசாரா துறைகளில் தான் வேலை செய்கின்றனர். முறையான நிறுவனங்களுக்கு மட்டுமே என்று இச்சட்டம் வரையறுக்கப்படுமானால் இவர்கள் இச்சட்டத்தின் எல்லைக்கு வெளியே இருப்பார்கள்.      

    முறையீடு செய்யும் பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் துன்புறுத்துவோருக்குத் தண்டனை வழங்குவதற்கும் இச்சட்டம் விதிமுறைகளை வகுத்துள்ளது. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் போலவே இச்சட்டத்தின் கீழும் முறையிடும் பெண்கள் அல்லது சாட்சிகள் பெயர்கள் மற்றும் முகவரிகளை வெளியிடுவதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.                               

          இருப்பினும் இச்சட்டம் பல முக்கியமான நடவடிக்கைகளில் குறைபாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்கள்  இச்சட்டத்தின் எல்லைக்குள் சேர்க்கப்படவில்லை. நமது பெருநகரங்களில் பல லட்சக்கணக்கான பெண்கள் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இச்சட்டத்தின் எல்லைக்குள் சேர்க்கப்படாதது வியப்பாக இருக்கிறது. ஒரு திரைப்பட நடிகரால் வீட்டு வேலை செய்யும் பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது குறித்த வழக்கு இன்னும் மும்பை நீதிமன்றங்களில் விசாரிக்கப் பட்டு வருகிறது. இது போன்ற பல வழக்குகள் முறையீடு செய்யும் கட்டதிற்கே வந்து சேர்வதில்லை. அப்பெண்கள் தாங்கள் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்வதே பெரும்பாலும் நடக்கிறது.

மும்பையில் வீட்டுவேலை செய்யும் ஒரு சில பெண்களிடம் நான் விளக்கமாக விவாதித்து அவர்கள் தமது சொந்த தற்காப்பு முறையை அமைத்துக் கொண்டுள்ளதை அறிந்தேன். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் வீட்டு வேலை செய்யும் பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டது தெரிய வரும்போது அவர்கள் அதை முடிந்தவரை அனைத்துப் பெண்களுக்கும், குறிப்பாக இளம்பெண்களுக்குத் தெரிவித்து அந்த வீட்டுக்கு வேலைக்குச் செல்லாதவாறு தடுக்கின்றனர். எனவே, வேலை செய்யும் இடங்களில்  பிற பெண்களை விடக் கூடுதலாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள வீட்டுவேலை செய்யும் பெண்களை அரசாங்கம்  ஏன் இச்சட்டத்தில் சேர்த்துகொள்ளவில்லை என்பதற்கு விளக்கமளிக்கப் படவில்லை.

விவாதத்துக்குரிய பிரிவுகள் 

ஒரு முறையீட்டைப் பதிவு செய்த பெண் தான் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதை மெய்ப்பிக்க முடியாதபோது அவள் தண்டிக்கப் படவேண்டும் என்று கூறும் இச்சட்டப் பிரிவு மர்மமானதாக இருக்கிறது. சில பெண்கள் இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் ஒரு நிறுவனத்தின் உட்குழு ஒரு பெண்ணின் முறையீட்டில் நம்பிக்கையில்லை என்று கூறும் ஒரு சொல்லே அவரைத் தண்டிப்பதற்குப் போதுமானதாக இருக்கமுடியுமா? பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படும் ஒரு பெண் அதை நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கமுடியாமல் போனால் அதற்காக அவர் தண்டிக்கப்படுவதில்லை. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பெரும்பாலும் நீதிமன்றங்களில் தோற்றுவிடுகின்றன. ஏனென்றால் அரசுத் தரப்பால் அந்த வழக்கை போதுமான அளவுக்கு வலுவாக நடத்த முடிவதில்லை அல்லது நடத்துவதில்லை.                       

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தமது வழக்கை மெய்ப்பிக்க பெண்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. பாலியல் வன்புணர்ச்சியில் உடல் ரீதியான சான்று இருக்கிறது. சொற்களையும் சேட்டைகளையும் கொண்ட  தொல்லையை எதைக் கொண்டு மெய்ப்பிப்பது? சம்பந்தப்பட்ட ஆணும பெண்ணுமே உண்மையை அறிவர். யாருடைய சொல் ஏற்றுக் கொள்ளப்படும்? இத்தகைய வழக்குகள் பலவற்றிலும் போல, அதிகாரச் சமநிலை எப்போதும் பெண்களுக்கே மிகவும் எதிராக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலை மெய்ப்பிப்பது இன்னும் கடினமானதாக ஆகிவிடுகிறது. இந்தப் பின்னணியில், தண்டனைப் பிரிவு இருக்குமானால் தாம் தண்டிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை மெய்ப்பிக்கும் முயற்சியிலிருந்தே விலகி ஒடிவிடுவர்.

          பாராளுமன்றத்தின் கடந்த அமர்வில் விவாதிக்கப்பட்டிருக்க  வேண்டியவற்றில் இவை சில முக்கியமான கேள்விகளாகும். இந்தச் சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் இறுதியாக விவாதத்திற்கு வரும்போது நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும், இவ்விசயங்களில் நமது பாராளுமன்ற வரலாற்றைப் பார்க்கும்போது, அவர்களில் மிகப் பலர் ஒரு சிறிய அளவுக்கேனும் இச்சட்ட முன்வரைவு  குறித்து  ஏதாவது தீவிர அக்கறை செலுத்துவார்கள் என்பது ஐயத்திற்கு இடமானதே. இச்சட்டத்தின் உருவாக்கத்தில் பலப்பல பெண்கள் அமைப்புக்கள் பெருமுயற்சி எடுத்தபிறகு அச்சட்டம் இப்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்ப்படுமானால் அது துரதிர்ஷ்டமானதாகவே இருக்கும்.

நன்றி: தி இந்து -26.12.2010

- கல்பனா சர்மா
தமிழில் வெண்மணி அரிநரன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It