தென் இந்திய ஆராய்ச்சியில் ஈடுபட்டுழைத்தவர். சுசீந்திரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் ஆகிய ஊர்களில் உள்ள திருக்கோயில்களில் மறைந்தும், புதைந்தும் கிடந்த கல்வெட்டுகளை வெளிக் கொணர்ந்து நுணுகி ஆராய்ந்தவர். செப்பேடுகள், ஓலைக்சுவடிகள் முதலியவைகளையும் தேடித்தேடி ஆராய்ச்சி சேர்ந்தவர். கவிதைகள், உரைநடை நூல்கள், இயல், இசை, நாடகம் என்னும் முத்துறைக்கும் எண்ணற்ற நூல்கள் அளித்தவர். பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்தவர். குமரியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு அரும்பாடுபட்டவர். 'கவிமணி' என்னும் சிறப்புப்பட்டம் அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டவர். 'தேசியக்குயில்' என மக்களால் போற்றப்படுகிறவர்! அவர்தான் 'கவிமணி' தேசிய விநாயகம் பிள்ளை!

kavimani desiga vinayagam pillaiகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் உள்ள 'தேரூர்' என்னும் சிற்றூரில், சிவதாணுப் பிள்ளை-ஆதிலட்சுமியம்மையார் தம்பதியினருக்கு, 27.07.1876 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் விநாயகம் பிள்ளை. தேரூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். அக்காலத்தில் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனால், பள்ளியில் அவர் மலையாளமே கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் தாய் மொழியாம் தமிழ் மீது பற்றுக் கொண்டு தமிழை ஆர்வத்துடன் கற்றார்.

தேரூரின் வடக்குப் பக்கத்தில் உள்ள ஏரியில் 'வாணன் திட்டு' என்னும் பெயரில் ஒரு தீவு உள்ளது. அத்தீவில் உள்ள திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான மடத்தில் வாழ்ந்து வந்த சாந்தலிங்கத் தம்பிரான் என்பவரிடம் தமிழ் கற்றார்.

தொடக்கக் கல்வியை முடித்ததும் கோட்டாற்றில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். மீண்டும் சாந்தலிங்கத் தம்பிரானிடம் சென்று தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயின்றார். தமிழில் கவிதை புனையும் ஆற்றல் கைவரப்பெற்றார். பள்ளியில் பயிலும் போதே பாடல் எழுதினார். தமிழாசிரியரின் பாராட்டையும் பெற்றார்! தம்பிரான் வேண்டுகோளுக்கிணங்க 'அழகம்மை ஆசிரிய விருத்தம்' பாடினார்.

நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. படிப்பை முடித்தார். பின்பு திருவனந்தபுரத்தில் ஆசிரியப்பயிற்சியை முடித்தார். உமையம்மையார் என்பவரைத் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

கோட்டாற்றில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பதோடு, குழந்தைகளுக்கான பாடல்களும் இயற்றினார். அவரின் சிறந்த ஆசிரியப் பணியினால் ' நல்லாசிரியர்' எனப் போற்றிப் பாராட்டப்பட்டார். பின்பு, கோட்டாற்றில் உள்ள ஆசிரியப் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நாகர்கோவிலில் போதனாமுறைப் பாடசாலையிலும், திருவனந்தபுரம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமையாசிரியராகவும், மகாராஜா கல்லூரியில், தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

புத்தபிரான் பற்றி ஆங்கிலக் கவிஞர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய 'லைட் ஆப் ஆசியா' (Light of Asia) என்னும் நூலை 'ஆசிய ஜோதி' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

பாரசீகக் கவிஞர் உமர்கயாம் பாடல்களையும் தமிழில் பெயர்த்தார். இவரது, 'மலரும் மாலையும்' என்னும் கவிதை நூலில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பல இடம் பெற்றுள்ளன.

பிறமொழி இலக்கியங்களைக் கவிதைத் தமிழில் கொண்டு வந்து சேர்த்தவர் 'கவிமணி'. மேலும் 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' –என்ற நகைச்சுவை நூலையும், 'தேவியின் கீர்த்தனைகள்' என்ற பக்தி நூலையும் படைத்து அளித்துள்ளார். இவரது பாடல்கள் பாமரரும் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும்படி எளிமையான முறையில் அமைந்துள்ளன.

அனைவரும் போற்றும் 'காந்தளூர்ச் சாலை' என்னும் ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1926 முதல் 1936 வரை, தமிழ்ப் பேரகராதியின் சிறப்பு ஆலோசகராகவும், 1941 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் பல்கலைக் கழக தமிழ்ப்பாடக் குழுவில் உறுப்பினராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றி பலரின் பாராட்டைப் பெற்றார்.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர், 24.12.1940ஆம் நாள், சென்னை பச்சையப்பன் கல்லூரியல், 'தமிழ்வேள்' உமா மகேசுவரனார் தலைமையில் தேசிய விநாயகம் பிள்ளைக்குப் பாராட்டு விழா நடத்தினர். அந்த விழாவில் அவரைப் பாராட்டி 'கவிமணி' என்னும் சிறப்புப் பட்டம் அளித்தனர்.

செட்டிநாட்டு அரசர் அண்ணாமலைச் செட்டியார், கவிமணிக்கு பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். திருநெல்வேலியிலும், 1944ஆம் ஆண்டு, கவிஞருக்குப் பாராட்டு விழா நடத்தினர்.

நாகர்கோவிலில், கவிமணிக்கு எழுபதாவது ஆண்டு விழா நடை பெற்றது. அந்த விழாவில், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கிப் பாராட்டினார். அவர் பிறந்த ஊரில் மக்கள் நன்கொடை திரட்டிக், 'கவிமணி நிலையம்' ஒன்று கட்டி எழுப்பி உள்ளனர்.

வள்ளுவர், ஒளவையார், கம்பர், பாரதியார் பற்றியெல்லாம் பாடல்களைப் பாடிப் பரவசம் கொண்டுள்ளார்.

“வள்ளுவர் தந்த திருமறையைத் தமிழ்
மாதின் உயர் நிலையை”
எனத் திருக்குறளைப் போற்றிப் பெருமிதத்துடன் பாடியுள்ளார்.

சிலப்பதிகாரம் குறித்து,
“தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை
தேடும் சிலப்பதிகாரம்”
எனப் பாடிப் புகழ்ந்துள்ளார்.

தமிழின் பன்முக வளர்ச்சிக்காக நாளும் பொழுதும் கவிதையில் கரைந்த, 'கவிமணி' தேசிய விநாயகம் பிள்ளை, 26.09.1954ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It