தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், ஜி.கல்லுப்பட்டியில் 1901 ஆம் ஆண்டு கரிக்கேத்தப்பன்-மல்லக்காள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் கே.வீராச்சாமி. தொடக்கப்பள்ளியை ஜி.கல்லுப்பட்டியில் படித்து விட்டு அதன் பின்பு துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

 இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு வந்த ஆங்கிலேய அரசுக்கு ராணுவ உதவியோ, பொருள் உதவியோ இந்தியர்கள் வழங்கவோ, மறைமுக ஆதரவோ தரக்கூடாது என்ற கருத்தினை மையமாகக் கொண்டு தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் காந்தியடிகளின் அனுமதி பெற்று கொடி பிடித்து நடைபயணமாக சென்னை சென்றவர் தியாகி கே.வீராச்சாமி.

 பாரதியார் பாடல்வரிகளான "அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும், அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே.." பாடியவர்கள் மீது ஆங்கிலேய காவல்துறையினர் தாக்கியதை கண்டு இவரது சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டது.

 அதன் விளைவாக 1927 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்நியத்துணி பகிஷ்கரிப்புக்காக தான் செய்து வந்த துணி வியாபாரத்திலிருந்து அந்நியத் துணிகளை எரித்து அத்துடன் துணி வியாபாரத்திற்கு முழுக்கு போட்டார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற கள்ளுக்கடை மறியலுக்காக பெரியகுளம் நகருக்கு தொண்டர்களை ஒன்று திரட்டிக் கொண்டு சென்று தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டார்.

 1941 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில்' கலந்து கொள்ள பெரியகுளம் பகுதியிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு வத்தலக்குண்டு, திண்டுக்கல், திருச்சி வழியாக சென்னையில் உள்ள எழும்பூர் சென்றார்.

 அங்கே சென்றவுடன் ஆங்கிலேயருக்கு எதிராக 'சேராதே..சேராதே..பிரிட்டீஷ் ராணுவத்தில் சேராதே.. கொடுக்காதே.. கொடுக்காதே.. யுத்தத்திற்கு நிதி கொடுக்காதே' என்ற கோஷங்கள் எழுப்பியவாறு கொடி பிடித்து ஊர்வலம் சென்றபோது ஆங்கிலேய காவல்துறையினரால் தடியடிபட்டதோடு கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 1 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

 சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் 1942 ஆம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் தொண்டர்களை ஈடுபடுத்தி தொண்டர்களுக்கு வேண்டிய உதவிகளை தலைமறைவாக இருந்து செய்து வந்தார்.

 நாடு சுதந்திரம் அடைந்த பின்ப சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அரசின் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய நிலத்தினை நிலமில்லாத ஏழைகளுக்கு தானமாக வழங்கினார். அதன்பின்னர் பூமிதான இயக்கத்தின் தலைவர் வினோபா பெரியகுளம் வந்தபோது நிலப்பிரபுகளை சந்தித்து நூற்றுக்கணக்கான நிலங்களை பெற்றுக் கொடுத்தார். நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த தியாகி 1987 ஆம் ஆண்டு இவ்வுலகிலிருந்தே விடுதலை பெற்றுவிட்டார்.

- வைகை அனிஷ் (தொலைபேசி:9715-795795)

Pin It