சென்ற வருஷம் சென்னையில் சைமன் கமிஷன் வந்திறங்கிய போது சில பார்ப்பனர்களின் பகிஷ்காரப் புரட்டு வெளியாய் விட்டதின் பலனாய் சென்னையில் சும்மாயிருந்த பார்ப்பனர்களுக்கு எல்லாம் அடி விழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டதாலும், அதனால் சில பார்ப்பனர்கள் ஊரை விட்டே ஓட வேண்டியதாய் ஏற்பட்டு விட்டதாலும், சென்னைப் பார்ப்பனர்களில் பலர் பார்ப்பன சமூகத்தின் பேரால் தாங்கள் சைமன் கமிஷனை வரவேற்கின்றோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதோடு, சில அரசியல் பார்ப்பனத் தலைவர்களான திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்கார் முதலியவர்களிடமும் சண்டைக்குப் போய் விட்டார்கள்.

periyarr 350அதாவது “பஹிஷ்காரம் என்று வாயில் சொல்லிவிட்டு நீங்கள் டெல்லிக்குப் போய் பங்களா நிழலில் உட்கார்ந்து கொள்ளுகின்றீர்கள்! நாங்கள் அடிபட வேண்டியிருக்கின்றது” என்றும், “இந்தப் பட்டணத்திலேயே இருந்து பஹிஷ்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றீர்களா? அல்லது நாங்கள் ஊரை விட்டுப் போய்விடுவதா” என்று கோபத்துடன் கேட்டார்கள். அதற்கு ஆகவே, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் நாங்கள் கடை அடைக்கப் போவதில்லை என்றும் கூட்டம் போடுவதில்லை என்றும், சர்க்கார் உத்திரவில்லாமல் தெருவில் தலை காட்டுவதில்லை என்றும், மற்ற பார்ப்பனர்களுக்கு வாக்கு கொடுத்ததுடன் சர்க்காருக்கும் போலீஸ் கமிஷனர் மூலம் தெரிவித்துவிட்டுப் பொதுமக்களை ஏமாற்ற வேண்டி சைமன் கமிஷன் நடக்காத ஏதாவது ஒரு தெருவில் சில குறிப்பிட்ட நபர்களுடன் ஊர்வலம் செல்ல மாத்திரம் அனுமதி கேட்டுக் கொண்டார்கள். போலீஸ் கமிஷனர் “சைமன் கமிஷன் வரும் வீதியில் வேண்டுமானாலும் நீங்கள் ஊர்வலம் போகலாம் நான் பந்தோபஸ்து கொடுக்கின்றேன்” என்று சொல்லியும் கண்டிப்பாய்க் கமிஷன் போகாத வீதியிலேயே ஊர்வலம் போக உத்திரவு பெற்றதோடு அதற்கும் பந்தோபஸ்தும் பெற்றுக் கொண்டார்கள்.

இதை அறிந்த ஆந்திர தேசத்துப் பார்ப்பனர்கள் போலீஸ் கமிஷனரோடு சென்னை பார்ப்பனர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்து தாங்கள் நேரில் பஹிஷ்காரம் நடத்துவதாய் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சர்க்காரார் அவர்களைப் பிடித்து அரஸ்டு செய்தவுடன் அவர்களும் தங்களை வெளியில் விட்டால் உடனே ஊருக்கு போய் விடுகின்றோம் என்கின்றதாக வாக்குக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்கள். இந்த இரண்டு விஷயங்களும், சென்னை பார்ப்பனர்களும் ஆந்திரப் பார்ப்பனர்களும் பத்திரிகைகளுக்கு ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய சேதிகளிலேயே அறியக் கிடக்கின்றது. பகிஷ்காரத்தின் யோக்கியதை இப்படி இருக்க வேறு பல பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்தின் பேரால் தாராளமாய் சைமன் கமிஷனிடம் சென்று தங்கள் சமூக நன்மைக்குத் தேவையான காரியங்களை எடுத்துச் சொல்லிவிட்டு வந்து விட்டார்கள். அவர்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை அடுத்த வாரம் வெளிப்படுத்துவோம்.

பொதுவாகச் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து தங்கள் சங்கதியை அவர்களிடம் எடுத்துச் சொல்லாதவர்கள் யார் என்பதும், சைமன் கமிஷனர்கள் உத்தேசித்து வந்த காரியங்களில் எது தடைபட்டுப் போய் விட்டது என்பதும் முக்கியமாக யோசித்துப் பார்க்க வேண்டியதோடு காங்கிரஸ் மகா சபை என்பதின் யோக்கியதை எப்படிப்பட்டது, அதை மக்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பகிஷ்காரம் என்கின்ற கூச்சல் நமது நாட்டில் ஏற்றபட்ட அந்த நிமிஷம் முதலே இக்கூச்சல் வடநாட்டில் மகமதியர்களுக்கு விரோதமாக அவர்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையை பிடுங்கிக் கொள்ளவும் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் சிறப்பாக தீண்டப் படாதார் என்று கொடுமைப் படுத்தப்பட்ட மக்களைத் தலையெடுக்க வொட்டாமல் செய்வதற்காகவும் செய்யப்பட்ட சூழ்ச்சிகள் என்று நாம் எழுதியும் பேசியும் வந்ததோடு, மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கண்டிப்பாய்த் தங்கள் நிலைமையையும் தேவைகளையும் அவசியம் கமிஷன் முன் சொல்லியே ஆகவேண்டுமென்று வற்புறுத்தியும் வந்தோம். அந்தப்படியே விஷயங்கள் நடந்ததோடு முக்கியமாய்த் தீண்டப்படாதவர்கள் எனப்பட்டவர்கள் இமயம் முதல் குமரிவரையில் ஒரே மாதிரியாகத் தங்கள் நிலைமைகளையும் தேவைகளையும் எடுத்துச் சொல்லியிருப்பது குறித்தும் அவற்றைக் கமிஷனர் கனவான்கள் நன்றாய் உணர்ந்து வேண்டியது செய்வதாய் வாக்குறுதி கொடுத்திருப்பதைக் குறித்தும் நாம் அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்தக் கமிஷன் அறிக்கையின் மீது வழங்கப்படும் சீர்திருத்தம் என்பது எத்தன்மையதுவாக இருப்பினும் நமக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை. ஏனெனில் அச்சீர்திருத்தம் என்பதில் இப்போது தெரிவிக்கப்பட்ட குறைகள் நீங்கும் படியான மார்க்கங்கள் இல்லாதிருக்குமானால் இந்தச் சர்க்காரின் கண்களில் கோலை விட்டு ஆட்டக்கூடிய நிலைமையைச் சாதாரணமாக வெகு சுலபத்தில் உண்டு பண்ணிக் கொள்ளக் கூடிய சௌகரியங்கள் தாராளமாக கிடைத்துவிடும் என்கின்ற உறுதிதான். ஆதலால் சைமன் கமிஷன் விஷயத்தில் நாம் நமது கடமையைச் செய்து விட்டோம்.

(குடி அரசு - கட்டுரை - 10.03.1929)

Pin It