படித்துப் பாருங்களேன்...

மோடி ஆவணங்கள் (முனைவர் பா.சுப்பிரமணியன் 1989 பதிப்பாசிரியர்)

(வெளியீடு : தஞ்சாவூர் பல்கலைக்கழகம்)

குடிமக்களைப் பாதுகாப்பவனாக நம்பப்படும் மன்னர்கள், தம் ஆட்சியில் உள்ள பெண்களின் மீது பாலியல் குற்றங்களை இழைப்பது இந்திய வரலாற்றில் பரவலாக இடம்பெற்ற செய்தி. தஞ்சை மராத்தியர் ஆட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. பெண் களின் நிலை குறித்த பல கொடூரமான செய்தி களை மோடி ஆவணங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

தஞ்சை மராத்திய மன்னர்கள் மேற்கொண்ட பாலியல் குற்றங்களை வெகு இயல்பாக மோடி ஆவணங்களில் பதிவாகியுள்ளன. ‘இராணிகள்’ என்ற பட்டத்துடன் அவர்களின் அதிகாரபூர்வமான மனைவியர் அரண்மனைகளில் வாழ்ந்தனர். மற்றொரு பக்கம் மராத்தி மன்னர்களின் காமக்கிழத்தியர் வாழ்வதற்குத் தனியாக அரண்மனைகள் உருவாக்கப் பட்டிருந்தன.

thiruvaiyaru_kalyana_mahal_380தஞ்சை அருகிலுள்ள திருவையாறு என்னும் ஊரில் ஆற்றங்கரையோரம் கல்யாண மகால் என்ற பெயரில் மாளிகை ஒன்றை இரண்டாம் சரபோஜி மன்னன் (1798-1832) கட்டியுள்ளான். இம்மாளிகை யினுள் மன்னனின் காமக்கிழத்தியர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ‘கல்யாண மஹால் மகளிர்’ என இங்குத் தங்க வைக்கப்பட்ட பெண்கள் அழைக்கப்பட்டனர்.

இரண்டாம் சிவாஜி (1832-1855) என்ற மன்னனின் மனைவியர் எண்ணிக்கை இருபதாம். அத்துடன் தஞ்சை நகரில் ‘மங்கள விலாசம்’ என்ற பெயரில் அரண்மனையொன்றைக் கட்டி அதில் தன் காமக் கிழத்தியரைத் தங்க வைத்திருந்தான். இவர்களின் எண்ணிக்கை நாற்பத்தியெட்டு ஆகும். இப்பெண்கள் ‘மங்கள விலாச மகளிர்’, ‘மங்கள்வாசமகளிர்’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர்.

இம்மன்னன் இறந்தபோது நாற்பத்திரண்டு மங்கள விலாச மகளிர் இருந்ததாகவும், இவர்கள் மராட்டியர், பிராமணர், கவரை நாயுடு, கிறித்தவர் எனப் பலதரப்பட்டவர்கள் என்றும் கல்வெட்டாய் வாளர் செ. இராசு குறிப்பிட்டுள்ளார்.

இளம் வயதில் இருந்த பல பெண்களுடன் பாலியல் உறவை மேற்கொண்ட நிலையில், அதிக எண்ணிக்கையில் இருந்த காமக்கிழத்தியருடன் உடல் உறவைச் சீராக மேற்கொள்ள முடியாத நிலைக்கு மராத்தி மன்னர்கள் தள்ளப்பட்டனர். இத்தகைய சூழலில் அப்பெண்கள் இரகசியமாகப் பிற ஆண்களுடன் உறவு கொள்வது தவிர்க்க இயலாததாய் ஆகிவிட்டது. இது குறித்து கோவிந்தராயர் என்ற அரண்மனை அதிகாரிக்கு ரெங்கசாமினாயகர் என்பவர் 1876 ஆகஸ்ட் 16இல் முறையீட்டு விண்ணப்பம் ஒன்றை எழுதியுள்ளார். (தொகுதி 2:162) அது வருமாறு:

“தஞ்சாவூர் சிவாஜி மகாராஜன் வைப்பாட்டி என்கிற மங்கள விலாசத்தில் ஒருவளாகிய கோவிந்தாபாயி, லெட்சுமி அம்மாள் இவர்கள் இரண்டு பேரும் திருவையார் சகஜிநாயகர் அக்கிரகாரத்திலுள்ள அய்யங்கார் பிள்ளை, திருவேங்கடத்தையங்காரை இடைவிடாமல் வைத்துக் கொண்டு ரொம்பவும் கெட்ட செய்கைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  அதைப் பற்றித் தங்களுக்கு அனேக பெட்டிஷன்கள் எழுதியும் தாங்கள் கவனிக்கவில்லை. இப்பொழுது தாங்கள் தயவு செய்து விசாரிக்கும்படியாய்க் கேட்டுக் கொள்கிறேன்.”

இதுபோன்ற மொட்டைக் கடிதம் எழுதும் பழக்கம் வழக்கில் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக வேறு இரண்டு கடிதங்கள் மோடி ஆவணப் பதிப்பில் இடம் பெற்றுள்ளன (தொகுதி 2:149 - 153)

தஞ்சை மராத்திய மன்னனின் அரண்மனை யதிகாரிகள், விலைக்கு வாங்கியும் பலவந்தமாகத் தூக்கி வந்தும் பெண்பிள்ளைகளை அரண்மனையில் அடிமையாகச் சேர்த்திருக்கிறார்கள். இச்செயலின் வாயிலாக மங்கள விலாசத்திற்கும் பெண்களைச் சேர்த்துள்ளனர் என்று கருத இடமுள்ளது. இது குறித்த செய்திகளை மோடி ஆவணங்கள் சில தெரிவிக்கின்றன.

புதுக்கோட்டையிலிருந்து சிலம்பாயி என்ற பெண் தன் ஒன்பது வயது மகளுடன் 1842 ஆம் ஆண்டில் தஞ்சை வந்துள்ளாள். அங்கு விசாலாட்சி என்ற தாசி மூன்றரை ரூபாய்க்கு சேலை ஒன்றை அப்பெண்ணுக்கு வாங்கிக்கொடுத்து அவளது பெண்பிள்ளையை, தன்னிடம் விட்டுவிட்டுச் செல்லும் படியும் சேலை விலையான மூன்றரை ரூபாயைத் தன்னிடம் கொடுத்துவிட்டு, பிள்ளையை அழைத்துச் செல்லும்படியும் கூறினாள். அப்பெண்ணும் அதற்கு உடன்பட்டு, தன் பிள்ளையை அவளிடம் விட்டுச் சென்றாள். பின் மூன்றரை ரூபாயுடன் வந்து பிள்ளையைக் கேட்ட போது அரண்மனையார் அப்பிள்ளையைப் பல வந்தமாய் அழைத்துச் சென்று விட்டதாகக் கூறி விட்டாள்.

mangala_vilasam_tanjore_380இது தொடர்பாக அப்பிள்ளையின் தாய் ரெசிடண்டுக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளாள். அதில் தன் குழந்தையை அரண்மனைக்கு அத் தாசி விற்றுவிட்டதாகவும் எனவே அவளை விசாரித்து, தன் பிள்ளையையும் அரண்மனையாரிடம் பெற்றுக் கொண்ட தொகையையும் தன்னிடம் ஒப்புவிக்கச் செய்யும்படி வேண்டியுள்ளாள். (தொகுதி 2: 153-154)

மிராசு சிதம்பரம் பிள்ளை என்பவர் அக்கச்சி பட்டி என்னும் ஊரிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காகப் பெண்பிள்ளைகளுடன் வந்துள்ளார். அவர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்தபோது, அடிமை களைச் சேகரிக்க நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகள், அப்பெண்களைப் பிடித்துச் சென்று அரண்மனையில் அடைத்து வைத்தார்கள். இதன் பின் நடந்த நிகழ்வு களை, சென்னைக் கோட்டையில் இருந்த ஆங்கில அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு பகுதி வருமாறு (தொகுதி 2: 157-159).

... நான் போய் அரண்மனை உத்தியோகஸ் தானை விடச் சொல்லிக் கேட்டதற்கு என்னை அவர்களுடைய பாராவில் (காவலில்) வைத்து அன்ன ...

“பிறகு என்னைத் தெரியாமல் மாறுபாடாய் மேற்படி பெண்ணை நான் கிரயத்துக்கு வித்தது போலவும் சீட்டுயெழுதினதாயும் பொய்ச்சீட்டு உண்டு பண்ணி அதில் கையெழுத்து வைக்கச் சொன்னார்கள். அப்படிக்கு நான் மேற்படி ஆதரவில் (சீட்டில்) கையெழுத்து வைத்தால் என் பெண்களை விடுகிறதாயும், என்னையும் பாராவில், தானே இறந்து போகிறவரைக்கும் விடமாட்டேனென்று அடித்து வெகு தொந்திரவு செய்ததினால் மேற்படி இமுசையை (துன்புறுத்தலை) நான் பொறுக்கமாட்டாமல் பயந்து என் கையெழுத்து வைத்துக் கொடுத் தேனே அல்லாமல் என் மன சம்மதியாய் வைக்கவில்லை.”

“இது சங்கதியைக் குறித்து அரண்மனையில் நான் ஒரு காசாவது பணங்களாவது யெந்த இனத்திலும் வாங்கவில்லை. இதைக் குறித்து ரிசிடெண்டு துரையவர்களிடத்தில் இரண்டு தடவை நான் வாக்குமூலம் கொடுத்ததற்கு மேற்படியார் விசாரணை செய்யாமல் யென்னை     அடித்துத் துரத்தி விட்டார்.”

“இதைக் குறித்து கவுண்ட்மெண்டார் துரை யவர்களிடத்தில் தபால் மார்க்கமாய் வாக்குமூலம் எழுதிக் கொண்டதுக்கு மேற்படி செறைகளை (அடிமைகளை) விடச் சொல்லி இப்போ மேற்படி ரிசிடெண்டாயிருக்கிற கிண்டால் துரையவர்களுக்கு உத்திரவு அனுப்பினதில் அவர் என்னை வரவழைத்து விசாரணை செய்ததில் மேற்படி செறைகளை விடுகிறதாய்ச் சொல்லி மறுபடி நான் கிரயத்துக்கு வித்தது போல என்னைக் கையெழுத்து வைக்கும்படி அடித்ததில் மேற்படி உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் கையெழுத்து வைத்தேன்.”

“இதைக் குறித்து தபால் கடுதாசி அனுப்ப வேண்டுமென்று போஸ்டாபீசில் கடுதாசி கொடுத்ததற்கு மேற்படி யெடுக்கத் தேவை யில்லையென்று அரண்மனையில் உத்திரவு கொடுத்ததாயும் உத்திரவின் பேரில் கடுதாசிகள் யெடுக்கிறதாகச் சொன்னதினால் கும்ப கோணம் போஸ்டாபிசில் தபால் கட்டினேன்.” 

தஞ்சை மராத்தி மன்னரின் அதிகாரிகளும், ஆங்கில ரெசிடண்டும் கூட்டாகச் செயல்பட்டதை மேற்கூறிய மோடி ஆவணச் செய்தியால் அறிய முடிகிறது.

மீனாட்சி என்ற பருவம் அடையாத பெண்ணைத் திருமணம் செய்து அப்பெண்ணை, தன் மாமனாரின் வீட்டில் விட்டு விட்டு வேலையின் பொருட்டு வெளியூர் சென்றான் இளைஞன் ஒருவன். சில காலம் கழித்து அவள் பூப்படைந்திருப்பாள் என்ற நம்பிக்கையில் அவளுடன் குடும்பம் நடத்தும் ஆவலில் திரும்பி வந்த அவ் இளைஞன் தன் மாமனாரைச் சந்தித்த போது அப்பெண் அரண்மனைக்கு விற்கப்பட்டு ஆனந்தவல்லி என்ற பெயருடன் வாழ்வதையறிந்தான். இது தொடர்பாக 1842 இல் சென்னையில் இருந்த கவர்னருக்கு அவன் செய்த விண்ணப்பத்திற்கு எவ்விதப் பயனும் கிட்டவில்லை. (தொகுதி 2: 160-162). 

இவை தவிர தஞ்சை மராத்தியர் மன்னர் ஆட்சிக் காலத்தில் நிலவிய பல்வேறு பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், அரசபதவிகள், வருவாய் தொடர்பான செய்திகளும் மோடி ஆவணத் தொகுப்பில் இடம்பெற்று, அம்மக்கள் சார்ந்த ஆவணங்களாக விளங்குகின்றன.

மூன்று தொகுதிகளிலேயே இவ்வாறு பல்வேறு சமூகச் செய்திகள் இடம்பெற்றுள்ளன என்னும் போது இன்னும் பல தொகுதிகளாக ஆவணங்கள் வெளிவந்தால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் கிட்டும் என்பது உறுதி. ஆனால் கண் முன்னால் இத்தகைய ஆவணங்களை வைத்துக் கொண்டு அவற்றை, தக்கோரைக் கண்டு முறையாகப் பதிப்பித்து வெளியிடாது இருக்கும் கொடுமையைத் தமிழ்நாட்டின் வரலாற்று ஆர்வலர்கள் சகித்துக் கொண்டுள்ளார்கள். மூன்று தொகுதிகளாக மோடி ஆவணங்களை வெளியிட்ட தமிழ்ப் பல்கலைக் கழகம் இம்முயற்சியில் மீண்டும் ஈடுபட வேண்டும்.

(உங்கள் நூலகம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது)

Pin It