மியாவ்… மியாவ்… என்று குரல் கொடுத்தபடியே வீட்டிற்குள்ளும், வீட்டைச் சுற்றிலும் மனிதர்களுடன் பழகும் உயிரினங்கள் பூனைகள். வடிவத்திலும் முகத்தோற்றத்திலும் செல்லத்தனம் தோன்றும் என்றாலும் இவற்றைப் பற்றி சுபகரம் இல்லாத செய்திகளே ஆய்வாளர்களிடமிருந்து வருகிறது. உலகளவில் இந்த செல்லப் பிராணிகள் பிடித்துத் தின்னும் விலங்குகளின் அளவு குறித்து நடந்த முதல் ஆய்வு இவை வன உயிரினங்களின் அழிவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறுகிறது.
பூனைகளின் தோழமையை மனிதர்கள் விரும்புகின்றனர். ஆனால் இவை உயர் திறனுள்ள கொலையாளிகள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பாதுகாக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான உயிரினங்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகளை இவை உண்கின்றன. 9,000 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வளர்ப்பு விலங்குகளாக பழக்கப்படுத்தப்பட்டது முதல் அண்டார்டிகா தவிர பூமியின் மற்ற எல்லா கண்டங்களிலும் இவை வாழ்கின்றன. மனிதன் குடியேறிய இடங்களில் அவனுடன் சென்ற இவை அப்பகுதி உள்ளூர் உயிரினங்களை ஆக்ரமித்து கொன்று அழித்தன.
இது பற்றிய ஆய்வுக்கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications இதழில் வெளிவந்துள்ளது. பூனைகளே ஆக்ரமிப்பு விலங்குகளில் மிக மோசமானவை. “இவற்றின் இரை பிடிக்கும் பண்புகள் பற்றி இந்த ஆய்வு விரிவாக ஆராய்ந்துள்ளது” என்று யு எஸ் ஆர்பர்ன் (Auburn) பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக்குழு தலைவருமான கிறிஸ்டோபர் லெஃப்ட்ஸிக் (Christopher Lepczyk) கூறுகிறார். இவற்றிற்கு உணவாகும் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பூச்சிகளில் 17% அழியும் ஆபத்தில் உள்ளவை.
பூனைகள் உண்ணும் 90% வகை உயிரினங்களில் 981 பறவையினங்கள், 463 ஊர்வன வகை விலங்குகள், 431 பாலூட்டி வகைகள், 119 வகை பூச்சிகள், 57 வகை இருவாழ்விகள் அடங்கும். கண்டங்களில் அழியும் நிலையில் உள்ளவற்றை உண்பதை விட இவை தீவுகளில் மூன்று மடங்கு அதிகமாக உண்கின்றன. நியூசிலாந்து ஸ்டீபன்ஸ் தீவு ராக்ரன் (Stephens Island Rockwren) மற்றும் நியூசிலாந்து க்வைல் (New Zealand quail) போன்றவற்றை இவை தின்றே அழித்து விட்டன.
இதனால் அங்கு பூனைகளை தீவை விட்டே விரட்ட அரசியல்வாதி ஒருவர் ஒரு இயக்கமே நடத்துகிறார். குழந்தைகள் காட்டுப் பூனைகளை சுட்டுக் கொல்வதை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டிகள் குறித்து அங்கு விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் மட்டும் பூனைகள் ஆண்டிற்கு 300 மில்லியன் விலங்குகளைக் கொல்கின்றன. இதனால் அங்கு சூழல் பாதுகாப்புக் குழுக்கள் பூனைகளை வீட்டுக்குள் பாதுகாக்க வேண்டும் என்று உரிமையாளர்களை வலியுறுத்துகின்றனர்.
தென்மேற்கு ஜெர்மன் வால்டோர்ஃப் (Walldorf) போன்ற உலகில் சில இடங்களில் வசந்த காலத்தின் மூன்று மாதங்களுக்கு இனப்பெருக்கம் செய்து தரையில் முட்டையிட வரும் அரிய வகை கொண்டை வானம்பாடி (crested lark) போன்ற பறவையினத்தைக் காக்க பூனைகளுக்கு பொது முடக்கத்தை அறிவித்துள்ளன. மனிதன் அறிந்தவற்றில் 9% பறவைகள், 6% பாலூட்டிகள், 4% ஊர்வன விலங்கினங்கள் பூனைகளால் உணவாக்கப்பட்டுள்ளன. எவ்வளவு சாப்பிட்டாலும் இவற்றிற்கு திருப்தி ஏற்படுவதில்லை.
ஓர் உயிரினம் சூழல் மண்டலத்தில் இழக்கப்பட்டிருந்தால் அல்லது அரிதாக இருந்தால் அதை உணவாக உண்ணும் இரை பிடி விலங்கின் உணவுப் பட்டியலிலும் அந்த உயிரினம் இல்லாமல் போயிருக்கும். வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் வாழும் இடத்தில் இருக்கும் உயிரினங்களை பெருமளவில் உண்ணும் இயல்புடையவை. இதனால் இயற்கை வனச்சூழலில் சில குறிப்பிட்ட உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போன கறுப்பு இடங்கள் (blindd spots) காணப்படுகின்றன.
விஞ்ஞானிகள் பூனைகளின் உணவு முறை பற்றிய நூற்றுக்கணக்கான ஆய்வுகளை ஆழமாக ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆய்வுகள் நடத்தப்படும்போது இந்த ஆய்வின் இறுதிக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ள உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த ஆய்வு சுற்றித் திரியும் வளர்ப்பு பூனைகளை (Felis catus) மையமாக வைத்தே நடத்தப்பட்டது. சில பெரிய விலங்குகள் இவற்றால் இரை பிடிக்கப்படாமல் கொல்லப்பட்டிருக்கலாம்.
“இரவு நேரங்களில் வீட்டுக்குள் வைத்து பாதுகாப்பது, மணிகளுடன் கூடிய கழுத்துப் பட்டைகளை அணிவிப்பது போன்ற செயல்கள் மூலம் பூனைகள் இரையாகப் பிடித்து உண்ணும் அழியும் பறவை மற்றும் வன உயிரினங்களைக் காப்பாற்ற முடியும். தோட்டங்களில் இந்த உயிரினங்கள் செலவிடும் நேரத்தை குறைக்க கேடு ஏற்படுத்தாத அல்ட்ரா ஒலி கருவிகளையும் பயன்படுத்தலாம்.
பூனைகளின் இரை பிடிக்கும் பண்பு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ள அல்லது பலவீனமான நிலையில் இருக்கும் பறவையினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக தாழ்வாக அல்லது நிலத்தில் முட்டையிடும் பறவைகளை இது பெரிதும் பாதிக்கிறது. தரை வாழ் விலங்குகள் இயல்பாக தோன்றாத தீவுப்பகுதிகளில் பறவைகளின் அழிவுக்கு இது முக்கிய காரணமாக உள்ளது.
தரையில் முட்டையிடும் பறவைகள் வாழும் இடங்களுக்கு அருகில் புதிய குடியிருப்பு பகுதிகளை ஏற்படுத்தாமல் இருப்பது, அவற்றுக்கு சொந்தமில்லாத தீவுகளில் காட்டுப் பூனைகளின் எண்ணிக்கையை குறைப்பது அல்லது முற்றிலுமாக இல்லாமல் செய்வது போன்ற நடவடிக்கைகள் நன்மையை ஏற்படுத்தும்” என்று ராயல் சங்க பறவைகள் பாதுகாப்பு அமைப்பின் (the Royal Society for the Protection of Birds (RSPB) பேச்சாளர் கூறுகிறார்.
“இந்த ஆய்வு வரவேற்கத்தக்கது. தீவுப்பகுதிகளில் பூனைகளால் ஏற்படுத்தப்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு அங்கு வன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க இந்த ஆய்வு முடிவுகள் உதவும்” என்று பிரிட்டிஷ் பறவையியல் அறக்கட்டளையின் (British Trust for Ornithology (BTO)) மைக் டாம்ஸ் (Mike Toms) கூறுகிறார். இனி இவற்றை செல்லமாக வளர்ப்பதுடன் இவற்றின் தாக்குதலில் இருந்து மற்ற உயிரினங்களை பாதுகாப்புடன் வாழ அனுமதிப்போம்.
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2023/dec/12/cats-diet-2000-species-conservation-study-aoe?
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்