"திணைத்துணை நன்று செயினும் பனைத்துணையாகக்
கொள்வார் பயன்தெரி வார்"

நன்றியின் பயனை பனையின் பயனோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் நம் வள்ளுவர். தென்னை மரம் கிபி 2ம் ஆண்டிற்கு பின்தான் இங்கு அறிமுகமானது. ஆனால் பனை மரம் அதற்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

panai maram"தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்"

கிராமங்களில் புழங்கும் சொல்வழக்கு இது. பனைமரங்கள் பண்டைய காலம்தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றெனக் கலந்திருக்கின்றன. பனைமரத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருள் மனிதனுக்கு எப்படியாவது பயன்பட்டு வருகிறது. அந்த அளவில் அதிக பயன்களை அது கொண்டிருக்கிறது. பண்டைய இலக்கியங்களை ஓலைச்சுவடிகள் மூலம் பாதுகாத்தது முதல் கோடை காலங்களில் நாம் விரும்பி சாப்பிடும் நுங்கு வரை பனை மரங்களில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.

நிலத்தடி நீரை சேமித்து வைப்பதில் பனைமரங்கள் சிறந்து விளங்குகின்றன. பயிரிடப்படாமல் இயற்கையிலேயே தானாக வளரும் தன்மையை பனை மரம் பெற்றிருக்கிறது. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. இளம் பனைகள் வடவி என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் வர்த்தக மதிப்பு ரூ. 200 கோடி ஆகும்.

முளைத்து கிழங்குவிட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாகப் பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்ச் சத்துகள், தாதுப் பொருட்கள் உள்ளன. பனையிலிருந்து கிடைக்கப் பெறும் பதநீர் ஒரு குளிர்ச்சி தரும் பானமாக இருக்கிறது. பதநீரைக் காய்ச்சினால் பனைவெல்லம் என்று சொல்லக்கூடிய கருப்பட்டி கிடைக்கிறது. இது சிறந்த மருத்துவ குணம் கொண்ட இனிப்புப் பொருளாக இருக்கிறது.

அதேபோல் பனஞ்சோறு உடல் நலம் தரும் நீராகாரம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்ச் சத்துக்கள், சுண்ணாம்பு, இரும்பு, கரிநீரகி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் என்று சொல்கிறார்கள். இதுபோக நுங்கு, பதநீர், பனங்கற்கண்டு போன்றவைகளும் பனையிலிருந்து கிடைக்கின்றன. பனை ஓலைகளைக் கொண்டு கூடைகள், தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை செய்யலாம். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருட்கள் எளிதில் கெட்டுப் போகாது என்பது அதற்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல உயிரினங்களுக்கும் வாழ்வைத் தருகிறது பனைமரம். காடுகள் அழிந்து வருவதால் பல உயிரினங்களின் ஆதாரமாக பனைமரம் விளங்குகிறது. பனையின் வேர்ப் பகுதியில் எறும்புகளும், பூச்சிகளும் பல சிறு செடிகளும் வாழ்கின்றன.

பனையின் வேர்ப்பகுதியில் விழும் தாவரங்களின் விதைகள் பனையை சுற்றியே வளர்கின்றன. இயற்கையிலேயே அரச மரங்கள், ஆலமரங்கள் பெரும்பாலும் பனையை ஒட்டியே வளர்கின்றன. பனையின் நடுப்பகுதியில் ஓணான்களும், பல்லிகளும் வாழ்கின்றன. பனையின் கழுத்துப் பகுதி மற்றும் பனையின் ஓலைகளில் பல வகையான வௌவால்களும், சிறு சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வௌவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும், கொசுக்களையும் பிடித்து உண்டு வருவதால் அதனால் விவசாயம் செழிக்க உதவுகிறது. இதுபோக அணில்கள், பருந்துகள், தூக்கணாங்குருவி போன்றவைகள் கூடுகட்டி வாழ்வதற்கான இடமாக பனைமரம் இருக்கின்றது.

இதுபோன்று பனைமரங்களின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் தமிழர்களின் மரமாக பனை மரம் இருக்கிறது. தமிழர்களின் இலக்கியங்களிலும், சித்த மருத்துவத்திலும் பிரதான இடத்தை அது பெற்றிருக்கிறது. பனையின் பெயரைக் கொண்டு பல கிராமங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. பனங்குடி, பனையூர், பனைமரத்துப்பட்டி ஆகியவைகளை உதாரணமாகக் கொள்ளலாம். வழிபாட்டிற்குரிய மரமாகக்கூட சில இடங்களில் பனை மரங்கள் விளங்குகின்றன.

தமிழர்களோடு இணைந்து பிணைந்திருந்த பனை மரத்தை தமிழர்கள் கைவிட்டு விட்டார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது. சமீபத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயல் இதை நன்கு உணர்த்தியுள்ளது. புயலின்போது நிறைய மரங்கள் வீழ்ந்தன; வேரோடு சாய்ந்தன. தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் கம்பங்கள் என எந்த ஒன்றையும் கஜா புயல் விட்டு வைக்கவில்லை. ஆனால் பனை மரங்கள் அந்த புயலைத் தாண்டியும் சாயாமல் நின்றதைப் பார்க்க முடிந்தது. எத்தனை பெரிய காற்றையும் தாங்கி நிற்கும் ஆற்றலை பனை மரம் பெற்றிருக்கிறது. புயல் பாதித்த மாவட்டங்களில் அதிகளவு பனை மரங்களை வளர்த்திருந்தால் அல்லது முன்பு இருந்த மரங்களை வெட்டாமல் இருந்திருந்தால் புயலால் இந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.

இனி வரும் காலங்களிலாவது பனை மரங்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அழியும் நிலையில் இருக்கும் பனை மரங்களைப் பாதுகாக்க முடியும்.

- வி.களத்தூர் பாரூக்

Pin It