ஒரு பழத்திலே இருக்கும் புழுவைப் போல, தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டே, தன்னுடைய ஒரே ஒரு வாழ்விடத்தை மனிதன் கொறித்துக் கொண்டிருக்கிறான். - லான் டோர்ஸ்ட்

இந்த உவமை சற்று மிகைப்படுத்தப்பட்டது என்று சிலர் நினைக்கலாம். பொது நம்பிக்கைகளை சற்று தள்ளி வைத்துவிட்டு, சுற்றுச்சூழல்மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் என்று எடுத்துக் கொண்டாலும்கூட, அவர்களில் பலர் மேற்கண்ட கூற்றை ஏற்றுக் கொள்வதில்லை. இது தொடர்பாக நீண்டகாலமாக ஒரு விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுப்புது பிரச்சினைகள் தோன்றத்தோன்ற இந்த விவாதம் வேறுவேறு வகைகளில் தொடர்ந்திருக்கிறது. அந்த விவாதத்தின் சாரம் இதுதான். உலகம் உயிர்த்திருக்க காடுகள்காட்டுயிர்கள்தாவரங்கள் மிக அத்தியாவசியம். சூரியக் குடும்பத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் வசிக்கின்றன. தண்ணீர் கிடைக்கிறது. இதற்கு இங்கு வாழும் சிறிய பாக்டீரியா முதல் புலி வரை, பூஞ்சைகள் முதல் பெருமரங்கள் வரை பல்வேறு இயற்கை இயந்திரங்கள் சீராக இயங்கி வருவதுதான் காரணம். ஒரு வாகனம் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும்போது, எரிபொருள் தீர்ந்துவிட்டாலும்கூட, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வேகத்தால் சிறிது தூரம் சென்ற பின்னரே நிற்கும்.

பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இயற்கை இயந்திரங்களும் அப்படிப்பட்டவைதான். அவற்றின் எரிபொருளான இயற்கை வளம் குறைந்துவிட்டது. ஆனாலும் சற்று தடுமாற்றத்துடன் அவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது ஓராண்டில் உருவாகும் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்ய, பூமி இரண்டு ஆண்டுக்குச் செலவிடும் உற்பத்தி வேகத்தில் உழைக்க வேண்டியிருக்கிறது. இது சாத்தியமற்றது. பூமியில் வாழும் மற்ற உயிரினங்களைவிட மனிதனுக்கு கூடுதலாக ஒரு அறிவு இருக்கிறது. அதன்மூலம் திட்டமிட்டு செயல்படத் தெரிந்து கொண்ட மனிதன், தனக்கு ஏற்ப விஷயங்களை மாற்றி அமைத்துக் கொள்ள ஆரம்பித்தான். இயற்கையிடமிருந்து பெற்ற பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்ந்த மனிதன், ஒரு நிலையில் எல்லை மீறி இயற்கையைத் திருத்தி தனது தேவைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான். காலங்கள் செல்லச்செல்ல இயற்கையை அடக்கி ஆளலாம் என்ற அகங்காரத்தை மனிதஇனம் பெற்றுவிட்டது போலத் தோன்றுகிறது. இதன் காரணமாக இயற்கையை அழிக்கும் பேராசை பெருகிவிட்டது. இன்று வரை பூமியில் கிடைக்கும் பொருட்கள், செல்வம் அனைத்துக்கும் அடிப்படை இயற்கை வளம்தான். இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று இயற்கை அறிவியலாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் ஆதாரங்களை முன்வைத்து உலகைக் காக்க கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் மனிதர்கள் அழிவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வளம் சீராகப் பகிரப்படாமல் இருப்பதால் அடித்தட்டு மக்கள், பழங்குடிகள் வறுமையில் உழல்கின்றனர். சக மனிதன் அவலத்தில் வாடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அரசு வளத்தை சீராகப் பகிராத நிலையில் கிடைப்பதை வைத்துத் தானே மனிதன் வாழ முடியும். அப்படி அவர்கள் வாழும்போது, காடுகளிலும் காடுகளின் எல்லைப் பகுதியிலும் விலங்குத் தொந்தரவுகள் அதிகரித்துவிட்டன. மேலும் விலங்குகளை பாதுகாக்க என்ற பெயரில், பாரம்பரியப் பழங்குடிகள் காட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். மனிதர்கள் உணவுக்கு இல்லாமல் இறந்து கொண்டிருக்கும்போது, விலங்கு உரிமை பேசுபவர்கள் புலியானை< ;span class="contentpane">, நாய்பூனைகளை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றாலே மரம் நடுவது, விலங்குகளை பாதுகாப்பது என்று குறுகியதாகச் சிந்திக்கும் மேட்டுக்குடி சிந்தனையை எப்படி ஏற்க முடியும் என்று சுற்றுச்சூழல்மனிதஉரிமைவாதிகள் வாதிடுகின்றனர். இந்த விவாதம் மிக நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. ஒரு நிலையில் பொது நிலையில் இருந்து விலகி, சுற்றுச்சூழலுக்காக போராடுபவர்கள் மத்தியிலேயே இந்த அம்சங்கள் சார்ந்து இரண்டு பிரிவுகள் உருவாகிவிட்டன. அரசு கொள்கை வகுக்கும்போதும், பிரச்சினைகளிலும் இந்த இரண்டு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து மோதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இதில் எது சரி? எது தவறு? என்பதைப் புரிந்து கொள்ள இந்த இதழில் ஒரு விவாதப் பகுதியை கொடுத்துள்ளோம். இரு தரப்பு சார்பிலும் தமிழகத்தின் முன்னணி சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

மனிதர்களே!

சுற்றுச்சூழல் எழுத்தாளர் பாமயன், மதுரை

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உலகில் தோன்றிய அனைத்து உயிர்களையும் ஒரே தளத்தில் வைத்தது தமிழ் மரபு. அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான உரிமை உண்டு என்று நமது சிந்தனை மரபு எடுத்துச்சொன்னாலும், நடைமுறை வேறுவிதமாகவே உள்ளது. பணமயமாகத் தொடரும் உலகத்தின் போக்கும் அறிவியல் தொழில்நுட்பங்களைக் கையில் வைத்திருக்கும் மாந்தர்குலமும் உலகத்திலுள்ள யாவற்றையும் தனக்கே உரிமையாக்கப் பார்க்கின்றன. இந்த மாந்தர்நடுவச் (Anthropocentric) சிந்தனை உலகில் பெரும் சூழலியல் நெருக்கடிகளைக் கொண்டுவந்துள்ளது.

மனிதன் இந்த உயிரியல் சங்கிலியில் ஒரு கண்ணிதான் என்ற உணர்வு மாறி, மனிதனே பேராற்றல் மிக்கவன் என்ற சிந்தனை வளர்ந்தோங்கியுள்ளது. இன்று உலவி வரும் எந்த உயிரினமும் செய்யாத பெருந்தீங்குகளை மனிதன் இந்த வையத்திற்குச் செய்து வருகிறான். அதுவே பேரறிவு என்று தவறாகக் கருதியும் கொள்கிறான். இதற்காக மதங்களையும், கொள்கைகளையும் வடித்துக் கொள்கிறான். பசிக்காக ஒரு விலங்கு மற்றொன்றை அடித்துத் தின்னும் முறையை கொடிய முறை என்று கூறிவிட்டு, பல உயிரினங்களையே இந்த உலகத்தைவிட்டு வெளியேற்றி வரும் தனது செயலை மனிதன் என்னவென்று கூறுவான்? காணாமல் போகும் காடுகள், வறண்டு சாக்கடையாகும் ஆறுகள், வளமிழந்து உலரும் நிலங்கள், நோய்களின் பெருக்கம் என்று மனிதன் செய்த செயல்கள் இந்த உலகத்திற்கு முடிவுகட்டக் கூடியதாக உள்ளன.

அதேசமயம் ஒட்டுமொத்தமாக மனிதர்கள் என்ற பொதுவான சொல்லாடலுக்குள் இந்த நெருக்கடிகளைக் கொண்டு வந்து, நாம் அனைவருமே இதற்குக் காரணம், எனவே மனிதர்களை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று கூறுவதும் தவறானது. ஏனெனில் இந்தச் சீர்கேடுகளுக்கு எவ்விதத்திலும் நேரடிக் காரணமாக இல்லாத சிறுபான்மை மக்கள் கூட்டம்தான், அதன் பின்விளைவான தீமைகளை அனுபவித்து வருகிறது. தான் வாழும் காட்டை தாயாக மதித்து வாழும் பழங்குடிகள் அணை கட்டுவதற்காக, சுரங்கம் தோண்டுவதற்காக என்ற பெயர்களில் அப்புறப்படுத்தப் படுகிறார்கள். வெளியாட்கள் ஆசைகாட்டி மரம் முதல் விலங்கு உறுப்பு வரை அவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்வதாலும், அவர்களது இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வு சிதைக்கப்படுகிறது. இப்போது பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறத் தொடங்கி விட்டோம். பழங்குடிகளை காடுகளில் இருந்தும் உழவர்களை வயல்களில் இருந்தும் மீனவர்களை கடலோரத்தில் இருந்தும் அப்புறப்படுத்திவிட்டால் காடுகளும், ஆறுகளும், கடலும் நன்றாக மாறிவிடுமா என்று சிந்திக்க வேண்டும். காடுகளில் இருந்து பழங்குடிகள் வெளியேற்றப்பட்ட பிறகு, அங்கு மற்ற ஆட்கள் நுழைய மாட்டார்களா? அல்லது அங்கு செழித்திருக்கும் வளங்களை சட்டம் என்ற பெயரால் நமது அரசுகள் பன்னாட்டுக் கும்பனிகளுக்குக் கொடுக்காதா?

காடு என்னும் உயிரியல் சங்கிலியில் பழங்குடிகளும் ஓர் உறுப்பு என்ற புரிதல் வரும்போது, அவர்களை அப்புறப்படுத்தாமல் பழங்குடிப் பண்பு மாறாமல் அந்த இடத்திலேயே வாழ உரிமை கொடுக்கும்போது சிக்கல் ஏதும் இல்லை. அதே நேரம், அந்தப் பழங்குடி மக்கள் தங்களுக்கு 'வெளி' உலக, 'இன்பங்கள்' வேண்டும் என்று விரும்பும்போது, அவர்களை வெளியே விட்டு அவர்களுக்கான வாழ்க்கையை உறுதி செய்வதில் தவறில்லை. வலுக்கட்டாய மாற்றம் என்பது மிகவும் தவறானது என்பதோடு, வலுவான எதிரியைச் சந்திப்பதற்கு அஞ்சி அப்பாவிகளை வெளியேற்றுவதைப் போன்றது இது. காடுகளில் இருந்து வெளியேறும் பொருள்களை முறையான வழிகளில் அடைத்துவிட்டால், யாரும் முறைகேடு செய்ய முடியாது. ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உடந்தையுடன் நடக்கும் காட்டுக் கொள்ளையைத் தடுக்காமல் பழங்குடிகள் மீது பழிபோடுவது என்ன ஞாயம்?

பெ. சண்முகம், பொதுச் செயலாளர் ,(தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,)

ஈரோடு காடுகள் என்பது பல வகை மரங்கள், உயிரினங்களின் தொகுதி. காட்டு வளம் அழிவதால் உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல் பாதிக்கப்படுகிறது என்பதில் இருவேறு கருத்தில்லை. எனவே காட்டு வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். ஆனால் இவ்வளவும் யாருக்காக? மனிதனுக்காகத் தானே. அங்கு வாழும் மக்களை அழித்தொழித்த பிறகு, காட்டை பாதுகாப்பதன் பொருள் என்ன?

இந்த நாட்டில் வாழ வசதியுடையவர்களுக்குதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. "ஓரு மனிதன் எப்படி வாழ்கிறானோ அப்படியேதான் சிந்திக்கிறான்" என்று சொல்வார்கள். பழங்குடிகளைப் பொருத்த வரை காடு நிலமும் அவர்களின் உயிர் மூச்சு. அதை அவர்களிடமிருந்து பறிப்பது, உயிரைப் பறிப்பதற்குச் சமம். காடுகளை பாதுகாக்க வேண்டும் என்பவர்கள் பெரும்பாலும் பழங்குடி மக்களிடம் இருந்து காடுகளை பாதுகாப்பது என்ற தவறான கருத்து தளத்தில் நின்றே செயல்படுகிறார்கள். பழங்குடிகள் காடுகளை காலங்காலமாக இலவசமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது என்ற ஆணவத்தோடு வெளியில் உள்ள சிலர் நினைக்கிறார்கள். தெருவில் செல்லும் ஒருவன் வீட்டு உரிமையாளரிடம் போய், எவ்வளவு காலத்துக்குத்தான் நீங்கள் வாடகை தராமல் இந்த வீட்டில் இலவசமாக வசிக்க முடியும் என்று கேட்பது போல இருக்கிறது இந்தக் கருத்து. இதற்குக் காரணம், பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கி வனஉரிமைச் சட்டம் 2006 நிறைவேற்றப்படுவதற்கு முன்பு வரை ஏற்றப்பட்ட எல்லா வனச் சட்டங்களும் வனக் கொள்கைகளும் மலைவாழ் மக்களிடம் இருந்து காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.

பழங்குடி மக்கள் தாங்கள் பிழைத்திருப்பதற்காக மட்டுமே காட்டை பயன்படுத்துகின்றனர். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கி இன்றைய நமது ஆட்சியாளர்கள் வரை காட்டை வியாபார ரீதியாக லாப நோக்கோடு பயன்படுத்தி வருகின்றனர். வனத்துறை உருவாவதற்கு முன்பு காடுகளையும் மலைகளையும் பாதுகாத்தது பழங்குடி சமூகம் தானே. கிராம சமூகத்தின் பொறுப்பில் காடுகள் இருந்தபோது, அவை அழியவில்லை. அவர்களது பொறுப்பில் இருந்து காடுகள் முழுவதுமாக பறிக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் காடு அழியத் தொடங்கியது

பழங்குடி மக்களின் தேவைகள் மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வசிப்பதற்கு சின்ன குடிசை, விவசாயம் செய்வதற்கு துண்டு நிலம், விவசாய கருவிகளைச் செய்ய சில மரக் கிளைகள், அடுப்பெரிக்க காய்ந்த சுள்ளிகளைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பார்த்துத்தான் அவர்கள் காட்டை அழிப்பதாகக் கூக்குரல் இடுகிறார்கள் புதிய பாதுகாவலர்கள். ஆம், புலிப் பாதுகாவலர்கள், யானை பாதுகாவலர்கள், வனவிலங்கு பாதுகாவலர்கள் என தற்போது நிறைய பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டில் தோன்றுகின்றனர். வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக பழங்குடி மக்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று கூச்சமின்றி கூறும் இவர்கள், சுற்றுலா தலம், கோடைவாசத்தலம் என்ற பெயரில் ரிசார்ட், ஆடம்பர ஓட்டல்கள் அமைக்கப்படுவதையோ கூட்டம்கூட்டமாக மலைகளுக்குச் சென்று கூத்தடிப்பதையோ கேள்விக்கு உள்ளாக்குவதில்லை. மாறாக, அதை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு, ஊக்கமளிக்க சிறப்புத் திட்டங்கள், கவர்ந்து இழுக்க கவர்ச்சி சமாசாரங்கள் என்று நிறைவேற்றப்படுகின்றன.

இதனால், வனவிலங்குகளின் நலன்களுக்கு பாதிப்பில்லையா? ஆதி காலம் தொட்டு, பழங்குடிகளும் வனவிலங்குகளும் மலைகளில் வாழ்ந்து வருகின்றனர். நடுவிலேயே குடியேறியவர்கள்தான் கூப்பாடு போடுகிறார்கள். இவர்களின் நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும், நிலங்களை வளைத்துப் போடவும் புலி, யானைகளின் மீது பாசம் காட்டுகிறார்களே தவிர வேறில்லை. இத்தகைய கூட்டம்தான் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் உறுப்புகளை பதப்படுத்தி தங்கள் வீட்டு வரவேற்பறைகளை அலங்கரித்திருக்கிறது. எந்த ஒரு பழங்குடி வீட்டிலும் வனவிலங்குகளைக் கொன்று, அதை அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை பார்க்க முடியாது. எனவே, வனவிலங்குகளின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆதியில் இருந்து காட்டில் வாழ்ந்து வருபவர்களை அப்புறப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. பசுமைக்கும் குளுமைக்கும் உல்லாசத்துக்கும் நிலத்தை வளைப்பதற்கும் சென்று குடியேறியவர்களை காட்டிலிருந்து வெளியேற்றினாலேயே பழங்குடிகள், வனவிலங்குகள், வனம் அனைத்தும் பாதுகாக்கப்படும். பழங்குடி மக்களின் நிலத்தை பழங்குடி அல்லாதோர் வாங்குவதை தடை செய்ய சட்டம் தேவை. ஏற்கெனவே அப்படி விற்பனை செய்யப்பட்டவற்றை மீட்டு, அந்த மக்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதைச் செய்ய ஆட்சியாளர்கள் தயாரில்லை.

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சி.மா. பிரிதிவிராஜ்

பூவுலகின் நண்பர்கள், கோவை காட்டுயிர் பாதுகாவலர்களும் இயற்கை விரும்பிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை காடுகளுக்கு மட்டுமானது என்று பரிசீலனை செய்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒட்டுமொத்த பரிணாமத்தையும் அவர்கள் உணர்ந்து செயல்படவில்லையோ என்கிற அச்சத்தை உருவாகியுள்ளது.

இன்றைக்கு காடுகளை பாதுகாப்போம் என்று விலங்கியல் ஆர்வலர்கள் ஒரு வழியிலும், இயற்கை வேளாண்மையும் கரிம வேளாண்மையும் தனி வழியிலும், சித்த மருத்துவம், மூலிகை வளம், ஆரோக்கிய வாழ்வு வேறு வழியிலும் செல்கின்றன. இதனால் பூவுலகிலுள்ள அனைத்து உயிரினங்களின், இயற்கை வளங்களின் பாதுகாப்பு தனித்து விடப்பட்ட சூழல் உருவாகியுள்ளது. காடு, மலை, காட்டுயிர், நீர்வளம், நிலவளம், கடல் வளம் மட்டுமல்லாமல் இயற்கையோடு ஒன்றி வாழும் பூர்வ குடிமக்களின் நலன், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட பொருளாதாரம் ஆகிய ஒருங்கிணைந்த சிந்தனைதான் சூழல் பாதுகாப்பு இயக்கங்களையும் நமது போராட்டங்களையும் வலுப்படுத்த முடியும். காட்டை நேசிப்பவர்கள் காடுகளிலும், மண்ணை நேசிப்பவர்கள் வேளாண் பண்ணைகளிலும், கடலை நேசிப்பவர்கள் கடற்கரையிலும், நீர்வளப் பாதுகாப்பு கருத்தரங்க கூடங்களிலும் தனித்தனியாக இயங்குவதால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முழுமையடையாது.

இன்றைய மானுடப் பேராசை யுகத்தில் மனித இனம் காட்டி வரும் கட்டற்றவளர்ச்சி என்ற கொடூரமும், பொருளாதார மேம்பாட்டிற்காக யார் குடியை கெடுத்தாலும் தவறில்லையெனும் நுகர்வு கலாச்சாரமும் கடந்த முப்பது ஆண்டுகளில் வரலாறு காணாத அழிவை இயற்கை வளங்களுக்கும் பல்லுயிர் வளத்துக்கும் ஏற்படுத்தி வருகின்றன. இந்தநிலையில், புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாதையை நாம் நிர்மாணிக்க வேண்டிய அவசியமுள்ளது. உயிரினங்களின் சங்கிலித் தொடர் பிணைப்பு போல் அனைத்து தளங்களில் பணியாற்றும் சூழல் நேசர்கள் ஒரே பாதையில் ஒருமித்த குரலோடு பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

காட்டுயிர்களே!

சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன், பெங்களூரு

பெங்களூரு கடந்த சில ஆண்டுகளில் சரிஸ்கா, பண்ணாசரணாலயங்களில் வேங்கைப் புலிகள் பூண்டோடு அழிந்துவிட்டன. நாட்டில் வேட்டையாடிகள் தடையின்றி பரவலாக செயல்படுகிறார்கள் என்பது போன்ற செய்திகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. இது பெரிய விவாதத்தையும் உருவாக்கியிருக்கிறது.

வேங்கை போன்ற உயிரினங்களை பாதுகாக்க வேண்டுமானல், காட்டிலுள்ள மக்களை வெளியேற்றி விட்டு காட்டைப் பேண வேண்டும் என்று ஒரு சாராரும், கூடாது...காடுதான் அவர்களின் வாழிடம். அது மட்டுமன்றி, அவர்கள் ஒத்துழைப்பில்லாமல் காட்டுயிர்களை பேண முடியாது என்று மற்றொரு சாராரும் வாதிடுகின்றனர். காட்டுயிரியிலாளர்களும் ஆர்வலர்களும் பங்கெடுக்கும் எல்லா கருத்தரங்குகளிலும் கூடுகைகளிலும் இந்த விவாதம் எதிரொலிக்கிறது. வனத்துறை அதிகாரிகள், காட்டுயிரியலாளர்கள் ஒருபுறமும், தன்னார்வக் குழுக்களும் மனித உரிமைக்குழுக்களும் மறுபுறமும் இரு பிரிவாக இயங்குகின்றனர். உள்ளூர் மக்கள் ஆதரவில்லாமல் காட்டுயிரைப் பாதுகாக்க முடியாது என்பது மனிதஉரிமையாளர்கள் வாதம். பழங்குடி மக்களை ஒதுக்கியதால்தான் காட்டுயிர் வளத்தை இழந்து விட்டோம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

நமது நாட்டில் காலங்காலமாக லட்சக்கணக்கான மக்கள் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உணவிற்காக மட்டும் சில விலங்குகளைக் கொன்று, சில காடுபடுபொருட்களை பயன்படுத்தி, காட்டில் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்திருந்தினர்... தமிழ்நாட்டில் ஜவ்வாது மலையில் மலயாளிகள், அகத்தியமலையில் காணிகள், பழனி மலைத் தொடரில் காடர்கள், புலயர்கள், நீலகிரியில் கோத்தர்கள் இன்றும் வாழ்கின்றனர். காலனி ஆதிக்கத்திற்கு முன்பு காட்டுவாழ் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். காலனி ஆதிக்கம் வந்த பின், பிரிட்டிஷார் இந்தியக் காடுகளை ஒரு கஜானவைப் போல் கருதி, வேகவேகமாக அதன் வளத்தை அழிக்க ஆரம்பித்தனர். வெட்டுமரத் தொழிலுக்காக மரங்களையும், தோட்டப்பயிர்களுக்காக காடுகளையும் வெட்டித் தள்ளினர். விருதுகளுக்காகவும் வீரசாகச விளையாட்டிற்காகவும் காட்டுயிர்களை சுட்டுத் தீர்த்தனர். காடுவாழ் மக்களுக்கும் காட்டின் பயன் கிடைக்காதவாறு செய்தனர். காட்டிற்கும் அந்த மக்களுக்கும் அடிப்படையாக இருந்த உந்திச்சுழி அறுக்கப்பட்டது. தாங்கள் ஊழிகாலமாக வாழ்ந்திருந்த நிலத்துக்கு பத்திரம் ஏதும் இல்லாததால், தங்கள் வீட்டிலேயே அவர்கள் அனாதை ஆனார்கள். சுதந்திரம் வந்த பிறகும் இந்த நிலை தொடர்ந்தது. மாநில வனத்துறை அதிகாரிகளும் பழங்குடியினரை அச்சுறுத்தி அடிமைகள் போல் நடத்தினர். காக்கிசட்டைகளுக்கு அஞ்சிஅஞ்சி "பேழையுள் உயிர்க்கும் பாம்பென" இந்த மலைவாசிகள் காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள்.

1972இல் அமலாக்கப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் (The Wildlife Protection Act, 1972) காடுவாழ் மக்களை காட்டிலிருந்து மேலும் அந்நியப்படுத்தியது. அரசின் திட்டங்கள் மேல் அவர்கள் வெறுப்பு கொள்ள ஆரம்பித்தனரஇந்தியாவில் காட்டுயிரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கும் போது, மிகவும் கடுமையான பாதுகாப்பு மட்டுமே பயனளிக்கும் என்று காட்டுயிரை பாதுகாக்கும் பொறுப்பையுடைய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆப்ரிக்காவிலுள்ளது போல பரந்த, பெரிய சரணாலயங்களில் இத்தகைய மக்கள் ஒத்துழைப்பை ஏற்கலாம். நம் நாட்டிலுள்ள சரணாலயங்களில் பல அளவில் சிறிதானவை. நாட்டின் மொத்தப் பரப்பில் 2 சதவீதம்தான் சரணாலயங்கள். கோடிக்கரை சரணாலயம், கிண்டி தேசியப்பூங்கா சிறுசிறு சூழியல் தீவுகள் போல் உள்ளன. அவற்றில் வெளிமான் போன்ற பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது இத்தகைய பரிசோதனை முயற்சிகளுக்கு இடமில்லை என்பது அவர்கள் வாதம். அதுமட்டுமல்லாது...காட்டில் யார் பழங்குடியினர், யார் குடியேறிகள் என்றறிவது சிரமம் என்கின்றனர். மேகாலயா, மிசோராம் போன்ற மாநிலங்களில் மலைவாழ் பழங்குடியினரால் நிர்வகிக்கப்பட்ட அரிய மழைக்காடுகள் சீரழிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போனதை இவர்கள் தங்கள் வாதத்துக்கு ஆதரவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த வாதத்தின் உச்சகட்டமாக 2006 ஆண்டு டிசம்பர் 18ம் தேதி காட்டுரிமைச் சட்டம் (Froset Rights Act) பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது. காலனி ஆதிக்கத்தில் பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களையும் சட்டம் என்று இது வரவேற்கப்பட்டது. வனத்துறை மாநிலங்களின் கையில் இருப்பதால், இந்த சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது. பெருவாரியான மாநிலங்கள் இந்த சட்டத்தை இன்னும் கண்டு கொள்ளவேயில்லை. இதை நடைமுறையில் செயல்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மாநில அரசுகள் இன்னும் வெளியிடவில்லை. இன்றளவில் காட்டுரிமைச் சட்டம் ஒரு ஏட்டுச்சுரைக்காயாக உறைந்து விட்டது.

(இந்த விவாதம் பற்றி மேலும் அறிந்து கொள்ள People, Park & Wildlife. Towards Coexistence, 2001, Tracts of the Times, Origent Longman Ltd. Rs.150.)

சூழலியல் செயல்பாட்டாளர் பாரதிதாசன், அருளகம்,இடிந்தகரை

ஆழிப்பேரலை, நிலநடுக்கம் என இயற்கைச் சீற்றங்கள் வரும்போதெல்லாம் மனித இனம் இயற்கையை வசைபாடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஆயிரம்ஆயிரம் ஆழிப்பேரலைகள் உருவாக்கும் பாதிப்புகளை மனிதனைத் தவிர்த்த உயிரினங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு விலங்குகள் ஊருக்குள் புகுந்தால் கூப்பாடு போடுகிறோம். இந்த ஊர்கள் அனைத்துமே சில நூற்றண்டுகளுக்கு முன் காடுகளாக இருந்தவை தானே. இது ஊர், இது விளைநிலம், இது வம்பாடு பட்டு விதைத்த பயிர், பட்டா நிலம், சாலை, மின்கம்பம் என்றெல்லாம் விலங்குகளுக்குத் தெரியாது. பசியையும் தாகத்தையும் தணிக்கவே அவை மலைகளில் இருந்தும் காடுகளில் இருந்தும் வெளியே வருகின்றன. அப்படி வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம் காட்டுக்குள் மனிதர்கள் (பழங்குடிகள் மட்டுமல்ல) ஏற்படுத்தி வரும் ஓயாத நெருக்கடி.

பண்டை காலத்தில் காட்டைத் திருத்தி நாட்டை ஆக்குவது வேந்தனின் குடிசெயல் வகைகளில் ஒன்றாக இருந்தது. அதேபோல காட்டு விலங்குகளிடம் இருந்து காப்பாற்றிய மனிதர்களை புலிக்குத்தி நடுகல்லாக்கி வழிபட்டது நம் மரபு. அதேபோல், போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வேந்தனுக்கு கவி பாடியதும் நமது கவிமரபுதான். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில்கூட விலங்குகளை சுட்டுக் கொல்பவனுக்கு வீரப்பதக்கமும் வெகுமதியும் தரப்பட்டது. காப்புக் காடுகளெல்லாம், இன்று கூவி விற்கும் கூப்புக் காடுகளாக பாவிக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும் காடுகளை உடமையாக்கிக் கொள்ளலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. இதனால் காட்டுயிர்களின் வாழிடங்களும் வழித்தடங்களும் பறிக்கப்பட்டன. இன்று அது நம் இடத்துக்குள் புகுந்துவிடுகிறது என்கிறோம். இது எவ்வளவு தூரம் நிஜம்?

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய மக்கள்தொகை 20 கோடியாக இருந்தது. புலிகள் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்தது. இன்றைக்கு நமது மக்கள் தொகை 110 கோடிக்கும் மேல். புலிகள் எண்ணிக்கையோ 1500க்கும் குறைவு. உண்மையிலேயே எதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது? புலியும், மற்ற காட்டுயிர்களும் மனிதனின் இடத்தை பறித்துக் கொண்டிருந்தால், அவற்றின் எண்ணிக்கை பெருகி அல்லவா இருக்க வேண்டும்? புலி, யானை என எந்த காட்டுயிரின் எண்ணிக்கையும் பெருகவில்லை. எண்ணிக்கை அதிகரிப்பதால்தான் காட்டை விட்டு அவை வெளியே வருகின்றன என்பது பொய். மனிதர்கள் ஏற்படுத்திய நெருக்கடியால் காடுகள் தாங்கும் திறனை இழந்து ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டதுதான் மிகப்பெரிய உண்மை.

தாவரஉண்ணிகளின் எண்ணிக்கை பெருகிவிடாமல் புலி போன்ற இரைகொல்லி விலங்குகள் கட்டுப்படுத்தி வருகின்றன. புலிகள் அழிக்கப்பட்டால் தாவரஉண்ணிகள் பெருகும், காடழியும், பின்னர் நாடும் அழியும். புலிகள், காடுகளின் அழிவை பேசாமல் பார்த்துக் கொண்டிருப்பது, "கண்களை விற்றுவிட்டு சித்திரம் வாங்குவது" போன்றது. இது முழுக்கமுழுக்க மனித சுயநலம். வருங்கால சந்ததி வாழ வேண்டுமென்றால், காடுகள் இல்லாமல் அது சாத்தியப்படாது.

காட்டுயிர்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் வெளிநாட்டு நிதி பெறுபவர்கள், மேட்டுக்குடி வர்க்கத்தினர் என்று பகடி செய்யப்படுகின்றனர். மேலும் நாளைக்குக் கிடைக்கும் பலாப்பழத்துக்கு காத்திருப்பதைவிட, இன்றைக்குக் கிடைக்கும் கலாக்காயே மேல் என்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார். நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விலங்குகளுக்கு பேசத் தெரியாது, தலைவர் வாழ்க என்று கோஷமிடாது, நாளிதழ் வாசிக்கத் தெரியாது, எதிர்த்தும் குரல் கொடுக்காது ஆகிய காரணங்களால் மனிதஉரிமை ஆர்வலர்கள் அவற்றைக் குறித்து பேசுவதில்லை. எங்களது குறைந்தபட்ச கோரிக்கை ஒன்றுதான், மனிதர்களாகிய நாம் இப்பூவுலகில் கடைசியாகத் தோன்றிய உயிரினம். நமக்கு முன்னதாகவே கோடானு கோடி ஆண்டுகளாக இந்தப் பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அனைத்து உயிரினங்களையும் அவற்றின் இயல்புடன் வாழவிடுங்கள் என்பதுதான்.

பேராசிரியர் த. முருகவேள், இயற்கை ஆர்வலர், சென்னை

தொடர்ந்து மனிதக் காலடித் தடம் பட்டால் புல்லே முளைக்காது என்பார்கள். காடுகளுக்கு பாதை போடுவது அக்காடு அழிவதற்கான முதல் படி. ஆனால் இன்றோ நாம் காடுக்குள்ளேயே மக்களை குடியேற்ற முயற்சிக்கிறோம். அப்போது காடுகளின் நிலைமையும் அவற்றில் வாழும் உரினங்களும் என்ன ஆகும்? காடுகளில் வாழும் பழங்குடிகளைக் காப்பதற்காக அமல் படுத்தப்பட்டுள்ள வனஉரிமைச் சட்டத்தால் (Froest Rights Act) ஏற்படும் பாதிப்புகளை அரசியல்வாதிகளோ, அதை அமல்படுத்த வலியுறுத்தியவர்களோ உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பழங்குடி மக்கள் தற்போது காட்டில் வசித்து வந்தாலும், அவர்கள் தொடர்ந்து அங்கு வசிப்பார்களா? இதற்கு உறுதியான பதில் இல்லை. ஏனென்றால், நமது மூதாதையர்கள் அனைவரும் காட்டில் வாழ்ந்த பழங்குடிகள் தானே. தற்போது வாழும் பழங்குடிகள், காட்டுக்குள் விவசாயம் செய்து வாழ்பவர்கள் அல்ல. அதனால் புதிய சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கொடுக்கப்படும் நிலத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள்? மாறாக, அந்நிலங்களை பணம், அதிகாரம் படைத்தோர் கையகப்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம். இதற்கு கடந்த கால நிகழ்வுகளே சாட்சி. 1960 மற்றும் 70களில் கொடநாடு பகுதியில் தோடர் இனமக்களுக்கு விவசாயம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட நிலங்கள், அவர்கள் கையில் தற்போது இல்லை. மலைக்குக் கீழே வசிக்கும் மக்களிடம் அவை விற்கப்பட்டுள்ளன. நாளிதழ்களில் கொடநாடு எதற்காக தினசரி இடம்பெறுகிறது என்பதை தெரிந்து கொண்டாலே, இதைப் புரிந்து கொள்ளலாம். யாருக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டனவோ அந்தப் பழங்குடிகள் பயன்பெறாமல், காடுகளும் அங்கு வாழும் விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை இன்றைக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அது மட்டுமில்லாமல் மூன்று தலைமுறைகளாக காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக யாரேனும் சான்று காட்டினால், அவர்களுக்கும் நிலம் கொடுக்கப்படும் என்கிறது அரசு. இப்படியாக விலங்குகளை வேட்டையாடுபவர்களும், மரங்களை வெட்டி கடத்துபவர்களும் காடுகளுக்கு எளிதாக சென்று வர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அடிப்படை ஆதார வளங்களான நமது காடுகளைப் பாதுகாக்காமல் நமது வனத்துறையும், அரசியல் கட்சிகளும் தங்கள் தேவைக்காக அனைத்தையும் பலியிடுகின்றன.

எந்த தொலைநோக்கும் இல்லாமல் அரசு செயல்படுத்தும் திட்டங்களாலும் மனித  விலங்கு மோதல் அதிகமாகிறது. விலங்குகளின் இருப்பிடமான காடுகளை நாம் பாழ்படுத்தி, அவற்றின் வாழ்க்கை முறையை மாற்றிய நாம், நம் வாழ்வை அவை பாதிப்பதாக கூறுவது எந்த வகையில் நியாயம்?