honey beeதேனீ மாதிரி உழைக்கணும் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். ஓய்வில்லா உழைப்பிற்கு அடையாளமாக விளங்குகிறது தேனீ. உழைப்பதில் மட்டுமல்ல சுறுசுறுப்பு, தலைமைக்குக் கட்டுப்படுதல், கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கும் தேனீயே அடையாளமாக இருக்கின்றது.

ஸ்லோவினியா நாட்டில் 'தேனியைப் பார்த்து படி' என்ற பழமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி மேற்கண்ட காரணத்திற்காகத்தான் வழங்கப்பட்டிருக்க கூடும். வரும் முன் காப்பதில் திட்டமிட்டு செயல்படுவது தேனீயின் குணமாக இருக்கின்றது.

பூக்கள் பூக்காத காலங்களிலும், தங்களுக்குத் தேவையான உணவைச் சேமித்துக் கொள்கிறது தேனீ. அதைத்தான் நாம் தேன்கூடு என்கிறோம். ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. அதனால் உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடி எனவும் அது அழைக்கப்படுகிறது.

தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஸ்பெயின் நாட்டில் தேன் சேகரிக்கும் நபரின் உருவம் பொறித்த குகை ஓவியம் காணப்படுகிறது. இது எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பானதாகும். 

தேனீக்கள் ஆறு கால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை ஈ பேரினத்தில் ஒரு வகை. ஈ பேரினத்தில் சுமார் 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவையாகும்.

மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும் தன்மையுடையது. ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களின் மூன்று வகை உண்டு. முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களின் மிகப் பெரியது. அந்த கூட்டங்களுக்கு தலைமை வகிக்கும். இதன் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இதன் வேலை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது ஆகும்.

இரண்டாவது வகை ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, இராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. மூன்றாவது வகை வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்து பணிகளையும் இதுதான் செய்யும். இதன் ஆயுட்காலம் இரண்டு மாதங்கள் ஆகும்.

தேனீக்கள் பூவுக்குப் பூ சென்று மகரந்தத்தை சேகரிக்கும்போது அவற்றை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு கடத்துவதால், பூக்களிடையே கருவுற நிலை ஏற்படுகிறது. பிறகு மரச் செடிகள் காய்ந்து விதையிட்டு இனம் பெருக்குகிறது. இதைத்தான் மகரந்தச் சேர்க்கை என்று நாம் சொல்கிறோம். இதனால் நிறைய வனப்பரப்பு உருவாகிறது.

தேனீக்களின் மகரந்த சேர்க்கை நடைபெறவில்லையென்றால் பல பயிர்கள் அழிந்துபோகும். இதனால்தான் தேனீக்கள் அழிந்தால் விரைவில் மனிதகுலமும் அழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். 

அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளிலும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை சூழலியலாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்து, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. நெருப்பு மூட்டி தேன் எடுப்பதாலும் தேனீக்கள் மடிந்து வருகின்றன. இதற்கு மாற்றமான பல வழிகள் இருந்தாலும் அதற்கு யாரும் கவனம் கொடுப்பதில்லை.

தேனீக்கள் நேரிடையாக மிகச்சிறந்த இயற்கை மருத்துவப் பொருளான தேனை நமக்கு வழங்குகிறது. அதேபோல் மறைமுகமாக அயல் மகரந்தச் சேர்க்கையால் பயிர்களை செழிக்க வைக்கிறது. இப்பேற்பட்ட தேனீக்கள் அழிவதை கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல. தேனீக்களை காப்பதில் அனைவரும் அக்கறை செலுத்திட வேண்டும்.

- வி.களத்தூர் பாரூக்