இது ஓர் ஆவணப்படம்

பல இடங்களில் கண் கலங்கி... மனம் உளறியது.

காட்டில் வழி தவறி விடும் யானை குட்டி அடுத்தடுத்து இரண்டு காட்டிலாகா அதிகாரிகளால் பொம்மன் பெல்லி இணையரிடம் தரப்படுகிறது. அவர்கள் அதை வளர்த்து ஆளாக்கி அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்பது தான் நடைமுறை. ஆனால் சொந்த குழந்தைகளாகவே ஆகி விடும் அவைகளை பிரிய முடியாமல் அந்த இணையரின் ஆற்றாமை காடதிரும் மௌனம்.

யானை.... உருவத்தில் தான் அத்தனை பெரிதாக இருக்கிறது. உள்ளம் ரொம்ப இலகு. அதற்கு பேசுவது புரிகிறது. கேட்கறது. பதில் கூட பேசுகிறது. அழுகிறது.. சிரிக்கிறது.. பசிக்கையில் பசிக்கிறது என்று கேட்கறது. அதன் மொழி நாம் அறியவில்லை என்பதற்காக அதற்குப் பேச வராது என்று முடிவுக்கு வரக்கூடாது. அதற்கு அதன் மொழி தெரிகிறது. அதை தெரிந்து கொண்ட பொம்மனும் பெல்லியும் அளாவுகிறார்கள். அன்பு செய்கிறார்கள். பார்த்து பார்த்து உணவளிக்கிறார்கள். குளிக்க வைக்கிறார்கள். பொட்டு வைத்து சடை போட்டு விடுகிறார்கள்.The Elephant Whisperersமூத்தவன் ரகு. இளையவள் அம்முக்குட்டி.

குட்டியில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தடுமாறும் யானை குட்டி ஒரு குழந்தை. அதற்கு விவரம் தெரிவதில்லை. பெல்லியின் கையை பற்றிக் கொண்டு தாயின் அரவணைப்பில் தன்னை தக்க வைத்துக் கொள்வதில் கிடைக்கும் ஆசுவாசத்தை அப்பப்பா மனம் சிலிர்ப்பதை.... மௌனம் சிரிப்பதை உள்ளூர உணர முடிகிறது.

அவைகளோடு பந்து விளையாடுவதும்.. நீரில் குளிக்க வைக்கையில்... ஒத்துழைத்து தானும் நீருக்குள் மூழ்கி எழுந்து....யானைகளின் சேட்டைகளை பார்க்க பார்க்க முக்தி பெறுகிறோம் நாம்.

மேல படுத்தீன்னா பாரு... தள்ளி படு என்று அதனிடம் பேசும் பெல்லி ஒரு முதிர்ந்த சிறுமி. எப்போதும் சிரித்த முகத்தில் தாய்மை பூக்கிறது.

அதனிடம் விளையாட்டு காட்டி தூங்க வைத்து... அவர்கள் அதன் தலையோடு தலை வைத்து தடவி கொடுத்தபடியே பேசுவதும் கொஞ்சி கொள்வதும்... பார்க்க கண்கள் துளிர்க்கும். ரகுவை பிரிய நேருகையில் அந்த அந்த இணையரோடு அம்முக்குட்டியும் தவித்து போவதை பார்க்க முடியவில்லை. அம்முக்குட்டி அங்கும் இங்கும் அலைந்து கத்தி கூச்சலிடும் காட்சி கலங்கடித்து விடுகிறது. பொம்மன் இது பற்றி பேச பேசவே அழுகிறார். நாமும் அவரோடு விசும்புகிறோம்.

பிரிந்த சென்ற பிறகும் காட்டுக்குள் எங்காவது பார்க்க நேரிட்டால்.. ஓடி வந்து உடன் நின்று கொள்ளும் ரகு... பாசக்காரன்.

பிடிக்காத உணவை வாய்க்குள் வைத்து தள்ளினாலும்.. கொஞ்ச நேரம் வாய்க்குள் வைத்து விட்டு பிறகு துப்பி விடும் சிறு பிள்ளையாக இருக்கும் யானைகளையா.... யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் என்று செய்தி வாசிக்கிறோம் நாம். அவைகள் உலகம் வேறு. அதற்குள் நாம் போகாமல் இருந்தால் அவைகள் நம் உலகத்துள் நிச்சயம் வராது.

அம்முக்குட்டி இவர்களிடம் வந்து சேர்க்கையில் எலும்பும் தோலுமாக இருக்க அதற்கு ஓட்டம் கொடுத்து.. சோறு கொடுத்து... பால் கொடுத்து வளர்த்து பலப்படுத்திய இந்த இணையரை சுற்றுவட்டாரத்தில் யானையின் அப்பா அம்மா என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். அது எங்களுக்கு பெருமை தான் என்று கூறும் இவர்கள்... வேறு வேறு கணவன் மனைவி என்பதும்... இருவருக்கும் இணையர் இல்லை என்பதும்... இந்த யானைகளின் வழியே அவைகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் காட்சியும் நம்மை நெகிழ்த்தி விடுகிறது. அதுவும் திருமணம் முடிந்து நால்வரும் வரிசையாக நின்று மாலையும் கழுத்துமாக போட்டோ எடுத்துக் கொள்ளும் காட்சி பேரழகு. பேரன்பின் தத்துவம் பிறக்கும் இடமாக இவர்கள் வாழ்விடத்தைக் காண்கிறேன்.

சிறு குழந்தைகளைப் போல தான் எது கிடைத்தாலும் எடுத்து வாய்க்குள் ...போடுவதும். அப்படி முள்ளோடு சேர்ந்த புல்லை அம்முக்குட்டி வாய்க்குள் போட்டு விட அதை பார்த்து விட்ட ரகு... மெல்ல தும்பிக்கையை அதன் வாயில் விட்டு எடுத்து வெளியே போடுகிறது. யாருக்கு அறிவில்லை என்று கேட்க தோன்றும் காட்சி இது.

இதற்கிடையே மூங்கிலால் ஆன வீட்டு வாசலில் சாவகாசமாக நடந்து போகும் ..பன்றிகள். இந்த பக்கம் யானை விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் குரங்கு குடும்பங்கள்... அவைகள் தின்னாமல் போட்டவைகளை இவைகள் எடுத்து தின்பதும்... என பார்க்கவே அத்தனை அழகு. கேமராவுக்கு போஸ் கொடுக்கும் மான்கள்.... மயில்கள் என்று காடென்பது கவிதை. கருணை உள்ளோருக்கு வாசிக்க வாய்க்கிறது.

தேவைக்கு தான் காட்டில் இருந்து எடுப்போம். எங்களுக்கு உரிமை உண்டு. கால காலமாக காட்டைக் காப்பாற்றும் எங்களை காடு தானே காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் இந்த இணையர்... தென்னிந்தியாவில் முதல் முறையாக தனித்து விடப்பட்ட இரு யானைகளை வெற்றிகரமாக வளர்ந்த இணையர் என்ற பெருமைக்கு உள்ளானவர்கள்.

வணங்குவோம்.

Director: Kartiki Gonsalves
Distributed by: Netflix
Language : Tamil

- கவிஜி

Pin It