பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதைப் பிடுங்கியதாம் அனுமார் என்பார்கள். அந்தக் கதையாக ஒரு ஆர்கிட் செடி தனக்குத் தேவையான சக்கரை உணவை பூஞ்சானக் கிருமிகளிடமிருந்து ஓசியில் பெற்றுக் கொள்கின்றன. அந்தப் பூஞ்சனங்களோ பக்கத்தில் வளரும் மரங்களின் வேர்களிலிருந்து சக்கரையைத் திருடுகின்றன. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் மண்ணுக்கடியில் வெளியே தெரியாமல் நடைபெறுகின்றன. உயிரியல் வல்லுநர்கள் அண்மையில் தாய்லாந்தில் பச்சையம் இல்லாத மூன்று ஆர்க்கிட் செடிகளைக் கண்டனர்.

பச்சை நிறம் இல்லாமல் எப்படி இந்தச் செடி ஒளிச்சேர்க்கை செய்து பிழைக்கிறது என்று பார்த்தபோதுதான் இந்த பூஞ்சனங்களின் உதவியுடன் பக்கத்தில் இருக்கும் மரங்களின் வேர்களிலிருந்து உணவைத் திருடி வாழ்வது தெரிய வந்தது. அடர்ந்த கானகத்தில் வாழும் இந்த ஆர்க்கிடுகள் மிகவும் அபூர்வமானவை மட்டுமல்லாமல் இவற்றின் வாழ்க்கை முறையும் அதிசயமாக இருக்கிறது.

பூஞ்சனங்கள் பொதுவாக மண்ணில் வாழும் கிருமிகள். காளான்கள்கூட பூஞ்சனங்கள்தான். செடிகள் இவற்றை சாதுர்யமாகப் பயன்படுத்தி செலவில்லாமல் காலங்கடத்துவது ஆச்சரியமாக இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

- முனைவர் க.மணி

Pin It