elephant killed keralaமனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உண்டு. மேலும் இங்கு நில உரிமையும் மற்ற புறம் சார்ந்த உரிமைகள் அனைத்துமே விலங்குகளுக்கும் உண்டு. பல நூற்றாண்டுகளாக யானைகளை மனிதன் தன் வாழ்வைக் கட்டியமைக்க பயன்படுத்திக் கொண்டதை எவராலும் மறுக்க இயலாது.

பெரும்பாலும் யானைகள் பசிக்காகவே ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு புலம் பெயர்கின்றன. இந்தியாவில் யானைகள் அதிகமாக உள்ள மாநிலத்தில் கேரளா மூன்றாவதாகத் திகழ்கிறது. 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 6,177 யானைகள் இருந்ததாகவும், இன்று 5,700 யானைகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி வந்த ஒரு யானைக்கு முதலில் அன்னாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொடுக்கப்பட்டதாக ஊடகம் முழுவதும் செய்திகள் வெளியானது. பின்பு அந்தச் செய்தி மறுக்கப்பட்டு இந்தியன் பிஸ்னஸ் டைம் என்கிற பத்திரிக்கை இந்திய வனத்துறை அதிகாரி ஏ.பி. கியூம் அவர்களைப் பேட்டி எடுத்து வெளியிட்ட செய்தியில் சற்று மாற்றி, வெடிமருந்து நிரப்பிய அன்னாச்சிப் பழங்களை காட்டுப் பன்றிகளுக்காக வைத்திருந்தார்கள், அவற்றை யானைக்கு யாரும் கொடுக்கவில்லை, அதுவாகவே சாப்பிட்டு விட்டதாகக் கூறப்பட்டது.

அம்பலப்பாரா எனும் பகுதியில் வெடிமருந்து நிரப்பி இரப்பர் தோட்ட உரிமையாளர் வைத்திருந்த தேங்காய்களை மே மாதம் 12ம் தேதியே அந்த யானை சாப்பிட்டு வெடி வெடித்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி தெரிந்தும் அவர்கள் வனத்துறையிடம் முறையிடாதது சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் வெடிமருந்து பயன்படுத்தியதை எடுத்துக் காட்டுகிறது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட யானை சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுற்றித் திரிந்து உணவு உட்கொள்ள முடியாமல், புண்கள் ஏற்பட்ட பகுதிகளில் எரிச்சல் மற்றும் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மே மாதம் 25ம் தேதி வெள்ளியாரின் அருகே அந்த யானை சுற்றிக்கொண்டு இருந்தது பிறகு தான் தெரிய வந்தது என வனத்துறை கூறியிருக்கிறது. இத்தனை நாட்களாக பரிதவித்து வந்த இந்தச் செய்திகளை மக்களும் கண்டுகொள்ளவில்லை, வனத்துறைக்கு செய்தி ஏன் சொல்லவில்லை என்பதும் சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது.

அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், யானைகள் இங்கு விவசாயப் பொருட்களை சேதப்படுத்துவதாக நாங்கள் பல முறை வனத்துறையிடம் முறையிட்டாலும் அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கின்றனர்.

மே மாதம் 25 −ல் பார்வையிட்ட வனத்துறையினர் மேலும் இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் இரண்டு நாட்கள் போராடி மீட்க முடியாமல் மருத்துவ சிகிச்சையும் அளிக்க முடியாமல் போனதால், மே மாதம் 27−ல் யானை பரிதாபமாக உயிர் இழந்து விடுகிறது.அந்த யானையைக் கூராய்வு செய்த மருத்துவர் டேவிட், யானையின் இதயத்தில் அம்னோடிக் திரவம் (வளர்ந்து வரும் கருவிற்கு பாதுகாப்பு மெத்தையாக அமைந்திருக்கும் திரவம்) இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, யானை கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்து கண்கலங்குகிறார்.

இதற்கு பல்வேறு பிரபலங்கள் தனது கண்டனங்களை எழுத்துகள் மூலமாகத் தெரிவித்தாலும், அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளும் குரல் கொடுக்க வேண்டிய பிரச்சினைகளும் இன்னும் நிறையவே உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் யானையின் இறப்பு விகிதம் கூடிக் கொண்டே செல்கிறது. எப்படி பறவைகள் வலசை செல்கிறதோ அதேபோன்று யானையும் உணவுக்காக வலசைத் தடங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் மட்டும் யானையின் வலசைப் பாதைகள் 101 இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பாதைகள் இன்றும் 70 சதவிகிதம் யானைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 74 சதவிகிதப் பாதைகள் யானைக் கூட்டம் செல்வதற்கே துன்பப்படும் அளவிற்கு ஒரு கிலோமீட்டருக்குக் குறைவாக சுருங்கி விட்டன. மனிதனுடைய சுற்றுச்சூழல் சார்ந்த அறிவின்மையையும், அக்கறையின்மையையும் இந்தப் பாதை அழிப்பு காட்டுகிறது.

யானைகள் உணவுக்காக சுமார் 500 சதுர கிலோமீட்டர் வரை பயணிக்கின்றன. ஏறக்குறைய இந்த வலசைத் தடங்களில்தான் நாம் இன்று இரயில்வேப் பாதை, புறவழிச் சாலைகள், கட்டிடங்கள், செங்கல் சூளைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிய கட்டுமானங்கள் என பெரிய நிறுவனங்கள் அரசோடு கைகோர்த்து ஆக்கிரமிப்பினை அதிகார பலத்தால் நடத்திக் காட்டியுள்ளது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி மின்சார வேலி அமைத்தல், விஷம் வைத்தல், வேட்டையாடுதல், இரயில் விபத்து போன்றவையும் யானைகளின் அழிவிற்குக் காரணமாகும்.

ஆசிய யானைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் யானையின் இறப்பு விகிதமும், யானைகளால் இறந்த மனிர்களின் இறப்பு விகிதமும் ஏறக்குறைய 2300ஐத் தாண்டியுள்ளது. இது இயற்கை தன்னை சமன்நிலைப்படுத்த முயல்கிறது என்பதாகவே தோன்றுகிறது.

காடு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் சரிவர செயல்படாததே இந்த இறப்பிற்கு முக்கிய காரணமாகும். மனிதன் எப்பொழுதும் பூமியை தான் தான் ஆள வேண்டும் என்ற அதிகார வேட்கையால் இயற்கையிலிருந்து அந்நியப்பட்டு போவதும் முக்கிய காரணியாக மாறி வருகிறது. இந்தியக் காடுகளில் இருபதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் 50,000க்கும் மேற்பட்ட யானைகள் இருந்ததாகவும், 2017 ஆம் ஆண்டு 27,000 யானைகள் இருந்ததாகவும், 2019 ஆம் ஆண்டின் நிலவரப்படி 31,368 யானைகள் இருப்பதாகவம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நூற்றாண்டில் வளர்ச்சி என்கிற சொல்லில் சிக்கிக் கொண்டு 20,000 யானைகளை இழந்திருக்கிறோம்.

மனிதன் தந்தங்களை வேட்டையாட ஆரம்பித்ததிலிருந்து யானையின் மரபுப் பொருள் (ஜெனிட்டிக் கோடுகள்) முற்றிலும் மாறி அழிந்து கொண்டிருக்கின்றன. இந்தச் செயலால் இப்பொழுது பிறக்கும் யானைகள் பெரும்பாலும் தந்தங்கள் இல்லாமலேயே பிறக்கின்றன. மரபணு மாற்றம் மாறி தந்தங்களை இழந்து விட்ட யானைகள் குறித்த செய்தி மனிதன் யானைகளுக்குச் செய்த மிகப் பெரிய துரோகமாகும். பல நூற்றாண்டுகள் நடுநிலை வகித்த மரபு அணுவை மாற்றி பல இனங்களுக்குச் சவாலாக உள்ளான் மனிதன்.

இதோடு யானைத் தந்தங்கள், அவற்றின் தோல் மற்றும் முடி போன்றவற்றை சர்வதேச அளவில் விற்பனை செய்து கோடிகளை சம்பாதிக்கிறான். ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள போட்ஸ்வானா என்கிற நாட்டில் யானைகளை குண்டுகளால் துளைத்து வேட்டையாடிக் கொல்கின்றனர். இவர்கள் யானையைக் கொன்று தேவைப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு மீதமுள்ள யானையின் உடலை வீசிவிட்டுச் செல்லும் பொழுது, அந்த உடலை கழுகுகள் காட்டி கொடுத்து விடுவதால் அவற்றையும் விஷம் வைத்துக் கொல்லும் அளவிற்குச் செல்கிறார்கள். இக்கொடூரங்களுக்கு எதிராகப் போராடும் மனிதர்களையும் கொன்று தங்கள் வியாபாரங்களை நடத்துகிறார்கள் என்பதும் அச்சப்படுத்தும் செய்திகளாகவே இருக்கின்றன. பல்லுயிர் சுழற்சியில் கைவைத்து அழித்துக் கொண்டிருக்கும் மனிதன் இன்னும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறையவே இருக்கின்றன.

காடுகள் அழிந்து யானைகளும் அழிந்து வரும் அபாயகரமான சூழலில் கேரளாவில் இறந்த யானை கடைசியாக இருக்கட்டும். மனிதர்கள் மத்தியில் கருணையையும் இயற்கை குறித்த அறிவையும் இன்னும் அதிகப்படுத்துவதை நம் கடமையாகக் கொண்டு செயல்படவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It