இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியில் இதுவரை நடந்துள்ள கூட்டப் பேரழிவுகளில் மிகப் பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. பூமியில் 87% உயிரினங்கள் அப்போது அழிந்தன. இன்று பூமியில் நாம் காணும் உயிரினங்கள் அன்று மிச்சம் மீதியிருந்த 13% உயிரினங்களில் இருந்து உருவானவையே. இதற்கு என்ன காரணம் என்று இதுவரை பல ஆய்வுகள் நடந்தன.

கூட்ட மரணம்

மாபெரும் கூட்ட மரணம் (great dying) என்று அழைக்கப்படும் பெர்மியன் கால நிகழ்வு, வரலாற்றில் மிகக் கொடூரமான பேரிடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். இதனுடன் சைபீரியா பகுதியில் ஒரு எரிமலை வெடித்துச் சிதறி அதன் கரும்புகையும் சாம்பலும் பூமி முழுவதையும் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு மூடியது.

இதுவே அந்த காலநிலை மாற்றத்திற்கான காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சம்பவங்கள் உயிரினங்களின் மரணத்திற்கு எவ்வாறு காரணமானது என்று விவரிக்க ஆய்வாளர்களால் இதுவரை முடியவில்லை.man in desertவாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்குப் பின் இருக்கும் இரகசியங்களை கண்டுபிடித்துள்ளனர்.

மீண்டும் சம்பவிக்குமா?

பூமி இன்னொரு அதி பயங்கரமான காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மிக மோசமான நுழைவாயிலில் கால் எடுத்து வைத்துள்ளது. இச்சூழ்நிலையில் பெர்மியன் காலகட்டத்தில் உண்டான கூட்டப் பேரழிவு பற்றிய விவரங்கள் வருங்காலத்தில் நேரிடப் போகும் அச்சுறுத்தல்களை சமாளித்து வாழ உதவும் என்று ஆய்வுக்குழு தலைவர்களில் ஒருவரான கடலியல் ஆய்வாளர் ஜஸ்டிஸ் பென் கூறுகிறார்.

எரிமலையில் இருந்து கிளம்பிய புகையும் சாம்பலும் பூமியில் வாயு மண்டலத்தின் வெப்பநிலையை திடீரென அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாக நிலவாழ் உயிரினங்கள் குறிப்பாக பெரிய வடிவமுடையவை மூச்சு முட்டி உயிரிழந்தன. கடல்வாழ் உயிரினங்களின் அழிவிற்கும் ஆக்சிஜன் குறைவே காரணம். ஆனால் இது மற்றொரு விதத்தில் சம்பவித்தது.

வெப்பநிலை உயர்ந்ததுடன் கடல்வாழ் உயிரினங்களின் பசி அதிகமானது. இதனால் இவற்றின் ஆக்சிஜன் பயன்பாடு அதிகரித்தது. படிப்படியாக கடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. கடல்வாழ் உயிரினங்களும் ஆக்சிஜன் கிடைக்காமல் பெருமளவில் கொல்லப்பட்டன. கரையிலும் கடலிலும் முக்கியமாக பெரிய உடலமைப்பு உடைய உயிரினங்களே இத்துயர சம்பவத்தில் கொல்லப்பட்டவை. பெர்மியன் ட்ரையாசிக் காலகட்டத்தில் இருந்த வெப்பநிலை விரைவில் வரவிருக்கும் வெப்பநிலையும் ஏறக்குறைய சமமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எதிர்காலம் எப்படி இருக்கும்?

இதை அடிப்படையாக வைத்து பூமியில் நிகழப் போகும் வெப்பநிலை உயர்வு மூலம் ஏற்படவுள்ள பிரச்சனைகளை கணினி மாதிரிகள் உதவியுடன் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். ட்ரையாசிக் காலத்தில் நிகழ்ந்த அனுபவங்களின் மாதிரிகள் மூலம் வரப் போகும் பூமியின் உயரும் வெப்பநிலையில் ஏற்படப் போகும் சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

25 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான அதே சூழ்நிலை வருங்காலத்தில் ஏற்படப் போகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ட்ரையாசிக் காலத்தில் சைபீரியா எரிமலையில் இருந்து உமிழப்பட்ட புகை சாம்பலுக்கு சமமான அளவில் புதைபடிவ எரிபொருட்கள் உமிழும் பசுமைக்குடில் வாயுக்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வு கூறுகிறது. இன்று உள்ள நிலையில் கார்பன் டை ஆக்சைடு உட்பட உள்ள வாயுக்களின் உமிழ்வு தொடர்ந்தால் பூமியில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியர்ஸ் வரை உயரும்.

2100ல் பூமி

இது நிலம் மற்றும் கடலில் வாழும் உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கடலில் உயிரினங்களின் ஆக்சிஜன் பயன்பாடு 70% அதிகரிக்கும். கடலின் அடித்தட்டில் 40% பகுதிகளில் ஆக்சிஜன் சிறிதும் இல்லாத நிலை உண்டாகும். பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள காலநிலையே இந்த நிலை உருவாகும்போது துருவப் பகுதிகளிலும் இதே சூழல் ஏற்படும். ட்ரையாசிக் யுகத்தில் இருந்தது போல கடலில் பூமத்திய ரேகைப் பகுதிகளில் வாழும் உயிரினங்களில் சில துருவப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்து நிலைமையை சமாளித்து வாழும்.

ஆனால் துருவப்பகுதி உயிரினங்கள் இந்த காலநிலையுடன் பொருந்தி வாழ முடியாமல் அழிவை சந்திக்கும். 2100 ஆகும்போது ட்ரையாசிக் காலத்தில் இருந்த புவி வெப்பநிலையின் 25% வெப்ப உயர்வை பூமி நேரிடும். 2300ல் இது 35 முதல் 50% வரை அதிகரிக்கும். இந்த சமயத்தில் ஆக்சிஜன் குறைவு உட்பட்ட பாதிப்புகளை உயிரினங்கள் அனுபவிக்க ஆரம்பிக்கும். அச்சமூட்டும் இந்த ஆய்வு முடிவுகள் மனிதன் திருந்த உதவுமா?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It